Skip to main content

வைரமுத்துவின் தமிழ் உலா
ஊரடங்கு நாட்களில் புரிந்த நற்செயல்களில் ஒன்றாக குருதத்தின் ‘ப்யாசா’ திரைப்படத்தைப் பார்த்ததைச் சொல்வேன். ‘ப்யாசா’ படத்தின் நாயகன் அன்றைய கல்கத்தாவில் வாழும் உருதுக் கவிஞன். அவன் வீட்டிலிருந்து விரட்டப்பட்டு, தங்கியிருக்கும் பூங்காவிலும் முன்னாள் காதலியின் வீட்டில் நடக்கும் விருந்திலும் அவன் தன் கவிதைகளைப் பாடும் கவிஞன். கவிதையின் ஆழ்ந்த அனுபவம், த்வனியைக் கொண்ட பாடல்களாக அவை திகழ்கின்றன.

உருதுக் கவிதைகளை மது விருந்துகளிலும் மக்கள் கூடும் இடங்களிலும் பாடும் மரபிலிருந்து கவிஞன் விஜய் என்னும் அந்தக் கதாபாத்திரத்தை இயல்பாகப் பார்வையாளர்களால் ஏற்க முடிகிறது. தமிழ் சினிமாவில் கவிஞன் பிரதானக் கதாபாத்திரத்தின் உருவத்தை எடுக்கும்போதெல்லாம் தோற்றுப்போவதற்கு அவனுக்கு ஏற்கப்பட்ட பொது அடையாளம் ஒன்று நம் சமூகத்தில் இல்லாததுதான் காரணம் என்று தோன்றுகிறது. தமிழில் புதுக்கவிதையானது ‘எழுத்து’, ‘வானம்பாடி’ என்று இரண்டு குணங்கள், இரண்டு உள்ளடக்கங்கள், இரண்டு நவீன வெளிப்பாடுகளாகத் தோற்றம் கொண்டு நிலைபெற்ற காலத்தில், ‘வானம்பாடி’ இயக்கத்தின் முத்திரைகளைக் கொண்டவர் கவிஞர் வைரமுத்து. இவர் பாடலாசிரியராக பாரதிராஜாவின் இயக்கத்தில் அறிமுகமான ‘நிழல்கள்’ திரைப்படத்திலும் நாயகர்களில் ஒருவன் கவிஞனின் சாயலைக் கொண்டவன். ஒரு நாள் உலகம் நீதிபெறும் என்ற நம்பிக்கையில் தலையை உயர்த்தி வானத்தை உசாவும் நடிகர் ராஜசேகரின் ஏக்கம் மிகுந்த முகத்தில் தற்செயலாக கவிஞர் ஆத்மாநாமின் சாயலும் உண்டு. அவன் தோல்வியுற்றவன்; சினிமாவும் தோல்விதான். ஆனால், புதுக்கவிதை அடைந்த நவீனத்தைத் திரைப்படப் பாடலுக்குள் கொண்டுசெல்லும் முயற்சியில் இங்கிருந்துதான் வெற்றிபெறத் தொடங்குகிறார் வைரமுத்து.

காதல், தத்துவம், திருவிழாக் கோலம், பிரிவு, மொழி-இனப் பெருமிதம், தாலாட்டு, சகோதரப் பாசம் என்று இந்த நாற்பது ஆண்டுகளில் வைரமுத்து கையாண்ட உள்ளடக்க வகைமை விரிவானது. கற்பனையின் அகண்டம், வெவ்வேறு உள்ளடக்கங்களைக் கையாளும் மொழி, அனுபவச் செழுமை, புதுமை குறையாத பாடல்கள் அவருடையவை. சந்தத்துக்கு நிறைக்கும் வெறும் காற்று வார்த்தைகள் அவரிடம் குறைவு. கொசுவ மூலைகளிலும் அர்த்தம் கொண்ட வார்த்தைகளைக் கொடுப்பதில் சிரத்தை உள்ளவர். ‘பனி விழும் மலர் வனம்’ பாடலில் கண்ணதாசனின் தொடர்ச்சியாக மரபோடு சம்பிரதாயமான வெளிப்பாட்டோடு இழையும் வைரமுத்து அதே காலகட்டத்தில், ‘அந்திமழை பொழிகிறது’ பாடலுக்குள் அக்காலகட்டத்தின் ஒரு நிலவெளியையும் ஒளியையும் கடத்தத் துணிகிறார்.‘எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்த பஞ்சு நெஞ்சம் பத்திக் கொள்ளும்’ என்று கல்கத்தா நகரம் சிம்ரன் வழியாகவும், வைரமுத்து வழியாகவுமே என்னிடம் கனவு நிலப்பகுதியாக மாறியது.உடலை ஒயிலாக அசைத்தபடி துடித்து ஆடும் சிம்ரனின் தேக வசீகரமும் கல்கத்தாவின் எப்போதைக்குமான நவீனமும் சேர்ந்த தேவா இசையமைத்த பாடல் அது. ‘நான் உன்னைத் துரத்தியடிப்பதும் நீ எந்தன் தூக்கம் கெடுப்பதுமோ சரியா முறையா’ என இறைஞ்சும் போது கல்கத்தாவின் டிராம் வண்டி நித்தியமாக ஓடிக்கொண்டேயிருக்கும். பின்னர், தேர்வு ஒன்று எழுதுவதற்காக கல்கத்தாவுக்குப் போனபோது, ஹவுரா பாலத்தைக் கடக்கும்போது இந்தப் பாடல் வழியாகவும் சிம்ரன் வழியாகவுமே கடந்தேன்.

காதலை வெளிப்படுத்துவதற்கே வாய்ப்பில்லாத ஒரு கட்டுப்பட்டிச் சூழலிலிருந்து, காலத்திலிருந்து, விரகத்தை நிறைவேறாமையைப் பாடித் தீர்த்த காலகட்டத்தில் எழுதத் தொடங்கியவர் வைரமுத்து. கண்ணுக்குள் தைத்த முள்ளாக இருந்திருக்கிறது காதல் அப்போது. காதல் தனது சுதந்திர வெளிப்பாட்டை அனுதினமும் வரம்பற்று அதிகரித்துக்கொண்டே இருக்கும் இந்தக் காலத்திலும் முன்னணி இடத்தில் நிற்கிறார். ‘உன் வாசலில் எனை கோலம் இடு, இல்லையென்றால் ஒரு சாபம் இடு பொன்னாரமே’ என்று ஏக்கத்தில் தவித்த உள்ளடக்கம்தான், ‘ஃபனா ஃபனா ஃபனா யாக்கை திரி காதல் சுடர் அன்பே… தொடுவோம், தொடர்வோம், படர்வோம், மறவோம், இறவோம்’ என்று மாறிவிட்ட உறவுகளின் விதிகள், மாறிவிட்ட உலகத்தின் வீதியில் சுதந்திரத்தோடு, காதலின் வழியாக இறவாமையைக் கோரி அவரது வாகனம் சீறிக்கொண்டிருக்கிறது. ‘நிழல்கள்’ திரைப்படம் வழியாக வைரமுத்து தமிழ் திரைப்படப் பாடல்களுக்குக் கொடுத்த நவீனம் உச்சத்தை அடைந்த பாடல் என்று அவருடைய ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் வரும் ‘மழைக்குருவி’ பாடலைச் சொல்லலாம். தீராமல் சுழன்று, சுற்றிக்கொண்டேயிருக்கும் உணர்வைக் கொடுக்கும் பாடல் அது.

உறவு, பிரிவு, தனிமை, விடுதலை என்று அந்த ஒரு பாடலுக்குள் இரண்டு பறவைகளின் முழுக்கதை உள்ளது. நிழல்கள் திரைப்படம் வழியாக வைரமுத்து தமிழ் திரைப்படப் பாடல்களுக்குக் கொடுத்த நவீனம் உச்சத்தை அடைந்த பாடல் அது. பாடல் அமைப்பே சம்பிரதாயமானதல்ல.
 ‘நீ கண்தொட்டு கடந்தேகும் காற்றோ இல்லை கனவில் நான் கேட்கும் பாட்டோ’ என்று தடம்புரளாத தாளத்தில் சொல்லப்பட்ட இரண்டு பறவைகளின் கதை அது.

ஒரு நாள் கனவாய் பேரற்ற பேருறவாக இருந்த ஜோடி பறந்தும் விடுகிறது. பிரிவில் வானவெளியே மண்ணில் நழுவி விழுந்து விடுகிறது. ஏ. ஆர். ரஹ்மான், ‘விழுந்ததென்ன’ என்னும்போது மடிக்கும் ஒரு சுழிப்பு பாடலை மகோன்னதமாக்கும் இடம்.

பிரிந்தேன் பிரிந்தேன் உயிர் நனைந்தேன் என்று தழும்பித் துக்கிப்பதோடு பாடல் அங்கே நிற்கவில்லை. பிரிந்த பறவை இன்னொரு இடத்தில் பிரிந்ததை மறந்து களிப்பு கொள்ளும் மகிழ்ச்சி, அதன் மகிழ்ச்சியுடனேயே சொல்லப்படும்போது அந்தப் பாடல் ஏற்றம் கொள்கிறது. காட்டில் அந்நேரம் கதையே வேறு கதை என்று முரண்நகை எதார்த்தத்தை தெம்மாங்கு உணர்வோடு ஏற்று உன்மத்தம் கொள்கிறது பாடல். ஓரிடத்தில் அழுகை; இன்னொரு இடத்தில் மகிழ்ச்சி. இதுதான் மெய்மை.
மரணத்துக்குப் பிறகு ஓர் உலகம் என்று நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், பிரிவுக்குப் பிறகு இருக்கும் உலகம் நிஜம். அங்கு மகிழ்ச்சி இருக்கிறது. அங்கே ஒரு உயிர் கொள்ளும் மகிழ்ச்சியைக் கவிஞன் கொண்டாடித் தானே ஆகவேண்டும், அவன் பிரிந்தவன் ஆனாலும்.
 ஒரு அடர்ந்த குறிஞ்சி நிலத்துக்குள், தாவர சங்கமத்துள் பல்லுயிர்களும் உலவித் திளைக்கும் அனுபவத்தைத் தருவது. காதலின் உச்சத்தை அடைந்தபிறகு, இறங்கித் திரும்பும்போது, அடைந்த பிரிவை எண்ணி வழியனுப்பும் உணர்வை, உறவையும் பிரிவையும் அசைபோடும் நிதானம் இந்தப் பாடலில் உள்ளது. இந்தப் பாடல் என் கணிப்பொறியில் சுழன்றபடியே அசைபோட்டபடியே உள்ளது.

ஒருதலையாக நான் காதலித்தவள் பரிசளித்த ‘அலைபாயுதே’ கேசட்டை ஓர் இரவில் கேட்கத் தொடங்கினேன். திரும்பத் திரும்ப ரிவைண்ட் செய்து முடியாத ஆனந்தச் சுற்றுகளாக, காலையில் குளிக்கப் போவது தொடங்கி இரவு ஆழ் உறக்கத்தின் படிகளுக்குள்ளும் இறங்கிச் சென்றது. ‘நேற்று முன்னிரவில் உன் நித்திலப்பூ மடியில் காற்று நுழைவது போல் உயிர் கலந்து களித்திருந்தேன்’. கங்கை, துங்கபத்திரை, கோதாவரி போன்ற ஏதோ ஒரு பெருநதியின் கரை, அந்த பேச்சிலர் அறையில் துலங்கியது; மயில்கள் உலவும் மண்டபங்களைக் கொண்ட படித்துறைகளும் கற்பனையில் உருவம் கொண்டு இருளிலும் எல்லாம் பொன்னிறமாக மின்னும் பாடல் அது. சாதனா சர்க்கம், சினேகிதனே சினேகிதனே என்று அணுக்கமாய் நெருங்கி நெருங்கி அழைத்த ரகசியத் தோழமையில் உணர்ந்த நவீனம் எனக்கு இன்றைக்கும் பழையதாகவில்லை. அந்தப் பாடலில் கற்பனை செய்த நிலப்பரப்பை பின்னர் சிதில வசீகரமாக ஹம்பியில் உருக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்தப் பாடலை இதுவரை திரையில் முழுமையாகப் பார்க்கவேயில்லை.


வைரமுத்துவிடமிருந்து மாறாத நிலைத்த புதுமையைப் பெற்றுக் கொண்டேயிருக்கும் மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி-யின் அனைத்துப் பாடல்களையும் ஒரு கடற்கரையில் நடக்கும் திருவிழா என்று சொல்வேன். தனித்த அளவிலேயே ஒரு இசைக்கோலம் என்று சொல்லத்தக்கப் பாடல் தொகுப்பு அது. மன மன மன மெண்டல் மனத்தில் தொடங்கி தீரா உலா வரை, காதலும் அதன் அத்தனை பரவசத் துடிப்புகளும் கொண்ட
தீரா உலா மணிரத்னமும் வைரமுத்துவும் ரஹ்மானும் சேர்ந்து நடத்தியது. உறவின் கிறுக்குத்தனம், களிப்பின் தாளம், கூடலின் தாங்கமுடியாத விம்மல், திளைப்போடு எல்லாம், ஒரு முடிவுறாத கடற்கரையில் நடக்கும் பயணம் ஓ காதல் கண்மணி.

திரைப்படப் பாடல் என்பது கவிதையின் சுதந்திரம், இயல்புத்தன்மையைக் கொண்டதல்ல. வார்த்தைகளின் கணிதம், செய்நேர்த்தித் திறனும், மிகைபாவமும் அங்கே அவசியம். செய்நேர்த்தியோ மிகுபாவனையோ துருத்திக்கொண்டு தெரியாமலும் இருக்க வேண்டும். தான் அழகென்று தெரியும்போது, அந்த அழகென்ற தன்னுணர்வையும் கைவிடுவதுதான் அழகு; அதுதான் கலையும்கூட. அந்தத் தன்னுணர்வைக் கைவிடும்போதுதான் ‘மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்’ போன்ற பாடல்கள் ஜெயப்ரதா என்ற அன்றைய அழகு இலக்கணத்தை நினைவில் நிறுத்திய சித்திரமாக மாற்றுகின்றன. அந்தச் செய்நேர்த்தி சற்றும் தெரியாத அழகுதான், அதன் ஆசிர்வாதம்தான், ‘வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி, ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி, குறும்பான கண்ணனுக்குச் சுகமான லாலி, ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி’ என்ற அபூர்வமான தாலாட்டாக மாறுகிறது.

ஈழத்தில் தமிழர்கள் இனப்படுகொலைகளுக்குள்ளான நினைவை மீட்டும் ‘தாய் தின்ற மண்’ பாடலை முழுக்க கவிதையாகவே அனுபவிக்க முடியும். ‘கயல் விளையாடும் வயல் வெளி தேடி காய்ந்து கழிந்தன கண்கள், காவிரி மலரின் கடி மனம் தேடி கருகி முடிந்தது ராசி.’ நினைவில் புதைந்துள்ள ஒரு பேரரசு வார்த்தைகள் வழியாக எழ முயலும் தோற்றம் அந்தப் பாடலில் உள்ளது.

வைரமுத்துவின் சிறப்புத் திணை என்று பிரிவுப் பாடல்களைச் சொல்வேன். தென் தமிழ்நாட்டின் வாழ்க்கை, புழங்குபொருட்கள், தாவரங்கள், உயிர்கள், வழக்காறு எல்லாம் தென்படும் படைப்புகள் அவை. ‘ராசாத்தி என்னுசிரு என்னுதில்ல’, ‘தென்கிழக்குச் சீமையிலே’ போன்ற பாடல்களை இதற்கான உதாரணங்களாகச் சொல்லலாம். ‘காடு பொட்ட காடு’ பாடலில் வெங்கரிசல் நிலம் கவிதையாகவே ரூபம் கொள்கிறது. இத்தனை கிராமியத்தன்மையைக் கொண்ட பாடல்களிலிருந்து ‘கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு’ என்று இன்னொரு முனைக்கும் லாகவமாக வைரமுத்துவால் கடக்க முடிகிறது. ‘ஊர்வசி ஊர்வசி, டேக் இட் ஈஸி ஊர்வசி…’ என்று துள்ளும் படத்திலேயே, ‘காற்று குதிரையிலே எந்தன் கார்குழல் தூதுவிட்டேன்…’ என்று திரிகூடராசப்பக் கவிராயரோடும் அவரால் கை கோக்க முடிகிறது.

ஒரு யுகச் சந்திப்பில் வைரமுத்து என்னும் நிகழ்வு உருவெடுக்கிறது. திரைப்பாடல் என்னும் ஊடகத்தில் அவர் சாத்தியப்படுத்தியிருக்கும் வகைமைகளை விரித்துப் பார்க்கையில், தனது கற்பனையால் அகண்டம் கொண்ட கலைஞர் என்று வைரமுத்துவுக்கு இணை சொல்ல அவர் காலத்தில் யாரும் இல்லை!

Comments

shabda said…
if possible, please post the link for viewing the film pyaassa - I like the way you enjoy the things - have you written any blog on the movies you loved watching - it's nice to see the things through your eyes and heart

Popular posts from this blog

விகடன் என்னும் ஒரு பெருநிறுவனத்துக்கு எதிராக எளியவர் பச்சோந்தி பெற்றிருக்கும் வெற்றி

கரோனா என்னும் இயற்கைப் பெருந்தொற்று, இந்தியா போன்ற வளர்முக சமூகத்தில், அடிமட்டத்தில் உள்ள மக்களின் ஏற்கெனவேயுள்ள துயரங்களைக் கூட்டி, ஒரு இயற்கைப் பேரிடர்கூடக் கடைசியில் ஏழைகளது தலையிலேயே பிரமாண்டமான சுமைகளை இறக்குகிறது என்பதை மீண்டும் நிரூபித்தது. முகமூடி அணிவதையும், மனிதர்களைத் தொடாத இடைவெளியையும், அனுமதிக்கப்பட்ட தீண்டாமையையும் பணக்காரர்களும் உயர்சாதியினரும் தான் பெருந்தொற்றுக் காலத்தைச் சாதகமாக்கி இயற்கையானதாக, சௌகரியமானதாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது கொடுங்கோன்மையை, இந்தப் பெருந்தொற்றின் முகமூடியை அணிந்தே வேறு வேறு வகைகளில் குடிமக்கள் மீது இறக்கியது.      இந்தப் பெருந்தொற்று நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்களை வெளியேற்றி பல தொழில்துறைகளில் பத்திரிகை துறையும் ஒன்று. நாட்டில் நடக்கும் அவலங்கள், அரசியல்வாதிகளின் தகிடுதித்தங்களை எல்லாம் உரத்துப் பேசும் ஊடகங்களும், எழுதும் பத்திரிகையாளர்களுக்கும் தங்கள் உரிமைகளைப் பேசுவதற்கு இன்னமும் சரியான அமைப்போ, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களோ வலுவாக இல்லாத நிலையில், இந்தியா முழுவதும் தி இந

ஒருநாள் - நகுலன்

   ஈசுவரஸ்மரணையிலேயே தன் ஸ்மரணையை உலகைவிட்டு சுழலாமல் வாழ்வை நடத்திவந்த பரமஹம்ஸரைச் சுற்றி சிஷ்யர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர் . பிற்காலம் உலகப் பிரசித்தி பெற்ற நரேந்திரநாத தத்தர் , உலகறியாத  ஆ னால் பரமஹம்ஸருக்கு வேதாந்தங்களை உபதேசித்துவிட்டு விடை பெற்றுக்கொண்ட மகான் தோதாபுரி , உறவினனான இருதய முகர்ஜி பிரம்ம ஸமாஜிகளான கேசவசந்திர சேனர் , சாஸ்திரி சிவநாத பாபு , பிரதாப சந்திர முஜும்தார் , வைதிக ரத்தினமான கிருஷ்ண கிஷோர் சாதகர்களான கௌரங்கஸ்வாமி , நித்தியானந்தஸ்வாமி , வைத்தியரானசசாதரபண்டிதர் , கோடீச்வரரானயதுநாதமல்லீக் ,  ராணிராஸமணியின் மருமகனான மதுரபாபு இப்படியாகப் பலரும் பரமஹம்ஸரைப் பார்த்து அளவளாவ வந்து போய்க் கொண்டிருந்தனர் .  இவர்களுடன் பரமஹம்ஸர் முழுவிவகார ஞானத்துடன் பேசுவதை முதல் தடவையாகப் பார்ப்பவர்கள் அவர் உலகை நிராகரித்தவர் என்று சொன்னால் அதிசயப்படுவார்கள் . அவரவர் - யதுநாத மல்லிக்கிலிருந்து தோட்டி குஞ்சன் வரை -  அவரவர் தங்கள் கஷ்டங்களைச் சொல்லி , அவருடைய திருஷ்டாந்தக் கதைகள் மூலம் சாந்தி பெற்றுப் போவார்கள் . அவர்கள் எப்பொழுது போவார்கள் வருவார்கள் என்பதும் நிச்சயமில்லை .

நீலக்குதிரைகள் - மேரி ஆலிவர்

நான்கு நீலக்குதிரைகள் ஓவியத்துக்குள் நுழைகிறேன் அது சாத்தியமாவதில் எனக்கு ஆச்சரியம் கூட இல்லை. நான்கில் ஒரு குதிரை என்னை நோக்கி நடந்துவருகிறது. அதன் நீல மூக்கு என்னிடம் லேசாக நீள்கிறது. நான் எனது கையை அதன் நீலப்பிடறியில் இட்டு கட்டிக் கொள்கிறேன். என் புளகிதத்தை அது அனுமதிக்கிறது. ஓவியன் ப்ரான்ஸ் மர்க் மூளையில் வெடிகுண்டின் உலோகத்துண்டு தாக்கி இறந்துபோனான். போரென்றால் என்னவென்று அந்த நீலக்குதிரைகளுக்கு விளக்குவதை விட நான் இறந்தே விடலாம். அவை பீதியில் மயக்கம் போட்டு விழுந்துவிடும் அல்லது அதை அவற்றால் நம்பவே முடியாது. ப்ரான்ஸ் மர்க் உனக்கு எப்படி நன்றி சொல்வது. நமது உலகம் காலப்போக்கில் கூடுதலாக அன்பானதாக ஆகலாம். அழகான ஒன்றை ஆக்கும் வேட்கை நம் எல்லாருக்குள்ளும் இருக்கும் கடவுளின் ஒரு சிறு துண்டாக இருக்கலாம். இப்போது அந்த நான்கு குதிரைகளும் நெருக்கமாக வந்து ரகசியங்கள் சொல்ல இருப்பதைப் போல என்னை நோக்கி தங்கள் தலையைத் தாழ்த்துகின்றன அவை பேசவேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை அவை பேசவும் செய்யாது. என்ன சொல்லக் கூடும் அவை இத்தனை அழகாக