பல்துலக்கிகள்
தொப்பிகள்
குப்பிகளை எல்லாம் பாதுகாத்த
மூடிகள்
பந்துகள்
இறந்தவர் இருப்பவர்
பிரிந்தவர் சேர்ந்து வாழ்பவர்
தகவல் ஏதும் சொல்லாத
புகைப்படச் சட்டகங்கள்
பயன் எல்லாம் முடிந்து
ஓய்ந்த
ஆசுவாசம்
அமைதி
விச்ராந்தி.
இவற்றோடு சேர்ந்து
இன்னும் பளபளப்பான கண்ணுடன்
உடைந்த பாலத்தின்
கழிமுகத்துக்கு
வந்து சேர்ந்து மணலில்
ஒரு நீல குண்டு பல்ப்
அரசனைப் போல வீற்றிருக்கிறது
.
தொங்கட்டான்களின்
ஒளிச்சிணுங்கல்கள்
முனகல்களாய் கீறும் சண்டைகள்
கண்ணீர் சுடரும் வெதும்பல்கள்
ஆறுதல்கள்
மரணத்தை
பார்த்திருப்பாய்
நீல குண்டு பல்பே.
நள்ளிரவில் விழித்து
விடாமல் அழுதுகொண்டிருக்கும்
குழந்தையை
அரைத்தூக்கத்திலேயே நின்றபடி
தொட்டிலில்
ஆட்டிய
இளம்தாயை
நீ மட்டும்தான்
விழித்தபடி
பார்த்தபடியிருந்தாய்
நீல குண்டு பல்பே.
Comments