‘சூப்பர் ப்ராக் சேவ்ஸ் டோக்கியோ' கதையின் முதல்வரியிலேயே ஆறடி உயரத்தில் இருக்கும் பிரமாண்ட தவளை, நாயகன் கடாகிரியைச் சந்தித்துவிடுகிறது.
அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய கடாகிரியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து விட்டதைத் தவிர அந்தத் தவளைக்கு கடாகிரியைச் சங்கடப்படுத்தும் வேறெந்த நோக்கமும் இல்லை. முராகமியின் கதை விலங்குகளைப் போலவே தவளையும் மிக மனிதாபிமானமும் நாகரிகமும் கொண்டது. அத்துடன் அதுவந்ததன் காரணம், ஒரு பெரிய லட்சியத்துக்காக கடாகிரியின் உதவியைக் கேட்டு. டோக்கியோவை நிலநடுக்கத்துக்கு உள்ளாக்க இருக்கும் மண்புழு ஒன்றின் திட்டத்தை நொறுக்கி டோக்கியோவையும் ஆயிரக்கணக்கான மக்களையும் காப்பாற்றுவதுதான் அதன் லட்சியம். திரு. தவளை என்று தன்னைக் கூப்பிட வேண்டியதில்லை, தவளை என்றே அழைக்கலாம் என்று அடிக்கடி நினைவூட்டும் அந்த ஆறடித் தவளை, நீட்சே, டால்ஸ்டாய் போன்ற தத்துவ அறிஞர்கள், படைப்பாளிகளின் மொழிகளையும் சந்தர்ப்பத்துக்கேற்ப கடாகிரியிடமும் நம்மிடமும் பகிர்ந்துகொள்கிறது.
டோக்கியோவை அழிவுக்குள்ளாக்க இருக்கும் ராட்சச மண்புழுவை ஒழிப்பதால் கடாகிரிக்கோ, தவளைக்கோ எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என்பதை அறிந்தே இருக்கிறது அந்த ஆறடித் தவளை. அவர்கள் டோக்கியோவைக் காப்பாற்றிய செய்தி கூட யாருக்கும் தெரியப் போவதில்லை, ஆனால், அந்த ரகசியப் பணியைச் செய்தே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது தவளை. கடாகிரி, சிறுவயதிலிருந்து தனது குடும்பத்தினருக்காகச் செய்த பலன் கருதாத தியாகத்தையும், அவன் பணியாற்றும் அலுவலகத்துக்காகச் செய்யும் கடுமையான பணிகளையும் பார்த்துவிட்டுத் தான் அவனை இந்த மகத்தான பணிக்குத் தேர்ந்தெடுத்ததாகவும் சொல்கிறது.
கடாகிரிக்கும் தவளைக்கும் மட்டுமே தெரிந்த வேறு யாருக்குமே தெரியாத தளத்தில் நடக்கும் யுத்தத்தில் மண்புழு வெல்லப்பட்டு நிலநடுக்கம் தடுக்கப்படுகிறது. ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் சாவின் வாயிலிருந்து காப்பாற்றப்பட்டு விடுகின்றனர். யாருக்குமே தாங்கள் காப்பாற்றப்பட்டது தெரிந்திருக்கவில்லை; அதனால் என்ன நாம் நினைத்ததைச் சாதித்துவிட்டோம் என்று கடாகிரியிடம் திருப்தியுடன் பேசுகிறது தவளை.
கடைசியில் தவளையாக இருந்தும் தவளையல்லாதவர்களுக்கான உலகத்துக்காகத் தான் போராடுவது குறித்தப் புதிரைப் பற்றிப் பேசத் தொடங்குகிறது. கடாகிரிக்கு தவளை பேசுவது புரியவில்லை. எனக்குப் புரியவில்லை என்று கேட்கிறான் வாசகனைப் போன்றே.
“என்னாலும் புரிந்துகொள்ளத்தான் முடியவில்லை" என்று கண்களை மூடியபடி மேலே பேசத்தொடங்குகிறது தவளை.
“அந்த உணர்வைத் தான் அடைகிறேன். உங்கள் கண்களால் பார்ப்பது உண்மையாக இருக்க வேண்டியதில்லை. மற்ற எல்லா வஸ்துக்களையும் விட எனது பகைவன் எனக்குள் உள்ள நான்தான். எனக்குள் எனதல்லாத எனது ஒன்று உள்ளது. எனது மூளை சேறாக ஆகிக்கொண்டிருக்கிறது. எஞ்சின் வருகிறது. ஆனால் திரு. கடாகிரி, நான் சொல்வதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்று மிகவும் விரும்புகிறேன்"
தவளையின் இறுதிப் பேச்சு இதுதான். அதற்குப் பிறகு தவளை தனது மூலாதாரத்துக்குத் திரும்புகிறது.
முராகமி, தன் கதைகளில் விலங்குகளை விடுவதன் மூலமாக, மனித கனத்திலிருந்து விடுபடுகிறார் என்று முன்பொரு முறை எழுதியிருந்தேன். தவளையிடமிருக்கும் தவளையின் கனத்தையும் முராகமி இந்தக் கதையில் விடுவிக்கப் பார்க்கிறார்.
எனக்குள் எனதல்லாத ஒன்றாக இருக்கும், என்னுடன் போராடும் ஒன்றுதான் இத்தனை சாகசங்களுக்குத் தூண்டுகிறதா? முராகமி.
Comments