Skip to main content

உள்தெப்பக்குளம் – மேலும் சில காட்சிகள்


யாரோ

எறிந்த போதை ஊசி

ரத்தக்கறையுடன்.

ஏதோ ஒரு அவசத்தில்

வீசப்பட்ட

மல்லிகைச்சரம்

தூணோரம்.

ஆதிப்பச்சையில்

வெறித்து நோக்கும் தண்ணீர்

நடமாட்டம் இல்லாமல் போய்

வெளுத்துக் கிடக்கும்

உள்தெப்பக்குளத்தின்

கல்படிகள்

எந்த ஆடி உற்சவத்திலோ

பயன்படுத்திய தேர்வடக் கயிறு

பாம்பணையாய்

சுருண்டு நைந்துவரும்

குளத்தடி இருள்மூலை.

உச்சிகால வேளையில்

நெல்லையப்பருக்கு அன்னம் உபசரிப்பதற்காக

காந்திமதி

மேளதாளத்துடன்

செல்லும் சந்தடி

நெருங்கித் தேய்கிறது.

000

ஊஞ்சல் மண்டபமிருக்கும் நந்தவனத்தில்

வான்கோவின் வாதுமை அரும்புகளைப்

போல

யாரும் பார்க்காமலேயே

மஞ்சள் அரளிகள்

அரும்பி

மொட்டுவிட்டு

பூத்து

மழையில் நனைந்து

உதிர்ந்து மடிகின்றன.

000

உள்தெப்பக்குளத்தின்

பச்சைப் பரப்பைப் பார்த்து

தளிர்த்ததோ

வாழை மரங்களின்

இலைகள்.

வாழை இலைகளின்

பசும்பச்சை

பார்த்து

அரும்பியதோ

நந்தவனத்துக் கிளிகளின்

இறகுகள்.

000

அம்மா மண்டபம்

ஆயிரங்கால் மண்டபம்

ஊஞ்சல் மண்டபம்

சங்கிலி மண்டபம்

மகா மண்டபம்

நீராழி மண்டபம்

வசந்த மண்டபம்

000

வெளிநடை சாத்தும் சத்தம்

மண்டபத்தை

வந்து அறைகிறது.

யுகச்சடவிலிருந்து

ஒருகணம் விழித்தெழும்

சர்ப்ப யாழி.

காலம் சுருண்ட

இருட்டுக்குள் புகவியலாது

சோரும்

இன்னொரு

மத்தியானம்.

000

சங்கிலி மண்டபத்துக்குள்

ஒரு ரீங்காரம்.

பஜாரில்

ஒரு ரீங்காரம்.

இரண்டுக்கும் நடுவே

சரித்திரத்தின்

கார்வை.

(நன்றி: அகழ் இணைய இதழ்)

Comments