Skip to main content

உன் பெயர் அகாலம்



நானும் நீயும்
கைகோர்த்துச் சுற்றாத
வேளை
அகாலம்
என்று கண்டேன்

நானும் நீயும்
சேர்ந்து
பார்த்த கடலை
பின்னர்
பார்க்காத போது
அதை வெளிச்சமாக்கும் மின்னல்
அகாலம்
என்று கண்டேன்

நானும் நீயும்
கூடிச் செலவழிக்காத
பகலும் இரவும்
இல்லாப் பொழுது
அகாலம்
என்று கண்டேன்

நானும் நீயும் பிரிந்த
அகாதம்
கிளைபரப்பி
நீட்டியிருக்கும் நெடும்வீதி
அகாலம்
என்று கண்டேன்.

பரிசா சாபமா
சொர்க்கமா நரகமா
பரிசின் முனையில்
சாபத்தின் நுனியில்
தொங்கும்
சொர்க்கநரகம்
அகாலம் என்று கண்டேன்.

நினைவின் மரணமுடிச்சா
மறதியின்
வலிமிகுந்த பிரசவத் தருணமா
நானும் நீயும் கால்பதித்திருந்த
நிலத்தில்
கடையப்படாத அமுதமா
அக்கடலைக் கடைந்ததில்
பாம்புக்கு ஏற்பட்ட வலியில்
உபரியாய் துளிர்த்த விடமா
அமுதும் விடமும்
பிரிக்க முடியாத உன்
விபரீதமா
அகாலம் என்று கண்டேன்.

நீயில்லாத போது அங்கு நிகழ்வதெல்லாம் வேறு
உன் பெயர் கொண்ட
அப்பால் நிலத்தில்
உன் முகச்சாயலில்
அதுகொள்ளும் மோகத்தின்
பொன் மெழுகு மிருதுவில்
வெளிச்சம் பூசும் வெள்ளிகளோ
வேறு ..

Comments