எனது திருமணத்துக்குப் பிறகு 2005-ம் ஆண்டு வெளியான தொகுதி இது. எனது மகள் வினுபவித்ரா பிறந்த வருடம். குடும்ப வாழ்க்கை கோரும் ஒழுங்கு, ஏற்பாடுகளுக்குள் என்னால் இயல்பாகப் பொருந்த முடியாமல் ஒரு நோய்த்தன்மையை உணர்ந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட கவிதைகள் இவை. குணமூட்டி என்ற சொல்லை இதன் அடிப்படையில் தான் உருவாக்கி
கவிதைகளில் புழங்க விடுகிறேன். உடல் என் மீது சுமையாக, சிறையாக பிரக்ஞையோடு இறங்கிய நாட்கள் அவை.
‘சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை’ முன்னுரையை, சமீபகாலமாக நான் ஒரு குணமூட்டியைத் தேடி வருகிறேன் என்றுதான் ஆரம்பிக்கிறேன். முதல் கவிதையும் நோய், நோய்மை தொடர்பான கவிதைதான். இப்படியான சூழலில்தான், நடனக் கலைஞர் சந்திரலேகாவை அவரது வீட்டுக்குப் போய்ப் பார்க்கத் தொடங்கினேன். அவர் வீட்டில் நடந்த களறி பயிற்சியில் சேர்ந்து சில நாட்களில் விடவும் செய்தேன். உடம்பு தொடர்பான கவனம், உடம்பின் ஆற்றல், ஆரோக்கியத்துக்கும் மனத்தின் ஆரோக்கியம், ஆற்றலுக்கும் உள்ள உறவு அப்போதுதான் எனக்குத் தெரியத் தொடங்கியது. உடம்பு தான் வெளியாக இயற்கையாக பிரபஞ்சமாக விரிந்திருக்கிறது என்பதை அறியும் கல்வியை என்னிடம் தொடங்கி வைத்தவர் சந்திரலேகா.
இந்த நாட்களில் தான் ஒரு இந்திய, தமிழ் காஃப்காவை அமரர் கே. என்ற பெயரில் கதாபாத்திரமாக என் கவிதைகளில் உருவாக்குகிறேன். சில ஆண்டுகள் தளவாயோடு சேர்ந்து எனக்கும் நண்பராகத் திகழ்ந்த எழுத்தாளர் கோபி கிருஷ்ணனின் சாயல், அவருடன் ஏற்பட்ட சில
நிகழ்ச்சிகள் அமரர் கே. கவிதைகளில் உண்டு.
அலுவலகத்தை, வயிற்றுப்பாட்டுக்காகச் செய்யும் ஊழியத்தைச் சிறையாக அப்போது பாவித்த எனது அல்லல்களும் மூச்சுமுட்டலும் அமரர் கே.யில்
உண்டு. சா. தேவதாஸ் மொழிபெயர்த்த காஃப்காவின் குறுங்கதைகள், கடிதங்களைப் படித்தது இதற்குத் தூண்டுதலாக இருந்திருக்க வேண்டும். மின்பிம்பங்கள் நிறுவனத்தில் நடிகை ஊர்வசியுடன் பணியாற்றிய போது, அவரது குட்டி மகள் தேஜஸ்வினி எனக்கு அறிமுகமானாள்.
அவளது பெயரில் ஒரு கற்பனை மகளுக்கு எழுதிய கவிதைகளும் இதில் என்னை இப்போதும் கவர்பவை. அவளுக்கு அவளது அம்மாவின் கோமாளி முகம் உண்டு. அந்த முகம் இந்தக் கவிதைகளில் முழுமையாகச் சேகரமாகியுள்ளது.
சி. மோகனின் ‘அகம்’ அலுவலகத்தில் தான் இந்த நூலின் டைப்செட் நடந்தது. அவருடைய நேர்த்தி புத்தகத்தின் உள்பக்கங்களில் உள்ளது. சந்தியா நடராஜன் தான் இத்தொகுப்பையும் பதிப்பித்தார். ஒரு நாள், ஓவியர் மருதுவின் வீட்டிலிருந்து தொலைபேசியில் அழைத்தார். தொகுப்புக்கான அட்டை வடிவமைப்புக்கு எனது விருப்பத்தைச் சொல்லச் சொன்னார்.
தொலைபேசியில் மருதுவே வந்தார். அட்டையில் யானை, மீன் எல்லாம் இருக்க வேண்டும்.
ஆனால், மறைந்து இருக்க வேண்டும் என்று சொன்னனேன். உடனடியாகப் புரிகிறது என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார். ஸ்பானிய ஓவியர் ஜூவான் மிரோ-வின் பெயர், இந்த அட்டைப்படம் வழியாகத்தான் எனக்கு
அறிமுகமானது. மிரோ எனது கவிதை உலகத்துக்கு மிகவும் நெருக்கமானவர் என்ற உணர்வு இப்போதும் உள்ளது. பளிச்சிடும் வண்ணங்களும் பறவைகள், விலங்குகளும் கொண்ட உலகம் அவருடையது. மிரோவை அறிமுகப்படுத்தியதற்காக ஓவியர் மருதுவை என்றும் ஞாபகத்தில்
வைத்திருப்பேன். ஜூவான் மிரோவின் சேவல் ஓவியத்தை மட்டும் ஆர்வமிருப்பவர்கள் போய் இணையத்தில் பாருங்கள்.
தேசிய நாட்டுப்புறவியல் உதவி மையத்தில் சில மாதங்கள் பணியாற்றிபோது, ஆய்வு உதவியாளராக குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களுக்குச் சென்ற அனுபவங்கள் மறக்க முடியாதவை. வறுமை, ஏற்றத்தாழ்வுகள், சாதிய அவலங்கள் ஆகிய புழுதிகளோடு, இந்தியத்
தன்மை என்னவென்பதை ஆஜ்மீர் நகரத்தில் செலவழித்த நாட்கள் தான் அறிமுகப்படுத்தியது.
இந்தத் தொகுதியின் கடைசிக் கவிதை, சூபி குருவான முகைதீன் சிஷ்டி தர்காவின் நினைவில் எழுதப்பட்டது. ஆஜ்மீர் தர்காவின் நீங்காத ரோஜா மணமும், இன்னும் மின்னும் தங்கம் கலக்கப்பட்ட வண்ண ஓவியங்கள் படிப்படியாக உதிர்ந்துகொண்டிருக்கும் அதன் சுவர்களும், மொகலாய மன்னர்களின் நினைவுகளும், அவர்கள் அளித்த கொடைகளின் அடையாளங்களும், யாசகம் கேட்டு குழந்தைகளும் பெரியவர்களும் கொத்துக் கொத்தாக கைகளை நீட்டிக் கொண்டேயிருக்கும் எதார்த்தமும் இன்னமும் எனது உடலுக்குள் இருக்கின்றன. இனிப்பல்லாத பெரிய விட்டம்கொண்ட தடித்த ஆப்கன் ரொட்டியை அங்கேதான் பார்த்தேன். இந்த உலகின் மிகச்சுவையான லஸ்சியும் ரோஜாவின் நிறம் கொண்ட பெண்களும் என் அகத்தில் எப்போதும் இருப்பார்கள்.
இந்தத் தொகுப்பை நண்பன் தளவாய் சுந்தரத்துக்கு சமர்ப்பணம் செய்தேன்.
Comments