இங்கிருந்து நகரத்தை அவதானிக்கிறேன்
சகல திசைகளிலும் விரிந்திருக்கும் சிறைபோல
வட்டங்களிடையே வட்டமாக
நகரத்தின் சுவர்கள் நீள்கின்றன
ஒவ்வொரு தெருவிலும்
சிறைவாசிகள் நடக்கிறார்கள்
சுற்றித் திரிகிறார்கள்
மைல் கல் இல்லை
சேருமிடம் தெரியாது
விடுதலையாகிச் செல்ல வழியும் இல்லை
யாராவது ஒருவர் வேகமாக நடந்துசென்றால்
அவரை ஏன் ஒரு ஆணைக்கூச்சல்
நிறுத்தவில்லையென்று ஆச்சரியப்படுகிறீர்கள்
யாரோ ஒருவர் முஷ்டியை உயர்த்தினால்
சங்கிலிகள்
குலுங்கவேண்டுமென்று
எதிர்பார்க்கிறீர்கள்
அங்கே கௌரவத்துடன் இருப்பவர் ஒருவர் கூட இல்லை
யாரும் தம் உணர்வுகளின் கட்டுப்பாட்டிலும் இல்லை.
ஒவ்வொரு இளைஞனும்
குற்றவாளியின் முத்திரையைச் சுமக்கிறான்
ஒவ்வொரு யுவதியும் அடிமையின் சின்னமாய் இருக்கிறாள்
அவர்கள்
கூடிக் கும்மாளமிடுகிறார்களா?
துக்கம் அனுஷ்டிக்கிறார்களா?
உங்களால் சொல்லவே முடியாது.
தூரத்து விளக்குகளைச் சுற்றி
ஆடும் நிழல்களைப் பற்றி
இங்கேயிருந்து
எதுவும் உரைக்கவியலாது.
சுவர்களிலிருந்து
வண்ணங்கள் வழிந்தோடுகிறதா
அது ரத்தமா
அல்லது
ரோஜாக்களா?
Comments
யாரும் தம் உணர்வுகளின் கட்டுப்பாட்டிலும் இல்லை.✨✨✨