Skip to main content

சிகரெட்டைத் திருடிய இன்னொரு எருமைமாடு


நாட்டார் வழக்காற்றியல் அறிஞர், இலக்கிய நுண்ணுணர்வும் தெளிவும் கொண்ட தமிழின் அரிதான கோட்பாட்டு விமர்சகர், சிறுகதை எழுத்தாளர் என்ற பல அடையாளங்களை கொண்ட எம். டி. முத்துக்குமாரசாமி, தனது வலைப்பூவில் திடீரென்று கவிதைகளை எழுதத் தொடங்கிய காலத்தில் (2011, 2012 ஆண்டுகளாக இருக்கலாம்) அவரிடம் விடுபட்டிருந்த தொடர்பை மீண்டும் புதுப்பித்துக் கொண்டேன்.  அவர் தனது வலைப்பூவில் தொடர்ந்து எழுதிய கவிதைகளைத் தொடர்ந்து படித்து உற்சாகமாக அவருக்கு உடனுக்குடன் தொலைபேசியில் வினையாற்றிக் கொண்டே இருந்தேன். அந்தக் கவிதைகள் எனது கவிதைப் புலனைப் புதுப்பித்த நாட்கள் அவை.

‘நீர் அளைதல்’ என்று அது பின்னர் நற்றிணை பதிப்பகத்திலிருந்து தொகுப்பாகவும் வெளிவந்தது. மினிமலிஸ்ட் கவிதை என்னும் வடிவம் குறித்த ஆழமான பிரக்ஞையுடன் எம். டி. எம்-மின் கேலி, பரந்த வாசிப்பறிவு, உணர்வு உச்சங்கள், திருநெல்வேலி பண்பாடு சார்ந்த தனியானதும், பொதுவானதுமான நினைவுக் குறிப்புகள் விளையாட்டுத் தன்மையோடு அநாயசமாக வெளிப்பட்ட கவிதைகள் அவை; தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுக் கூறுகளும் வெளிப்படும் எழுத்து மொழியும், பேச்சு மொழியும் இசைமையோடு கலக்கும் கவிதைகள் இவை.
 
இந்தச் சமயத்தில் தான், நான் பணியாற்றிய தி சன்டே இந்தியன் இதழுக்காக ஒரு நேர்காணலையும் எம் டி எம்மிடம் செய்தேன். அதில் மினிமலிஸ்ட் கவிதைக்கு தான் கருதிய லட்சணங்கள் சிலவற்றை என்னிடம் பகிர்ந்தார். துணுக்குத் தன்மை, சில்லிட வைக்கும் உணர்வு, மொழியில் ஏற்கெனவே உள்ள பனுவல்கள் தொடர்பான நினைவுகளை எழுப்பக்கூடிய சாத்தியங்கள் என அவர் சொன்ன மினிமலிஸ்ட் கவிதையின் குணங்கள் என் கவிதையிலும் பதிந்த காலம் அது. பை நாகப்பாயை சுருட்டிக் கொள் என்ற ஒரு வாக்கியத்தை நவீன கவிதையில் எழுதும்போது, திருமழிசையாழ்வார், பெருமாளை அதட்டிய ஞாபகத்தை எப்படி ஏற்படுத்த முடிகிறது என்று என்னிடம் அப்போது விளக்கினார்.  முறையான கல்லூரிக் கல்வி பெற்றிடாத எனக்கு சில தருணங்களில், என் படைப்பை, பார்வைகளைத் தூண்டும் தாக்கம் செலுத்தும், மொழி சார்ந்த தனி உலகத்தின் தீராத சுவையை உணரச் செய்யும் ஆசிரியராக எம் டி எம் இருந்திருக்கிறார்.



‘நீர் அளைதல்’ கவிதைத் தொகுப்பு கவனிக்கப்பட வேண்டிய அளவு கவனிக்கப்படவில்லை. ஒரு அறிஞர், கவிதைகளும் எழுதாமலா இருப்பார் என்பதுபோல நமது சூழல், ‘நீர் அளைதல்’ தொகுப்பையும் வழக்கம்போலக் கடந்துவிட்டது. நானும் ஆறு, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகுதானே இதுகுறித்து எழுதுகிறேன். கவிஞர் விக்கிரமாதித்யன் மட்டும் எழுதியதாக ஞாபகம்.
‘நீர் அளைதல்’ தொகுதியில் உள்ள ‘அப்பாவின் எருமைமாடு’ கவிதையில் சொல்லப்படும் அனுபவத்தோடு தொடர்புடைய அனுபவம் என்பதால் இந்தக் கவிதை எனக்கு மிகவும் நெருக்கமானது. முதலில் அந்தக் கவிதையைப் பகிர்கிறேன்.

அப்பாவின் எருமைமாடு

ஊர் நிறைந்திருக்கும் எருமைமாடுகளில்
தன் சிகரெட்டைத் திருடிய
மாடு எதுவென்று 
அப்பா அறிவார்

அப்பாவின் அந்த ஒரு மாட்டிற்குத்தான்
அப்பாவிற்கு இரு முறை
இதயம் நின்று மீண்டதும் தெரியும்
அப்பா புகைக்கக்கூடாதென்றும் தெரியும்

ஒடுங்கிய மார்ப்புக்கூடோடு
 பரபரக்கும் கைகளோடு
அப்பா சிகரெட்டைத் தேடும்போது
மாடு சிலசமயம்
திருடிய சிகரெட்டை நீட்டும்
பற்ற வைத்தும் கொடுக்கும்
அப்பாவின் சிரிக்கும் கண்களை
பேதமையோடு பார்த்து நிற்கும்

ஏன் என் சிகரெட்டைத் திருடினாயென
அப்பாவும் கேட்டதில்லை
எருமைமாடு சிகரெட் பிடிக்காதென்று
எல்லாருக்கும் தெரியும்தானே
ஆனாலும் அப்பா ஊரறியச் சொல்வார்
என் எருமை புகைக்காதென

உண்மையிலேயே எருமை புகைத்த தினத்தன்று
அப்பா எழுந்திருக்கவேயில்லை
அந்த சிகரெட் திருடியதில்லைதானே

நாம் புழக்கத்தில் வீடுகளில் பேசிக்கொள்வதைப் போன்ற தொனியில் சரளமாக எழுதப்பட்டது. கவிதைகளில் அதிகம் பேசவேபடாத அப்பா-மகனின் அன்பும் ஆத்மார்த்தமும் தெரியும் கவிதை இது.

இந்தக் கவிதையின் இறுதியில், அப்பா இறந்து போன அன்று அவரது சிகரெட்டை, மகன் எருமை புகைக்கிறது. அதுவரை சிகரெட்டே புகைத்திராத எருமை அது.

அதுதொடர்பில் தான், என்னுடைய அனுபவம் இந்தக் கவிதையுடன் சேர்கிறது.

எனக்கு நேரடியாக எம். டி. எம்-மின் தந்தையைத் தெரியும். ஒத்த வயது நண்பர்களைப் போல சகபாவமும் அதேநேரத்தில் பிரியமும் மரியாதையும் கொண்ட அபூர்வமான தந்தை - மகன் உறவு அவர்கள் பேணியது. பிரம்மபுத்ரா நதி ஓடும் பகுதியில் இருந்து வந்த எம். டி. எம்-மின் மனைவியின் கரங்களில் திருநெல்வேலி சமையல் ருசி இன்று பரிமளிப்பதற்குக் காரணம் எம். டி. எம்-மின் தந்தை, தனது மருமகளுக்கு அன்புடன் பரிமாற்றியதுதான்.

2004 அல்லது 2005 ஆக இருக்கலாம். எம். டி. எம். மின் தந்தை இறந்த போது, நான் அவரது நிறுவனத்தில் ஆய்வு உதவியாளராக வேலைபார்த்து வந்தேன். நானும் வேளச்சேரி வாசி என்பதால், அவரது தந்தை இறந்த தகவல் கிடைத்தவுடன் அவர் வீட்டுக்கு உடனேயே போய்விட்டேன். உறவினர்கள், நண்பர்கள் மெதுவாக வரத்தொடங்கினார்கள். இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட, அப்போது சிகரெட் பழக்கம் இருந்த எனக்கு சிகரெட் தாகம் எடுத்தது. எம். டி. எம்-மின் தந்தையாரின் சடலம் இருந்த ஹாலில் நாங்கள் உட்கார்ந்திருந்த சோபாவின் முன்னர் இருந்த டீபாயில் கோல்ட் ப்ளேக் சிகரெட் பாக்கெட் இருந்ததைப் பார்த்தேன். எம். டி. எம் தந்தை குடிக்கும் பிராண்ட் அதுவென்று அலுவலக நிர்வாகி சிவா சொன்னார். அதனால் என்ன என்பதுபோல, சிகரெட் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு போய், தயக்கம் எதுவுமின்றி பற்றவைத்து குடியிருப்பின் கீழே நின்று புகைத்துவிட்டு திரும்ப பாக்கெட்டைக் கொண்டு வந்து டீபாயில் வைத்தேன்.

சிகரெட் குடித்து முடித்தவுடன் தான் நெஞ்சு லேசாக கனப்பது போல இருந்தது. சிகரெட்டின் சுவை துவர்க்கத் தொடங்கியது. கொஞ்சம் கிறுகிறுப்பு. பற்றவைத்துக் குடித்தது இறந்த மனிதரின் சிகரெட் என்று. உறங்கியது போல ஐஸ்பெட்டிக்குள் இருக்கும் எம்டிஎம்மின் அப்பாவைப் பார்த்தேன். அரைமணி நேரத்தில் அனைவரும் ஒவ்வொருவராக வீடுதிரும்பத் தலைப்பட்டோம்.

நான் வண்டியை எடுத்து முடுக்கி தண்டீஸ்வரம் மார்க்கெட்டைக் கடந்தேன். ரவி தெருவுக்குள் நுழையும்போதுதான், ஒரு கருப்பு நாய் எனது வண்டியை நோக்கி பாய்ந்து பாய்ந்து சைலன்சரைக் குறிவைத்து வரத்தொடங்கியது. அதற்கு சற்று அருகே எனது கால் உள்ளது. எனக்குக் குலைநடுங்கியது. சிகரெட்டைத் திருடிய குற்றம் வீட்டுக்குள் வரும்வரை துரத்தியது. கேட்டைப் பூட்டிக் கொண்டு மாடியில் உள்ள என் வீட்டின் கதவைத் தட்டி மனைவி கதவைத் திறந்த பிறகுதான் ஆசுவாசம் ஆனேன்.

எம். டி. முத்துக்குமாரசாமி, இந்தக் கவிதையை சில ஆண்டுகள் கழித்து எழுதி இதை வெளியிட்ட போது, எனக்கு இந்தக் கவிதை ஆச்சரியத்தை அளித்தது. இப்போது இந்தக் கவிதை படிக்கும்போதும் இறந்த அந்தத் தந்தையின் சிகரெட்டைத் திருடிய இன்னொரு எருமை நான் என்று சொல்லவேண்டும் போலத் தோன்றுகிறது.

இல்லாத ஒருவரின் பொருளை எடுப்பது திருட்டில்லை என்று எம். டி. எம்முக்குத் தெரிந்திருக்கிறது.   

Comments

anban said…
அருமையான உருக்கமான பதிவு