Skip to main content

Posts

ஷ்ரோடிங்கரின் பூனை நகுலனைத் திறக்கிறது!

ஷங்கர்ராமசுப்ரமணியன் ஒரு பொருள் என்ன நிலையில் இருக்கிறது என்று நமக்குத் தெரியாத நிலையில், குவாண்டம் கோட்பாடு அதை 'இருநிலை இருப்பு' என்று அழைக்கிறது. அது என்னவாக இருக்கிறது என்று பார்க்காத வரை அதற்கு எல்லா நிலைகளும் சாத்தியம். ஆணாக, பெண்ணாக, இருபாலுயிரியாக, யாரும் பார்க்காத வரை எல்லா நிலைகளும் சாத்தியம். புகழ்பெற்ற விஞ்ஞானியான எர்வின் ஷ்ரோடிங்கர், ஒரு சோதனையைக் கற்பிதம் செய்தார். அதன்படி, ஒரு இரும்புப் பெட்டிக்குள் பூனையையும் ஹைட்ரோசயனிக் அமிலக் குப்பி ஒன்றையும் வைக்க வேண்டும். அத்துடன் கதிரியக்கத்தன்மை கொண்ட பொருளையும் வைக்க வேண்டும். பரிசோதனையின்போது, அந்தக் கதிரியக்கப் பொருளின் ஒரு அணு சீர்கெட்டாலும், அது அந்த இரும்புப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள சுத்தியலை அசைத்து, அமிலக் குப்பியை உடைக்கும். அமிலக் குப்பி கசிந்தால் பூனை இறந்துவிடும். ஆனால், அந்த இரும்புப் பெட்டி மூடியிருக்கும் நிலையில் பூனை உயிருடன் இருக்கிறதா, இல்லையா என்பது தெரியவே தெரியாது. குவாண்டம் விதியின்படி, பூனை உயிருடனும் இருக்கலாம்; இறந்தும் இருக்கலாம் என்ற 'இருநிலை இருப்பு நிலை'யில் உள்ளது....

பரிசு - செஸ்லா மிலோஷ்

 தமிழில்: சபரிநாதன் வெகு சந்தோஷமான நாள் மூடுபனி விலகியது முன்னமே. நான் தோட்டத்தில் வேலை செய்தேன். ஹனிச்சக்கில் மலர்கள் மேல் நின்று சென்றன ஹம்மிங் சிட்டுகள். எனதாக்க விரும்பும் பொருள் என்று எதுவுமில்லை பூமியில் பொறாமை கொள்ளத் தகுதியான எவரையும் அறியவில்லை எனைப் படுத்திய தீமைகள், அதை எல்லாம் மறந்துவிட்டேன் முன்பொரு காலம் நான் இதே மனிதனாக இருந்ததை எண்ணுவது                                      அவமானமுறச் செய்யவில்லை வலியேதும் உணரவில்லை உடலில் நிமிர்கையில் கண்டேன் நீலக்கடலையும் கப்பற்பாய்களையும் ( ‘தக்கை’ இதழில் வெளியானது.)

நள்ளென் றன்றே யாமம்

  ஷங்கர்ராமசுப்ரமணியன்   நள்ளென் றன்றே யாமம்  சொல்லவிந்து சடலங்களாய்  பேருந்தில்  உடல்சுருட்டியடங்கினர் மக்கள்  இருட்டில் முனகும் சல்லாபப் பாடல்கள்  உதிர்ந்து வரும் திருவள்ளுவர் சித்திரம்  பொன்மொழிகள்  அதிகாலையில் இறங்கவிருக்கும் நகரம் குறித்த நினைவு  எதுவுமல்ல  ஆம்  உண்மைதான் பதுமனார் அவர்களே   பற்றித் தள்ளும் விருப்பும் வெறுப்பும்  அலைக்கழிப்புகளும் அல்ல  உறக்கமும் பனியும் தான்  அவர்களைத் தாயென கதகதப்பாக  தற்காலிகமாகப் போர்த்தியிருக்கிறது.     

புனிதச் சிப்பி

ஷங்கர்ராமசுப்ரமணியன் கடலடியிலிருந்து மீன்களோடு கரைக்கு வந்து வலையோடு வெளியே எறியப்பட்ட சிப்பி நீ தனக்கென்று தனிவிருப்பமில்லாத உன் உடலில் கடலின் நிணம் கறையாகச் சிவந்திருக்கிறது கடலின் காதல் சுவடுகளும் உனது முதுகில் அழகிய  சமச்சீர் வரிகளாக பறவை மூக்கென இறங்கிக் குழிந்துள்ளன. கடலின் விருப்பத்திலிருந்தும் விலகி இப்போது உலகின் விருப்பத்துக்கு வீசப்பட்டு இந்த வெயிலில் உன்னை ஒப்புக்கொடுத்து யாருக்கோ எதற்கோ காத்திருக்கிறாய். அதனால்   நீ புனிதச்சிப்பி. 000

ஆனந்தா 2.0

ஷங்கர்ராமசுப்ரமணியன் பிரமாண்டமான  ஒரு பச்சை முட்டையைக் கொத்தி வெளியே வருவதைப் போல கழுத்தைச் சிலுப்பி மரத்திற்குள்ளிருந்து கிளைகள் நடுங்க வந்து நிற்கிறது வெள்ளைக் கொக்கு அது இருட்டில்தான் ஜனித்தது தெரியாத தெய்வத்தின் கரங்களை நம்பி     அது காத்திருந்தது அதுதான் தற்போது தன் ஒளிப்பூக்கொண்டையைச் சிலுப்பி கண்கள் பறிக்க உயிர்கோஷம் இடுகிறது ஆனந்தா.

ஆனந்தா

                 ஷங்கர்ராமசுப்ரமணியன்    ஆனந்தா என்றேன்  பிறந்தவையும் ஆம் என்றன  இன்னும் பிறக்காதவையும்  ஆம் ஆம்  என்கின்றன.  000

தமிழ் புரோட்டா தான் நான்- ஷங்கர்ராமசுப்ரமணியன்

நீங்கள் என்னைத் தூள்தூளாக்குங்கள் நீர் ஊற்றிச் சேர்த்து உருட்டிப் பிசைந்து உங்கள் மூர்க்க பலத்தால் அடித்துத் துவைத்தெடுங்கள் பாலியஸ்டர் துணிபோல் என்னை நெகிழ்வாக்கி நீட்டி விசிறியடித்து காற்றுத் தங்கும் பலூன் பந்துகளாக மேஜையில் அடுக்குங்கள். அப்போது கடவுள் போல் நான் ஒளிர்வேன். பின்னர் மீண்டும் தட்டி மடித்து வட்ட சதுர முக்கோணங்களாக எண்ணைய் கொதிக்கும் வாணலியிலோ கல்லிலோ இட்டுப் பொறித்தெடுங்கள் உங்கள் அரும்பசிக்குச் சுவையான உணவாய் நான் மாறுவேன்... உங்கள் வரலாறு மூர்க்கம் ஆசைகள் காமம் மூட்டம் வலி அரசியல் துயரங்கள் நெருக்கடி உழைப்பு உங்கள் மாமிசமும் சேர்ந்த குழம்பில் நான் மிதந்தூறிக் கொண்டிருக்கிறேன். மீண்டும் மடிப்புமடிப்பாக தூள்தூளாகக் கரைந்துபோகக் காத்திருக்கும் தமிழ் புரோட்டாதான் நான்.