அன்பு  என்றே நாம் மொழிபெயர்த்திருக்கிறோம்  எனது வளர்ப்புப் பிராணியின் செய்கையை  சிறுநீர் கழிப்பதற்கு  கழுத்துச் சங்கிலியை விடுவிக்கும்போது  தலையைக் கோதிக் கொடுக்கும்போது  எட்டி எனது விரலை நக்கிக் கடிக்கிறது  சில சமயங்களில் எனது கை முழுவதையும்  கடித்து விழுங்குவதற்கு முயல்கிறது  மொழி தெரிந்தால் அது என்னைக் கேட்டுவிடும்  அதன் அன்புக்குத் தந்தும்விடலாம்  ஆனால் எனது கை  எனது உடலோடும்  தலையில் வலியோடும் பிணைக்கப்பட்டிருப்பது  அதற்குத் தெரியாது  ஒருநாள்  அவளும் நானும் அவரவர் போதத்தை  உடைகளோடு உதிர்த்து  சற்றே பறக்க முயன்றோம்  தன் முலைகளைக் கடித்துப் பருக அளித்து  எனது முகம் பார்த்திருந்தாள் அவள்  இந்தச் செல்லங்களைத்  தந்துவிடு தந்துவிடு  என்று பைத்தியம் போல வாய்குளறிக் கேட்டேன்  அவளும் தலையை தலையை  அசைத்தாள்  அந்த அசைவு சன்னமாய்  நினைவில் சிறுத்துக் கொண்டிருக்கிறது.   (கவிஞர் சாகிப்கிரானுக்கு)