Skip to main content

ஓவியர் ஜெயராஜ் – தமிழ் வாழ்க்கையின் மைக்கேல் ஆஞ்சலோ


தமிழ்நாட்டில் சில ஆயிரங்கள் கணக்கில் வாசகர்களிடம் புழங்கி, அதிகார, ஆட்சி செல்வாக்கு இல்லாத மணிக்கொடி, எழுத்து, கசடதபற சிறுபத்திரிகைகளும் அதில் வந்த படைப்புகளும் ஆவணமாக்கத்துக்கும் விரிவான ஆய்வுகளுக்கும் உள்ளாகியிருக்கின்றன. ஆனால், வெகுஜன அரசியலும் வெகுஜன சினிமாவும் வெகுஜனப் பத்திரிகைகளும் அன்றாட உணவாகவும் பேச்சாகவும் மூச்சாகவும் இருந்த ஒரு நூற்றாண்டு தமிழ் வாழ்க்கையில் சில பத்தாண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ஒரு சினிமா போஸ்டர் கூட ஆவணப்படுத்தப்படவில்லை. குமுதம், ஆனந்த விகடன் தொடங்கி சரோஜாதேவி வரை சென்ற நூற்றாண்டில் நம் தமிழ் சமூகம் நவீனமடைந்த வரலாற்றைக் காட்டும் வெகுஜன பத்திரிகை எழுத்து, சித்திரங்கள் ஆகியவற்றுக்கு பதிவே இல்லாமல் பெரும் மறதியின் புதைசேற்றில் உள்ளன. சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் ஆண்கள், தமிழ் பெண்கள், அணிந்த ஆடைகள், புழங்கிய வீடுகள், பயணித்த வாகனங்கள் ஆகியவற்றுக்கு நம்மிடம் இருக்கும் அரிதான ஆவணங்களில் ஒன்றான ஓவியர் ஜெயராஜின் சித்திரங்களும் அப்படித்தான் நமது மறதிக்குள் போய்விட்டன. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் 86 வயதில் மனைவி ரெஜினாவுடன் சென்னை சூளைமேட்டில் உள்ள வீட்டில் வசித்துவரும் ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களை சித்ராலயம் ஓவியக்கூடத்தில் ஒரு கண்காட்சியாக வைத்துள்ளது நமது மறதியைச் சீண்டும் முக்கியமான தலையீடு. இந்தக் கண்காட்சியை ஒழுங்கமைத்திருப்பவர் கோவில்பட்டியில் வசிக்கும் ஓவியர் மாரிஸ்.

இந்திய சுதந்திரத்துக்கு பத்தாண்டுகளுக்கு முன்னர் தூத்துக்குடியில் பிறந்த ஓவியர் ஜெயராஜ் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி ஏ படிக்கும்போது உடன் படித்தவர்கள் ஓவியர் மனோகர் தேவதாஸ் மற்றும் இயக்குனர் மகேந்திரன்.

ஓவியர் ஜெ. வரைந்த முதல் பத்திரிகை சித்திரம் (மாணவர்களின் கண்முன்னால் முதல்வரிடம் வசை வாங்கும் பேராசிரியர்)

சிறுவயதிலிருந்து தான் பார்ப்பதையெல்லாம் சுயமாக வரைந்து பழகிய ஓவியர் ஜெயராஜ் வலது கை, இடது கை இரண்டிலும் வேகத்தோடும் திறனோடும் வரைய முடியக்கூடிய மேதை. ஜெயராஜ் வரைந்த முதல் ஓவியம் தான் அவரை சிறுவயதில் வசீகரித்த இம்பாலா காரின் பானட்தான். அவர் வரைந்துவைத்திருந்த நோட்டைப் பார்த்து தந்தை கொடுத்த ஊக்கத்தில் தொடர்ந்து கிறுக்கியபடி இருந்திருக்கிறார்.


ஓவியர்கள் கோபுலு, மணியம் ஆகிய ஜாம்பவான்கள் வெகுஜன இதழ் சித்திரக்காரர்களாக செல்வாக்கு செலுத்திய ஒரு காலகட்டத்தில் 22 வயதில் ஒரு வாய்ப்பு கேட்டுப் பார்ப்போம் என்று குமுதம் அலுவலகத்துக்குச் சென்று ஆசிரியர் எஸ் ஏ பியைப் பார்த்து, ஒரு தொடர்கதைக்கு அங்கேயே ஜெயராஜ் வரைந்துகொடுத்த ஓவியம் பிடித்துப்போக, 1958 முதல் அரை நூற்றாண்டுகள் தமிழ் பத்திரிகை வாசகர்களின் கனவுகளை வடிவமைத்த ஓவியர்களில் ஒருவராக இருந்துள்ளார். சுஜாதாவின் கணேஷ் - வசந்த், பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி – சீதாப்பாட்டி கதாபாத்திரங்களை அழியாத உருவங்களாக ஆக்கியவர் ஓவியர் ஜெயராஜ். பெண்களின் உடலின் எழிலை, மிருதுத்தன்மையை, வளைவு நெளிவுகளை அவற்றின் நீர்த்தன்மையோடு வரைந்தவர் ஓவியர் ஜெயராஜ். கோவில் சிற்பங்களைத் தவிர பெண் உடல்கூறே மறைக்கப்பட்டிருந்த ஒரு சமூகத்தில், ஒரு காலகட்டத்தில் ஜெயராஜ் போன்ற ஓவியர்களின் சித்திரங்கள் வழியாகத்தான் வேறொரு கல்வி இங்கே நடந்திருக்கிறது. பெண்களின் மீது உடல் மீது ஈர்ப்பு தொடங்கிய பருவத்தில் ஓவியர் ஜெயராஜ் வரைந்த பெண்களின் படங்கள் ரகசியத்தில் எனக்கு அளித்த ஈர்ப்பும், ரகசியக் கல்வியும், விந்தையும், களிப்பும் அலாதியானது. செக்ஸ் கதைப்புத்தகங்களிலும் அவரது சரச ஓவியங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆண், பெண் உடற்கூறைத் துல்லியமாக வரைவதில் தமிழ்நாட்டின் மைக்கேல் ஆஞ்சலோ அவர் என்று தமிழினி பதிப்பகத்தின் வசந்தகுமார் தனிப்பட்ட பேச்சில் சொல்லியிருக்கிறார். 

தமிழில் செக்ஸ் கதைகள் அச்சுப்புத்தகங்களாக வந்த காலகட்டமும் அந்த இதழ்களும் ஆவணப்படுத்தப்படாமலேயே நாம் டிஜிட்டல் யுகத்துக்குள் நுழைந்துவிட்டோம். 

குமுதம், ஆனந்த விகடன், தினத்தந்தி, கல்கி, சாவி, கலைமகள், அமுதசுரபி, குங்குமம், இதயம் பேசுகிறது, ராணிமுத்து, தென்றல், சுமங்கலி, தாய் என வார இதழ்களும், மாத இதழ்களும் தமிழ்நாட்டின் குறுக்கும்நெடுக்கும் லட்சம் லட்சமாக வாங்கப்பட்டு தமிழ் வீடுகள் படித்து விவாதித்த வெகுஜன இதழியழின் பொற்காலத்தில் செயல்பட்டவர் ஜெயராஜ். தினசரி வண்ணமாகவும் கருப்பு வெள்ளையாகவும் ஐம்பது படங்களை வரைந்திருக்கிறார். காமிக்ஸ், பாட நூல்கள், சினிமா என பல வடிவங்களில் செயல்பட்டிருக்கிறார். கலைஞர் கருணாநிதி, திருக்குறள் காமத்துப் பாலுக்கு  எழுதிய உரை நூலுக்கு ஜெயராஜ் வரைந்த, ஏ 4 அளவிலான வண்ணச்சித்திரங்கள் எனக்கு திருக்குறள் நோக்கத்துக்கு அப்பாற்பட்டு புலனின்பத்தின் வற்றாத ஊற்றாக இருந்துள்ளன. நண்பன் பிரபுதான் அரசு நூலகத்திலிருந்து அதை எடுத்துவந்தது. ரகசியமாய், ரகசியமாய் அவற்றை வைத்துப் பார்த்தோம்.

ஓவியர் ஜெயராஜின் ஆயிரக்கணக்கான சித்திரங்களையும் அவை வெளிவந்த இதழ்களையும் அதன் மதிப்பு கருதி அவர் மனைவி ரெஜினா சேகரித்து வைத்திருக்கிறார் இன்னும்.

இயக்குனர் மகேந்திரன், ஸ்ரீதர் திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் செயல்பட்டுள்ளார்.

பட்டாம்பூச்சி தொடர்கதைக்கான ஒரு சித்திரம்

ஆரம்ப காலத்தில் பிரஷ் கொண்டு இந்தியன் இங்கில் ஓவியங்கள் தீட்டிய இவர் பின்னால் மைக்ரோ பேனாவுக்கு மாறியிருக்கிறார். ஓவியங்களை முதலில் கோடுகளாக வரைந்துவிட்டு அதற்குப் பிறகு வண்ணங்களைக் கொடுப்பவர் ஜெயராஜ்.

இன்றைக்கும் ஓவியர் ஜெயராஜின் சித்திரங்களை பார்க்கும்போது நவீனமாகவும் இளமை குறையாமலும் இருக்கின்றன. குறிப்பாக பட்டாம்பூச்சி தொடர்கதைக்கு இவர் வரைந்த ஓவியங்கள் சர்வதேச கிராபிக் கதைப் புத்தகச் சித்திரங்களுக்கு இணையானவை.

அமெரிக்கா போன்ற ஒரு நாட்டில் ஜெயராஜ் போன்ற ஒரு ஓவியருக்கு தனியான அருங்காட்சியகம் இருந்திருக்கும். அவரைப் பற்றிய ஒரு விரிவான ஆவணப்படத்தை நாம் எடுக்க வேண்டிய தருணம் இது. 

எனது பால்யத்தின் சில சத்தான பக்கங்களைப் பார்த்துவந்தது போன்ற அனுபவம் இன்று எனக்கு சித்ராலயம் ஓவியக்கூடத்தில் கிடைத்தது.

Comments