காகங்கள் வந்த வெயில் அமேசானில் கிண்டில் பதிப்பாக வாங்க
எனது முதல் கவிதை தொகுதியான ‘மிதக்கும் இருக்கைகளின் நகரம்’ 2001-ல் வெளிவந்தது. இத்தொகுதி 2003-ல் வெளியானது. மற்ற எனது கவிதைத் தொகுதிகளை ஒப்பிடும்போது சற்றே மெலிந்த, குறைவான எண்ணிக்கையிலான கவிதைகளைக் கொண்ட தொகுதி இது.
அமேசான் கிண்டில் வெளியிடுவதற்காகத் திரும்பப் படித்தபோது, முற்றிலும் சிறந்த ஒரு கவிதைப் பருவத்தை இத்தொகுதியின் வழியாகத்தான் கடந்திருக்கிறேன் என்று தோன்றியது.
எனது ‘மிதக்கும் இருக்கைகளின் நகரம்’ தொகுதியில் பல்வேறு உள்ளடக்கங்கள், வெளிப்பாடுகள், கட்டற்ற ஆற்றல் எல்லாம் இருந்தாலும் எனக்கென்று பிரத்யேக உலகம் ஒன்று உருவாகவேயில்லை. பெரும்பாலான கவிதைகள் அப்போதைய நவீன சிறுபத்திரிகை உரைநடை, கவிதை மொழியின் தாக்கத்தைக் கொண்டவை.
‘காகங்கள் வந்த வெயில்’ தொகுதியின் கவிதைகளில் தான் எனது பிரத்யேக உலகம் உருவாகிறது. அந்தப் பிரத்யேக உலகத்தின் குணங்கள், உயிர்கள் தான் எனது இன்றைய கவிதைகள் வரை பரந்து பரவியிருக்கிறது. நண்பர்கள் சேர்ந்து பகிர்ந்த ஒரு காலகட்டத்தின், அதன் களங்கமின்மையின் ஒளி இந்தக் கவிதைகள் மேல் உள்ளது. இந்தக் குணம் கொண்ட ஓர் ஒளி என் கவிதைகளில் அதற்குப் பிறகு இல்லவே இல்லை. அக்காலகட்டத்தில் சிறுபத்திரிகை வாசகர்களையும் தாண்டி சிலாகிக்கப்பட்ட, தங்களுடைய வாழ்க்கையின் ஒரு பருவத்தோடு அடையாளம் கண்டு ரசித்த, இன்றும் எனது அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘சிங்கத்துக்குப் பல் துலக்குபவன்’ கவிதை இத்தொகுதியில் தான் உள்ளது. ஓவியர் நடேஷ் இந்தக் கவிதைக்காக வரைந்த ஒரு ஓவியத்தை நீண்டகாலம் பத்திரமாக வைத்திருந்தேன். கவிஞர். விக்ரமாதித்யனின் ஆளுமையும் கவிதையும் இத்தொகுதியில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதை உணர்கிறேன்.
‘மிதக்கும் இருக்கைகளின் நகரம்’ கவிதைகள் விக்ரமாதித்யனைச் சற்றும் கவரவில்லை. ஏமாற்றமும் அதிருப்தியுமாக இருந்தார். அதற்குப் பிறகு இந்தத் தொகுதியின் கவிதைகள் சிலவற்றை அப்போது நான் பணியாற்றிய எழும்பூர் தினமலர் அலுவலகத்திலிருந்து பிரிண்ட் அவுட்டாக வாங்கிக் கொண்டுபோய் படித்துவிட்டு நகர்ந்துவிட்டாய், நகர்ந்துவிட்டாய் என்று கொண்டாடித் தீர்த்தார்.
என் மனைவியும் அப்போது காதலியுமாக இருந்த கலைவாணிக்கு எழுதிய கவிதைகள், இப்போதும் அபூர்வமான காதல் கவிதைகளாகத் தெரிகின்றன. அவளைப் பார்க்காத போதெல்லாம் மனம் கனத்து, சவலைக் குழந்தை போல அழுதுகொண்டேயிருக்கும். அந்த நாட்களில் இந்தக் கவிதைகளை எழுதியிருக்கிறேன். இந்தக் கவிதைகளையும் அவளையும் நீண்ட இடைவெளியில் வைத்துப் பார்க்க முடிகிறது. அவளுக்குப் பரிசளித்த எனது முதல் தொகுதியில் ஒரு சின்னக் கோட்டுச் சித்திரப் பெண் முகத்தை காதில் தோட்டுடன் வரைந்து கொடுத்தேன். இப்போதும் அந்தப் புத்தகத்தை பத்திரமாக வைத்திருக்கிறேன். அவளை நான் எப்படிப் பார்த்தேன் என்பதற்கு அப்போது எழுதிய ஒரு குறிப்பை மட்டும் இங்கே பகிர்ந்துகொள்வதால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை.
‘இப்புத்தகத்தின் எல்லா கவிதைகளுக்குள்ளும் அந்தக் காதல் சிறுமி உடையைச் சுருக்கிக் கொண்டு எட்டிப் பார்க்கிறாள். அவை என்னுடையவை என்பதால் இக்கவிதைகள் எப்படி இருந்தாலும் சந்தோஷமே. இருந்தாலும் கண்ணாடியை உயர்த்தி எல்லாப் பக்கங்களையும் புரட்டிச் சரிபார்க்கிறாள். அவளுக்கும்...’
இந்தக் கவிதைகளை கவிஞர் இளையபாரதி தான் புதுமைப்பித்தன் பதிப்பகத்துக்காக வெளியிடுவதற்கு வாங்கினார். இந்தக் கவிதைகள் பெற்ற ஊட்டத்துக்குக் காரணமாக இருந்த நண்பர்கள் செல்லையா, கோணங்கி, சண்முகசுந்தரம், ராஜகோபால், பேராசிரியர் கி. நாராயணன் ஆகியோர்.
சந்தியா நடராஜன், இந்தக் கவிதைத் தொகுதியின் தலைப்பை அனுசரித்து, ஒரு ஏ-4 வெள்ளைக் காகிதத்தில் காகத்தின் ஓவியம் ஒன்றை தத்ரூபமாக யாரோ ஒருவரிடமிருந்து வரைந்து வாங்கிக்கொண்டு அப்போது நான் வேலை செய்த மின்பிம்பங்கள் அலுவலகத்துக்கு வந்தார். எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. வடை திருடிவிட்டு, தண்ணீர் பானையில் கூழாங்கற்களைப் போட்டுக் குடித்துவிட்டு இங்கே தெம்புடன் என்னைப் பார்க்க வந்த பாடநூல் காகம் என்று தெரிந்தது. காகம் இப்படி பருவுருவமாக அல்ல, அருவமாக வேண்டுமென்றேன். புரிந்துகொண்டார். எனது கவிதைகளின் உணர்வுக்கு ஏற்ப ஒரு ஓவியத்தைத் தேர்ந்தெடுத்து அட்டையை முடிவு செய்தார். இன்றும் எனக்கு நெருக்கமான அட்டைகளில் ஒன்று.
அமேசான் கிண்டில் தொகுதிகளுக்கு ஆஸ்தான ஓவியராக தற்செயலாக ஆன மதுரை ஓவியர் சண்முகராஜ், இந்தப் புத்தகத்தின் அட்டையையும் பரிமளிக்கச் செய்துள்ளார்.
இத்தொகுதியை மீண்டும் வாணிக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.
Comments