Skip to main content

அண்மைக் காட்சி சேய்மைக் காட்சி

 


முதல்முறையாக அம்மா அப்பாவுடன்

உணவுகத்துக்கு

புரோட்டா சாப்பிட வந்த

குழந்தை

வறுத்த நாட்டுக்கோழிக் கறியை

மட்டும் தேர்ந்து

புரோட்டாவை

அம்மாவின் இலைக்கு

வீசி எறிகிறது.


இது ஒரு அண்மைக் காட்சி.


காஸாவின் அகதிமுகாம்களில்

உணவில்லாமல் மண்தின்று

இறந்துபோகும் குழந்தைகள்,

அவர்கள் இறந்ததை

ஏற்கமுடியாமல்

மார்பில் அடித்து அழும் தாய்மார்கள்

என் அலைபேசித் திரையில்

தினசரி

திரள்கின்றனர்.


இது ஒரு சேய்மைக் காட்சி.


கைவிடப்பட்டோம் என்று

முகங்களாலேயே சொல்லும்

எத்தனையோ பிராணிகளைக்

கடந்துவந்துதான்

எனது வளர்ப்புயிர்

பிரௌனியுடன்

தற்காலிக நிறைவு என்னும் குமிழை

தினசரி

உருவகித்துக்கொண்டு

உறங்கச் செல்கிறேன்.


இங்கே

எல்லோரையும் காப்பாற்றமுடியாமல்

போனதால்

தான்

நாம்

யாரையாவது

காப்பாற்றிக்கொண்டிருக்கிறோமா?

(நன்றி: அகழ் இணைய இதழ்)

Comments