Skip to main content

என்னைத் தூக்கிச் செல்லாத காற்று


தலைமுடியைச் சிலுப்புவது போல

பாசனக் குளத்தின் மேற்பரப்பை நடுங்கச் செய்து

வெங்காயத் தாமரை இலைகளை ஆடவைத்து

நீலத்தாழைக் கோழிகளின் சிறகுகளைச் சிலிர்ப்பித்து

நிறுத்தி சரித்த வில்வண்டிக்குள் நுழைந்து ஊளையிட்டு 

கண்ணுக்கே தெரியாமல்

என் வேட்டி சட்டை வழியாக

எலும்புகளாலான என் மண்டபத்துக்குள்

நுழைந்து கடக்கிறது

காற்று 

உயிரைத் தூக்கிச்சென்ற செய்திகளை

நான் படித்ததேயில்லை

ஆனாலும்  

என் கால்களிடம் போய் எப்போதும்போல

ரகசியமாக எதுவோ பயமுறுத்த

மயிர்களிலிருந்து மூட்டுகள் வரை

நடுங்குகின்றன

அரசமரத்தின்

ஒவ்வொரு இலையையும் 

இடைவிடாமல் 

சுழன்றாடச் செய்கிறது

குளத்தின் ஈரத்தோடு சேர்ந்து

ஆடும் மரத்தை இலைகளை

வயலில் கதிர்களை

என் உடலின் ஒவ்வொரு துளியும் தொட்டு மீண்டு

அநிச்சயத்தின் குறுகுறுப்பில் 

காற்றில் பறந்துவிடுவோமா

பறந்துவிடுவோமாவென்று

குழந்தைகளைப் போலக் கேட்டுக் கதைக்கிறது

தரையில் பதித்திருக்கும் உன் கால்களின் வேர்களை நறுக்கி

சுலபத்தில் தூக்கிப் போவேன்

என்று

அரை டிரவுசர் அணிந்த சிறுவனாக இருக்கும்போது

என் காதில் மிரட்டியிருக்க வேண்டும்

ஆனியிலேயே வந்துவிடும் இந்தக் காற்று

உண்மையில் தரையிலேயே இருந்து நிலைக்க விரும்புகிறேனா

ஜிவ்வென்று இழுத்து என்னைத் துணியாக்கி

நீட்டிக் கிழித்துக் கடக்கும்

ஆடிக்காற்று 

என்னைப் பறித்தெறிய 

ரகசியமாய்

ஆசைப்படுகிறேனா 


அப்படி ஆசைப்பட்டால்

என் துவாரங்களையெல்லாம் அபூர்வமாய்

நிறைத்துவிடும்

இந்தக் கண்ணுக்குத் தெரியாத

வஸ்துவைப் பற்றி 

ஏன் புகார் செய்து கொண்டிருக்கிறேன்?

Comments

காலை நல்ல கவிதை வாசித்த நிறைவு. கண்ணுக்குத் தெரியாத வஸ்துகள் எப்பொழுதும் நம்மை தொந்தரவிற்கு உள்ளாக்கிக் கொண்டே இருக்கின்றன.