உயிர் சந்தடியே இல்லாமல் போன
அடையாறு
பிரம்மஞான சபை வளாகத்தின்
காட்டிலிருந்து
கடைசி வண்ணத்துப்பூச்சிக் கூட்டம் பின்தொடர
ஜே. கிருஷ்ணமூர்த்தி
வெளியேறி பல தசாப்தங்கள் சென்றுவிட்டன.
பிரம்ம ஞான சபையின் எல்லையை
கட்டியம் கூறிநிற்கும் பனைமரங்கள்
கல் மரங்களாக
கடலைப் பார்த்து
நிச்சலனமாய்
வெறித்து நிற்கும் சோகத் தோற்றம்.
சகோதரன் நித்யாவின்
மரணத்துக்குப் பிறகு
புத்தகங்கள் அனைத்தும்
ஒருகணம் சடலங்களாக
சிறுவன் கிருஷ்ணமூர்த்திக்கு
தோற்றம் கொடுத்த
மறைஞான நூலகத்தின் படிக்கட்டுகள்
இப்போது உடைந்து தூர்ந்துவிட்டன.
அன்னிபெசண்ட் அம்மையாரே
எப்படித் தொலைத்தீர்கள்
கிருஷ்ணமூர்த்தியை?
அன்னிபெசண்ட் அம்மையாரே
ஏன் பிரம்மஞான சபையிலிருந்து
கிருஷ்ணமூர்த்தியோடு
வெளியேறின
வண்ணத்துப்பூச்சிகள்?
(நன்றி: அகழ் இணைய இதழ்)
Comments