Skip to main content

Posts

நகுலனிடமிருந்து பிரிந்த இறகு

நவீன கவிதையில் நகுலனுக்குத் தொடர்ச்சி இருக்குமா? என்ற கேள்விக்குப் பதிலாக, நகுலனின் குணமுள்ள கவிதைகளுடன் வே. நி. சூர்யா ‘கரப்பானியம்’ தொகுப்பிலேயே தென்பட்டார். அந்த முதல் தொகுப்புக்குப் பிறகு எழுதிவரும் கவிதைகளில் நகுலனின் பழைய தத்துவப் பாலத்தை அ- தத்துவம், புனைவு, அதிலிருந்து பிறக்கும் தனி விசாரத்தால் கடந்து சுலபமாகப் போவதைப் பார்க்க முடிகிறது. தாயுமானவரும், பாரதியும் தப்பமுடியாத வேதாந்தச் சுமை கொண்ட மனிதனை, நவீனன் சந்திக்கும் இடம் தான் நகுலன். அதனால்தான், நித்தியப் புதுமையும் நித்தியப் பழமையுமாகத் தெரியும் மகனை அம்மா ஸ்பரிசித்துத் தடவும் தருணத்தை விவரிக்கும்போதும், ‘மறுபடியும் அந்தக் குரல் கேட்கிறது, நண்பா, அவள் எந்தச் சுவரில் எந்தச் சித்திரத்தைத் தேடுகிறாள்?’ என்று. அது அரதப்பழசான அறிவொன்று, திண்ணையிருட்டில் அமர்ந்து கேட்கும் கேள்வி. அந்தக் கேள்விக்கு முன்னால் உள்ளதுதான் கவிதை. அந்தக் கேள்வியைச் சந்தித்து, அதை தனது படைப்புகளில் உலவ விட்டு, பழையதையும் புதியதையும் விசாரித்து புதுக்கவிஞனுக்கே உரிய சுயமான புனைவுப் பிரதேசத்தை நகுலன் தனது படைப்புகள் வழியாக உருவாக்கியிருக்கிறார்....

செவ்வியல் பிரதி

நித்தியத்தை உணர்த்திய வாக்கியங்களுக்கு திரும்பச்செல்லும் பாதை குழம்பிவிட்டது உடன் வந்தவர்கள் இறந்து போனார்கள் எத்தனை காதல் எவ்வளவு முரண்கள் எனது சொற்கள் உனது சொற்கள் அனைத்தின் நினைவுகளும் கதைகளாய்ப் பிறழ்ந்தன நான் கொலை செய்தேன் எந்தப் புத்தகத்தில் அத்தனை புழுதியிலும் பொன்போல மின்னுகிறது குருட்டு வன்மம் நான் படிகளாகிறேன் வானம் நோக்கும் தனிமையின் தூண்களாகிறேன் ஒரு செவ்வியல் பிரதியாய் மெதுவாய் உருமாறிக்கொண்டிருக்கிறேன்.

அமேசான் கிண்டிலில் சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை

சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை அமேசானில் கிண்டில் பதிப்பாக வாங்க   எனது திருமணத்துக்குப் பிறகு 2005-ம் ஆண்டு வெளியான தொகுதி இது. எனது மகள் வினுபவித்ரா பிறந்த வருடம். குடும்ப வாழ்க்கை கோரும் ஒழுங்கு, ஏற்பாடுகளுக்குள் என்னால் இயல்பாகப் பொருந்த முடியாமல் ஒரு நோய்த்தன்மையை உணர்ந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட கவிதைகள் இவை. குணமூட்டி என்ற சொல்லை இதன் அடிப்படையில் தான் உருவாக்கி கவிதைகளில் புழங்க விடுகிறேன். உடல் என் மீது சுமையாக, சிறையாக பிரக்ஞையோடு இறங்கிய நாட்கள் அவை. ‘சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை’ முன்னுரையை, சமீபகாலமாக நான் ஒரு குணமூட்டியைத் தேடி வருகிறேன் என்றுதான் ஆரம்பிக்கிறேன். முதல் கவிதையும் நோய், நோய்மை தொடர்பான கவிதைதான். இப்படியான சூழலில்தான், நடனக் கலைஞர் சந்திரலேகாவை அவரது வீட்டுக்குப் போய்ப் பார்க்கத் தொடங்கினேன். அவர் வீட்டில் நடந்த களறி பயிற்சியில் சேர்ந்து சில நாட்களில் விடவும் செய்தேன். உடம்பு தொடர்பான கவனம், உடம்பின் ஆற்றல், ஆரோக்கியத்துக்கும் மனத்தின் ஆரோக்கியம், ஆற்றலுக்கும் உள்ள உறவு அப்போதுதான் எனக்குத் தெரியத் தொடங்கியது. உடம்பு தான் வெளியாக இயற்கைய...

சுகுமாரனின் வாராணசி கவிதைகள்

கனலி இணைய இதழில் படித்த சுகுமாரனின் வாராணசி கவிதைகளையும் வே நி சூர்யாவின் கவிதைகளையும் அசைபோட்டபடி கழிகிறது இன்று.  வாராணசியில் காலம் ஒன்றாக அது இறந்தகாலமே மட்டுமாக நீண்டு வளைந்து மீண்டும் இறந்தகாலத்துக்குள் போய் திரும்பத் திரும்பச் சுழன்று கொண்டிருக்கும் சித்திரத்தை சுகுமாரனின் இசைமை கூடிய மொழி நம்மில் உருவாக்குகிறது. படைத்தவன் குறித்த கேள்வி தேவையில்லை. படைத்தல் என்ற நிகழ்வும் பொருட்டில்லை. இங்கே வாராணசி படைப்பாக, ஒரு பெரும் நினைவுச் சித்திரமாக அனந்தகோடி காலமாக இருந்துகொண்டிருக்கிறது. வாராணசி என்ற நிலத்தில் வாழ்ந்து அதன் அடையாளமாகத் திகழ்ந்து 14 ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்து போன ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகானின் வீட்டுக்கு அடுத்த கவிதை நகர்கிறது. கவிதை சொல்லி, பிஸ்மில்லா கான் உயிருடன் இருக்கும்போது அவரது வீட்டில் சந்தித்த அனுபவத்திலிருந்து, அவர் இறந்தபிறகு போய்ப் பார்க்கும் பிஸ்மில்லா கானது வீட்டில், அந்தக் கலைஞனை ஒவ்வொரு மூலையிலும் நிகழ்த்துவது போல் தெரிகிறது. இங்கேயும் படைப்பு வழியாக படைத்தவன் கற்பனை செய்யப்படுகிறான். படைப்பு மட்டுமே எப்போதும் இருக்கிறது. இந்த ஊரடங்கு க...

இன்மையில் இருப்பின் நடனம்

ஞானி ஜலாலுதீன் ரூமிக்கும் அவரது ஆன்மிக ஆசிரியனும் நண்பருமாக இருந்த சம்ஸ் இ தப்ரீசிக்கும் இடையிலான உறவையும் விவரிக்கும் துருக்கிய நாவலாசிரியை எலிஃப் சஃபக்கின் நேசத்தின் நாற்பது விதிகள் (‘தி ஃபார்ட்டி ரூல்ஸ் ஆப் லவ்’) படைப்பைச் சமீபத்தில் படித்தேன். ஜலாலுதின் ரூமியைவிட, சம்ஸ் இ தப்ரீஸ் என்ற ரௌடி ஞானி அந்தக் காலகட்டத்தின் பின்னணியில் பருவுருவமாக அறிமுகமாகிறார். அவர் வாழ்ந்தபோதிருந்த சமூக நெறிகள், மத நெறிகள் இரண்டையுமே கேள்விக்குள்ளாக்குபவர். ஓரான் பாமுக்கின் 'என் பெயர் சிகப்பு' நாவலில் வரும் நிலப்பரப்பு, கலாசாரத்தை ஞாபகப்படுத்தும் நாவல் இது. கொன்யா நகரத்தில் மத அறிஞராகவும் பிரமுகராகவும் குடும்பம் குழந்தைகளோடு சௌகரியமாக வாழ்ந்து வரும் ரூமிக்கு அகத்தில் நிரப்ப முடியாத வெறுமை உள்ளது. அதை நிரப்ப வருபவர் தான் சம்ஸ் இ தப்ரீஸ். தளைகளற்ற சுதந்திரத்தோடு கூடிய மெய்ஞானப் பயணத்துக்கு ரூமியைத் தயார் செய்யும் சம்ஸ், ரூமிக்கு நகர மக்களிடமிருந்த நற்பெயரையும் பல்வேறு செயல்கள் வழியாக இல்லாமல் ஆக்குகிறார். சமூகம் கருதும் 'நல்லது'களிலிருந்தும் ஒருவன் உண்மையான  விடுதலை அடையவேண்டியிருக்கிற...

அமேசான் கிண்டிலில் காகங்கள் வந்த வெயில்

காகங்கள் வந்த வெயில் அமேசானில் கிண்டில் பதிப்பாக வாங்க எனது முதல் கவிதை தொகுதியான ‘மிதக்கும் இருக்கைகளின் நகரம்’ 2001-ல் வெளிவந்தது.  இத்தொகுதி 2003-ல் வெளியானது. மற்ற எனது கவிதைத் தொகுதிகளை ஒப்பிடும்போது சற்றே மெலிந்த, குறைவான எண்ணிக்கையிலான கவிதைகளைக் கொண்ட தொகுதி இது. அமேசான் கிண்டில் வெளியிடுவதற்காகத் திரும்பப் படித்தபோது, முற்றிலும் சிறந்த ஒரு கவிதைப் பருவத்தை இத்தொகுதியின் வழியாகத்தான் கடந்திருக்கிறேன் என்று தோன்றியது. எனது ‘மிதக்கும் இருக்கைகளின் நகரம்’ தொகுதியில் பல்வேறு உள்ளடக்கங்கள், வெளிப்பாடுகள், கட்டற்ற ஆற்றல் எல்லாம் இருந்தாலும் எனக்கென்று பிரத்யேக உலகம் ஒன்று உருவாகவேயில்லை. பெரும்பாலான கவிதைகள் அப்போதைய நவீன சிறுபத்திரிகை உரைநடை, கவிதை மொழியின் தாக்கத்தைக் கொண்டவை. ‘காகங்கள் வந்த வெயில்’ தொகுதியின் கவிதைகளில் தான் எனது பிரத்யேக உலகம் உருவாகிறது. அந்தப் பிரத்யேக உலகத்தின் குணங்கள், உயிர்கள் தான் எனது இன்றைய கவிதைகள் வரை பரந்து பரவியிருக்கிறது. நண்பர்கள் சேர்ந்து பகிர்ந்த ஒரு காலகட்டத்தின், அதன் களங்கமின்மையின் ஒளி இந்தக் கவிதைகள் மேல் உள்ளது. இந்தக் கு...

மனம் பிறப்பிக்கும் நரகங்கள்

என்னுடன் திருக்கழுகுன்றம் பாலிடெக்னிக்கில் படித்த, இன்னமும் தொடர்பில் இருக்கும் ஒரே சகாவான யோகானந்தின் வீட்டுக்கு சமீபத்தில் போயிருந்தேன். மதிய உணவுக்குப் பிறகு, அப்போதுதான் ஞாபகம் வந்தது போலச் சொன்னான், காவிரி வளநாடன் இறந்துவிட்டான்  என்று. எனக்கு உடனே அதிர்ச்சியாக இருந்தது. என்னைவிட இரண்டு வயதாவது இளையவன். நான் ப்ளஸ் டூ முடித்து கல்லூரியில் ஓராண்டு படித்து பாலிடெக்னிக்குக்கு வந்தவன். அவனோ பத்தாம் வகுப்பு முடித்து வந்தவன். குள்ளமாக, கம்பீரமாக மீசை, தாடி வளர்ந்து அதன் பெருமிதமோ தன் பெயரின் பெருமிதமோ துலங்க, கைகளைப் பின்னால் கட்டியபடி லுங்கியுடன் விடுதியில் நடமாடும் அவனது தோற்றம் ஞாபகத்துக்கு வந்தது. திருமணமாகி குழந்தை பிறந்தபிறகு ஒரு நாள் நெஞ்சுவலி என்று சொல்லி மருத்துவமனைக்கு கொண்டுபோவதற்குள் இறந்துவிட்டான் என்று யோகானந்த் சொன்னான். என்னைவிட இரண்டு வயது குறைவான அவன் இறந்துபோய்விட்டான், நான் இருக்கிறேன். மரண அஞ்சலி சுவரொட்டிகளைப் பார்க்கும் போதும், அதில் போட்டிருக்கும் வருடத்தைக் கணக்கு செய்து இறந்தவர் என்னைவிட இளையவர் என்றால் சிறிது துணுக்குறுகிறேன். இது ஒரு அபத்தம் என்று ...