Skip to main content

மனம் பிறப்பிக்கும் நரகங்கள்


என்னுடன் திருக்கழுகுன்றம் பாலிடெக்னிக்கில் படித்த, இன்னமும் தொடர்பில் இருக்கும் ஒரே சகாவான யோகானந்தின் வீட்டுக்கு சமீபத்தில் போயிருந்தேன். மதிய உணவுக்குப் பிறகு, அப்போதுதான் ஞாபகம் வந்தது போலச் சொன்னான், காவிரி வளநாடன் இறந்துவிட்டான்  என்று. எனக்கு உடனே அதிர்ச்சியாக இருந்தது. என்னைவிட இரண்டு வயதாவது இளையவன். நான் ப்ளஸ் டூ முடித்து கல்லூரியில் ஓராண்டு படித்து பாலிடெக்னிக்குக்கு வந்தவன். அவனோ பத்தாம் வகுப்பு முடித்து வந்தவன். குள்ளமாக, கம்பீரமாக மீசை, தாடி வளர்ந்து அதன் பெருமிதமோ தன் பெயரின் பெருமிதமோ துலங்க, கைகளைப் பின்னால் கட்டியபடி லுங்கியுடன் விடுதியில் நடமாடும் அவனது தோற்றம் ஞாபகத்துக்கு வந்தது.

திருமணமாகி குழந்தை பிறந்தபிறகு ஒரு நாள் நெஞ்சுவலி என்று சொல்லி மருத்துவமனைக்கு கொண்டுபோவதற்குள் இறந்துவிட்டான் என்று யோகானந்த் சொன்னான்.

என்னைவிட இரண்டு வயது குறைவான அவன் இறந்துபோய்விட்டான், நான் இருக்கிறேன். மரண அஞ்சலி சுவரொட்டிகளைப் பார்க்கும் போதும், அதில் போட்டிருக்கும் வருடத்தைக் கணக்கு செய்து இறந்தவர் என்னைவிட இளையவர் என்றால் சிறிது துணுக்குறுகிறேன். இது ஒரு அபத்தம் என்று தோன்றுவதுண்டு. காவிரி வளநாடன் போய்விட்டான். நான் இருந்துகொண்டிருக்கிறேன்.

யோகானந்த் வீட்டிலிருந்து வண்டியில் திரும்பும்போது, காவிரி வளநாடனின் மரணம் திரும்ப மேலேறி வந்தது. அவனுடன் விடுதியில் நடந்த ஒரு தகராறு ஞாபகத்துக்கு வந்தது. உடனேயே துரையரசனும் எனக்கு ஞாபகத்துக்கு வந்தான். படித்து முடித்தபிறகு பார்க்கவே பார்க்காத அவனது பெயரும் முகமும் ஏன் எனது நினைவில் மேலேறி வருகிறது?

அவனுக்கும் எனக்கும் இன்னொரு சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட சண்டையில் என்னைக் கன்னத்தில் அடித்து, செவிப்பரையில் சின்னதாகச் சேதம் ஏற்படுத்தியவன் அவன்.

காவிரி வளநாடன் மரணமடைந்துவிட்ட செய்தியை அறிந்த மனம், அடுத்து எனது காதைச் சேதப்படுத்திய துரையரசனை, 24 ஆண்டுகாலத்துக்குப் பிறகு எழுப்பி அழைத்து வந்தது. அடுத்து அவன்தானா என்று குரோதம் தொனிக்கக் கோர்த்துக் கேட்டது. காவிரி வளநாடன் இறந்துவிட்டான் என்ற செய்தி தவறானதாகக் கூட இருக்கலாம். அதைப் பற்றிக்கொண்டு இன்னொரு எதிரியின் மரணத்தை மனம் ஜபிக்கத் தொடங்கிவிட்டது.

நகுலனின் ‘அலைகள்’ கவிதை ஞாபகத்துக்கு வருகிறது.


நேற்று ஒரு கனவு

முதல் பேற்றில்

சுசீலாவின்

கர்ப்பம் அலசிவிட்டதாக

இந்த மனதை

வைத்துக் கொண்டு

ஒன்றும் செய்ய முடியாது. 


ஆமாம் ஒன்றும் செய்ய முடியாத இந்த மனத்தை வைத்துத்தான் நாம், நமது பெரும்பாலான தருணங்களில் செயல்படுகிறோம். இந்த மனம் கொள்ளும் வன்மம், குரோதம், வெறுப்பு, மாய்மாலத்துக்குத் தான் எத்தனை லட்சியங்களின் அலங்காரங்கள்; கருவறையில் இருத்திச் செய்யும் உபாசனைகள்.

கொலையும், அழிப்பும் இயல்பான உணர்ச்சி. தர்க்கங்களின்றி இருந்தபோது அவை அழகானவையாக இருந்தன. அது இயல்பாகத் தோன்றி, நான் அதன்மீது ஏறாவிட்டால், மறைந்துவிடும் பிராணியும் கூட.

அந்த இயல்பான உணர்ச்சிக்கு அதிகாரம், தர்க்கம், லட்சியங்களின் ரதம் பூட்டும்போது அந்த வாகனம் செல்லும் இடம் சாத்தான்குளம் காவல்நிலையம் ஆகிவிடுகிறது. சாத்தான்குளம் காவல் நிலையங்கள்  பெருகும்போது, இரைந்து கொண்டிருக்கும் வன்மத்தின் மூச்சிரைப்பு எங்கும் கேட்கத் தொடங்கியுள்ளது. இந்த மூச்சிரைப்பு தான் நாம் வரலாற்றில்  அடைந்திருக்கும் தோல்வியின் அடையாளம்.

கொடூரமான கற்பனைகளைப் பிறப்பிப்பது மனத்தின் வழக்கங்களில் ஒன்று. நரகத்தைப் பிறப்பிப்பது மனம்தான். நரகத்துக்கான நியதியையும் மனம் தான் கண்டுபிடிக்கிறது என்று போர்ஹெஸ் உரைக்கிறார்.

இந்த மனத்தை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது, சரிதான்.

இங்கே சொல்லப்பட்ட சம்பவங்கள் உண்மை. பெயர்கள் கற்பனையே.
  

Comments