Skip to main content

நகுலனிடமிருந்து பிரிந்த இறகுநவீன கவிதையில் நகுலனுக்குத் தொடர்ச்சி இருக்குமா? என்ற கேள்விக்குப் பதிலாக, நகுலனின் குணமுள்ள கவிதைகளுடன் வே. நி. சூர்யா ‘கரப்பானியம்’ தொகுப்பிலேயே தென்பட்டார். அந்த முதல் தொகுப்புக்குப் பிறகு எழுதிவரும் கவிதைகளில் நகுலனின் பழைய தத்துவப் பாலத்தை
அ- தத்துவம், புனைவு, அதிலிருந்து பிறக்கும் தனி விசாரத்தால் கடந்து சுலபமாகப் போவதைப் பார்க்க முடிகிறது.

தாயுமானவரும், பாரதியும் தப்பமுடியாத வேதாந்தச் சுமை கொண்ட மனிதனை, நவீனன் சந்திக்கும் இடம் தான் நகுலன். அதனால்தான், நித்தியப் புதுமையும் நித்தியப் பழமையுமாகத் தெரியும் மகனை அம்மா ஸ்பரிசித்துத் தடவும் தருணத்தை விவரிக்கும்போதும், ‘மறுபடியும் அந்தக் குரல் கேட்கிறது, நண்பா, அவள் எந்தச் சுவரில் எந்தச் சித்திரத்தைத் தேடுகிறாள்?’ என்று.

அது அரதப்பழசான அறிவொன்று, திண்ணையிருட்டில் அமர்ந்து கேட்கும் கேள்வி. அந்தக் கேள்விக்கு முன்னால் உள்ளதுதான் கவிதை. அந்தக் கேள்வியைச் சந்தித்து, அதை தனது படைப்புகளில் உலவ விட்டு, பழையதையும் புதியதையும் விசாரித்து புதுக்கவிஞனுக்கே உரிய சுயமான புனைவுப் பிரதேசத்தை நகுலன் தனது படைப்புகள் வழியாக உருவாக்கியிருக்கிறார்.

இருப்பு, நான் என்பது குறித்த விசாரம் வே. நி. சூர்யாவில் உள்ளது; அறிந்த தத்துவத்தின் அடிப்படையிலிருந்தல்ல, ஒருவிதமாகத் தத்துவம் அற்றதிலிருந்து அவர் விசாரணையை ஆரம்பிக்கும் போது நகுலனின் பாலத்தைக் கடந்து நகுலனின் இறகிலிருந்து பிரிகிறார். பிரமிளின் கவிதையில் பிரியும் இறகுக்கு பிரக்ஞை கிடையாது. வே. நி. சூர்யா என்னும் கவிதை இறகுக்கு இதுவரை நடந்தது குறித்த பிரக்ஞை உள்ளது.  அதனால் பிரிவு அழகாகவும் துக்கமாகவும் உள்ளது.

பிரம்மராஜன் மொழிபெயர்த்து 'கேள்விகளின் புத்தகம்' என்ற பெயரில் வந்திருக்கும் பாப்லோ நெரூதாவின் பெருந்தொகுதிக் கவிதைகளைப் படிக்கும்போது தமிழ் கவிஞனுக்கும் நெரூதாவுக்கும் உள்ள துலக்கமான வித்தியாசம் ஒன்று தெரிந்தது. பாப்லோ நெரூதா போன்ற மகாசம்பவம், அவனது இருப்பும் அவனது நான் என்ற சுயமும் அகண்டம் கொள்வதால் நிகழ்கிறது.

தமிழ் புதுக்கவிதையில், நவீன கவிதையிலும் சரி, இருப்பையும் நானையும் சுருக்கி, சிறியதாக்கி, இல்லாமல் கரையச் செய்யும் எத்தனம் பெரும்போக்குளில் ஒன்றாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பாப்லோ நெரூதா, தனது கைகளாலும் தினசரித்தன்மையாலும் கவிதைகள் கறைபடிந்திருக்க விரும்புபவராக இருக்கிறார். இது இன்றைய தமிழ்க் கவிஞனை அவரோடு நெருங்கச் செய்யக்கூடிய உவப்புமிக்க அம்சம்தான்.

ஆனால், பாப்லோ நெரூதா சாமான்யமாக எழுதும் ஒரு காதல் கவிதையில் கூட, அவரது காலகட்டம், வரலாறு, பண்பாடு, பொருள்சார் பண்பாட்டின் காட்சிகள், சப்தங்கள், தனித்தனி என்று நம்பிப் புனிதமாய்ப் பாதுகாக்கும் ரகசியத்துடன், அதனாலேயே உயிர்ப்புடன் ஒவ்வொரு மனிதரும் கீழேவிடாமல் பாதுகாக்கும் துக்கங்கள் அவரது கவிதைகளில் குடிகொண்டு விடுகின்றன. அப்போது ஒரு கடலின் மேல் பறக்கும் கழுகுபோல அகண்டம் கொண்டுவிடுகிறது அவரது கவிதை.

தனது உடலைவிட நான்கைந்து மடங்கு பெரிய, எடைகூடிய குப்பைக்கூளத்தை இணைத்து தெருவில் இழுத்துச் செல்லும் பைத்தியக்காரனைப் போல வசீகர கலாசாரத் தாதுக்கள், பெருமூச்சுகளுடன் தன் கவிதையை இழுத்துச் செல்பவனாக நெரூதா தோன்றுகிறார்.

ஆனால், தமிழ் புதுக்கவிதையும் நவீனகவிதையும் இருபதாண்டுகளுக்கு ஒருமுறை சற்றே விரிந்து சற்றே பெரிய கவிஞர்களையும் சற்றே பெரிய உலகங்களையும் அனுமதிக்கிறது. பின்னர் அது திரும்பச் சுருக்கம் கொண்டுவிடுகிறது. சுருக்கம் தான் தமிழ் புதுக்கவிதையின் பண்போ என்றும் தோன்றவைக்கிறது. சுருக்கம் என்று இங்கே குறிப்பிடப்படுவது வடிவம், அளவை மட்டும் அல்ல; அது காணும் கனவு, அது அரவணைக்க வேண்டிய குணங்கள், அது அடையவேண்டிய அகண்டம் குறித்தது.
ஒரு கலாசாரத்தில் ஒரு மொழியில் ஒரு சமூகத்தில் பாப்லோ நெரூதா போன்ற ஒரு நிகழ்ச்சி நடக்க கவிஞர்களை மட்டும் பொறுப்பாக்க முடியுமாவென்ற கேளவியும் தவிர்க்க முடியாதது.

தன்னைத் தவிர்த்து தனது இருப்பின் தோட்டம் வேறெங்காவது இருக்கலாம் என்று காயாபுரிக் கோட்டை வழியாகக் கனவுகண்ட வே. நி. சூர்யா, இருப்பின் சுமை இல்லாத ஒரு இருப்புக்குள் ஏகாந்தமாக நுழைவதை அவரது சமீபத்திய ‘கனலி’ கவிதைகளில் பார்த்தேன். அவரது ‘கரப்பானியம்’ கவிதைகள் முதலில் அவரை எனக்கு அடையாளப்படுத்தவில்லை. நவீன கவிதை மோஸ்தர் என்று உறுதிப்பட்டுவிட்ட பாவனைகளுடன் எழுதிக் குவிக்கப்படும் ஏமாற்றுக் குவியல்களுக்கு மத்தியில், அந்தப் புழுதியின் சாயல்களுடனேயே உருக்கொண்ட வே. நி. சூர்யாவின் தனிப்பட்ட உலகத்தை என்னால் நிதானமாக அவதானிக்கவும் முடியவில்லை.

ஒரு வருடத்துக்கு முன்பாக, காலச்சுவடு இதழில் வெளியான மூன்று கவிதைகள் வழியாக தனிக்குரல் ஒன்று பிறந்திருக்கிறது என்று உணர்ந்தேன்.  வெளியில், இயற்கையில், புழங்குபொருட்கள், பருவம், சொற்கள் என அனைத்து வர்ணங்களும் உயிர்ப்போடு வே. நி. சூர்யாவின் கவிதைகளில் புழங்குகின்றன. சூரியனையும் கடவுளையும் வானத்தையும் அவரது அகம் நோக்கி மேய்த்து ஓட்டி அடைத்து விடுகிறார்; அதுதான் வித்தியாசம். ஒரு அடங்கிய கசந்த எள்ளலும் தொனிக்கிறது. அதுவும் இங்கே மரபுதான்.

‘மாபெரும் அஸ்தமனம்’ கவிதையில் பழைய தவிப்பைத் தெளிவாகக் கூறிவிடுகிறார். என்னைத் தவிர வேறெங்காவது நிம்மதியாக இரு என்று அக்கரையில் இருக்கும் நானுக்கு வாழ்த்தனுப்புகிறார்.

 ‘சந்திப்பு’ கவிதை அத்தனை மோனத்துடன் சாயங்காலத்தைப் பார்க்கிறது. இனிய துக்கம் என்னும் உணர்வு தமிழில் திரும்பத் திரும்ப எழுதிப் பார்க்கப்படுகிறது. தாங்க முடியாத இனிமையும் தாங்க முடியாத துக்கமும் இந்தக் கவிதையிலும் தெரிகிறது. மலைச்சாமியும் சமயவேலும் நட்சத்திரன் செவ்விந்தியனும் இந்த மோ பொதுத் துக்கம் கொண்ட மாலையைக் கடந்திருக்கிறார்கள். மௌனியின் பிரபஞ்சத்தில் மாறாத பொழுதும் உணர்வும் அது.

நீண்ட வயல்கரையில் நடந்துகொண்டிருக்கிறேன் 
உள்ளுணர்வுக்கெட்டிய தொலைவுவரை எவருமில்லை
புள்ளினங்கள் கூடுதிரும்புகின்றன
பைய்ய பைய்ய மறைகிறது ராட்சச ஒளி
எங்கும் புற்களாய் அசைகிறது மானுடத்துயர். 


பொதுமையும் நித்தியமும் கொண்ட உணர்வு இது.
மலர்களுக்குள் ஓடும் மோட்டார் இரையும்போது  மட்டும் காலத்தின் சப்தம் கேட்கிறது.

மருத்துவமும் கவிதை வடிவில் எழுதப்பட்ட தமிழில், மனம் என்னும் கண்காணாத காயத்துக்கு, குணம் தேடி எழுதப்பட்ட கவிதைகளின் மரபு நெடியது. சமீபகாலம் வரைகூட, தாயுமானவர், வள்ளலார், பாரதி என்று அதன் நடமாட்டங்களைப் பார்க்கமுடிகிறது.

நோயென்று கண்டுபிடிப்பவன் தானே குணத்தைத் தேடிப் போகமுடியும். அப்படி குணத்தைத் தேடிக் கிளம்பிய புதுக்கவிஞனான நகுலனின் தொடர்ச்சி இப்போதும் தேவையாக உள்ளதாலேயே வே. நி. சூர்யா இப்போது இங்கே வந்து நிற்கிறார். அப்படியென்றால் நோய் இன்றும் தொடர்கிறது. இருபதாம் நூற்றாண்டில் உருவான அலுவலகம், அதிகாரத்துவம் என்ற நோயை தனது படைப்புகளில் பரிசீலித்த காஃப்காவின் மாபெரும் படிமமான கரப்பான் பூச்சியைத் தானே வே. நி. சூர்யாவும் தலைப்பாகவே தேர்கிறார். தன்னைச் சூழ்ந்திருக்கும் நவீன அமைப்புகளின் பொறிக்கு மத்தியில் அசைவின்மையை உணர்த்தும் சுதந்திர விருப்புறுதியின்மையைச் சித்தரிக்கும் படிமம் அல்லவா கரப்பான்.நகுலனுக்குத் தொடர்ச்சி தேவையா?

கவிதையில் குணம் தேடும் அம்சம் இருக்கும் வரைக்கும் நோய் இருக்கும் வரைக்கும் நகுலனும் தென்பட்டுக் கொண்டேதான் இருப்பார் என்பதுதான் நியாயமான பதிலாகவும் இருக்கும்.

என்னுடையது அந்த ஒரு நிழல் மட்டுமே
மற்றபடி இச்சுவர் ஏந்தியிருக்கும்
இருக்கைகளின் நிழல்களோ
அதிலொன்றில் 
கன்னத்தில் கைவைத்தபடி அமர்ந்திருக்கும் நிழலுருவமோ
என்னுடையதில்லை
என்னுடையது இல்லவே இல்லை
எவருடைய சாயையாகக்கூட இருக்கட்டுமே
எனக்குப் பிரச்சினையும் இல்லை
அந்நிழலுக்குப் பக்கத்தில் 
ஒரு நிழல் போல் அமர்கிறேன்
அனைத்தும் குணமாகிவிட்டதைப் போலிருக்கிறது. 

எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் என்ற கேள்விக்கு சமத்காரமான, தெளிவான பதில் இருக்கிறது. ஆமாம், அதுவொரு பிரச்சினையும் இல்லைதான் இப்போது. ஒரு நிழல் போல் அமர்கிறேன் என்று சொல்லும்போது உறுதி தென்பட்டுவிடுகிறது. ‘போல’ அமர்கிறேன் என்று அவர் சொல்லவில்லை.

அனைத்தும் குணமாகிவிட்டதைப் போலிருக்கிறது என்று சொல்லும் போது உறுதி மயங்குகிறது. ஏனெனில் குணம், எப்போதும் குதிரை முன்னால் தொங்கிக் கொண்டிருக்கும் எட்டாமல் குதிரை துரத்திக் கொண்டேயிருக்கும் கேரட் அல்லவா. அமைதி என்பது மரணத்தருவாயோ என்று இரைஞ்சலுடன் கேட்கும் தேவதேவனின் குரலும் ஞாபகத்துக்கு வருகிறது.

உலகில் நோயுள்ள அளவு, நகுலனும் காஃப்காவும் பொருத்தமானவர்களாகவே இருப்பார்கள். நோய் என்னவென்று தெரியும் புதிய கண்களால் அவர்கள் தகவமைக்க்கப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் கலைஞர்கள் வெறும் நோயாளிகளாகவே தெரிவார்கள்.

வே. நி. சூர்யாவின் கவிதைகளை கனலி இணையத்தளத்தில் படிக்க

Comments

Popular posts from this blog

க்ரியா ராமகிருஷ்ணன் உருவாக்கிய புத்தக உணர்வு

தமிழில் மொழி, கலை, பண்பாடு சார்ந்த அறிவுத்துறைகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தின் மக்கள் தொகையை ஒப்பிடும்போது குறைவாகவே தொடர்ந்து இருந்துவருகிறது. அந்தச் சிறுபான்மை வட்டத்துக்குள் இருந்தவர்கள், இருப்பவர்கள் எல்லார் மீதும் தான் வெளியிட்ட புத்தகங்கள் மூலம் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தாக்கம் செலுத்துபவராக க்ரியா ராமகிருஷ்ணன் இருந்திருக்கிறார். நவீன இலக்கியம் தொடங்கி மொழியியல், தத்துவம், நாட்டார் வழக்காற்றியல், சினிமா, தொல்லியல், சூழியல், கானுயிரியல், மருத்துவம், ஆன்மிகம் என்று பல்வேறு அறிவுத்துறைகள் சார்ந்து தீவிரமான தேடல் உடைய தமிழர்கள் ஒவ்வொருவரும் க்ரியா வெளியிட்ட நூல்கள் சிலவற்றால் உந்துதலைப் பெற்றிருப்பார்கள். க்ரியா வெளியிட்ட அந்நியன், விசாரணை, அபாயம் போன்ற இலக்கிய நூல்களால் தாக்கம் பெற்றிருந்த லக்ஷ்மி மணிவண்ணன் வீட்டில் அவர் தொலைக்காத புத்தகங்களில் ஒன்றாக டேவிட் வெர்னர் எழுதிய ‘டாக்டர் இல்லாத இடத்தில்’ புத்தகத்தை அவரது மூத்த மகன் பிறக்கும்வரை பாதுகாத்தும் கையேடாகப் பயன்படுத்தியும் வந்தார். மூன்றாம் உலக நாட்டில் மருத்துவர் இல்லாத சூழலில், பேதி, காய்ச்சல், பிரசவம் ப

பெரியாரைப் பற்றி எழுதப்பட்ட நவீன கவிதையைப் படித்திருக்கிறாயா சங்கர்?

ஓவியம் : ராஜராஜன் எனக்குத் தெரிந்து இல்லை. அது ஆச்சரியமான விஷயம்தான். எத்தனையோ வரலாற்றுக் கதாபாத்திரங்கள் இடம்பெற்ற நவீன கவிதையில் பெரியார் பற்றி எழுதப்பட்ட கவிதை ஒன்றை இதுவரை நான் பார்த்ததில்லை. அழகுக்கும் அழகியலுக்கும் எதிரானவர் என்பதால் பெரியார் கவிதையில் இடம்பெறவே இல்லாமல் போனாரா சங்கர்? உண்மைக்கு அருகில் வரும் காரணங்களில் ஒன்றாக அது இருக்குமென்றுதான் தோன்றுகிறது. புனிதம் ஏற்றப்படாத அழகு என்று ஒன்று இருக்கிறதா? இயற்கை, கலாசாரம் உட்பட திரட்டப்பட்ட எல்லா செல்வங்களின் உபரியாகவும் பாகுபாட்டை உருவாக்குவதாகவும் அவர் கலையை கவிதையை அழகைப் பார்த்திருப்பார்தானே. அப்படியான பின்னணியில் அவர் கவிதையையும் கவிஞர்களையும் புறக்கணித்ததைப் போலவே நவீன கவிதையும் அவரைப் புறக்கணித்துவிட்டது போலும்.  அழகு ஒரு அனுபவம் இல்லையா சங்கர்? நல்ல என்று மனம் கொடுக்கும் அந்த விளக்கத்தின் வழியாக அங்கே பேதம் வந்துவிடுகிறது. அனுபவத்தின் பேதத்திலிருந்து தான் தீண்டாமை தொடங்குகிறது. அதனால்தான், தனது தடியால் அழகைத் தட்டிவிட்டு பாம்பைப் போலப் பிடித்து அடிக்க அலைந்தார் போலும் பெரியார். புதுக்கவிதை உருவான சூழலும், புதுக்கவிதைய

அந்த ஆலயத்தில் கடவுள் இல்லை - ரவீந்திரநாத் தாகூர்

அரச சபை ஊழியன் சொன்னான், “ராஜாவே, பணிவான வேண்டுகோள்களை விடுத்தும், மனிதர்களில் சிறந்தவரும் அருந்துறவியுமானவர், பொன்னால் நீங்கள் உருவாக்கிய ஆலயத்துக்குள் வருவதற்கு மறுக்கிறார். சாலை ஓரத்து மரத்தின் கீழே அமர்ந்து கடவுளைப் பாடிக் கொண்டிருக்கிறார். பக்தர்கள் அவரை பெரும் எண்ணிக்கையில் சூழ்ந்துள்ளனர். ஆனந்தத்தில் அவர்களிடமிருந்து பெருகும் கண்ணீரோ நிலத்திலுள்ள புழுதியை எல்லாம் கழுவுகிறது. நீங்கள் உருவாக்கிய ஆலயமோ சீந்துவார் அற்றுக கிடக்கிறது. புதரில் தனது இதழ்களை விரிக்கும் மலரின் வாசனைகண்டு பொன்முலாம் பூசிய தேன்பானையைப் புறக்கணித்து, பித்தேறிப் புதரை நோக்கி தமது தாகத்தைத் தீர்க்கப் போகும் தேனீக்கள்  போலத்தான் மக்கள். அவர்களுக்கு பொன்னால் நிறைந்த மாளிகை ஒரு பொருட்டுமில்லை. சொர்க்கத்தின் நறுமணத்தைப் பரப்பும் விசுவாசமுள்ள இதயத்தில் உள்ள மலரை நோக்கி மொய்க்கிறார்கள். ஆபரணங்களிட்டு அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் காலியான கோயிலில் நமது கடவுள் அமர்ந்திருக்கிறார் தனிமையில். அதைக் கேட்டு எரிச்சலுற்ற மன்னன் அரியணையிலிருந்து எழுந்து துறவி அமர்ந்திருக்கும் மரத்தை நோக்கிக் கிளம்பினார். துறவியின் முன்