Skip to main content

கன்னிமை கலைஞன் கபாடபுரம்




புதுமைப்பித்தனின் கபாடபுரத்திலும் லா. ச. ரா-வின் அபிதாவிலும் காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ்சின் ‘லவ் இன் தி டைம் ஆப் காலரா’ நாவலிலும் கன்னிமை என்ற கருத்து ஏன் தொடர்ந்து கலைஞர்களை ஈர்ப்பதாக உள்ளது. கன்னியும், கலைஞனும் ஏன் ஒருவரையொருவர் ஆகர்ஷித்துத் திரும்பித் திரும்பி விழுங்கியபடி இருக்கிறார்கள். நகுலனின் சுசீலா, நகுலனை விட்டுச் செல்லும்போது, நகுலனுக்கு ஒரு சுசீலாவை அவர் வாழ்க்கை முழுக்க அவருக்கே அவருக்கென்று பரிசளித்துச் செல்கிறாள். அவரை விட்டுச் சென்ற சுசீலாவின் பிரிவுக் குறிப்புகள் அவளது கன்னிமையை முன்வைத்தே எழுதப்படுகிறது. ‘கண்ணனிருக்கும் குருவாயூரில் கண்மணியவள் கன்னிமை தவிர்ந்தாள்.’ என்றும் ‘அவள் சூலுற்றாள் தன்னைப் போல் ஒரு பெண்ணைப் பெற்றாள் நான் தனியிருந்தேன்; மிகநன்று.’ என்பதைப் போன்ற பிரிவுக் குறிப்புகளாக வருகிறது. வில்லெடுத்து நாண்பூட்டி அவளை வென்ற அர்ஜூனன் அல்லாத தன்னை, வந்து வந்து போகும் அர்ஜூனன் என்று குறிப்பிடும் நகுலன் திரௌபதியை தூய்மையின் ஊற்று என்கிறார்.

கன்னிமை என்பது படைப்புகளில் எவ்வாறெல்லாம் பொருள் கொள்ளப்படுகிறது? ஒரு அனுபவத்தை, அறிதலை அடைவதற்கு முந்தைய நிலை; அந்த அனுபவத்தை ஒரு குறிப்பிட்ட நபருடன் அடைவதற்காக அந்த அனுபவத்தை மறுத்த, ஒதுக்கிய, துறந்த, கடந்த நிலை; அந்த அனுபவத்தை அறிதலை விதியால் அடையவே முடியாமல் போன நிலை என்று மூன்றாக வகைப்படுத்தலாம்.

‘லவ் இன் தி டைம் ஆஃப் காலரா’ நாவலில் நாயகன் ப்ளோரென்டினா அரிஸா, 70 வயது வரை தன் காதலிக்காகக் காத்திருக்கிறான். ஆனால், அவன் உடல் ரீதியாக எத்தனையோ பெண்களைக் கடக்கிறான். ஆனால், அவன் தன் காதலிக்காக கன்னிமையைக் கடக்காமல் தக்கவைத்திருக்கிறான்.

கன்னிமை என்ற உருவகம் கலைப்படைப்புகளில் ஒரு கோபுரம் போல, ஒரு ஒளிவிளக்கைப் போல கிடைமட்டமாக இருக்கிறதென்றால், கன்னிமை தவிர்ந்த, தீர்ந்த நிலை படுக்கைவாட்டு நிலையாகிறது. அங்கே தான் உலகம், சமூகம், பொது அனுபவம், குழந்தைகள் உருவாகின்றன. திரும்பிப் போக முடியாத ஒரு வழியிலிருந்து கிடைக்கும் அறிவு அது. குழந்தைமை, கல்மிஷமின்மை, தூய்மை என்று அதுவரை வீசிக்கொண்டிருந்த ஒளி பறிக்கப்பட்ட தோட்டமாகி விடுகிறது. அங்கிருந்துதான் ஆதாம் ஏவாளிலிருந்து ரோமியோ ஜீலியட் வரை விரட்டப்படுகின்றனர்.

கிடைமட்டத்தில் தோன்றிய காதலின் தூய்மையும் அதன் ஆற்றலும் தொடரவும் ஜீவித்திருக்கவும் தான் காதலை, காதலர்களை பூமியில் படுக்கைமட்டத்தில் கிடத்த படைப்பாளிகள் அனுமதிப்பதில்லை. ரோமியோவும் ஜூலியட்டும் அங்கே பெரியவர்களாக சமூகமாக உலக அனுபவத்துக்குள் மாசுபட்டு விடுவார்கள். குழந்தைகள் பெற்று சண்டை போட்டு, கழிப்பறையைத் திறந்தபடி சிறுநீரைச் சத்தமாகக் கழிப்பார்கள்.
காதல், கன்னிமை, தூய்மை என்ற உருவகத்தை தொல்படிமமாக தீர்க்க முடியாத ஆற்றலாக வைத்துக் கொண்டே இருப்பது ஒருபுறம். மற்றொரு புறத்திலோ படைத்தவனும் படைப்பவர்களும் பூமியில் குழந்தைகள் உற்பத்தியை ஏற்று அனுமதித்து நிர்வகித்துக் கொண்டே இருப்பது இன்னொரு புறம்.

ஆனால், இந்த இரண்டு நிலைகளும் கிடைமட்டத்திலும் பக்கவாட்டிலும் சம மதிப்போடு எப்படி ஜீவிக்கின்றன. ஒன்றுக்கான பாதை எப்போதும் குறுகியதாகவும் பலரால் பயணிக்கப்படாததுமாகவும் இன்னொன்று பழகிய சலிப்பது போன்ற பாவனையைத் தருகிற பாதையாகவும் எப்படித் தொடர்கிறது?

உடலில் தோன்றி வெளிக்கு உயரும் ஆலாபனையைப் போல புணர்ச்சிக்கு முன்னரான ஆண், பெண் காதலுறவில் உணரும் இசையைச் சொல்லலாம். அது அவர்கள் உடல்களிலிருந்து தோன்றினாலும் தமது சுயங்களைக் கொண்டு உருவாக்கினாலும் அவர்களுடையது அல்ல. அப்படிக் கோடிக்கணக்கான காதலர்களும் காதலும் உருவாக்கிய இன்பம், துன்பம் என்று பிரித்தறிய முடியாத உணர்வுதான் இசை. அது தான் ஒளியும் இருளும் மயங்கும் மெழுகுத் தன்மை கொண்ட மஞ்சள் அந்தியாக ஓவிய உருக்கொள்கிறது.

அந்த அந்தியிலிருந்து சிருங்காரம் நிகழ்கிறது. சிருங்காரத்தின் உச்சத்தில் எங்கேயோ வன்மையும் இம்சையும் கலந்துவிடுகிறது. பாற்கடலில் அமுதம் கடையும் இடத்தில் விஷம் தோன்றும் தொன்மம் எத்தனை சக்தி வாய்ந்தது என்று உணரமுடியும்.

கூடலின் ஒரு புள்ளியில் தனிமை அங்கே இறங்குகிறது. பழிப்பு தொடங்குகிறது. அநிறைவு உருவாகிறது. பயங்கரத்தின் முடிச்சு அங்கே விழுந்து விடுகிறது. அங்கே தனி ஆண் தனிப் பெண் அல்ல. ஹிட்ச்காக்கின் கருப்புவெள்ளைப் படங்களில் பால்ரூம் நடனக் காட்சிகளில் சிருங்காரத்தின் உச்சத்தில் பெண் முகத்தில் தோன்றும் பயங்கரத்தை அவர் காட்சிப்படுத்தியிருப்பார்.

நகுலன் ஆங்கிலத்தில் எழுதிய அபூர்வமான கதைகளில் ஒன்றான முகமது இப்ராகிம் (https://www.shankarwritings.com/2013/08/ ) கதையில் கதைசொல்லியின் மனைவி பெயர் சுசீலா. அவளும் கதைசொல்லியும் காதலும் ஆத்மார்த்தமும் ததும்ப வாழ்ந்தவர்கள். புற்றுநோய் பாதித்த அவளது கடைசி நாட்களில், அவளிடமிருந்து ஒரு பழிக்கும் பார்வை வெளிப்பட்டதை உணர்ந்ததாகச் சொல்கிறான் கதைசொல்லி. அவள் இறந்தபிறகு, கதைசொல்லியைச் சந்திக்க வரும் முகமது இப்ராகிம் என்பவனும் பாகிஸ்தான் கலவரத்தில் பாலியல் பலாத்காரம் செய்வதற்காக இழுத்துச் செல்லப்பட்ட தனது மனைவியின் பார்வையில் அத்தனை வெறுப்பு இருந்ததாகக் கூறுகிறார். கதைசொல்லியின் இரட்டை போலத் தோன்றும் முகமது இப்ராகிமுக்கும் குழந்தை கிடையாது. கதைசொல்லி-சுசீலா தம்பதிக்கும் குழந்தை இல்லை.
அங்கேயிருந்து தான் இறங்கிப் போக வேண்டும் இருவரும். அந்த இடத்தில் இருவரும் வெகுநேரம் தரிக்க முடியாது.

இங்கேதான் கன்னிமை என்பது கோபுரமாக, லட்சியமாக மாறுகிறது போல.
தமிழில் இந்தக் கன்னிமையின் ஒளியை தொடர்ந்து உணரமுடியும் படைப்புகளைத் தந்தவர்களாக நகுலனையும் ஆத்மாநாமையும் பார்க்கிறேன்.

ஒரு வகைப்பட்ட ஒரு இயல்பு கொண்ட அறிவுக்கு பூமியுடன் உறவு கொள்ள வேண்டும். அந்த உறவை ஆத்மாநாம் மேற்கொண்டிருந்தால் அவரது படைப்புகளில் நாம் இப்போது உணரும் ஒளி தொலைந்து போயிருக்கும். வண்ணத்துப் பூச்சிகள் மண்ணுடன் ஸ்னேகம் கொள்கின்றன என்று அவர் எழுதியிருக்கிறார். ஆனால் மண்ணைப் பொருத்தவரை அது ஸ்னேகம் அல்ல; அவை பூமியின் ஈர்ப்பை மீறிப் பறக்கும் லட்சிய உயிர்கள்.

அப்படி ஸ்னேகம் கொள்ளாத, ஸ்னேகம் கொள்ள முடியாத, ஸ்னேகத்தை மண்ணுடன் மறுத்த நிலையிலேயே கவிதைப் பயணம் அகாலத்தில் முடிந்துவிட நேர்கிறது.

நகுலனின் ஒட்டுமொத்தப் படைப்புலகத்தையும் மாயம் கொள்ள வைப்பது இந்தக் கன்னிமை என்ற மையப்படிம அம்சமும் தான்.

நகுலன், ஆத்மாநாம் என்ற தனிப்பட்ட ஆளுமைகளின் வாழ்க்கைக் குறிப்புகளோடு தொடர்புபடுத்திப் பார்க்கும் வகையில் இந்தக் கட்டுரை வாசிக்கப்படக் கூடாது.

கன்னிமை என்பது ஒரு கருத்துநிலையாக, ஒரு படைப்பு இயல்பாக அவரவர் படைப்புகளில் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பரிசீலித்துப் பார்க்கத் தூண்டும் குறிப்புகளே இவை.

‘லவ் இன் தி டைம் ஆஃப் காலரா’ நாவலில் நாயகன் ப்ளோரென்டினா அரிஸா, காதலி பெர்மினா டாஸாவுக்காக தனது 70 வயது வரை காத்திருக்கிறான். ஆனால், அவன் பொது அர்த்தத்தில் பிரம்மச்சாரி அல்ல. நிறைய பெண்களுடன் அவன் உடல் ரீதியாகவே உறவைக் கொண்டவன்தான்.   ஆனால், அந்தப் பெண்களில் யாரும் பெர்மினா டாசாவின் இடத்தை நிரப்பவேயில்லை. அவளுடனான உறவைத்தான் இதயபூர்வமான திருமணம் என்று நம்புகிறான். 70-களைக் கடந்து பெர்மினா டாசாவின் கரம் பற்றும்போது, தான் இன்னும் கன்னித்தன்மை உடையவன்தான் என்று சொல்கிறான் அரிஸா. அது பாதியளவில் உண்மையும்கூட. அது பொய்யும் அல்ல.

கன்னித்தன்மை என்பதற்கு சமூகமும், சமயமும் வைத்திருக்கும் வரையறைக்கு மாற்றான கருத்துருவங்களையும் புரிதல் நிலைகளையும் ஒரு படைப்பு எவ்வாறு கொண்டுள்ளது?

நகுலனின் கவிதைகளில் அது கருத்துருவமாகவே செயல்படுகிறது. ஆத்மாநாமின் கவிதைகளில் ஒரு ஒளியனுபவமாக, சாயைகளாக, உள்ளடக்கமாகச் செயல்படுகிறது.

எந்த நஞ்சு பருகினான் சிவன்? ஏன் அதைத் தொண்டையோடு தடுத்தாள் சக்தி?

Comments

shabda said…
I have started reading your blogs i have seen that movie,love in the times of cholera -எந்த நஞ்சு பருகினான் சிவன்? ஏன் அதைத் தொண்டையோடு தடுத்தாள் சக்தி? - இது புரியவில்லை
Anonymous said…
Conceptualisation of virginity lies in the mind of humans not in their psyche
ஆமாம் சார். நீங்கள் சொல்வது மிகச் சரியான உண்மை.