கிட்டத்தட்ட
பதினைந்து மாதங்களாக மனத்தை ஆக்கிரமித்திருந்த அருவம் உருவம் நகுலன் 100 புத்தகப்பணி
அருமையான வகையில் நிறைவடைந்திருக்கிறது. படிப்பவர் கைகளில் வைத்திருப்பதற்கு மிருதுவாக,
கண்ணுக்கும் விருந்தாக, இந்த நூலை அழகிய கலைப்படைப்பாக நூல்வனம் மணிகண்டன் பதிப்பித்திருக்கிறார்.
ஒரு தொகுப்பாளனாக எனது குறைகள் அத்தனையையும் நிறைசெய்தவர் நூல்வனம் மணிகண்டன் தான்.
உள்ளடக்க ரீதியாகவும் அவரது பணி நிறைய. அவருக்கு முதன்மையான நன்றி.
மனுஷ்ய புத்திரன்
1997-ல் எனக்கு எழுதிய இன்லாண்டு கடிதத்தில் மேற்கோள் காட்டியிருந்த கவிதையின் வழியாகத்
தீவிரமாகத் தொடங்கித் தொடரும் நகுலனுடனான உறவின் மிக முக்கியமான கட்டம் அருவம் உருவம்
நகுலன் 100.
நகுலன் நூற்றாண்டில்
அவருக்கு ஒரு மலர் போன்ற ஒரு நூல்தொகுப்பைத் திட்டமிடலாம் எனத் தோன்றியது, 2020-ம்
ஆண்டு டிசம்பர் மாதத்தில். இதுபோன்ற தொகுப்புப் பணிகள் செய்வது எங்கேயோ உயிரை வருத்தும்
காரியம் என்பதால் அதைத் தள்ளித் தள்ளிப் போட்டுக்கொண்டிருந்தேன். 2021-ம் ஆண்டு பிப்ரவரி
மாதம், வேளச்சேரி அரசு நூலகத்துக்கு அருகே நானும் சபரிநாதனும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது,
அதைச் செய்துவிடலாம் என்று முடிவுசெய்தேன். செல்லப்பா, கோணங்கி, வே நி சூர்யா எல்லாரும்
செய்துவிடுங்கள் என்று உடனடியாக ஊக்கம் கொடுத்தவர்கள். ராணிதிலக்குடனும் அடுத்த நாளே
பேசினேன்.
அம்மாவுக்கு
வயிற்றில் புற்றுநோய், இறுதிக்கட்டத்தில் தெரியவந்த நிலையில், தனது இறுதிநாட்களை எனக்குப்
பரிசுபோலத் தருவதற்காக என்னுடன் வந்து தங்கியிருந்த வேளையில் இரண்டு காரியங்களை பூர்த்தி
செய்ய வேண்டும் என்று உணர்ந்து தொடங்கிய வேலை இது.
அருவம் உருவம்
நகுலன் 100-க்காக நான் கட்டுரை கேட்டு, தர சம்மதம் தெரிவித்து தரமுடியாதவர்கள் எம்
டி முத்துக்குமாரசாமி, பிரம்மராஜன், வே நி சூர்யா. மூன்று பேரையும் நகுலன் 100 தொகை
நூல் உண்மையிலேயே இழப்பாக உணர்கிறது.
நகுலன்
100 நூலுக்காக ஆ. பூமிச்செல்வம், ந. ஜயபாஸ்கரன், எம். யுவன், வரதராஜன் ராஜூ, கல்யாணராமன்,
ப. சகதேவன் என்னும் கிருஷ்ணசாமி, ஆனந்த், கலாப்ரியா, சி. மோகன், சுகுமாரன், கோணங்கி,
எஸ். ராமகிருஷ்ணன், அய்யப்ப பணிக்கர், பி. ரவிகுமார், ஆர் ஆர் சீனிவாசன், எஸ். சண்முகம்,
கண்டராதித்தன், ராணிதிலக், ஸ்ரீநேசன், ஆசை, சர்வோத்தமன் சடகோபன், பிரவீண் பஃருளி, விக்ரமாதித்யன்,
ஜி. முருகன், சபரிநாதன் ஆகியோர் பங்களித்துள்ளனர்.
ஓவியர்கள்
மணிவண்ணன், சுந்தரன் எம் ஆகியோர் இந்த நூலுக்காகவே ஓவியங்களை வரைந்து தந்தனர். ஆதிமூலம்,
மருது, நரேந்திரன் வேறு வேறு சந்தர்ப்பங்களில் வரைந்த ஓவியங்களையும் நன்றியுடன் பயன்படுத்தியிருக்கிறோம்.
நகுலனின்
நண்பரும் பேராசிரியருமான கி. நாச்சிமுத்து, அழகிய சிங்கர், சந்தியா நடராஜன் ஆகியோர்
இந்த நூலுக்கு உதவியுள்ளனர்.
தனிமனிதனின்
வெற்றி, புகழ், வெளிச்சம், அவை சார்ந்து திரளும் அதிகாரத்தின் மீதான ஈர்ப்பும் கும்பல்வாதமும்
அதனால் ஊக்கம்பெற்ற தொழில்முனைவும் தீவிர இலக்கியப் பரப்பிலும் தற்கால கலை – பண்பாட்டுச்
செயல்பாடுகளிலும் வலுப்பட்டிருக்கும் நிலையில், மனித இருப்பின் ஆதார அம்சமாகத் தோல்வியைப்
பார்த்த எழுத்துக் கலைஞர் நகுலன்.
பிறந்த குடும்பம்,
ஊர், தேசம், இயற்கை, சமூகம், மரபு, வரலாறு, தாய், தந்தை, உறவுகள், நண்பரகள், புத்தகங்களின்
தாக்கத்தையும் பிரதிபலிப்பையும் சாயல்களையும் சேர்த்து மனிதனையும் சுயம் என்று சொல்லப்படுவதையும்
பரிசீலித்தவர் நகுலன்; இலக்கியப் பிரதிகளிலும் ஏற்கெனவே எழுதப்பட்ட பிரதிகளின்
ஓசைகள், உள்ளடக்கங்கள், மதிப்பீடுகளின் ஊடுபாவல், நிழல், எதிரொலி ஆகியவற்றை நமக்கு,
அவரது படைப்புகள் வழியாகவே நிகழ்த்திக் காட்டியவர்.
நகுலனையும் அவரது படைப்புகளையும் வாசிப்பது ஒரு விழுமியத்தைத்
தக்கவைப்பதும் கூட.
புதுமைப்பித்தன் தொடங்கி ஆத்மாநாம் வரை சிறந்த எழுத்தாளர்களின்
படைப்புகள் செம்பதிப்பு கண்ட நிலையில் நகுலனின் படைப்புகள் காலவாரியாகத் தொகுக்கப்பட்டு
பிழைகள் களையப்பட்டு தேர்ந்த ஆய்வுப்பதிப்புகளாக வரவேண்டிய தேவை உள்ளது. அதற்கான அவசியத்தையும்
வலியுறுத்தலையும் தமிழ் வாசகச் சூழலில் உருவாக்குவதும் அருவம் உருவம் நகுலன் 100 தொகைநூலின்
நோக்கம்.
புதுமைப்பித்தன், பிரமிள், மா. அரங்கநாதன், அபி, தேவதச்சன் எனத் தொடரும் தமிழ் இலக்கியவழிச் சிந்தனை மரபின் முக்கியமான கண்ணி நகுலன். அவரது நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில், அருவம் உருவம் நகுலன் 100 தொகைநூல் இணைகிறது.
Comments