Skip to main content

அமேசான் கிண்டிலில் மிதக்கும் இருக்கைகளின் நகரம்



மிதக்கும் இருக்கைகளின் நகரம் அமேசானில் கிண்டில் பதிப்பாக வாங்க



இது எனது முதல் தொகுப்பு. 2001-ம் ஆண்டு வெளியானது. ஒரு கவிஞனின் முதல் தொகுப்பிலிருக்கும் கட்டற்ற ஆற்றல், உள்ளடக்க ரீதியான சாத்தியங்கள், பேதைத்தன்மை கொண்ட கவிதைகள் இவை. 1990களின் பின்பகுதியில் எஸ். ராமகிருஷ்ணனுடன் ஏற்பட்ட நேரடிப் பரிச்சயமும் அவரது மொழியின் பாதிப்பும் இந்தக் கவிதைகளில் தொழில்பட்டிருப்பதை உணர்கிறேன். கோணங்கி, பிரம்மராஜனின் எழுத்துகளின் தாக்கமும் இந்தக் கவிதைகளில் அப்போது இருந்திருக்கின்றன. சென்னைக்குப் படிக்க வந்தபோது அண்ணன் வீட்டில் பார்த்த, ஒரு தலைமுறையையே
ஈர்த்திருந்த எம்டிவி பாடல்களின் சர்ரியல் காட்சிகளையும் அதன்
உள்ளடக்கத்தையும் அப்படியே கவிதைகளில் மொழிபெயர்க்கவும் முயன்றிருக்கிறேன் இத்தொகுப்பில். ஒரு இளைஞனின் விடலைத்தனங்கள், ஒரு பெண்ணுடனான உறவு சார்ந்த பகல் கனவுகள், கற்பனைகள் ரொமாண்டிக்கான தன்மையில் இந்தத் தொகுப்பில் பதிவாகி இத்தொகுப்போடு விடைபெற்றும் விட்டன. பிரெஞ்சிலிருந்து அந்தக்
காலகட்டத்தில் வெ. ஸ்ரீராம் மொழிபெயர்த்து வெளியான ழாக் ப்ரெவரின் தாக்கம் இந்தத் தொகுதியின் நல்ல கவிதைகளில் செல்வாக்கைச் செலுத்தியிருக்கிறது.



சொந்தமாகப் பணமின்றி, ஒரு கவிஞனின் கவிதைத் தொகுதி, அதுவும் முதல் தொகுதி வெளிவருவது அபூர்வமாக இருந்த ஒரு காலகட்டத்தில் எனது கவிதைகளைச் சேர்த்து புத்தகமாகக் கொண்டுவரலாம் என்று முதலில் ஆசைப்பட்டவர் எஸ். ராமகிருஷ்ணன்.

அப்புறம் எனது கவிதை கைப்பிரதி கைமாறி கைமாறி இரண்டு மூன்று வருட காலத்துக்குப் பின்னர் மருதா பாலகுருசாமியால் வெளியிடப்பட்டது. கவிதைத் தொகுப்பு வெளியாவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே ஓவியர் நடேஷின் ஓவியம்தான் என்று முடிவுசெய்து அவரது ஓவிய கான்வாஸ் ஒன்றை பையில் வைத்துக் கொண்டே பல நாட்கள் சென்னையில் அலைந்திருக்கிறேன். சென்னையில் எனக்கு நண்பனாகவும் நெருக்கமான முதல் நவீன ஓவியர் அவர். தர்க்க ஒழுங்கில்லாமல் கலைஞனுக்குரிய தெறிப்புகளுடன் குறுக்குமறுக்காகப் பேசும் அவரது மொழியாலும் ஆளுமையாலும் ஈர்க்கப்பட்டுத்தான் அவரது ஓவியம் அட்டையாக இருக்க வேண்டுமென்று முடிவுசெய்தேன். என் பெயரில் ஒரு புத்தகம் என்பது அவ்வளவு பெரிய கனவாக இருந்தது. காயிதே மில்லத் கல்லூரியில் புத்தகக் கண்காட்சியின் போது ஒரு மாலை வேளையில், பாலகுருசாமி கொண்டுவந்த புத்தகத்தை கையால் எடுத்துப் பார்த்துவிட்டு, அங்குள்ள புல்வெளி மைதானத்தில் நின்று ஆகாயத்தை நோக்கி உயரத் தூக்கி எறிந்து கையில் பிடித்தது இன்றும் ஞாபகத்தில் உள்ளது. இப்புத்தகத்தைத் தானே தேடிப் படித்ததாக அடுத்தவாரமே ஆனந்த விகடனில் ‘கற்றதும் பெற்றதும்’ பகுதியில் சுஜாதா ஒரு பக்கத்துக்கு எழுதி அப்போதைய நிலையில் ஒரு பெரும்  கவனத்தை இந்தப் புத்தகத்துக்குக் கொடுத்தார்.

கவிதை என்பது மேலானது, கவிதை வழியாக இந்த உலகத்தை அன்றாடம் அணுகும் செயல் என்பது அதைவிடவும் மேலானது; அதைத்தவிர வேறெந்த உயர்ந்த அடையாளமும் தேவையில்லை; அது அவசியமும் இல்லை என்ற ஓர்மையும், கவிஞனாக அங்கீகாரமோ அடையாளமோ பெறுவதற்கு முன்னரும், எனது எத்தனையோ அன்றாடப் போராட்டங்களுக்கு மத்தியிலும்
எனக்கு இருந்திருக்கிறது. அதை இத்தொகுப்பின் கவிதைகளை மீண்டும் பார்க்கும்போது பெருமிதத்தோடு உணர்கிறேன்.

மொழியும் அதுதொடர்பிலான கனவும் கொடுத்த கொடைதான் இப்போதுள்ள நான். அந்தப் பெருமிதம் தரும் உயிர்ப்பை என்னிடம் எனது இளம்வயதில் போஷித்தவர்களாக லக்ஷ்மி மணிவண்ணனும், சுந்தர ராமசாமியும், சி. மோகனும் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது பணிவு. கல்லூரியில் முதல் ஆண்டில் அறிமுகமாகி இன்றுவரை எனக்கு
அனுசரணையாக இருக்கும் நண்பன் தளவாய்க்கு இதில் சில
கவிதைகளை எழுதியிருக்கிறேன். அந்தக் கவிதைகளின் மீது
காலத்தின் ஒளி கூடுதலாக ஏறியுள்ளதைப் பார்க்கச் சந்தோஷமாக உள்ளது. அவன் என்னைவிடப் பக்குவமானவன், அவன் என்னைவிடப் பொறுமையானவன், அவன் என்னைவிட நல்ல நண்பன். என்னளவு அவன் என்னிடம் அன்பாக இல்லை என்ற குறை இருந்தது அந்த வயதுகளில். இப்போது இல்லை.

இத்தொகுப்பை எனது அம்மாவுக்கும், சென்னையில் எனக்கு நிழல்தந்த கைலாசம் அண்ணனுக்கும் பல ஆண்டுகள் அன்னம் தந்து பசியாற்றிய அண்ணி பானுமதிக்கும் சமர்ப்பணம் செய்தேன். இப்போதும் அவர்களுக்கே.

அமேசான் கிண்டில் பதிப்புக்கு மிக எளிய, அழகிய ஓவியத்தை உடனடியாக வரைந்து தந்த ஓவியர் சண்முகராஜுக்கு நன்றி. இந்தக் கவிதைகளின் மீது அப்போது படர்ந்திருந்த இருட்டை அவர் தனது ஓவியத்தின் வழியாகத் துடைத்துத் துலக்கமாக்கிவிட்டார்.



Comments

shabda said…
nice:)m going to get