ஓவியம் : சுந்தரன். எம் |
இருபதாம் நூற்றாண்டு தமிழ் நவீன இலக்கியத்தில் தனித்துவமான எழுத்துக் கலைஞர்களில் ஒருவரான நகுலனுக்கு இது நூற்றாண்டு. நகுலனின் நூற்றாண்டை முன்னிட்டு 'அருவம் உருவம் நகுலன் 100’ என்ற நூல்தொகுப்பு ஒன்றை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொண்டுவர உள்ளோம். பல்வேறு தயக்கங்கள், ஒத்திப்போடல்களுக்குப் பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கவிஞர் சபரிநாதனையும் கவிஞர் வே. நி. சூர்யாவையும் தார்மிகத் துணையாகக் கொண்டு நகுலனுக்கான நூற்றாண்டு நூல் தொகுப்பைக் கொண்டுவரும் வேலைகளை மெதுவாகத் தொடங்கினேன். இதுவரை தொகுக்கப்படாத நகுலனின் சில சிறுகதைகள், நகுலன் எழுதிய ஆங்கிலச் சிறுகதை, கவிதைகளின் மொழிபெயர்ப்பு, நகுலனின் சித்திரங்கள், புகைப்படங்கள், நகுலனின் பன்முகப் பங்களிப்பை மதிப்பிடும் படைப்பாளிகளின் கட்டுரைகள் ஆகியவை இந்த நூலில் இடம்பெறும். நூல்வனம் பதிப்பகத்தின் வெளியீடாக மணிகண்டன் இந்தப் புத்தகத்தைக் கொண்டுவருகிறார்.
000
தனிமனிதனின் வெற்றி, புகழ், வெளிச்சம், அவை சார்ந்து திரளும் அதிகாரத்தின் மீதான ஈர்ப்பும், கும்பல்வாதமும் அதனால் ஊக்கம்பெற்ற தொழில்முனைவும் தீவிர இலக்கியத்திலும் கலை - பண்பாட்டுச் செயல்பாடுகளிலும் வலுப்பட்டிருக்கும் நிலையில், மனித இருப்பின் ஆதார அம்சமாகத் தோல்வியைப் பார்த்த எழுத்துக் கலைஞர் நகுலன்.
மனிதனுடைய சாதனை அத்தனையையும், சலித்துத் தற்காலிகமாக்கிவிடும் தோல்வி சார்ந்த போதத்திலிருந்து, இங்கு வெற்றி என்று விதந்தோதப்படும் அத்தனை அம்சங்களுக்கும் எதிராக, போராட்டம் நடத்திய குருக்ஷேத்திரம் தாம் அவருடைய படைப்புகள்.
இருப்பதின் மீதான சார்பும், இருப்பதின் மீதான பூதாகரமான பிடிமானமும், இருப்பது தொடர்பிலான பிரமாண்ட அகந்தையும் பெருகியிருக்கும் காலகட்டம் இது. இங்கே, இல்லாமல் போகும் வரும் இடத்தை ஒரு கருவறையாகக் கண்டு, இன்மையை தனித்தவொரு வசீகரமான இருப்பாக, தமது மொழி வழியாகச் சுட்டிக் காட்டியவர் நகுலன். இன்மையிலிருந்து ஊறிப் பெருக்கெடுப்பவள்தான் அவரது சுசீலா; இன்மையிலிருந்து வந்து வந்து போவதுதான் அவரது மஞ்சள் நிறப்பூனை; இன்மையைத் தொடர்புபடுத்தியபடியே இருப்பவர்கள் தான் சச்சிதானந்தம் பிள்ளையும் சாரதியும் சிவனும்.
யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது?
எல்லாம்
பிறந்த குடும்பம், ஊர், தேசம், இயற்கை, சமூகம், மரபு, வரலாறு, தாய், தந்தை, உறவுகள், நண்பர்கள், படிக்கும் புத்தகங்களின் தாக்கத்தையும் பிரதிபலிப்பையும் சாயல்களையும் சேர்த்து மனிதனையும் சுயம் என்று சொல்லப்படுவதையும் பரிசீலித்தவர் நகுலன்; இலக்கியப் பிரதிகளிலும் ஏற்கெனவே எழுதப்பட்ட பிரதிகளின் ஓசைகள், உள்ளடக்கங்கள், விழுமியங்களின் ஊடுபாவலை, நிழலை, எதிரொலியை நமக்கு, அவரது படைப்புகள் வழியாகவே நிகழ்த்திக் காட்டியவர்.
நகுலனையும் அவரது படைப்புகளையும் பற்றி கவனத்தைச் செலுத்துவது ஒரு விழுமியத்தைத் தக்கவைப்பதும் கூட.
கலை என்ற தலைப்பில் நகுலனும் அவரது தளத்திற்கே சம்பந்தமில்லாதவராக கருத வாய்ப்புள்ள சார்லஸ் புகோவ்ஸ்கியும் இரண்டு கவிதைகளை எழுதியுள்ளனர். நகுலனின் கூற்றை புகோவ்ஸ்கி அழுத்தமாக அடிக்கோடிடுகிறார் தன் கவிதையில்.
கலை
மைக் கறை
படியத்துடிக்கும்
வெள்ளைக் காகிதம்
வேண்ட
வரும்.
- நகுலன்
கலை
லட்சியம்
நலியும்போது
உருவம்
தோன்றுகிறது.
- சார்லஸ் புகோவ்ஸ்கி
ஒட்டுமொத்த உலகமும் ஆளாக, உருவமாக, வடிவமாகப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் நகுலன், புகோவ்ஸ்கி இருவருமே உருவத்தை, வடிவத்தை உற்பத்தி இயல்பாகப் பார்த்திருக்கிறார்கள். எல்லா உயிர்களும் எல்லாத் துடிப்புகளும் ஒரு வடிவத்தை எடுப்பதற்குப் போராடுவது எத்தனை உண்மையோ, கடைசியில் ஒரு வடிவத்தை அவை எடுத்துவிடுவதும் உண்மை.
அரசு, குடும்பம், அமைப்பு, சமூகம், வடிவு, நபர், பெண், ஆண் என உருவங்களை எடுக்காதது உண்டா?
அப்படியானால் உருவமாவது சவாலா? உருவமாகாமல், உருத்திரளாமல் அருவமாக இருப்பது சவாலா? இங்கே வெற்றி எது? தோல்வி எது?
நகுலன், பொதுவில் கருதப்படும் தோல்வி என்ற நிலையிலிருந்து இந்தச் சவாலைச் சந்திக்கிறார். வேண்டினால் வரும்தானே என்று சிரிசிரியென்று சிரிக்கிறார். உருவங்கள் வந்துகொண்டிருக்கும் எதேச்சையை அவர் கண்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
000
இந்தப் பெருந்தொற்றுக் காலம் தனிமனிதன் என்பதன் மேல் கட்டப்பட்ட பெரும் கற்பிதங்களை அடித்து நொறுக்கியுள்ளது. தனிமனிதனின் விருப்புறுதி கூடுதலாக விதந்தோதப்பட்ட நூற்றாண்டின் தொடக்கத்தில் கண்ணுக்குப் புலப்படாத ஒரு நுண்ணுயிர், நம் அனைவரின் வாழ்க்கைகளையும் நிர்ணயித்து நகர இயலாமல் கட்டிப்போட்டு, சமுத்திர எல்லைகளைத் தாண்டி, ஒரு உயிர்ச் சங்கிலியில் தான் நாம் இருக்கிறோம் என்பதை மறுபடியும் ஞாபகப்படுத்தியுள்ளது.
இந்த நூல் தொகுப்பு வருவதற்கு முன்னோட்டமாகவும், நகுலன் நூற்றாண்டை முன்னிட்டும் அவரது பிறந்த நாளான இன்றுமுதல், நகுலனின் படைப்புகள் பற்றிய கட்டுரைகளையும் குறிப்புகளையும் தொடர்ந்து எழுதத் திட்டமிட்டுள்ளேன். அதை இங்கே வெளியிடுவேன்.
இத்தொகுப்பின் பணிகள் 40 சதவீதம் முடிந்துள்ளன. இன்னும் ஓரிரு மாதங்களில் இத்தொகுப்பு நூலுக்குப் பங்களித்துள்ள படைப்பாளிகளின் முழுவிவரங்களும் இந்த இணையத்தளத்தில் வெளியாகும்.
Comments
சூசிப்பெண் சிரிக்க ரோசாப்பூ மலரட்டும்