Skip to main content

வ. உ. சி. செலுத்திய சுதேசிக் கப்பலின் தீர, துயர சரிதம்


காலனிய வரலாற்றாய்வாளர்களில் தெற்காசிய அளவில் மதிக்கப்படும்  அறிஞர்களில் ஒருவர் ஆ. இரா. வேங்கடாசலபதி. இவர் நாற்பதாண்டுகள் ஆய்வுசெய்து ஆங்கிலத்தில் சமீபத்தில் வெளிவந்துள்ள நூல் ‘சுதேசி கப்பல் – வ. உ. சிதம்பரம் பிள்ளையும் பிரிட்டிஷ் கடல் வர்த்தக சாம்ராஜ்யத்துக்கு எதிராக நடத்திய போராட்டமும்’ (‘SWADESHI STEAM: V.O. Chidmbaram Pillai and the Battle against the British Maritime Empire’).

தென்னிந்தியாவின் திலகர் என்று போற்றப்பட்ட வ. உ. சி. தலைமையேற்று நடத்திய சுதேசி இயக்கத்தின் எழுச்சி, அது சந்தித்த ஒடுக்குமுறையின் நுணுக்கமான வரலாறு இது. ஆட்சி அதிகாரமும் கொடுங்கோன்மையும் வல்லமையும் கொண்டிருந்த பிரிட்டிஷாரின் அரசியல் ஆதிக்கம், வர்த்தக ஆதிக்கம் இரண்டையும் நேருக்கு நேராகச் சந்தித்து மோதுவதற்குத் தமிழ்நாட்டின் தென்கோடி ஊரொன்றில், சாதாரண வழக்கறிஞர் ஒருவர் மேற்கொண்ட முயற்சிதான் ’சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் நிறுவனம்’.

தென்னிந்தியாவின் கலாசார, வர்த்தக, ஊடகத் தலைநகரமாக இருந்த மெட்ராஸிலிருந்து அல்ல, இன்றைக்கும் அன்றாடத்தின் மந்தகதியில் பெரிய சம்பவங்களின்றி வரலாற்று நிசப்தத்தில் தென்னகத்தின் மூலையிலிருக்கும் இரண்டு சிறுநகரங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி  ஆகியவற்றை மையமாகக் கொண்டு மிகச் சாமானிய மக்களும் ஆங்கிலேயரை எதிர்த்த சுதேசி இயக்கத்தின் மாபெரும் நிகழ்வுகளில் ஒன்றுக்கு தூண்டிய வ. உ. சியின் கனவுத்திட்டம்; கப்பல்களின் தரம், தொழில்நுட்ப அம்சங்கள் எதுவுமே அறியாத நிலையில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கப்பல் போக்குவரத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த ‘பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி’யின் லாபநோக்கு மற்றும் வர்த்தக நலன்களுக்கு சில ஆண்டுகள் அச்சுறுத்தலைக் கொடுத்த கப்பல் நிறுவனத்தின் கதை இது. பத்து கிராம் தங்கம் 90 ரூபாய்க்கு விற்ற காலத்தில் தூத்துக்குடியில் சில நூறு ரூபாய்களை மாத வருவாயாகச் சம்பாதிக்கக்கூடிய வழக்கறிஞராக இருந்த வ. உ. சி என்ற பிரமுகரின் இளமையையும் ஆற்றலையும் உறிஞ்சி, துயரங்களையும், அல்லல்களையும், வெளிச்சமே பார்க்க இயலாத இருண்ட பிற்கால வாழ்க்கையையும் பரிசளித்த ஒரு கதை இது. வ. உ. சி, அவரது மனைவி மீனாட்சி அம்மையார், குழந்தைகள் மீது மட்டுமல்லாமல் வ.உ.சியின் சுதேசிய லட்சியத்துக்கு உறுதுணையாக இருந்த பத்துக்கும் மேற்பட்ட ஆளுமைகளின் வாழ்க்கையையே சிதறடித்த ஒரு கனவின் கதையும் இது.

சைவ சித்தாந்த சபைப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டு, ‘லௌகீகத்துக்கும் வைதிகத்துக்கும் அவசியமான ஒழுக்கங்களை எடுத்துப் போதிக்கும் பத்திரிக்கை’ என்ற அறிவிப்போடு வெளிவந்த ‘விவேகபானு’ இதழை நண்பர்களோடு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடத்திய வ. உ. சி., சிவனே என்று சுகமாக இருந்திருக்கலாம். வங்காளத்தில் உருவான சுதேசி இயக்கத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணானந்தரை சந்தித்த நிகழ்ச்சிதான் வ. உ. சி, தென்னாட்டுத் திலகராக மாறிய பரிணாமகதியைத் தூண்டிய சம்பவமாகும்.  

‘சுதேசியம் ஒன்றே சுகம்பல அளிக்கும்

இதேஎன் கடைப்பிடி’ என்றனன். அவனுரை

வித்தென விழுந்தது மெல்லிய என்னுளம்

சித்தம் அதனைச் சிதையாது வைத்தது’ (வ. உ. சியின் சுயசரிதை)

வ. உ. சி., சுதேசி இயக்கத்தைத் தலைமையேற்று நடத்தியதால் அடைந்த துயரங்களைப் பார்க்கும்போது ‘சுகம்பல அளிக்கும்’ என்று உரைக்கப்பட்டது நகைமுரணாகவே தொனிக்கலாம். ஆனால், வ. உ. சி தான் எடுத்துக்கொண்ட பொதுப்பணியால் அவரது லௌகீக வாழ்க்கையின் மைய அச்சே முறிந்துபோனாலும், சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வீரமும் தீரமும் சாகசமும் நேர்மையும் நற்பண்பும் கருணையும் கொண்ட மாவீரராகவே அவரைக் காலம் தன் இதயத்தில் பொறித்திருக்கிறது. வ. உ. சி., கருதி உத்தேசித்த சுகம் பலவாக இதுவே இருந்திருக்கலாம் போலும்.

000

தூத்துக்குடியில் தருமசங்க நெசவுசாலை, தேசியப் பண்டகசாலை ஆகிய அமைப்புகளின் மூலமும் ,கடற்கரையிலும் திருநெல்வேலி தாமிரபரணிக் கரையிலும் நடத்திய பௌர்ணமிக் கூட்டங்களின் மூலமும் சுதேசி இயக்கப் பணிகளைத் தொடங்கிய வ. உ. சி., 1906-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ‘சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி’ நிறுவனத்தைப் பதிவு செய்தார். தூத்துக்குடியிலிருந்து கொழும்புவுக்கு தேயிலைத் தோட்டப் பணியாளர்களையும் சரக்கு, கால்நடைகளையும் ஏற்றிச்செல்லும் வர்த்தகத்தில் ஏகபோகமாக இருந்த ‘பிரிட்டிஷ் இந்தியா நேவிகேஷன்’ நிறுவனம், ஆங்கிலேய அரசோடு சேர்ந்து தூத்துக்குடி வர்த்தகர்களுக்கு விதித்த கெடுபிடிகளும் இனவாத நடவடிக்கைகளும் தென்மாவட்டங்களிலுள்ள வர்த்தகர்களுக்கு ஏற்கெனவே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன. இந்தப் பின்னணியில்தான் தங்கள் தொழில், வர்த்தகத்துக்கென்றும் சுதேசி அரசியலையும் வலுப்படுத்தும் வண்ணம் வ. உ. சி.யின் எண்ணத்தில் உதித்த திட்டம் இது.

பங்கு ஒன்றுக்கு 25 ரூபாய் வீதம் 40 ஆயிரம் பங்குகளை விற்று இந்நிறுவனத்திற்கு மூலதனமாக 10 லட்சம் திரட்ட முடிவுசெய்யப்பட்டது. முதல்நிலையில் 12 பேர் இயக்குனர்களாக இடம்பெற்றிருந்தனர். அவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த வர்த்தகர்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர். ஹாஜி ஃபக்கீர் முகம்மது சேட், எஸ். வி. நல்லபெருமாள் பிள்ளை, ஏ. எம். எம். அருணாசலம் பிள்ளை, எஸ். எஸ், வி. கிருஷ்ண பிள்ளை, சி.த. ஆறுமுகம் பிள்ளை, வேலாயுதம் பிள்ளை, ஆதிநாராயணச் செட்டியார், வெங்கடாசலம் செட்டியார், முகைதீன் காதிர்ஷா மரக்காயர், அந்தோணி சவரிமுத்து ரோட்ரிக்ஸ, எம். வி. மாய நாடார், எம். எச். ஏ. ரஹிமான் சேட் ஆகியோர். 

சுதேசி கப்பல் நிறுவனத்தின் தலைவராக மதுரை நான்காவது தமிழ் சங்கத்தை நிறுவிய பாண்டித்துரைத் தேவர் விளங்கினார். வ. உ. சி.யின் சுதேசிக் கப்பல் கனவுக்குப் பெரும் நஷ்டத்தையும் பலியையும் சந்தித்தவர் பாண்டித்துரை தேவர். ஒன்றரை லட்சம் பணத்தைக் கொடுத்திருக்கிறார். சுதேசி கப்பல் நிறுவனம் வீழ்ந்தவுடனேயே அவரும் மாரடைப்பில் பலியானார். பாரதியின் ’இந்தியா’ பத்திரிகை அதிபரான மண்டையம் சீனிவாச்சாரியின் குடும்பமும் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தை நிலைநிறுத்தி, பெரும் வீழ்ச்சியையும் பண நஷ்டத்தையும் சந்தித்தது. வழக்கறிஞராகக் கொடிகட்டிப் பறந்த சி. விஜயராகவாச்சாரியும் வ. உ. சி மேல் கொண்ட மதிப்பும் பக்தியும் காரணமாக நிறைய நஷ்டங்களைச் சந்தித்தவர். ராஜாஜி ஆயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறார். பெரியார் தனது சொந்தப் பணமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறார். அத்துடன் தனது முஸ்லிம் வியாபார நண்பர்களிடம் கேட்டு 30 ஆயிரம் ரூபாயை தனது சார்பில் வழங்கியுள்ளார். மருத்துவரும் இசையறிஞருமான தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் தொடக்க நிலையில் பங்குகளைப் பெற்றவர்களில் ஒருவர். பாரதியும் தனது லட்சிய வேகத்தால் சுதேசி கப்பல் நிறுவனத்துக்காக நேரடியாகப் பங்குகளைப் பெறுவதில் முன்நின்றும் கட்டுரைகள் பலவற்றை உணர்ச்சிகரமாக எழுதியுமுள்ளார். பாரதியின் தந்தையும் பஞ்சாலை நிறுவனம் நிறுவி தனது சொத்துகளை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வ.உ.சி. மீது பாரதிக்கு ஏற்பட்ட விசேஷ பிரியத்துக்கு இந்தப் பின்னணியும் காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார் நூலாசிரியர். இந்தத் துயர வரலாற்றில் அபூர்வமான இன்னொரு பெயரும் சம்பந்தப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். சுதேசி கப்பல் நிறுவனம் சிரமங்களை சந்திக்கத் தொடங்கி, வ. உ. சியும் அரச நிந்தனைக் குற்றச்சாட்டில் இரட்டை ஆயுள் பெற்று சிறைக்குச் சென்றபின்னர், இந்திய விடுதலை இயக்கத்துக்கு எதிராக இருந்த அயோத்திதாசப் பண்டிதர், வ. உ. சிக்கு ஏன் திடீர் சுதேசி பக்தி என்று விமர்சித்து எழுதியுள்ளதையும் ஆ. இரா. வேங்கடாசலபதி பதிவுசெய்துள்ளார்.

கர்சன் பிரபுவின் வங்கப் பிரிவினை நடவடிக்கையால் அங்கே தூண்டப்பெற்ற சுதேசி இயக்கத்தின் நடவடிக்கைகள் வடமாநிலங்களில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான கலவரங்களாகவும் உருமாறியுள்ளது. ஆனால் தென் தமிழ்நாட்டில் வ. உ. சி.யும் சுப்ரமணிய சிவாவும் முன்னெடுத்த சுதேசி இயக்கத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி கொழும்புவிலிருந்தும், தென்னாப்பிரிக்காவிலிருந்தும் முஸ்லிம் மக்கள் ஆதரவாகவும் பங்காளிகளாகவும் இருந்து செயல்பட்டுள்ளனர். சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியின் இயக்குனர்களாக இடம்பெற்ற 12 பேரின் பெயர்களிலிருந்தே வெவ்வேறு சமூகப் பிரதிநிதிகள் இடம்பெற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது.

தற்காலத்தில் இந்தியா முழுவதும் இந்துப்பெரும்பான்மைவாதமும் மதவாதமும் இந்து சாமானியர்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தும் சூழலில், தமிழ்நாடு, நெருப்புக்கிடையே தீவாக மிஞ்சி மதவாதத்துக்கு ஆட்படாமல் தப்பியிருப்பதை இதன் பின்னணியில் வைத்துப் பார்த்தல் வேண்டும்.

000

ஆ. இரா. வேங்கடாசலபதியின் இந்த நூலில் வ. உ. சியின் நேர்முகத்தைக் காண்பது மிகவும் அபூர்வமாகவே இருக்கிறது. சுதேசி நாவாய் நிறுவனத்துக்காக வ. உ. சியின் செயல்பாடுகள், மேற்கொண்ட பயணங்கள், எழுதிய கடிதங்கள், கொடுத்த விளம்பரங்கள் வழியாகவே வெளிப்படுகிறார். அக்காலத்தில் சுதேசி இயக்கத்தையும் வ. உ. சியின் சுதேசி கப்பல் வர்த்தக முயற்சிகளையும் ஆதரித்த ’சுதேசமித்திரன்’, ’தி இந்து’, ’இந்தியா’ போன்ற இதழ்களின் பத்திரிகைச் செய்திகள் வழியாக சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியின் தோற்றமும் பணிகளும் இடர்ப்பாடுகளும் முடிவும் வரையப்பட்டுள்ளன. போலீஸ், உளவுத்துறை அறிக்கைகள், சர்வதேச கப்பல் போக்குவரத்து டைரக்டரிகள், ஆவணங்களையும் தேடிச் சேகரித்து இந்த நூல் ஆக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் இந்தியா கப்பல் நிறுவனத்துக்கு ஆதரவாகவும் சுதேசி கப்பல் நிறுவனத்தின் வாய்ப்புகளைப் படிப்படியாக முடக்கவும் ஆங்கிலேய ஆட்சியாளர்களும் கலெக்டர் விஞ்சும், வாஞ்சிநாதனால் பின்னர் கொல்லப்பட்ட ஆஷ் துரையும் மேற்கொண்ட நடவடிக்கைகள், பேச்சுவார்த்தைகள் ஆகியவையும் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.  வ. உ. சியோ அவருடன் இருந்த சோமசுந்தர பாரதி போன்றவர்களோ சமகாலத்தவர்களோ முழுமையாக எழுதாமல் மறைந்துபோன சுதேசிக் கப்பல் வர்த்தகத்தின் ஏற்றமும் வீழ்ச்சியும் துல்லியமாக இந்த நூலில் பதிவாகியுள்ளது. ஆஷ் கொலை சம்பவத்துக்குப் பிறகு சிறைத்துறை அதிகாரி வ.உ.சி.யைச் சந்தித்து செய்தியைச் சொல்லும் இடத்தில் பார்க்கிறோம். கோவை சிறையில் மனைவி மீனாட்சி அம்மையார் பார்வையாளராகச் சென்று பார்க்கும்போது பார்க்கிறோம். இங்கிருந்து பார்க்கும்போது மிகவும் பதிவாகாத ஒரு மங்கிய சரித்திரத்தின் நிழலுக்குள் வ. உ. சி. என்ற ஆளுமையின் மகத்துவம் எத்தகையது என்பதைக் காண்பிக்கும் காட்சிகளை நிறைய பொதிந்துவைத்திருக்கும் நூல் இது.

வ. உ. சியின் அரசியல் செயல்பாடுகளால் சுதேசி கப்பல் நிறுவனத்தின் வர்த்தக நலன்கள் பாதிக்கும் என்று அந்நிறுவனத்தின் மிதவாதப் பங்குதாரர்கள் வ. உ. சி.யைப் பொறுப்பிலிருந்து விரட்டுகின்றனர். வ. உ. சி., வர்த்தகத்துக்காக அல்ல, அரசியல் நடவடிக்கையாகவே சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார் என்ற உண்மையே அவர்களுக்குப் புலப்படவில்லை. சுதேசி கப்பல் நிறுவனத்தின் பொறுப்புகளிலிருந்தெல்லாம் விலகி சிறையில் வருந்திய நிலைமையிலும் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தைச் சார்ந்தவர்களும் அதன் பாத்தியதாரர்களும் வ. உ. சி.க்குத் தொடர்ந்து கடித உறவில் இருந்திருக்கின்றனர். வ. உ. சியின் மேல் பக்திகொண்டு அவரைத் தண்டனையிலிருந்து விடுவிக்கவும் வழக்கு நடத்தவும் நிதிகளைச் சேகரித்திருக்கின்றனர். வ. உ.சி.யை தங்கள் நிறுவனத்தோடு அடையாளம் காணக்கூட கூடாது என்று வெளியேற்றிய சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனம் நிலைகுலைந்து போன நிலையில் கடைசி அலுவலக முகவரிக்காக ஒண்ட வேண்டியிருந்தது, கணவன் வ.உ.சி சிறைத்தண்டனையில் இருக்க வறுமையில் உழன்றுகொண்டிருந்த மீனாட்சி அம்மாவின் தூத்துக்குடி வீட்டில்தான். சாதி, சமயம், இன வித்தியாசங்களைத் தாண்டி மக்களிடம் பிரியத்தையும் செல்வாக்கையும் வ. உ. சி.  ஈட்டியிருந்திருக்கிறார். வ. உ. சியிடம் கப்பல் மாலுமியாகப் பணியாற்றி விடைபெற்றுச் சென்ற இத்தாலியர் ஒருவர் பளிங்கில் வ.உ.சியும் அவர் மனைவி மீனாட்சியும் இருக்கும் புகைப்படத்தைப் பதித்து, தூத்துக்குடியின் அடையாளமாக அதைச் சுற்றி முத்துக்களைப் பதித்து அதனை நினைவுப் பரிசாக கொடுத்துச் சென்றிருக்கிறார். அரச நிந்தனை வழக்கில் வ. உ. சி.யை விசாரித்து தண்டனை அளித்த நீதிபதி இ.எச். வாலேஸ் பின்னர் அவருடைய வழக்கறிஞர் பணிசெய்யும் உரிமத்தைப் புதுப்பித்துக் கொடுக்கிறார்.

கோவைச் சிறையில் செக்கிழுக்கும் தண்டனை அளிக்கப்பட்ட போது தனது சக கைதிகளாலேயே தன்னுயிர் காக்கப்பட்டது என்று சுயசரிதையில் எழுதியிருக்கிறார்.

செக்கினை என்னோடு சேர்ந்து தள்ளியோர்

‘நாங்களே தள்ளுவோம், நமன்கள் போன்ற

சூப்பிரண்டெண்டு காட்ஸனும் ஜெயிலரும்

வருங்கால் எம்முடன் வந்திது தள்ளுமின்;

போய்நிழல் இருந்து புசிமின் எள்ளும்

வெல்லமும்’ என்றே விளம்பினர் அன்போடு.

வ. உ. சி. மேல் அவர்கள் வைத்த மதிப்பு இவ்வாறு இருந்திருக்கிறது.

தமிழில் சென்ற நூற்றாண்டில் மேடைப்பேச்சு மூலம் வெகுமக்களைத் திரட்டிய முன்னோடிகளில் ஒருவர் என்று வ.உ.சி.யை நிறுத்துகிறார் ஆ. இரா. வேங்கடாசலபதி. வ. உ. சி.யின் பொதுக்கூட்ட உரைகள்தான் சாதாரண மக்கள் சந்தித்த முதல் அரசியல் உரைகள் என்று ஆய்வாளர் பெர்னார்ட் பேட் வழி குறிப்பிடுகிறார். தமிழ் அரசியல் செய்தி ஊடகமான ஒரு ஜனநாயக நடைமுறைக்கு வ.உ.சியின் பேச்சுகள்தான் முதல் வித்தை இட்டிருக்கின்றன. தேசியவாதம், ஆங்கிலேய ஆட்சியால் இந்திய மக்கள்படும் அல்லல்களை வ. உ.சி.யும், சுப்ரமணிய சிவாவும் ஒரு விழிப்புணர்வுக் கல்வியாகவே தங்கள் உரைகள் வழி சாமானிய மக்களுக்குப் புகட்டியிருக்கிறார்கள். ரஷ்யப் புரட்சியும், உலகளாவிய சுதந்திர இயக்கங்களைப் பற்றிய செய்திகளும் அங்கே விவாதிக்கப்பட்டது ஆங்கில ஆட்சியாளர்களை அதிர்ச்சிகொள்ளச் செய்திருக்கிறது. ஒரு தனித்துவமற்ற அசிங்கமான நகரமாக ஆங்கிலத்துரைகளால் விவரிக்கப்பட்ட தூத்துக்குடி நகரத்தில் சுதேசியுணர்வும் கொடுங்கோன்மை எதிர்ப்பும் குமாஸ்தாக்கள், வழக்கறிஞர்கள் போன்ற மேல்மட்டத்தினரிடம் மட்டுமல்ல; பாட்டாளிகள், கூலிகளிடமும் வ. உ. சி. தன் பேச்சால் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

வ.உ.சி தூத்துக்குடியில் வெகுமக்களிடம் ஏற்படுத்தியிருந்த எழுச்சிக்கு கீழ்க்கண்ட சம்பவம் ஒரு சோற்றுப் பதம்.

ஆங்கிலேய ஆட்சிக்கு ஆதரவு தந்த ஒரு தூத்துக்குடி வழக்கறிஞருக்குச்  சவரம் செய்வதற்காக, ஒரு சிகைதிருத்துபவர் அவர் வீட்டுக்க்கு வருகிறார். வேலை தொடங்கி இருவருக்கும் உரையாடல் சென்றபோது வழக்கறிஞரின் சுதேசியக் கருத்துகளால்க் கொதிப்படைந்த , சிகைதிருத்துபவர் பாதியில் தனது வேலையை நிறுத்திவிடுகிறார்; வேறு தொழிலாளர்களும் அவருக்குச் சவரம் செய்ய மறுத்துவிடுகின்றனர். கடைசியில் அந்த வழக்கறிஞர் தனது சவரத்தை முடிக்க ரயிலேறி மதுரைக்குச் செல்லவேண்டியிருந்திருக்கிறது.

1908-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி விபின் சந்திரபால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நிகழ்வைக் கொண்டாடும் விதமாகத் தடையை மீறிக் கூட்டம் நடத்தியதற்காக வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகிய மூவரும் கைதுசெய்யப்பட்டதையடுத்து நடைபெற்ற போராட்டமும் மக்களின் அனைத்துத்தரப்பினரும் இணைந்த எழுச்சி என்றே சொல்லலாம்.

தற்போது திருநெல்வேலி ஜங்ஷன் என்றழைக்கப்படும் பகுதிக்கருகில் உள்ள வீரராகவபுரத்தை மையமாக கொண்டு நடந்த போராட்டம் அது. யாருமே தூண்டாமல் வ.உ.சி. உள்ளிட்டோரின் கைதுக்காக செய்யப்பட்ட எதிர்வினை இது. தூத்துக்குடியில் கறிக்கடைக்காரர்கள் ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்கு இறைச்சி கொடுக்க மறுத்து, கொழும்புவிலிருந்து இறைச்சியை இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் கல்லூரி, அரசு அலுவலகங்கள் அனைத்தும் தாக்கப்பட்டன. சப்ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தைத் தவிர வேறு எல்லா இடங்களும் அடித்துச் சூறையாடப்பட்டன. நகராட்சி அலுவலச் சுவர் இடித்துத் தள்ளப்பட்டது. மண்ணெண்ணைய்க் கிடங்குக்குத் தீவைக்கப்பட்டு மூன்று நாள் விடாமல் எரிந்துள்ளது. நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளனர். இருபதாண்டுகளுக்கு முன்னர் மாஞ்சோலைத் தொழிலாளர்கள் போராட்டத்தில் 17 பேர் துப்பாக்கிச்சூட்டில் இறந்த சம்பவம் தான் அதற்கடுத்து ஞாபகம் வரும் திருநெல்வேலிப் போராட்டமாக உள்ளது.

திருநெல்வேலிக் கலவரத்துக்குப் பிறகுதான், வ. உ. சி தொடங்கிய சுதேசி கப்பல் நிறுவனத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்துவிட வேண்டுமென்று ஆங்கிலேய அரசு முடிவெடுக்கவும் வேண்டியிருந்தது.

இந்தக் கலவரத்தில் வெள்ளையர்கள் யாரும் நேரடியாக தாக்குதலுக்குள்ளாகவில்லை என்பது நல்நிமித்தம். ஆனால் இரண்டு வெள்ளையர்களை வற்புறுத்தி வந்தே மாதரம் மற்றும் சுயராஜ்யம் கோஷங்களை போராட்டக்காரர்கள் எழுப்பச் சொல்லியுள்ளனர்.

தி இந்துவின் உரிமையாளரும் ஆசிரியருமான எஸ். கஸ்தூரி ரங்க அய்யங்கார், இந்தக் கலவர்த்தைப் பதிவுசெய்வற்காக சிறப்புச் செய்தியாளரை திருநெல்வேலிக்கு அனுப்புகிறார். மாணவர்கள், தொழிலாளர்கள், வழக்கறிஞர்களுடன் எல்லாவிதமான மக்களும் பங்குபெற்றிருந்ததை சலபதியின் நூல் காட்டுகிறது. 10 ஜட்கா வண்டியோட்டிகள், ஒரு உணவு விடுதி நடத்துபவர், ஒரு நாவிதர், ஒரு தங்க ஆசாரி, மூன்று ஓய்வு பெற்ற போலீசார், ஒரு நாட்டு மருத்துவர், ஆடு மாடுகளை விற்றுக்கொடுக்கும் தரகர், நாள்கூலி, விறகுவெட்டி, நெசவாளி, கடைக்காரர்கள் உள்ளிட்ட 100 பேர் போராட்டம் நடத்தியதற்காகத் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவுக்கு எதிராக மேலூர், வண்டிப்பேட்டையில் கூட்டங்கள் நடந்துள்ளன.

திருநெல்வேலி, தூத்துக்குடி இரட்டைக் கலவரங்களுக்குச் சற்று முன்னர்தான் வ. உ. சி, கோரல் மில் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து கூலி உயர்வு, ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக் கோரிக்கைக்கான போராட்டத்தையும் நடத்தி வெற்றியும் கண்டிருந்தார். இந்திய அளவில் ஆலைத்தொழிலாளர்கள் வ. உ. சி கைது என்ற அரசியல் காரணத்தை முன்னிட்டு அரசியல் போராட்டத்தில் கலந்துகொண்ட நிகழ்வும் இதுதான் முதல்முறை. கோரல் மில் தொழிலாளர்கள் 1,500 பேர், ராலி பிரதர்ஸ், பெஸ்ட் அன்கோ போன்ற பிரிட்டிஷ்சார் நடத்தும் நிறுவனங்களிலிருந்தும் தொழிலாளர்கள் வ. உ.சி. கைதுக்கு எதிரான போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

000

பத்து லட்ச ரூபாய் முதலீட்டை பங்குகள் மூலம் திரட்டத் திட்டமிட்டாலும் 6 லட்ச ரூபாயையே வ. உ. சி. யால் திரட்ட இயல்கிறது. சொந்தமாக எஸ். எஸ். காலியா, எஸ். எஸ். லாவோ ஆகிய கப்பல்களை வாங்குவதற்கு முன்னால் வாடகை அடிப்படையிலோ, குத்தகையாகவோ ‘மாங்கு சீட்டன்’ கப்பலைத் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் ஓட்டியுள்ளார். தூத்துக்குடி செயற்கைத் துறைமுகம் என்பதால் ஆழமற்ற பகுதியிலிருந்து ஆழமான பகுதியிலிருக்கும் கப்பலுக்குப் பயணிகளைக் கொண்டு சேர்க்கும் மிராண்டா என்றொரு படகையும் கூடுதலாக வாங்கியிருக்கிறது சுதேசி நாவாய் நிறுவனம்.

1907-ம் ஆண்டிலும் 1908-ம் ஆண்டிலும் பிரிட்டிஷ் இந்தியா நிறுவனத்துக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையில் நஷ்டத்தை சுதேசிக்கப்பல் நிறுவனம் மாதம் தோறும் ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும் கப்பல் வர்த்தகம் பல்வேறு அடுக்குகளும் ஊடுபாவுகளும் வல்லமையும் சிக்கலான நிர்வாகமும் கொண்டது என்பதால் வ. உ. சியாலும் அவரது சகாக்களாலும் தொடரும் நஷ்டங்களைக் குறைக்க இயலவிலை. எஸ். எஸ். காலியா, எஸ். எஸ். லாவோ இரண்டு கப்பல்களும் வாங்கிய விலைக்கான தரம் கொண்டவை அல்லவோ என்றும் ஆ. இரா. வேங்கடாசலபதி ஐயுறுகிறார். கப்பல்களை வாங்க வ.உ.சி. நம்பி அனுப்பிய வேதமூர்த்தி முதலியாருக்கும் கப்பல் பற்றி எதுவும் தெரியவில்லை. கொதிகலன்கள் அடிக்கடி தொந்தரவளிக்கின்றன. கப்பலுக்கான எரிபொருளான நிலக்கரியை வாங்குவதிலும் ஆங்கிலேய மாலுமிகள் ஊழலில் ஈடுபட்டு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளனர். சுதேசி கப்பல் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் இந்தியா நிறுவனம் இலவசமாகவும் கூலி, சரக்குக் கட்டணத்தை அடிமாட்டு விலைக்குக் குறைத்தும் வ. உ. சியின் சுதேசிக் கப்பல் நிறுவனத்துக்குத் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வந்திருக்கிறது. சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் பங்குதாரர்களிடமும் பேசி அவர்கள் நம்பிக்கையைத் தொடர்ந்து சிதைத்துப் பலவீனப்படுத்தும் வேலைகளில் ஆங்கிலேயே ஆட்சியாளர்களும் சுதேசி நிறுவனம் இறுதிமூச்சை விடும்வரை மெட்ராஸ் தொடங்கி தூத்துக்குடி வரை செயல்பட்டுள்ளனர். சுதேசி கப்பல் நிறுவனத்தின் முகவர்கள் நன்கொடை, பங்கு நிதிகளைத் திரட்டச் செல்லும் ஊர்களிலெல்லாம் அவர்களை உளவுப் போலீசார் பின்தொடர்ந்துள்ள தகவல்களை சலபதி இந்த நூலில் அருமையாக கோத்துள்ளார்.

000

சுதேசி இயக்கத்தில் ஈடுபாட்டுடன் திகழ்ந்த வ.உ.சிக்கு சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கும் யோசனை உதித்த காரணம் புதிராகவே இருப்பதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். சர்வதேச அளவில் சுதேசி இயக்கத்தில் செயல்பட்ட பெருந்தலைவர்களான திலகரையோ, அரவிந்தரையோ சூரத் கூட்டத்திலேயே சந்தித்தவர் வ. உ. சி.

தூத்துக்குடியில் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி அகில இந்திய நிறுவனமாக ஆக்கவேண்டுமென்று வ.உ.சி நம்பினாரா? தேசிய அளவில் முதலாளிகளின் பலம் குறித்து அவருக்கு என்ன அளவீடு இருந்தது? முதலீடும் நிபுணர்களின் ஆலோசனையும் உதவியும் தேவைப்படும் கப்பல் வர்த்தகத்தில் அவர் எப்படிக் குதித்தார்? காலனிய ஆங்கில ஆட்சியாளர்கள் தனது நிறுவனத்தை நடத்துவதற்கு தடைசெய்யாமல் இருப்பார்கள் என்று அவர் நம்பினாரா? பிரிட்டிஷ் வர்த்தக நலன்களுக்கு என்னாகும்?

இப்படியான கேள்விகளைக் கேட்கும் ஆ. இரா. வேங்கடாசலபதி காலம் கடந்த தூரத்தில் இவற்றுக்கான பதில்கள் தெரியவில்லை என்கிறார்.

சாகசம், துணிகரம் இரண்டிலுமே அபத்தப் பரிமாணமும் சேர்ந்துதானே இருக்கும். அது ஒரு ஆளுமையின் வாழ்க்கையில் உருவெடுக்கும் தருணம் எப்போதுமே புதிர்தான் என்ற பதிலைத் தவிர வேறென்ன சொல்லமுடியும்.

திருநெல்வேலி சிறைக்குள் சென்றவுடன் மோதிரம் கழற்றப்படுகிறது. மிதமான செல்வராகவும் மதித்துப் போற்றிய பிரமுகராகவும் இருந்தவரின் வஸ்திரங்கள் களையப்பட்டுக் கைதி உடைக்குள் செல்கிறார். செக்கிழுக்க வைக்கப்படுகிறார். வழக்குக்கான நிதிகளைக் கேட்டு மனைவி வழியாக விண்ணப்பக் கடிதங்களை எழுதுகிறார். வ. உ. சியின் சிறைவாழ்க்கை அவரது தம்பியான மீனாட்சி சுந்தரத்தை பித்துக்கொள்ள வைத்தது. வ. உ. சி.யின் சிறைத்தண்டனையால் நொந்துபோய் மரணமடைந்த அவரது தந்தையில் இறுதிச்சடங்குகளைக் கூட வ. உ. சி.யால் நிறைவேற்ற இயலவில்லை. சிறை சிறையாக மாறிக்கொண்டிருந்த கணவனைப் பார்ப்பதற்காக இரண்டு குழந்தைகளோடு வறுமையில் அல்லாடிய அவர் மனைவி மீனாட்சி அம்மாவின் துயரக் கதை தனி.

தண்டனைக் குறைப்பு பெற்று நான்கே முக்கால் வருடங்களில் வ. உ. சி விடுதலையானபோது மாறிய அரசியல், சமூக சூழ்நிலைக்குள் வ. உ. சி மறக்கப்படும் நபராக மாறிவிடுகிறார். இந்திய தேசிய காங்கிரஸ் காந்தியின் தலைமையில் வ. உ. சி போன்றவர்களை மறந்துவிட்டு வேறு இடத்துக்கு நகர்ந்துவிடுகிறது. பிற்காலத்தில் சென்னை காங்கிரஸ் அலுவலகத்தில் வ. உ. சி.க்கு சிலைவைக்க எதிர்ப்பு இருந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ம.பொ.சியின் முயற்சியாலேயே அது நிறைவேறுகிறது. பெரியாரின் நண்பராக பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கு நெருங்கியவராக அடையாளம் காணப்பட்டிருக்கிறார் வ.உ.சி. தமிழ்ப்பணி, சமூகப் பணியில் தளராமல் ஈடுபட்டு சிறையிலிருந்து விடுதலை பெற்று சென்னை வாழ்க்கையில் உருவாக்கியதுதான் தபால் ஊழியர் சங்கம்.

திலகரின் உதவியில் 50 ரூபாய் மாத நிதி பெறுகிறார். அரிசி, நெய் வியாபாரம் செய்கிறார். நன்னம்பிக்கை நூல்களை மொழிபெயர்க்கிறார். திருக்குறள் உரை, தொல்காப்பிய உரைகளை எழுதுகிறார்.

அவர் வாழ்க்கையாகிய சமுத்திரத்தில் சுகம் என்னும் தீவுகள் தென்படவேயில்லை மனோசக்தியின் ரகசியத்தை வெளியிட்டு சகல சித்திகளும் பெறுவதற்கான நூல்களை மொழிபெயர்த்த வ. உ. சிக்குக் என்ன சித்திகள் கிடைத்தன என்றும் நமக்குத் தெரியவில்லை.

1911-ம் ஆண்டின் முடிவில் சுதேசி கப்பல் நிறுவனம் திவாலாகி, சொத்துகள் விலை போகின்றன. வ உ சி வாங்கிய கப்பல்கள் மும்பைக்குச் சென்று வரலாற்றிலிருந்தும் மறைந்துபோகின்றன.

கோவைச் சிறையில் அவர் மொழிபெயர்த்த ஜேம்ஸ் ஆலனின் மனம் போல் வாழ்க்கை நூலின் வாசகங்களைப் போலத்தான் இருந்திருக்கிறது அவரது வாழ்க்கை.

எவன் வருந்துதற்குப் பின்னடையவில்லையோ அவன்

செய்து முடித்தற்கு முழு மனங்கொண்டிருக்கும்

காரியத்தைச் செய்து முடிப்பதில் ஒரு பொழுதும்

தவறமாட்டான்

000

தூத்துக்குடியின் அடையாளமான வ. உ. சிதம்பரம் பிள்ளை சிறைக்குச் சென்று 25 ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு ஊர்களில் வாழ்ந்துவிட்டு இறுதிக்காலத்தைக் கழிக்கவே 60 வயதில் தூத்துக்குடிக்குத் திரும்பினார். இதற்கான காரணமென்ன என்று கேட்கிறார் நூலாசிரியர் சலபதி.

சுதேசி இயக்கம், சுதேசிக் கப்பல் நிறுவனத்தால் சந்தித்த சங்கடங்கள் அவரைத் தூத்துக்குடிக்கு வரவிடாமல் செய்ததா?

திலகரின் வாழ்க்கை வரலாற்றை எழுதத் துணிந்த வ.உ.சி. சுதேசி கப்பல் நிறுவனம் தொடர்பான முழு விவரங்களை ஏன் எழுதவில்லை என்று ஆ. இரா. வேங்கடாசலபதி கேட்கும் கேள்விகளும் முக்கியமானவை.

தன்னுடன் இணைந்து பங்காற்றியவர்களின் துரோக முகத்தால் கசந்து எழுதாமல் போனாரா? ஸ்வராஜ்யம் என்ற லட்சியத்தை தன்னால் அடையமுடியாமல் போனதன் கசப்பா?

ஆ. இரா. வேங்கடாசலபதிக்கு மட்டுமல்ல நமக்கும் இந்த மர்மங்கள் தொடரும்.

0000

ஆ. இரா. வேங்கடாசலபதி

பாரதி, வ.உ.சி, புதுமைப்பித்தன் வழி தமிழ் சமூகம் நவீனமடைந்த வரலாற்றை தனது ஆய்வுக்களனாக கொண்டவர் ஆய்வறிஞர் ஆ. இரா. வேங்கடாசலபதி. சென்னையைச் சேர்ந்த ஆ. இரா. வேங்கடாசலபதி, பள்ளிவயதில் வ. உ. சி. என்ற ஆளுமையால் ஈர்க்கப்பட்டு வரலாற்று ஆய்வில் ஈடுபடத் தொடங்கியவர். 17 வயதில் வ. உ. சி. சார்ந்த தேடலின் காரணமாக அவரது வெளிவராத கடிதங்களைப் பதிப்பித்ததன் வாயிலாக வ. உ. சி. வரலாற்றை எழுதுவதைத் தொடங்கிவிட்டார்.

இந்த நூலின் துவக்கத் தரவான சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தின் செயல்பாடுகளைத் தெரிவிக்கும் அறிவிப்பு மடலை (prospectus) சென்னை மறைமலை அடிகள் நூலகத்தில் ஆ. இரா. வேங்கடாசலபதி 1981-ம் ஆண்டு பார்க்கிறார். அங்கேதான் வ.உ.சி. கைப்பட எழுதிய கடிதங்களும் விவேகபாநு இதழ்களும் அவருக்குக் கிடைக்கின்றன.  அதிலிருந்து தொடங்கிய பயணத்தில் தமிழ்நாடு ஆவணக்காப்பகம் அன்றைய மெட்ராஸ் மாகாண அரசு காலத்தில் வ.உ.சி. தொடர்பில் நடந்த வழக்கு நடைமுறைகள் தொடர்பிலான விவரங்களைப் பெற்றுள்ளார். புதுடெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் சுதேசமித்திரன் இதழ்கள் கிடைத்துள்ளன. 1996-ல் சார்லஸ் வாலஸ் இந்தியா அறக்கட்டளையின் கீழ் மானியம் பெற்று பிரிட்டனின் பல நூலகங்களில் தனது தேடுதலைத் தொடர்ந்துள்ளார். அப்போதுதான் சுதேசி கப்பலின் அன்றாடப் பயண விவரங்களையும் கூடப் பதிவுசெய்து வைத்திருக்கும் லாயிட்ஸ் ரெஜிஸ்டர் ஆப் ஷிப்பிங் அமைப்பின் தொடர்பு கிடைத்துள்ளது. உலகம் முழுவதுமுள்ள கப்பல்களின் போக்குவரத்தைப் பதிவுசெய்யும் மிகப்பழைய அமைப்பு இது. வாஞ்சிநாதனால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆஷ் துரையின் குடும்பத்தினரையும் அவரது பேரன் ராபர்ட் ஆஷையும் 2006-ம் ஆண்டில் அயர்லாந்தில் சந்தித்த ஆ. இரா. வேங்கடாசலபதிக்கு அங்கு சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் முழுச்சித்திரத்தை வழங்கியிருக்கின்றன.

வ.உ.சியின் வாழ்க்கை சரிதத்தை எழுதிமுடிக்கும் நிலையில் உள்ள ஆ. இரா. வேங்கடாசலபதி அதற்காக நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் செய்த பணியின் ஒரு விளைவு ‘SWADESHI STEAM V.O.Chidambaram pillai and the battle against the British Maritime Empire’ நூல்.

எத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு மத்தியிலும் ஒரு தனிமனிதன் பெரிய கனவொன்றை நனவாக்க முடியுமென்பதன் உதாரணமும் அந்தக் கனவுக்கு, அந்த சாகசத்துக்கு அந்த மனிதன் தந்த விலையையும் சேர்ந்தே பேசும் ஒரு நூல். இந்த நூலுக்காக அறிஞர் ஆ. இரா. வேங்கடாசலபதி செய்திருக்கும் பணிகளும் தமிழ் சூழலில் ஒரு சாகசக்காரியமே. 

(நன்றி : அகழ் இணைய இதழ்)

Comments