Skip to main content

யதிக்குத் துணையாக நடராஜ குரு விட்டுச்சென்ற குரங்குகள்


எனது இலக்கிய ஆசிரியர்களோடு ஆசிரியராக நித்ய சைதன்ய யதி தொடர்ந்து என்னுடன் வந்துகொண்டிருக்கிறார். மனுஷ்ய புத்திரன், லக்ஷ்மி மணிவண்ணன், கண்ணன் சேர்ந்து நடத்திய காலச்சுவடு பத்திரிகையில் ஜெயமோகன் எடுத்த நேர்காணல் வழியாக நுழைந்தவர் நித்ய சைதன்ய யதி. நல்ல அவியல் வைக்கத் தெரியாதவன் துறவியாக முடியாது என்ற கூற்று ஞாபகத்தில் இன்னமும் இருப்பது; நண்பர்களிடம் அதைத் தொடர்ந்து பகிர்கிறேன். அத்துடன் 16 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு நல்ல அவியலைச் சமைப்பதில் படிப்படியாக முன்னேறியும் வருகிறேன். நித்ய சைதன்ய யதியை நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆசை இருந்தும், ஓரிரண்டு முறை செய்த பலவீனமான முயற்சிகளுக்கப்பால், அதற்கான சூழல்கள் அமையவில்லை. பிரமிளும் யதியும் இப்படித்தான் தவறியது. 

 நித்ய சைதன்ய யதி இறந்தபிறகு வேறேதோ சந்தர்ப்பத்தில் எனது திருமணத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவரது சுயசரிதை நூலான Love and Blessings எனக்கு வந்து சேர்ந்தது. 

அந்த நூலில் அவர் தீட்டியிருந்த குழந்தைப் பருவத்தைப் பற்றிய காட்சிகள் தான் யதி என்னுடைய உலகத்தைச் சேர்ந்தவர் என்ற நெருக்கத்தை எனக்கு அளித்தது. குழந்தைப் பருவத்தை விவரிக்கும் வேளைகளிலும், ஒரு அறிஞராக துகள் இயற்பியலைப் பேசும்போதும், குழந்தையின் கண்களில் உள்ள நிஷ்களங்கத்தையும் வியப்பையும் விடாத மொழி அவருடையது. எனது சிறுவர் பருவத்திய நினைவுகள் சிலவற்றை சின்னச் சின்ன அத்தியாயங்களாக அப்போது எழுதியது,  Love and Blessings ஏற்படுத்திய தாக்கத்தில்தான். அப்போது அந்த நூல் கொடுத்த பரபரப்பில் யதியின் குழந்தைப் பருவ நினைவுகளாக வரும் அத்தியாயங்களை மட்டும் மொழிபெயர்க்கலாம் என்ற உத்வேகத்தோடு இருந்தேன். யாரிடம் அந்தப் புத்தகத்தைக் கொடுத்தேன் என்று இப்போது வரை நினைவில் இல்லை. என்னிடம் இருந்துபோய்விட்டது. ஆனால், யதியின் அந்தக் களங்கமற்ற கண்களும் வியப்பும் இந்த உலகின் மீது அச்சமோ புனிதமோ அற்ற ஈடுபடுதலும் நான் மொழிபெயர்க்காவிட்டாலும் எனக்குள் பதிந்துவிட்டிருப்பதை உணர்கிறேன். அடுத்த வேளைக்கான சேமிப்போ உடைகளோ படித்த சான்றிதழ்களோ இல்லாமல் அவர் இந்தியா முழுவதும் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார். 

சில ஆண்டுகளுக்கு முன்னர் எனது மனநல சிகிச்சையின் ஒரு அங்கமாக மீண்டும் நித்ய சைதன்ய யதியை aranya.me இணையத்தளம் மூலமாகத் தொடர ஆரம்பித்தேன். ஒரு தேர்ந்த உளவியல் சிகிச்சையாக நித்ய சைதன்ய யதியின் கட்டுரைகள் இருக்கின்றன. அதில் சிலவற்றை மொழியாக்கமும் செய்தேன். காலியாக இருப்பதன் பெறுமானம், காதலிக்கப்படுபவர் நேசிக்கப்படுபவரும் தான் போன்ற கட்டுரைகளை என்னால் முடிந்தளவுக்கு தமிழ்படுத்தியிருக்கிறேன். அவை இத்தளத்தில் உள்ளன. வான்கோவின் 'ஸ்டாரி நைட்' பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரையை அழகு என்பதன் மீதான தியானம் என்று சொல்வேன். அதிலும் சில பகுதிகளை மட்டும் மொழிபெயர்த்துள்ளேன். அதை முழுமையாக மொழிபெயர்ப்பதற்கு இன்னமும் எனக்குத் திறன் கூடவில்லை. காதலர் நேசிக்கப்படுபவரும்தான் கட்டுரை புதிய காதலர்களுக்கும், திருமணம் செய்தவர்களுக்கும் பரிசாகப் படிக்கக் கொடுக்க வேண்டியது.

யதியை இப்படி அறிந்துகொள்ளும் பயணத்தில் நண்பர் சாம்ராஜ் வீட்டில் கிடைத்த புத்தகம் தன்னறம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் 'யதி - தத்துவத்தில் கனிதல்' தற்செயலாக சென்ற வாரம் கிடைத்தது. தற்செயல் என்றாலும் இந்த சமயத்தில் யதி எனது வீட்டுக்கு வந்து என்னுடன் இருந்து பேசும் இதத்தை இந்தப் புத்தகத்தின் வழியாக உணர்கிறேன்.  


பாலியல் உட்பட எது குறித்தும் மனத்தடை இல்லாமல், எதையும் புனிதப்படுத்தாமல் பேசும் யதி அந்த அணுகுமுறையை அடைவதற்குக் காரணம் அவரிடம் இருக்கும் நிஷ்களங்கம்தான் காரணம் என்று தோன்றுகிறது. கலைஞனின் உணர்ச்சிவசப்படும் நிலையையும் ஊறுபடும் நிலையையும் நிலைகுலைவையும் அழகின் மேலான வியப்பையும் தக்கவைத்துக் கொண்டே முறைசார் அறிவையும் விவேகத்தையும் சமநிலையையும் ஒழுங்கையும் வளர்த்துக் கொண்டு பராமரிப்பவர் என்ற எண்ணத்தை வழங்குகிறார். சுய பரிகாசமும் நகைச்சுவையும் நெருக்கடியான பொழுதுகளிலும் அவரைக் கைவிடாது தொடர்கின்றன. 



ரமண மகரிஷியுடனான சந்திப்பை ஏற்கெனவே படித்திருக்கிறேன் என்றாலும் திரும்பப் படிக்கும்போது மிக சுவாரசியமாகவே இருந்தது.  செயல்துடிப்பில் நம்பிக்கை கொண்டிருந்த யதி, ரமணரை முதலில் பார்க்கும்போது சோம்பேறித் துறவியாகவே அவர் மனத்தில் பட்டிருக்கிறார். படிப்படியாக சில நாட்களில் அந்த உணர்வு மாறுகிறது. ஆழ்படிமங்கள் பற்றியும் மரணத்தைப் பற்றி எழுதியிருக்கும் அத்தியாயமும் கவித்துவமும் தர்க்கமும் மேவி மோதி விம்மும் இடமாகும். தீக்குச்சி சிறிது நேரமே எரிந்தாலும் ஒரு ரௌடி போல ஆர்ப்பாட்டமாக எரிகிறது என்கிறார். மெழுகுவர்த்தியோ யோகியைப் போல எரிகிறதாம்.

பள்ளிக்குச் செல்லும் வழியில் உள்ள வனத்தில் தவளைகளை மாணவர்களாக கொண்டு பிரத்யேகப் பள்ளியை நடத்தும் யதி, அந்த தவளைகளில் தனது வகுப்பு சினேகிதியான ரூபியின் பெயரை ஒரு தவளைக்கு இடுகிறார். ரூபியை எப்போதும் அவர் மிரட்டுவதேயில்லை. 

ஓவியர் மோனே பற்றிய கட்டுரையும் ஸ்ரீசக்கரம் பற்றிய கட்டுரையும் மிக அபூர்வமானது. கலையின் நரம்புகளைக் கொண்ட ஒரு துறவி என்று தோன்றுகிறது.

நாராயண குருவின் மாணவரும் யதியின் ஆசிரியருமான நடராஜ குருவுக்கும் இவருக்குமான உறவைச் சொல்லும் பகுதிகள் தான் இந்த நூலின் உச்சமான தருணங்களாக எனக்குத் தெரிந்தது. டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய பகவத் கீதை உரையை யதியிடமிருந்து வாங்கிப் புரட்டிப் பார்த்துவிட்டு ஒரு புள்ளியில் கார் கண்ணாடி வழியாகத் தூக்கி எறிகிறார் நடராஜ குரு. யதிக்கு அது காயப்படுத்தலாகத் தெரிகிறது. அச்சடிக்கப்பட்டதானேலேயே,   அந்தஸ்தும் அதிகாரமும் உள்ளவரால் எழுதப்பட்டதனாலேயே, ஒரு நூலை நாம் மரியாதை செலுத்த வேண்டிய அவசியமில்லை என்ற நிர்தாட்சண்ய அம்சத்தை யதி கற்றுக்கொள்கிறார். 

குழப்பமான நேரங்களில் அமைதியை ஏற்படுத்துபவராகவும் அமைதியான சூழலில் குழப்பத்தை வேண்டுமென்றே ஏற்படுத்துபவராகவும் இடர்படுத்தித் துன்புறுத்துபவராகவும் யதிக்கு ஆரம்பகட்டத்தில் நடராஜ குரு இருந்துள்ளார். படிப்படியாக அவர் நடராஜ குருவின் அருமையை உணர்ந்து நெருங்கும் சித்திரம் சிரிக்கச் சிரிக்கச் சொல்லப்படுகிறது.

கிட்டத்தட்ட ஐம்பது நாட்கள் குறைந்தபட்ச உணவுப்பொருளோடு, சிறு குடிலில் யதியை நடராஜ குரு விட்டுச் சென்றுவிடுகிறார். யதிக்கு ஒரு பழங்குடிச் சிறுவன் மட்டுமே அங்கே துணை. அங்குள்ள குரங்குகள் யதியின் அரிசியைத் திருடி உண்டு, சமைக்கும் உணவைச் சிதறடித்து, எழுதிய காகிதங்களைக் கிழித்துப் போட்டு வாய்விட்டு அழச்செய்கின்றன. திரும்பிவரும் நடராஜ குருவிடம் யதி குரங்குகளின் அட்டூழியத்தை எல்லாம் சொல்கிறார். அரிசியைச் சாப்பிட்டதோடு அதில் சிறுநீர் கழித்த இரண்டு குரங்குகளின் விஷமக்கதையையும் சொல்கிறார் யதி.

நடராஜ குரு அதைக் கேட்டுவிட்டு, பழங்குடிச் சிறுவனைக் கூப்பிட்டு, குரங்குகள் பசிக்காக அரிசி சாப்பிட்டது சரியாக இருக்கலாம், ஆனால் மூத்திரம் கழிக்கலாமா? என்று கேட்கிறார். அந்தப் பையன் அது நியாயமல்ல என்று பதில் சொல்கிறான். இதே கேள்வியை யதிக்கு முன்பாக அவ்வப்போது அந்தச் சிறுவனிடம் மீண்டும் மீண்டும் கேட்கிறார் நடராஜ குரு. அந்தச் சிறுவனும் அரிசியைச் சாப்பிட்டது பசிக்கு; ஆனால், மூத்திரம் கழித்துச் சென்றது நியாயம் அல்ல என்று சளைக்காமல் பதில் சொல்கிறான். 

படைப்புச் செயல் குறித்து நித்ய சைதன்ய யதி என்னவிதமான மனோபாவத்தைக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்துகொள்வதன் வழியாக அவர் உலகைப் பார்ப்பதன் தன்மையை உணரமுடிகிறது. உற்பத்தியாக படைப்பு நினைக்கப்படும் காலத்தில் நித்ய சைதன்ய யதியின் இந்த பதில் நமது நினைவில் நிலைக்க வேண்டியதும் கூட.

படைப்புச் செயல் என்பது என்ன? அது ஒருவகை 'உற்பத்தி' எனலாமா?

சொல்லை மாற்றுவதன் மூலம் என்ன நடக்கிறது? சில சிறு அதிர்ச்சிகள் தவிர? உற்பத்தி என்பதில் அந்த முன்வடிவம் முன்கூட்டியே திட்டவட்டமாக உள்ளது. அதைத் தொழில்நுட்பத் திறன்மூலம் வடிவமாக மாற்றுகிறோம். படைப்பில் ஒரு சொல் அடுத்த சொல்லை நிகழ்த்துகிறது. உயிர்ப்பொருளின் உருவாக்கத்தில் ஒரு உயிரணுவின் கருவிலிருந்து அடுத்த உயிரணு பிறப்பது போல. ஆகவே அதற்குப் படைப்பு என்று பெயர் சூட்டுவோம்.  

இந்த நூலைப் படிக்கும்போது யதியின் வழியாக நடராஜ குருவும் மிகத் திடமாக மேலெழுந்துவருகிறார். விஷமம், அட்டகாசம், அறிவு, நேசம் என சகல முகங்களையும் முகமூடிகள் போல யதியிடம் தூக்கிப்போட்டு விளையாடுகிறார். யதியுடன் சேர்ந்து அவரும் ஐம்பது குரங்குகளை வனத்தில் எதிர்கொண்டு சமாளிக்கிறார். ஆனால், யதியோ ஒரு பிரச்சினையாக குரங்குகளை நினைக்கிறார். நடராஜ குருவோ குரங்குகளை எதிர்கொள்வதை ஒரு விளையாட்டாக ஆக்குகிறார். பட்டாசுகளை வாங்கிவந்து பற்றவைத்து, பட்டாசு வெடிக்கும் வேளையில், தனது ஊன்றுகோலை துப்பாக்கிப் போலக் காட்டி குரங்குகளை முதலில் பயமுறுத்துகிறார். நடராஜ குரு கையில் துப்பாக்கி இருக்கிறது என்று முதலில் அச்சப்பட்டு அடங்கும் குரங்குகள், விரைவில் அது துப்பாக்கி இல்லை என்று  புரிந்துகொள்கின்றன. யதியும் அவருக்கு ஒரு குரங்காகத் தான் தென்பட்டிருப்பார். 

யதியும் பின்னால் எத்தனையோ குரங்குகளை இப்படி விளையாட்டாக எதிர்கொள்ளப் பழகியிருப்பார்தானே.

இந்த நூலின் கட்டுரைகளை ஜெயமோகன், நிர்மால்யா, ஆர். சிவகுமார், ஆனந்த் சீனிவாசன், பாவண்ணன், சூத்ரதாரி ஆகியோர் மொழிபெயர்த்துள்ளனர். தமிழில் சமீபத்தில் நடந்திருக்கும் அரிய நிகழ்வு இந்த நூல்.    

Comments

மிகச் சிறப்பு
நெஞ்சை வருடும் மழலையின் கைகள் என இனிமே அளித்த பதிவு. மிக்க நன்றி ஷங்கர்.
Unknown said…
பச்சக் என மனதில் ஒட்டிக்ெகெண்டது.