Skip to main content

இசபெல் அயந்தேயின் ‘இரண்டு வார்த்தைகள்’

 



மார்க்வெஸின் ‘களங்கமற்ற எரிந்திரா’ குறுநாவலையும், ‘கனவுகளை விற்கிறேன்’ சிறுகதையையும் ஞாபகப்படுத்தும் இசபெல் அயந்தேவின் ‘இரண்டு வார்த்தைகள்’ சிறுகதையை ஆர். சிவகுமார் மொழிபெயர்ப்பில் வாசித்தேன். அற்புத அனுபவத்தை நறுமணத்தைப் போல கதை சொல்லல் வழியாகக் கடத்தும் இன்னொரு வல்லமை இசபெல் அயந்தே.

நாயகி பெலிசா க்ரெபுஸ்குலேரியா, வார்த்தைகளை விற்பதைத் தனது ஜீவனமாக ஆக்கிக்கொண்டவளாக அறிமுகமாகிறாள். கொடுத்த காசுக்கு செய்யுள்கள் முதல் ‘உண்மைக் கதைகள்’ வரை பஜார்களில் கூடாரம் போட்டு விற்பவள். ஒருவருக்குக் கொடுக்கும் வார்த்தையை இன்னொருவருக்குத் தரமாட்டாள். கிட்டத்தட்ட கடவுச்சொற்களைப் போல பிரத்யேகமான வார்த்தைகளை அவரவர் தேவைக்கு ஏற்ப கட்டுப்படியாகும் விலையில் விற்றுக்கொண்டிருப்பவள் பெலிசா க்ரெபுஸ்குலேரியா.

குழந்தைகளுக்குப் பெயர் கூட சூட்டமுடியாத வறிய குடும்பத்தில் பிறந்தவளாக பெலிசா க்ரெபுஸ்குலேரியா என்று அவள் அறிமுகப்படுத்தப்படும் போதே இந்தக் கதை வேறு ஒரு எதார்த்தத்தை, மிகத் தீவிரமான தொனியில் உரைக்கிறது என்று தோன்றிவிடுகிறது. நான்கு தம்பி தங்கைகளையும் வறட்சிக்கும் பஞ்சத்துக்கும் பலிகொடுத்துவிட்டு, உயிர்வாழ்வதற்கான முயற்சியில் தற்செயலாக மொழியைக் கண்டுபிடிக்கிறாள் பெலிசா க்ரெஸ்குலேரியா. அவள் முதலில் பார்ப்பது ஒரு பழுப்பு நிறமடைந்த செய்தித்தாளை. அவள் அதில் உள்ள எழுத்துகளை பூச்சித்தடங்கள் என்று முதலில் நினைக்கிறாள். வழிகாட்டுபவர் இல்லாமல் வார்த்தைகள் உலகில் முன்னேறுகின்றன என்பதை குதிரைக்காரன் ஒருவன் மூலம் அறிந்துகொண்டு, விபசாரியாகவும் வீட்டு வேலைக்காரியாகவும் வாழ்வதை விட வார்த்தைகளை விற்பது ஒரு கௌரவமான மாற்றாக இருக்கும் என்று தெரிந்துகொள்கிறாள். தன்னுடைய சேமிப்பிலிருந்து இருபது பெசோக்கள் கொடுத்து ஒரு பாதிரியாரிடம் எழுதப் படிக்க கற்றுக்கொள்கிறாள். ஒரு அகராதியையும் வாங்கி முதல் எழுத்திலிருந்து கடைசி எழுத்துவரை ஊன்றிப்படித்துவிட்டு அதைக் கடலில் வீசி எறிந்து விடுகிறாள். முன்கூட்டியே ஒழுங்குபடுத்தப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு வியாபாரத்தில் இறங்க அவளுக்கு விருப்பமில்லையாம்.  

‘பெலிசா க்ரெபுஸ்குலேரியா’ நமக்கு இந்தப் புள்ளியில் நெருக்கமாகி விடுகிறாள். ஒரு ஆகஸ்ட் மாதத்தின் காலைப்பொழுதில் கொள்ளைக்காரன் எல் ம்யூலேடோவின் உத்தரவுப்படி பெலிசா க்ரெபுஸ்குலேரியா சந்தையிலிருந்து வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்படுகிறாள். எல்ம்யூலேடாவும் அவனுடைய தளபதியான கர்னலும் பல்லாண்டு காலமாக உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டு அழிவு வேலைகளில் ஈடுபட்டு மக்களை துயர்படுத்தி நாட்களை கழித்தவர்கள். கர்னலுக்கு நாட்டை ஆளும் ஆசை வருகிறது. மக்களை வழக்கம் போல அச்சுறுத்தும் சர்வாதிகாரியாகாமல், தனது வார்த்தைகளால் மக்களை ஈர்த்து தேர்தலில் வென்று அதிபராக ஆக ஆசைப்படுகிறான் கர்னல்.

தன்னிடம் அழைத்துவரப்பட்ட பெலிசா க்ரெபுஸ்குலேரியாவிடம் வலுக்கட்டாயமாகத் தூக்கி வந்ததற்காக மன்னிப்பு கேட்டு, மக்களின் இதயங்களைக் கொள்ளை கொள்வதற்கான வார்த்தைகளைத் தனக்கு விற்கும்படி கோருகிறான். ஒரு நாள் முழுக்க கஷ்டபட்டு ஆண்களின் மனங்களையும் பெண்களின் உள்ளுணர்வையும் நிச்சயம் தொடும் வார்த்தைகளைக் கொண்டு ஒரு பெசோ மதிப்புக்கு அந்த உரையை விற்கிறாள். கர்னலுக்கு எழுதப் படிக்கத் தெரியாத நிலையில் அவன் அருகில் சென்று பெலிசா க்ரெபுஸ்குலேரியா உரையை அவனுக்கு மனப்பாடம் செய்ய உதவுகிறாள்.

ஒரு பெசோ பணத்துக்கு போனசாக இரண்டு வார்த்தைகளைக் கூடுதலாகத் தருகிறாள் பெலிசா க்ரெபுஸ்குலேரியா.

அந்த இரண்டு வார்த்தைகள் என்னவென்று கதையில் சொல்லப்படவேயில்லை. கர்னலுக்கு கன்னிப்பெண் பெலிசா க்ரெபுஸ்குலேரியா மீதிருந்த வேட்கை முன்னால் அவள் சொன்ன அந்த இரண்டு வார்த்தைகள் இரண்டு பாறைகள் போல நிற்கிறது. பெலிசா க்ரெபுஸ்குலேரியா சொல்லிக்கொடுத்த உரையை நாடுமுழுவதும் பேசி மக்களை வசீகரிக்கிறான் கர்னல். அதே நேரத்தில் கர்னலை அந்த இரண்டு வார்த்தைகள் வசீகர பயங்கரத்துடன் பீடிக்கத் தொடங்குகின்றன. அவனை அந்த இரண்டு வார்த்தைகள் தன்னினைவு இல்லாமல் ஆக்கின.

எல் மூய்லேடா, கர்னல் குறித்து கவலைப்படத் தொடங்கினான். கர்னலைப் படுத்தியெடுக்கும் அந்த இரண்டு வார்த்தைகளைக் கேட்டான். அதை வெளியே சொல்லமுடியாது. ஏனெனில் அது தனக்கே பிரத்யேகமானது என்கிறான் கர்னல்.

கடைசியில் கர்னல் தனக்குக் குணம் வேண்டி மீண்டும் பெலிசா க்ரெபுஸ்குலேரியாவைச் சந்திக்கிறான். அவள் அவன் அருகே போகிறாள். அவள் அவனது கையைப் பற்றும்போது சிறுத்தை போன்ற அவனது கண்கள் கனிவுறுவதை படைவீரர்கள் காண்கின்றனர்.

மொழியால் சிந்திக்கும், மொழியால் போரிடும் விசித்திர இனம் நம்முடையது. மொழியால் நம் முன்னால் உருவாகும் உலகம், மொழியாலேயே வரையறுக்கப்பட்டும் விடுகிறது. மொழிவழிப்பட்ட நேசம் ஒரு மனிதனிடம் என்ன விளைவை ஏற்படுத்துகின்றது என்பதைப் பற்றிய கதை இது. அந்த இரண்டு வார்த்தைகள் என்னவென்று சொல்லப்படவில்லை. ஆனால் அந்த இரண்டு வார்த்தைகள் கதைவழியாக உணர்த்தப்படுகின்றன.

கர்னல் முதலில் பெலிசா க்ரெபுஸ்குலேரியாவிடம் மக்களைக் கவரும் அதிகாரத்துக்கான மொழியைத்தான் முதலில் விற்பனை செய்வதற்கு வேண்டுகிறான். அதிகாரத்துக்கு கொசுறாக நேசத்தின் இரண்டு வார்த்தைகளை போனசாகத் தருகிறாள் பெலிசா க்ரெபுஸ்குலேரியா.

அதிகாரம் இருக்கும்போது காதல், எத்துணை பெரிய நறுமணத்தைத் திறந்து காண்பிக்கிறது. அழகைப் பொருத்தவரை பயங்கரத்தின் தொடக்கமே அது என்ற ரில்கே சொல்வதுபோல கர்னல், தனக்கு இதுவரை தெரியவராத நேசத்தின் பயங்கரத்துக்கு, இளங்கன்னி பெலிசா க்ரெபுஸ்குலேரியாவினால் ஆட்பட்டு விட்டான். 

பெலிசா பாதிரியாரிடம் எழுதப் படிக்கத் தெரிந்தபிறகே தனக்கான பெயரை வைத்துக் கொள்கிறாள். அதற்கு முன்னர் அவளுக்குப் பெயர் இல்லை.

க்ரெபுஸ்குலேரியாவின் அர்த்தம் ‘வைகறை அல்லது அந்தியின் மங்கலொளி’.

Comments

சிறப்பான கதை சார்! உளவியலின் உச்சம்