Skip to main content

முல்லா விழும் குழிஒரு பெரிய தெருவின் நடுவே ஆள் விழும் அளவுக்குக் குழி ஒன்று இருந்தது. அந்தக் குழியைத் தவிர்த்து எல்லாரும் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அந்தத் தெருவில் ஒரு நாள் முல்லா பரபரப்பாகத் தென்பட்டார். எல்லாரும் பார்த்து கவனமாகக் கடந்து செல்லும் குழியில் விழுந்துவிட்டார் முல்லா.

அவரைத் தூக்கிவிட்ட மனிதர், பார்த்துக் கவனமாகச் செல்வதுதானே முல்லா என்று கேட்டார். இத்தனை பெரிய தெருவில் இந்தக் குழியைத் தவிர்த்துப் போக வழி இருக்கிறதே என்ற 'நியாய'மான கேள்வியைக் கேட்டார்.

இத்தனை பெரிய தெருவின் நடுவில் இந்தக் குழியில் ஏன் என்னைத் தவிர வேறு யாருமே விழவில்லை என்று கோபமாகக் கேட்டார் முல்லா.

இந்தக் குழியில் தான் குழந்தைகள் தொடங்கி புலம்பெயர் தொழிலாளர்கள் வரைக்கும் விழுந்துவிடுகின்றனர்.

காரணமும் விளைவும் தலைகீழாகும் இடத்தில் முல்லா பிறந்துவிடுகிறார். பொதுவாக அனைவரும் பார்க்காத ஒரு அம்சத்தை ஆனால் அருகிலேயே வாழும் உண்மையைப் பார்க்கும்போதும் நமக்குக் காண்பிக்கும்போதும் முல்லா பிறந்துவிடுகிறார். காரணங்களையும் விளைவுகளையும் ஒருவிதமாக வகுத்துத் தொகுத்து அவற்றைப் படிப்பினையாகக் கொண்டுதான் முன்னெச்சரிக்கைகளும் நெறிகளும் வகுக்கப்படுகின்றன. எண்ணற்ற விதிகள், எண்ணற்ற நெறிமுறைகள், எண்ணற்ற சட்டங்கள், எண்ணற்ற சட்டங்கள், எண்ணற்ற அப்பியாசங்கள், அனுஷ்டானங்களால் மேலும் காப்பாற்ற முடியாமல் ஆக்கப்பட்ட இந்த உலகின் பைத்தியக்காரத் தன்மையிலிருந்து விலகி ஓடுவதற்கான பாதையைத் தான் முல்லா காண்பிக்கிறார்.   அனுபவ சேகரம் மூலமான அறிவால் அதிலிருந்து பெறும் முன்னெச்சரிக்கையால் தொடப்படாத அறிந்துகொள்ள முடியாத உண்மையொன்றை அங்கே எப்போதும் எதிர்கொள்கிறோம். அந்தத் தருண உண்மையின் உருவம் தான் முல்லா. அங்கே முன்னெச்சரிக்கை பலிக்கவே பலிக்காது.

முல்லா தன் வீட்டைச் சுற்றி ரொட்டித் தூளைத் தூவிக் கொண்டிருந்தார். தெருவழியாகப் போனவர், முல்லாவிடம் என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டார். புலிப்பொடியைத் தூவுகிறேன். இந்தப் பொடியைத் தூவினால், புலிகள் வீட்டுக்கு வருவதைத் தவிர்க்கலாம் என்றார்.

ஐம்பது மைல் தூரத்துக்கு இங்கே புலிகளே கிடையாதே என்றார் கேட்டவர்.

‘சரிதான். புலிப்பொடி அவ்வளவு திறன் கொண்டது’ என்றார் முல்லா.

முல்லா, அரசருடன் மாலை நடை சென்று கொண்டிருந்தார். "சட்டங்களால் மக்களை நல்வழிப்படுத்த முடியும் என்று தோன்றவில்லை. உள்ளேயிருக்கும் சத்தியத்தை ஒட்டியொழுகுவதற்கு குறிப்பிட்ட விஷயங்கள் தேவை. வெளியில் தெரியும் சத்தியத்தில் உள்ளே உள்ள சத்தியம் கொஞ்சமே பிரதிபலிக்கிறது."  என்றார் முல்லா.

சட்டத்தின் வழியாக நெறிமுறைகள் வழியாக மக்கள் சத்தியத்தைப் பின்பற்றச் செய்ய முடியும் என்பதை முல்லாவுக்கு நிரூபிக்க நினைத்தார் அரசர்.

தலைநகரத்துக்குள் நுழையும் பாலத்தின் வாசலில் ஒரு தூக்கு மேடையை அமைப்பதற்கு உத்தரவிட்டார். அடுத்த நாள் விடிவதற்கு முன்பாகவே தனது படையினரை பாலத்தின் நுழைவாயிலில் நிற்கவும் ஆணையிட்டார். நகருத்துக்குள் வரும் மக்கள் ஒவ்வொருவரையும் நோக்கி ஒரு கேள்வி கேட்கப்படும். பதில் உண்மையாக இருக்க வேண்டும். உண்மை சொன்னால் அவர்கள் நகருத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். பொய் சொன்னால் தூக்குமேடை தான் என்று உத்தரவிட்டார் அரசர்.

அடுத்த நாள் முல்லா தன் கழுதையில் நகரத்துக்குள் நுழைய முயலும்போது அவரைக் காவலர்கள் பிடித்தனர். அரசரின் உத்தரவுப்படி, முல்லாவிடம் காவலர்கள் எங்கே போகிறீர்கள் என்று கேட்டனர். ‘நான் தூக்கிலிடப்படுவதற்காகச் செல்கிறேன்’ என்றார்.

எங்களால் நம்பமுடியவில்லை, பொய் சொல்கிறீர்கள் முல்லா என்று கவலையுடன் கேட்டார் படைத்தலைவர்.

‘நான் பொய் பேசினால் என்னைத் தூக்கிலிடுவதுதானே முறை’ என்றார் முல்லா.

“ஆனால், நாங்கள் உங்களைத் தூக்கிலிட்டால் நீங்கள் சொல்வது சத்தியமாகிவிடுமே" என்றார் படைத்தலைவர்.

‘சரிதான். இப்போது சத்தியம் என்றால் அவருடையது என்பது அரசருக்குத் தெரிந்திருக்கும்? என்றார் முல்லா.

“எல்லாரும் சொல்கிறார்கள்: நான் அறிந்துகொள்ள முயன்றேன், ஆனால் இங்கே வெறும் பைத்தியக்காரத்தனத்தையே பார்க்க முடிகிறது.

ஆனாலும், அவர்கள் ஆழமான ஞானத்தை வேறெங்கோ தேடிக்கொண்டிருக்கலாமா. அது கிடைக்கவே போவதில்லை.”


இதுதான் முல்லா கண்டது. அதை உண்மை என்றும் சத்தியம் என்றும் கூடச் சொல்ல வேண்டியதில்லை.

முல்லா சந்தைக்குப் போய் இறைச்சி வாங்கிவந்தார். வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்குக் கறி சமைக்குமாறு உத்தரவும் இட்டார். சாப்பாடு வந்தது. ஆனால், மேஜையில் இறைச்சி சமைத்த சுவடே இல்லை. முல்லாவின் மனைவி தான் சமைத்த இறைச்சியின் ருசியில் மயங்கி அதை முழுவதும் சாப்பிட்டு விட்டார். முல்லா, தன் மனைவியிடம் கோபமாக, எங்கே இறைச்சி என்று கேட்டார். பூனை சாப்பிட்டுவிட்டது என்று மனைவி பதிலளித்தார். நான் வாங்கிவந்த மூன்று பவுண்ட் இறைச்சியையுமா என்றார். ஆமாம் என்று நெஞ்சழுத்தத்துடன் பதிலளித்தார் முல்லாவின் மனைவி.

அப்போது அங்கே தென்பட்ட பூனையைப் பாய்ந்தோடிப் பிடித்தார் முல்லா. அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் போய் எடைத் தராசில் அளந்து பார்த்தார். பூனை மூன்று பவுண்டு எடை இருந்தது.

இது பூனையென்றால், இறைச்சி எங்கே? இது இறைச்சி தான் என்றால் அதைச் சாப்பிட்ட பூனை எங்கே? என்று கோபாவேசமாகக் கேட்டார் முல்லா.

முல்லா, தன் மனைவி சொன்ன பொய்யை உண்மையென்று நம்பி அதைப் பூனையில் தேடுகிறார். அல்லது மனைவி சொன்ன பொய்யை நிரூபிக்கப் பார்க்கிறார் நம்மைப் போலவே.

 உண்மை, பொய் அது மூன்று பவுண்டு கொண்டது என்றாலும் அந்த எடையைத் தாங்கும் உயிரல்ல பூனை. அது நமது காரண- காரிய, தர்க்க விளைவுகளுக்கு வெளியில் உள்ள உயிர்.Comments

கதை நல்லாத்தான் இருக்கு ஐயா...
சிறப்பு. எமது வலை ஓலை வலைத்திரட்டியை பயன்படுத்தி பாருங்கள். உங்கள் வலைத்தளத்தை திரட்டியில் இணைக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்.
நமது வலைத்திரட்டி: வலை ஓலை