Skip to main content

இரண்டு முத்துக்கருப்பன்கள் சந்திக்கிறார்கள்


அன்றாடப் புழக்கத்தில் உள்ள பேச்சு மொழியை, ஆழ்ந்த த்வனி கொண்ட தனி இலக்கிய அனுபவமாக மா. அரங்கநாதன் சகஜமாக தனது கதைகளில் மாற்றிவிடுகிறார். ‘அவனது பக்கத்திருக்கையில் இருந்த கிழவர் பேசுவதற்கு நாயாய் அலைந்தார்’ என்ற வரியைக் கடக்கும்போது நிற்கும் அனுபவம் நிகழ்ந்தது. கிழவர் பேசுவதற்கு நாயாய் அலைந்தார் என்று எழுதியது பறந்து ரீங்கரிக்கத் தொடங்கியது. பேசுவதற்கு நாயாய் அலைந்தார் எனும்போது உணரும் அர்த்தத்தைச் சுற்றி ஒரு அமைதி. நல்ல சாப்பாடு சாப்பிட நாயாய் அலைந்திருக்கிறோம், தண்ணிக்கு நாயாய் ஒரு காலத்தில் அலைந்திருக்கிறோம் என ஊர்ப்பக்கம் சாதாரணமாகப் பேசுவதிலிருந்து  உருவான வாக்கியம் தான்.

'உவரி' கதையில் பேருந்து, கன்னியாகுமரியைத் தாண்டி ஒரு சிறு ஊரைக் கடந்தவுடனேயே எல்லாம் இரண்டிரண்டாக மாறிச் சந்திக்கத் தொடங்குகிறது. உப்பளங்களின் காட்சியுடன் உப்புவண்டி பற்றிய குறிப்பு வருகிறது. ஆதிகாலத்தில் நாகரிகத்தை விரைவுபடுத்துவதற்கு உதவியாக இருந்த சக்கரங்களும் இன்றைய சக்கரங்களும் சந்திக்கின்றன. சக்கரங்களைப் பொறுத்தவரை பெரிய வேறுபாடு அவற்றின் வடிவத்தில் ஏற்படவேயில்லை என்ற குறிப்பு வருகிறது. 

தன் முகத்தின் புராதனத்தைக் கண்ணாடியில் அடையாளம் கண்டு அந்தப் பிம்பத்தின் தூரத்தில் ஆழத்தில் உலகப் புராதனத்தை அடையாளம் காண்பது மா. அரங்கநாதனின் பிரத்யேக அடையாளம். இந்தக் கதையில் கதையை நகர்த்தும் அவனது பெயரும், பாதிரியார் தயானந்தனின் பூர்வ பெயரும் முத்துக்கருப்பன் தான். முத்துக் கருப்பன்கள் இரண்டுபேர் சந்திக்கும் அபூர்வ கதை இது.

அரசன் சாலமோனின் கப்பல்கள் சரக்குகளைப் பெற்றுத் திரும்பிய பகுதி ஓபர் துறைமுகம் என்ற குறிப்பை அவனிடம் தயானந்தன் படிக்கச் சொல்லி ஒரு புத்தகத்தைத் தருகிறார். ஆப்பிரிக்காவில் ஓபர் என்றொரு இடம் உண்டு என்ற தகவலைச் சொல்கிறான் அவன். 

உவரிக்குள் ஓபர் தென்படும் இடம்தான் ‘உவரி’ கதையின் உச்சம். சுசீந்தரம் கோயிலில் தாணுலிங்கம் சிலுவையாக, கோட்டாறு சவேரியார் தேவாலயத்தில் சிலுவை லிங்கமாகத் தோன்றும் கண்களைப் பெற்றிருக்கிறான் அவன் என்று சொல்லப்படும் முத்துக்கருப்பன். 

பேருந்து நடுவழியில் நிற்க, பசித்திருக்கும் பக்கத்து சீட் குழந்தைக்கு பால் வாங்கிக் கொடுக்கச் செல்லும்போது உச்சிவெயிலில் உவரி, தனது சொரூபத்தை அவனுக்கு இந்தக் கதையில் காண்பிக்கிறது. 

வெயில் காய்ந்து வெடித்து கண்களைக் கூசவைக்கும் ஆளரவமற்ற ஊராகத் தான் முதலில் உவரி தெரிகிறது. சாலமனின் கப்பல்கள் அப்போது அங்கே இல்லை. கொஞ்ச தூரம் நடந்து சென்று தென்பட்ட கடையில் காப்பி சாப்பிட்டு குழந்தைக்கும் பசியாற்றிவிட்டு வரும்போது சாலமன் வந்த உவரி அவனுக்கு உணர்வில் தோன்றித் தெரிகிறது. 

முத்துக்கருப்பன் தனியாக நடந்துவந்திருந்தால் சாலமன் என்ன, அவன் முப்பாட்டன் காலத்துக்கு முன்பே வர விரும்பியிருக்கும் இடமாக, உவரி அவனுக்குத் தோன்றியிருக்காது. 

குளிர்காற்று சட்டை போடாத தேகத்தைத் தீண்டும்போது உலகத்தோடு சேர்ந்து புதிதாகத் தேகமும் சிலிர்க்கிறதல்லவா. அதுபோல முத்துக்கருப்பனும் அவன் தோளிலிருக்கும் குழந்தையும் பழகிய உவரியை விடுத்துப் புராதன உவரி ஒன்றுக்குப் புதிதாகச் சிலிர்க்கிறார்கள்.   

இப்படி உவரி கதையைப் படிக்கச் சொல்லி, நேற்று என்னைத் தூத்துக்குடியில் இறக்கவிட்டவர் சாம்ராஜ்தான்.

Comments