Skip to main content

சுகுமாரனின் வாராணசி கவிதைகள்



கனலி இணைய இதழில் படித்த சுகுமாரனின் வாராணசி கவிதைகளையும் வே நி சூர்யாவின் கவிதைகளையும் அசைபோட்டபடி கழிகிறது இன்று. 
வாராணசியில் காலம் ஒன்றாக அது இறந்தகாலமே மட்டுமாக நீண்டு வளைந்து மீண்டும் இறந்தகாலத்துக்குள் போய் திரும்பத் திரும்பச் சுழன்று கொண்டிருக்கும் சித்திரத்தை சுகுமாரனின் இசைமை கூடிய மொழி நம்மில் உருவாக்குகிறது.

படைத்தவன் குறித்த கேள்வி தேவையில்லை. படைத்தல் என்ற நிகழ்வும் பொருட்டில்லை. இங்கே வாராணசி படைப்பாக, ஒரு பெரும் நினைவுச் சித்திரமாக அனந்தகோடி காலமாக இருந்துகொண்டிருக்கிறது.

வாராணசி என்ற நிலத்தில் வாழ்ந்து அதன் அடையாளமாகத் திகழ்ந்து 14 ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்து போன ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகானின் வீட்டுக்கு அடுத்த கவிதை நகர்கிறது. கவிதை சொல்லி, பிஸ்மில்லா கான் உயிருடன் இருக்கும்போது அவரது வீட்டில் சந்தித்த அனுபவத்திலிருந்து, அவர் இறந்தபிறகு போய்ப் பார்க்கும் பிஸ்மில்லா கானது வீட்டில், அந்தக் கலைஞனை ஒவ்வொரு மூலையிலும் நிகழ்த்துவது போல் தெரிகிறது. இங்கேயும் படைப்பு வழியாக படைத்தவன் கற்பனை செய்யப்படுகிறான். படைப்பு மட்டுமே எப்போதும் இருக்கிறது.

இந்த ஊரடங்கு காலத்தில் நிறையபேரை பித்துகொள்ள வைத்த வெப்சீரிஸ்  கதைத் தொடர்களில் ஒன்றான ‘டார்க்’-ஐ நானும் நண்பர் வே நி சூர்யாவின் வற்புறுத்தலால் பார்த்ததன் தொடர்பில் காலப் பயணம் சம்பந்தமாக அத்தொடரில் சுவாரசியமாக வர்ணிக்கப்படும் bootstrap paradox -ஐ பிஸ்மில்லா கான் கவிதையோடு இணைத்துப் பார்க்கத் தோன்றியது..

 பிஸ்மில்லா கானின் இசைத்தட்டுகளைக் கேட்ட ரசிகன் ஒருவன் கால எந்திரத்தில் பயணம் மேற்கொண்டு, பிஸ்மில்லா கான் சிறுவனாக வளரும் வீட்டில் இறங்கிவிடுவதைக் கற்பனையாக யோசித்துப் பார்த்தேன். அப்போது அங்கே பிஸ்மில்லா கான் என்ற ஆளுமையும் அவரது இசையும் உருவாகவே இல்லை. அந்த ரசிகன், அந்தச் சிறுவனுக்கு பிஸ்மில்லா கானின் இசைத்தட்டுகளைக் கொடுத்துவிட்டு தன் காலத்துக்குத் திரும்பிவிட்டால் என்ன ஆகும்? அந்தச் சிறுவன் அந்த இசைத்தட்டுகளைக் கேட்டு, தனது இசையைப் படைக்க ஆரம்பிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.

அப்படியென்றால் அந்த இசைக்கு யார் ஆசிரியர்?

ஆதியோ மூலமோ தேவையற்ற காசி என்னும் தொன்ம நிலம் ஒரு கோளம் போலச் சுழல்கிறது சுகுமாரனின் கவிதையில். பிஸ்மில்லா கானின் ஷெனாய் இசையும் அங்கே என்றைக்குமாக உள்ளது. அந்தக் கவிதையின் இறுதி இரண்டு பத்திகளில், பிஸ்மில்லா கான் இருந்தபோது நிலத்தில் மண்டியிட்டு வணங்குகிறானா கவிதைசொல்லி? அவர் இல்லாத வீட்டின் தரையில் மண்டியிட்டு வணங்குகிறானா? கண்துளிர்ப்பைத் துடைக்கும் முதிய விரல் பிஸ்மில்லா கானின் விரல்கள் என்று தெரிகிறது. துடைக்கும்போது கண்ணிமைக்காமல் பார்க்க முடியுமா? அப்போது துடைத்ததை இப்போது கண்ணிமைக்காமல் பார்க்கிறானா கவிதைசொல்லி?

ஆனால் அங்கே பிஸ்மில்லா கான் எந்தக் காலத்தில் இருக்கிறார்? இறந்ததிலா? நிகழிலா? கவிதை ஏற்படுத்தும் மயக்கம் இங்கே நிகழ்கிறது.
வண்ணநிலவனின் ‘குளத்துப்புழை ஆறு’ கவிதையைப் போல, சுகுமாரனின் வாராணசி கவிதைகள் எப்போதைக்குமான அபூர்வமாக, அழியாச் சுடர்களாகத் திகழும்.

சுகுமாரனின் வாராணசி கவிதைகளை வாசிக்க :

http://kanali.in/sukumaran-kavithaikal/

Comments