Skip to main content

பெரியாரைப் பற்றி எழுதப்பட்ட நவீன கவிதையைப் படித்திருக்கிறாயா சங்கர்?

ஓவியம் : ராஜராஜன்

எனக்குத் தெரிந்து இல்லை. அது ஆச்சரியமான விஷயம்தான். எத்தனையோ வரலாற்றுக் கதாபாத்திரங்கள் இடம்பெற்ற நவீன கவிதையில் பெரியார் பற்றி எழுதப்பட்ட கவிதை ஒன்றை இதுவரை நான் பார்த்ததில்லை.

அழகுக்கும் அழகியலுக்கும் எதிரானவர் என்பதால் பெரியார் கவிதையில் இடம்பெறவே இல்லாமல் போனாரா சங்கர்?

உண்மைக்கு அருகில் வரும் காரணங்களில் ஒன்றாக அது இருக்குமென்றுதான் தோன்றுகிறது. புனிதம் ஏற்றப்படாத அழகு என்று ஒன்று இருக்கிறதா? இயற்கை, கலாசாரம் உட்பட திரட்டப்பட்ட எல்லா செல்வங்களின் உபரியாகவும் பாகுபாட்டை உருவாக்குவதாகவும் அவர் கலையை கவிதையை அழகைப் பார்த்திருப்பார்தானே. அப்படியான பின்னணியில் அவர் கவிதையையும் கவிஞர்களையும் புறக்கணித்ததைப் போலவே நவீன கவிதையும் அவரைப் புறக்கணித்துவிட்டது போலும். 

அழகு ஒரு அனுபவம் இல்லையா சங்கர்?

நல்ல என்று மனம் கொடுக்கும் அந்த விளக்கத்தின் வழியாக அங்கே பேதம் வந்துவிடுகிறது. அனுபவத்தின் பேதத்திலிருந்து தான் தீண்டாமை தொடங்குகிறது. அதனால்தான், தனது தடியால் அழகைத் தட்டிவிட்டு பாம்பைப் போலப் பிடித்து அடிக்க அலைந்தார் போலும் பெரியார்.

புதுக்கவிதை உருவான சூழலும், புதுக்கவிதையை தமிழில் எழுதத் தொடங்கியவர்களின் சமூகப் பின்னணியும் இன்னமும் நவீன கவிதையில் பெரியார் வராததற்குக் காரணமாக இருக்கலாமா சங்கர்?

பாரதிதாசனையும் விமர்சித்த நபர் தானே அவர். அதனால் பொத்தாம்பொதுவாக அப்படிப் பேசிவிட முடியாது. ஆனால் கார்ல் மார்க்ஸும், அம்பேத்கரும், இயேசுவும் கூட நவீன கவிதையில் இடம்பெறுகிறவர்களாகத் தானே சகஜமாக இருக்கிறார்கள். புதுக்கவிதையில் எள்ளலுக்காகவாவது ஞானக்கூத்தன் மூலமாக எம்ஜிஆரும், கருணாநிதியும் இடம்பெற்றுவிட்டார்களே. பெரியார் ஏன் ஒரு கோட்டுச் சித்திரமாகக் கூட இடம்பெறவில்லை நவீன கவிதையில் என்பது தொடரும் மர்மம்தான்.

சரி. இப்படிப் பேசிப் பார்க்கலாம். பெரியார் எழுத்தில் படிமங்களோ, கவித்துவமோ உண்டா சங்கர்?

படித்த வரையில் நேரடியாகப் பேசும் பாணியில் உச்சம் கண்டால் ஏசும் பாணியில் தான் அவரது எழுத்துகள் இருக்கின்றன. சரித்திரத்தின் மீதோ தொன்மத்தின் மீதோ அதன் எந்த மடிப்பிலும் அவருக்கு விந்தையோ மரியாதையோ இல்லை. அவமரியாதைதான் தெரிகிறது. உலகத்திலேயே பொன்மொழிகளைக் குறைவாக எடுக்க முடியக்கூடிய ஒரு ஆளுமையாகப் பெரியார்தான் இருப்பார்.  

அறிவைக் கூடச் சந்தேகமாகப் பார்க்கும் இடத்துக்கு அவர் போய்விட்டாரோ சங்கர்?

அழகு பற்றி அவருக்கு இருக்கும் விமர்சனம்தான் அறிவு பற்றியும் இருந்திருக்க வேண்டும். அத்தனை அறிவும் மனிதனைத் தாழ்த்தத் தானே இங்கே பயன்பட்டிருக்கிறது என்ற அடிப்படையில் அறிவின் மேலும் சந்தேகம் கொண்ட ஆளாகத் தான் எனக்குத் தெரிந்த பெரியார் தெரிகிறார்.

மானத்தோடு அறிவைச் சொல்கிறாரே பெரியார்?

அந்த அறிவு சுத்த அறிவு. எதையும் அதன் நிர்வாணத்தோடு அதைச் சுற்றியுள்ள சூனியத்தோடு பார்க்கும் அறிவு. பாகுபாடு பார்க்கும்  அடுக்குகளை உருவாக்கும் அறிவு அல்ல.

பெரியாரின் பேச்சில் கடுமையும் ஆபாசமும் இருந்ததே சங்கர்?

அவருக்குத் தெரிந்த அரசு, அவருக்குத் தெரிந்த இலக்கியம், அவருக்குத் தெரிந்த தேசம், அவருக்குத் தெரிந்த சமூகம், அவருக்குத் தெரிந்த சமயம் எல்லாவற்றையுமே புனிதத்தின் கோபுரத்திலிருந்து படிப்படியாகக் இறங்கிக் கீழே சாக்கடையாக ஓடும் காட்சியாகவே பார்த்திருப்பார். 

கீழே என்ன இருக்கிறது? கீழே என்ன இருக்கிறது? எல்லாவற்றுக்கும் கீழே என்ன ஓடுகிறது? அறிவு, அதிகாரம், கலை, சமயம், தத்துவம், கடவுள், மரபு எல்லாம் இறங்கும் இடம் என்ன?

பெரியாருக்கும் ஜே. கிருஷ்ணமூர்த்திக்கும் நடந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது? அதில் பேசப்பட்ட ஒரு வாக்கியம் கிடைத்திருந்தாலும் புதுக்கவிதையில் பெரியார் இடம்பெற்றிருப்பார் என்று இப்போது பேசும்போது தோன்றுகிறது சங்கர்?

ஆமாம். அந்த உரையாடல் பற்றிய குறிப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. சரித்திரமென்னும் சுவரில் ஒரு சதுரம் உருவப்பட்டது போல அந்த இடம் உள்ளது. 

ஆதிமூலம் காந்தியை வரைந்தார். பெரியாரை அவர் வரைந்த படத்தை ஏன் பார்க்க முடியவில்லை சங்கர்?

காந்தி அழகைக் கண்டு அச்சம் கொண்டாலும் ஆன்மிகத்தின் பட்டுத்துணி கொண்டு அழகை அரவணைத்தவர். புலனின்பத்தை பக்தி இசையாக மாற்றியவர். அதனால் அவரை ஓவியத்தில் எங்கேயோ அகப்படுத்திவிட்டார் ஆதிமூலம். பெரியாரை அகப்படுத்துவது அத்தனை சுலபம் அல்ல.

அதனால்தான் தன்மதிப்பை தன்பிம்பத்தை உதறிவிட்டு மூத்திரக் குடுவையுடன் லுங்கியில் கடைசிவரை அலைந்தாரா சங்கர்?

சுயபிரேமையின் முகத்தில் நிதர்சனத்தின் அழுக்கு லுங்கியை எறியத் தெரிந்த ஒருவன் தான் அப்படி மூத்திரக் குடுவையைத் தூக்கிக் கொண்டு வாழ்க்கையின் கடைசி நாட்களில் பொதுநலனுக்காகப் பயணம் போகமுடியும். நிறைந்து கனத்தால் வெளியேறும் குடுவையென உடலைப் பார்த்தவன் தான் அப்படி மூத்திரத்தை ஏந்தி அலைய முடியும். 

அப்படியென்றால் பெரியார் எதை நினைவுபடுத்துவதற்காக தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் மக்கள் கூடும் சந்திப்புகளில் சிலைகளாக உள்ளார் சங்கர்?

இல்லை இல்லை என்று சொல்வதற்காக நிற்பவர் என்று கருதுகிறேன். அந்தச் சிலைகள் எல்லாம் இல்லை இல்லை என்பதை ஞாபகப்படுத்தும் இன்மைகள் தான். இத்தனை சிலைகளாகத் தன்னை அவர் பெருக்கி ஆக்கியதால்தான் அவர் நவீன கவிதைக்குள் வரவில்லையோ என்று இப்போது தோன்றுகிறது. 

பெரியார் படத்தையோ சிலையையோ உன் வீட்டில் வைப்பாயா சங்கர்?

வைக்க மாட்டேன். எனக்குப் பிடிக்க வடிவம் வேண்டும். உருவம் வேண்டும். பொருள் வேண்டும். இசை வேண்டும். வெந்து வெந்து உருகி உருகிச் சாகச் சாக இரண்டிரண்டாக கடலும் மலையும் வானமும் தரையும் உறவும் பிரிவும் பிறப்பும் இறப்பும் கனவுகளும் ஆசைகளும் வேண்டும். ஒரு கருந்துளையை யாராவது வீட்டின் நடுவில் பாவிப்பார்களா? ஒரு பயங்கர வெறுமையை ஒரு அதிபயங்கர இன்மை இருப்பை ஒரு கவிஞன் ஏன் படிமமாக வைக்க வேண்டும். எனக்கு விடுதலை என்பது தூரத்தில் தெரிந்தால் போதும். அதற்கு முந்தைய பேருந்து நிறுத்தத்தில் இறங்கிச் செல்லும் திருடன் அல்லவா நான். 

நவீன கவிதைக்குள் இனியாவது பெரியார் இடம்பிடிப்பாரா சங்கர்?

தெரியவில்லை. தெரியவில்லை. தெரியவில்லை.      

Comments

அருமை ஷங்கர், மரபில் இருந்து மொத்தமாக துண்டிக்க முயன்ற சிந்தனை முறை காரணமாக இருக்கலாம், பாகீரதியின் மதியம் நாவலில் இருந்து ஒரு வரி
“அதுவரை அவரால் ஆபாசம் என்று விமர்சிக்கப் பட்டுகொண்டிருந்த புராணங்களிலும் சரித்திரங்களிலும் நிகழ்ந்த எந்த ஒரு மாபெரும் நிகழ்வையும்போலவே திமுக என்கிற ஒரு பெரும் அரசியல் நிகழ்வுக்குக் காரணமாயிருந்த ஒரு மகத்தான காதலின் புதிர்….”- பாகீரதியின் மதியம், பா வெங்கடேசன்
சமஸ் said…
அன்புள்ள ஷங்கர்,
அழகு... அற்புதம்!
- சமஸ்
Sivapriyan said…
இதுவே கவிதைதான்❤️
VS said…
Fantastic Shankar..
Nagarajan K said…
அருமை சங்கர்.
"அதற்கு முந்தைய பேருந்து நிறுத்தத்தில் இறங்கிச் செல்லும் திருடன் அல்லவா நான்.". என்னை இப்படி சொல்லலாம். பேருந்து அந்த வழி செல்லும் என்று பேருந்தை பிடிக்காமல் காத்திருக்கும் திருடன்.
-நாகராஜன்
rajaகிராமியன் said…
நவீன கவிதையாளர்கள் சுய மோக ஜீவிகள்

Popular posts from this blog

க்ரியா ராமகிருஷ்ணன் உருவாக்கிய புத்தக உணர்வு

தமிழில் மொழி, கலை, பண்பாடு சார்ந்த அறிவுத்துறைகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தின் மக்கள் தொகையை ஒப்பிடும்போது குறைவாகவே தொடர்ந்து இருந்துவருகிறது. அந்தச் சிறுபான்மை வட்டத்துக்குள் இருந்தவர்கள், இருப்பவர்கள் எல்லார் மீதும் தான் வெளியிட்ட புத்தகங்கள் மூலம் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தாக்கம் செலுத்துபவராக க்ரியா ராமகிருஷ்ணன் இருந்திருக்கிறார். நவீன இலக்கியம் தொடங்கி மொழியியல், தத்துவம், நாட்டார் வழக்காற்றியல், சினிமா, தொல்லியல், சூழியல், கானுயிரியல், மருத்துவம், ஆன்மிகம் என்று பல்வேறு அறிவுத்துறைகள் சார்ந்து தீவிரமான தேடல் உடைய தமிழர்கள் ஒவ்வொருவரும் க்ரியா வெளியிட்ட நூல்கள் சிலவற்றால் உந்துதலைப் பெற்றிருப்பார்கள். க்ரியா வெளியிட்ட அந்நியன், விசாரணை, அபாயம் போன்ற இலக்கிய நூல்களால் தாக்கம் பெற்றிருந்த லக்ஷ்மி மணிவண்ணன் வீட்டில் அவர் தொலைக்காத புத்தகங்களில் ஒன்றாக டேவிட் வெர்னர் எழுதிய ‘டாக்டர் இல்லாத இடத்தில்’ புத்தகத்தை அவரது மூத்த மகன் பிறக்கும்வரை பாதுகாத்தும் கையேடாகப் பயன்படுத்தியும் வந்தார். மூன்றாம் உலக நாட்டில் மருத்துவர் இல்லாத சூழலில், பேதி, காய்ச்சல், பிரசவம் ப

அந்த ஆலயத்தில் கடவுள் இல்லை - ரவீந்திரநாத் தாகூர்

அரச சபை ஊழியன் சொன்னான், “ராஜாவே, பணிவான வேண்டுகோள்களை விடுத்தும், மனிதர்களில் சிறந்தவரும் அருந்துறவியுமானவர், பொன்னால் நீங்கள் உருவாக்கிய ஆலயத்துக்குள் வருவதற்கு மறுக்கிறார். சாலை ஓரத்து மரத்தின் கீழே அமர்ந்து கடவுளைப் பாடிக் கொண்டிருக்கிறார். பக்தர்கள் அவரை பெரும் எண்ணிக்கையில் சூழ்ந்துள்ளனர். ஆனந்தத்தில் அவர்களிடமிருந்து பெருகும் கண்ணீரோ நிலத்திலுள்ள புழுதியை எல்லாம் கழுவுகிறது. நீங்கள் உருவாக்கிய ஆலயமோ சீந்துவார் அற்றுக கிடக்கிறது. புதரில் தனது இதழ்களை விரிக்கும் மலரின் வாசனைகண்டு பொன்முலாம் பூசிய தேன்பானையைப் புறக்கணித்து, பித்தேறிப் புதரை நோக்கி தமது தாகத்தைத் தீர்க்கப் போகும் தேனீக்கள்  போலத்தான் மக்கள். அவர்களுக்கு பொன்னால் நிறைந்த மாளிகை ஒரு பொருட்டுமில்லை. சொர்க்கத்தின் நறுமணத்தைப் பரப்பும் விசுவாசமுள்ள இதயத்தில் உள்ள மலரை நோக்கி மொய்க்கிறார்கள். ஆபரணங்களிட்டு அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் காலியான கோயிலில் நமது கடவுள் அமர்ந்திருக்கிறார் தனிமையில். அதைக் கேட்டு எரிச்சலுற்ற மன்னன் அரியணையிலிருந்து எழுந்து துறவி அமர்ந்திருக்கும் மரத்தை நோக்கிக் கிளம்பினார். துறவியின் முன்