எப்போதும் போல் தனியே நடந்து சென்று கொண்டிருந்த சாப்ளினுக்கு கடவுள் அதிசயம் ஒன்றை நிகழ்த்தினார். சாப்ளின் நடக்க நடக்க வரிசையாய் வீடுகளை அடுக்கினார் சாப்ளினுக்குப் பிடித்த வீடுகள் விசாலமான வீடுகள். வீடுகளைப் பார்த்தபொழுது, தன் அம்மாவுக்கு முதல் முறை பைத்தியம் பிடித்த நாள் ஞாபகம் வந்தது.
சிறுவன் சாப்ளின் அப்போதுதான் சிறிதுநேரம் வெளியே போயிருந்தான். பைத்தியம் முற்றிய அவன் அம்மா, பக்கத்துவீட்டுச் சிறுவர், சிறுமியருக்கு அடுப்புக்கரிகளை பரிசளிக்கத் தொடங்கினாள் இதோ பரிசுகள். எடுத்துக் கொள்ளுங்கள், எடுத்துக்கொள்ளுங்கள் வைத்துக் கொள்ளுங்கள். அள்ளி, அள்ளித்தந்து கொண்டிருந்தாள் சாப்ளினின் அம்மா இப்போது கோட் பாக்கெட்டில் உள்ள பென்னிகளை கரிகளாய் உருட்டியபடி அம்மாவின் நினைவில் நடந்துகொண்டிருந்தான் சாப்ளின். அம்மாவுக்குப் பைத்தியம் படரும்போது சிறுவர்கள் விளையாட கிளம்பிவிடக் கூடாதென்றான். அம்மாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருங்கள். நீங்கள் அருகில் இருக்கும்போது உங்கள் அம்மாவுக்குப் பைத்தியம் பிடிக்காது. நடந்தபடியே சொல்லிப்போனான் சாப்ளின். நீங்கள் விளையாடப் போய்விட்டால், திரும்ப வரும்போது, அம்மாவால் உங்களுக்கு எதுவுமே தரமுடியாது. அம்மாவைத் தனியே விட்டுவிட்டு விளையாடப் போய்விடாதீர்கள். அப்புறம் நீங்கள் துணையற்றுப் போய் விடுவீர்கள். நீ ஏன் மகிழ்ச்சியாய் இல்லை என்று கடவுள் கேட்டார். கோட் பாக்கெட்டில் உள்ள பென்னிகளை அடுப்புகரிகளென உருட்டியபடியே சாப்ளின் பெருமூச்சுடன் பதிலளித்தான்.
ஒரு நூலால் இழுப்பதுபோல நான் கடக்கும் அழகிய வீடுகளை எனக்கு பின்புறம் எடுத்துக் கொள்பவர் நீங்கள் என்று எனக்குத் தெரியும். அதனால் எனக்கு சந்தோஷமில்லை என்றான் சாப்ளின்.
ஒரு நூலால் இழுப்பதுபோல நான் கடக்கும் அழகிய வீடுகளை எனக்கு பின்புறம் எடுத்துக் கொள்பவர் நீங்கள் என்று எனக்குத் தெரியும். அதனால் எனக்கு சந்தோஷமில்லை என்றான் சாப்ளின்.
Comments