Skip to main content

Posts

இனவரைவியலாளர் - ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ்

     அது டெக்சாசில் நடந்ததாக எனக்குச் சொல்லப்பட்டது. ஆனால் இன்னொரு மாநிலத்தில் நடந்த சம்பவம் அது. அந்தச் சம்பவத்தில் ஒரேயொரு முதன்மைப் பாத்திரம்தான் (ஒவ்வொரு கதையிலும், ஆயிரக்கணக்கான முதன்மைப் பாத்திரங்கள், தெரிந்தும் தெரியாமலும் உயிருடனும் இறந்தும் இருக்கத்தான் செய்கிறார்கள்). அந்த மனிதனின் பெயர், ஃப்ரெட் முர்டாக் என்று கருதுகிறேன். அவன் அமெரிக்கர்களைப் போலவே உயரமானவன்; அவனது முடி பொன்னிறமும் அல்ல, கருப்பும் அல்ல, அவனது தோற்றம் கூர்மையானது, அவன் மிகவும் குறைவாகவே பேசினான். குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்த அம்சமும் அவனிடம் இல்லை. இளைஞர்கள் வெளிப்படுத்தும் பாவனையான ஒரு தனித்தன்மைகூட அவனிடம் இல்லை. இயல்பாகவே அவன் மரியாதையுடையவனாக இருந்தான். அத்துடன் அவன் புத்தகங்களையோ அவற்றை எழுதிய ஆண்கள் மற்றும் பெண்கள் மீதோ அவநம்பிக்கை கொண்டவனாக இல்லாமல் இருந்தான். இன்னமும் தான் யார் என்பதை அறியாத வயதில் அவன் இருந்தான். எனவே, தன் வழியில் என்ன வாய்ப்புகள் முன்வைக்கப்படுகின்றனவோ அதற்குள் தன்னைச் செலுத்திக்கொள்வதற்குத் தயாராக இருந்தான் - பாரசீக மறைஞானம் அல்லது ஹங்கேரியர்களின் அறியவராத பூர்...

மரணம் என்னும் தொகுப்பாளர்

க லாச்சாரங்கள், வாழ்க்கை முறைகள், பார்வைகள் வேறுபட்டிருந்தாலும், ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து பல்வேறு இடர்பாடுகளுக்கிடையிலும் வாழ்ந்து கனிவது என்பது எல்லோரும் விரும்பும் கனவாகவே இருக்கிறது. உராய்வுகள், கசப்புகள், விரிசல்கள், துரோகங்களைத் தாண்டி நீடிக்கும் தாம்பத்தியத்துக்குள் இருக்கும் அமரத்தன்மையையும் இனிப்பையும் இந்தச் சிறிய படைப்பு மௌனமாக நமக்குள் படரவிடுகிறது. தற்போது 71 வயதாகும் பெண் நாவலாசிரியர் டயன் ப்ரோகோவன் ஃப்ளெமிஷ் மொழியில் எழுதிய இப்படைப்பின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு மட்டுமே ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளது. முதுமையைக் கடந்துகொண்டிருக்கும் ஆலிஸ், வழக்கமாகத் தன் கணவர் ஜூல்ஸ் சமையலறையில் தயார் செய்யும் காபியின் நறுமணத்தில் கண் விழிக்கிறாள். ஆனால், காபித் தூளை வடிகட்டியில் தயார் செய்துவிட்டு, சோபாவில் உட்கார்ந்தபடியே ஜூல்ஸ் இந்த உலகைத் துறந்துவிட்டதை எழுந்த பிறகே ஆலிஸ் பார்க்கிறாள். காலையில் நம் எல்லாரையும் போலவே எழுவதற்குச் சோம்பி, சுகமாய் ஆலிஸ் உறங்கும் அற்புத அரை மணி நேரத்தில், ஜூல்ஸ் மரணமடைந்துவிட்டதை முதலில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்குப் பிறகு அவள...

கிளியும் குரங்கும் அல்லது என்ன முட்டாள்தனமான விளையாட்டு இது?

ஒரு கப்பல் பயணத்தின் போது நடந்த சம்பவம் இது. கப்பலில் இருந்த கிளி மிகவும் சலிப்புற்றுப் போயிருந்த சமயத்தில் அங்கு ஒரு குரங்கும் இருப்பதைக் கண்டு சந்தோஷப்பட்டது. பொழுதைப் போக்கும் எண்ணத்துடன் குரங்கிடம், “ ஒளிந்து விளையாடு விளையாட்டில் ஈடுபடலாமா? ”  என்று கிளி கேட்டது. அதற்கு குரங்கு,  “ அந்த ஆட்டம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது எப்படி விளையாடுவது? ”  என்றது. கிளி விளக்கிச் சொன்னது.  “ மிகவும் எளிய விஷயம் அது. கண்களை மூடிக்கொண்டு சுவரைப் பார்த்தபடி நின்று நூறுவரை எண்ண வேண்டும். அந்த நேரத்தில் நான் எங்காவது சென்று ஒளிந்து கொள்வேன். எண்ணி முடித்த பிறகு நீ என்னைத் தேடிப்பிடிக்க வேண்டும். அவர்கள் விளையாட்டில் ஈடுபட்ட சமயம் கப்பல் வெடித்து விட்டது. குரங்கு நூறு என்று எண்ணி முடித்தபோது கப்பல் வெடித்தது. கடலில் மிதந்த ஒரு மரப்பலகையில் சென்று கிளி அமர்ந்து கொண்டது. குரங்கு அந்தப் பலகையை நோக்கி நீந்தி வருவதற்கு முயன்று சோர்ந்து போனதைக் கிளி கவனித்தது. பலகை மீது ஏறிய குரங்கு கிளியைப் பார்த்து, “ என்ன முட்டாள்தனமான விளையாட்டு இது?   ”  என்று சீறிய...

தவளைப்போர் வீரர்களே

மழை பெய்த தெருவில் கூழாங்கற்கள் தவளைகளாக மாறின. வட்டமாய் அணிவகுத்து துள்ளி தொடங்கின தங்கள் இலக்கில்லாத முற்றுகையை தவளைப்   போர்   வீரர்களே தவளைப்   போர்   வீரர்களே உங்கள் பிறப்பின் உற்சாகத் துள்ளலை வீட்டுத்திண்ணையில் படுத்திருக்கும் நாய் பார்த்துக் கொண்டிருக்கிறது நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். 000

நான் அசந்தர்ப்பம்

நான் பணக்காரனுமல்ல ஏழையுமல்ல ஒரு அசந்தர்ப்பம் என்றுதான் சொல்லமுடியும். என் அலுவலகப்பையின் ஜிப் ஒருநாள் வாய்பிளந்து விட்டது அன்று நான் போன இடத்திலெல்லாம் அந்தப் பை என் போதாமைகளை எல்லாம் இளித்துச் சொல்லி கந்தல் சிறுவனைப் போல நாணவைத்தது மூடிப் போர்த்தித்தான் நான் வீடுதிரும்பினேன். நான் அப்போதுதான் நினைத்துப் பார்த்தேன் அவளது பை கிழிந்திருந்தால் ஆகியிருக்கும் இரட்டைத் துயரம். வாய்பிளந்தது என் பை தானே.

இந்தக் கண்ணாடிகளைப் போல இருந்துவிடக் கூடாதா

எனக்குத் தெரியும் பழங்கள் எப்போது அழுகத்தொடங்குமென்று அன்புக்கு எப்போது மூச்சுமுட்டுமென்று உண்மை எந்த இறகால் கனக்குமென்று. 000 விபத்துக்குள்ளான நாட்களில் வந்து சேரும் தற்காலிக ஊன்றுகோல் அகாலப் பயணத்தில் ஒரு அறிமுகத் துணை என் பசியை நிரப்பவே வாய்ப்பில்லாத குழந்தையின் கைப்பிடி உணவு. அவர்கள் நடுவில் வருகிறார்கள் நடுவிலேயே போய்விடுகிறார்கள். முடியாத வெயிலில் நீரைப் போலத் தொனிக்கும் கொதிநீர் அவர்கள் நான் போக முடியாத கனவு ஊருக்குச் செல்லும் ரயில் நிற்பதாகக் கூறப்படும் இடம், ரயில், சிநேகிதம் அவர்கள் அவர்களுக்கு என் தோல்வியுற்ற அம்மாவின் சாயல் இருக்கிறது. அவர்கள் நிரம்புவதுமில்லை என்னை நிரப்புவதுமில்லை நடுவில் அவர்கள் இறங்க வேண்டியிருக்கிறது கொஞ்சம் போல துக்கத்துடன் நானும் அவர்களை வழியனுப்பத்தான் செய்கிறேன். அவர்கள் வந்து வந்து செல்லும் ரயில்களா நிலையங்கள் தானா? நான் ஒரு நினைவுமேயற்று இந்தக் கண்ணாடிகளைப் போல இருந்துவிடக் கூடாதா.  

தேவதச்சன் என்னும் மஞ்சள் புத்தகம்

      ஷங்கர்ராமசுப்ரமணியன் எழுபது எண்பது வருடங்களாகிவிட்ட ஒரு கலைவடிவத்தில் செயல்படுபவர்களையும் அவர்களது படைப்புகளையும் சேர்த்துப் பார்க்கும்போது ஒரு மரபைக் காணும் விழைவும் அந்தப் படைப்புகள் அந்த மரபின் தொடரிழையாகத் தெரியவருவதுமான விசேஷ அனுபவம் ஏற்படுகிறது. 30, 40 ஆண்டுகளுக்கு மேல் புத்தூக்கத்துடனும் நம்பிக்கையுடனும் நவீன கவிதை என்னும் ஊடகத்தில் செலவழித்த தேவதச்சனின் கவிதைகளை ஒட்டுமொத்தமாகப் படிக்கும்போது அதன் வெவ்வேறு பருவங்கள், மாறும் அழகுகள், தரையிரங்கிக் கனியும் கோலங்களைப் படிப்பது தண்ணீரில் அழுத்தும்போது ஏற்படும் மூச்சுமுட்டலையும் துக்கத்தையும் இறந்து பிறந்து இறந்து இறந்து எழும் துய்ப்பையும் தருவதாக இருந்தன. தேவதச்சனின் ஆரம்பகாலக் கவிதைகளிலிருந்து சமீபத்தில் எழுதிய இருபது முப்பது கவிதைகள் வரை வாசிக்க நேர்ந்தபோதுதான், புதுக்கவிதையிலும் புதுமைப்பித்தனின் ஒரு மரபு தொடர்வதன் தடயங்கள் கிடைத்தன. அறிவும் விமர்சனமும் அழகும் உணர்ச்சியும் இயல்பாய் சேரும் பாதை என்று அந்த தடத்தைத் தற்போது குறித்துக் கொள்ளலாமா? பிரமிள், சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன், கலாப்ரியா...