வாருங்கள்
பிரார்த்தனைக்கு
நமது கரங்களை உயர்த்துவோம்
சடங்கு சாங்கியங்களை
மறந்துபோனோம் நாம்.
நேசத்தின் இதத்தைத் தவிர
கடவுள்
உருவங்களில்
நம்பிக்கை இல்லாது
போனவர்கள் நாம்.
வாழ்க்கையென்னும் நேசத்துக்குரியவளை
யாம் பிரார்த்திப்போம்
இன்றின் நஞ்சிலிருந்து
நாளையின் அமிழ்தை நிரப்பட்டும்
ஒற்றை நாள் தரும் வலியைக்கூட
தாங்கவியலாதவர்களின் கண்கள்
பகல் இரவுகளிலிருந்து விடுதலை பெறட்டும்.
விடியலின் முகத்தையே
காண்பதற்குப் பலமில்லாத
விழியுடையோரின்
இரவுகளில்
எவராவது விளக்குகளை ஏற்றட்டும்
நடக்கத் திராணியில்லாதவர்களுக்கு
யாராவது பயணத்திசை
காட்டட்டும்
யாரையெல்லாம்
அவரவர் மதங்கள்
பொய்சொல்லி வஞ்சித்தனவோ
அவற்றைப் புறக்கணித்து
சத்தியத்தை நாடும்
தைரியத்தை அவர்கள் பெறட்டும்
ஒடுக்குமுறையின் வாள்கள் தலையில் இறங்குவதற்காக
காத்திருப்பவர்கள்
தண்டனையின் கரங்களைத் தடுக்கும்
ஆற்றலைப் பெறட்டும்.
யாருக்கெல்லாம்
அவர் மறைத்துவைத்த
ரகசிய அன்பின் ஆன்மா
எரிந்துகொண்டிருக்கிறதோ
அவர்களது வாட்டம் குறைய
நாம் உறுதிமொழியேற்போம்.
சத்தியத்தின் வார்த்தை
இதயத்தை
ஒரு முள்ளைப் போல் துளைக்கிறது
அதை இன்று வெளியே சொல்லி
வலியின் வெட்டுக்காயத்தை அகற்றுவோம்.
Comments