Skip to main content

ஆடும் மனத்தின் கோலங்கள்


எனக்கு அறிமுகமான போதிருந்த லக்ஷ்மி மணிவண்ணனுக்கு, படித்த, பார்த்த கதையைத் திரும்பச் சொல்ல முடியாது. ஒரு கதையின் ஒரு நிகழ்ச்சி அவருக்கு ஏற்படுத்திய மனப்பதிவுகளையே அதையொட்டி உருவான எண்ணத்தையே அவரால் பேச முடியும். ஆல்பெர் காம்யூவின் ‘அந்நியன்’, காஃப்காவின் ‘விசாரணை’ மற்றும் சுந்தர ராமசாமி, கோபி கிருஷ்ணன் ஆகிய ஆளுமைகளின் தாக்கம் ஏறியவராக இருந்தார். நம்மை சௌகரியப்படுத்தி நீவிக்கொடுப்பது புத்தகங்களின் வேலை அல்ல. ஒரு துருப்பிடித்த ஆணி, கபாலத்தில் இறங்குவது போலப் புத்தகங்கள் இறங்கவேண்டுமென்று காஃப்கா சொல்லியிருப்பதாக அவர் எங்களிடம் சொன்னார். நம்மில் உறைந்திருக்கும் கடலைப் பிளக்கும் கோடரியாக ஒரு நூல் இருக்க வேண்டும் என்று காஃப்கா சொன்னதைத் தான் அவர் எங்களிடம் இப்படி மாற்றிச் சொல்லியிருக்க வேண்டும். 1999-ம் ஆண்டு நான் வேலை பார்த்த குமுதம் அலுவலகத்துக்கு என்னைப் பார்க்க மணிவண்ணன் வந்தபோது, மூன்று மணிநேரத்தைக் கழிப்பதற்காக அவரைப் பக்கத்திலிருக்கும் அபிராமி திரையரங்க வளாகத்தில் ‘ரிதம்’ படம் பார்க்கச் சொன்னேன். அலுவலகம் விட்டபின்னர், அவருடன் கோடம்பாக்கத்துக்குத் திரும்பியபோது படம் பற்றிக் கேட்டேன். பெண்ணின் உடலை, நவீனமான பொருளாக இந்த சினிமா வெற்றிகரமாக மாற்றியிருக்கிறது என்று பேசத் தொடங்கினார். அந்தப் படத்தின் கதையை பின்னர் தொலைக்காட்சியில் பார்த்தபோதே தெரிந்துகொண்டேன்.  

 வண்ணதாசன், பிரபஞ்சன் படைப்புகளைப் படித்து அவர்களது கதைகளில் வரும் அன்பான சுமதியைத் தேடிக் கொண்டிருந்த நிலையில், ஒரு திராவகம் போலத் தான் லக்ஷ்மி மணிவண்ணன், நாங்கள் படித்த நாகர்கோயில் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்து தளவாயிடமும் என்னிடமும் இறங்கினார். அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர் அவர். 

தன்னம்பிக்கை, நல்லுணர்வு, முன்னேற்றம் என்ற கதைகளால் என்னைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த உலகின் மேல் எனக்கு ஏற்கெனவே சந்தேகம் இருந்தது. நமக்கு நீதியாகச் சொல்லப்படுவதற்கும் எதார்த்தத்துக்கும் இடையிலான தூரம் அதிகம் என்பதை எனது பெற்றோரும் எனது பால்யமும் ஏற்கெனவே எனக்கு உணர்த்தியிருந்தது. இவற்றுக்கு எல்லாம் பின்னால் உண்மையில் இருப்பது ஒரு கோணல் உலகம் என்பதை லக்ஷ்மி மணிவண்ணன் எங்களிடம் உறுதிப்படுத்தினார். எனது பதின்வயதுகளில் உலகத்துக்கு எதிராக என்னுள் எழுந்த சண்டை மூர்க்கம், பைத்தியம், குற்றத்தன்மையைச் சங்கடமில்லாமல் அனுசரணையாகப் பார்க்கலாம் என்ற நம்பிக்கையைத் தந்தவர் அவர். பைத்தியமோ குற்றமோ தனிநபர் சார்ந்தது அல்ல; அது சமூகத்தினுடையது. அந்தப் பைத்தியத்தன்மை, குற்றத்தன்மைக்கு முன்னால் கலைஞர்கள் முதலில் வெளிப்படுகிறார்கள், படைப்பாக வெளிப்படுத்துகிறார்கள் என்ற உணர்வை பிள்ளையார்புரம் பேருந்து நிறுத்தத்தின் அருகில் மூடியிருந்த கடைத் திண்ணையில் அந்தி இருட்டில் அமர்ந்து, புதிதாகக் குடிக்க ஆரம்பித்திருந்த ப்ளெய்ன் கோல்ட் சிகரெட்டின் கிறக்கும் ருசியுடன் இறக்கியவர் லக்ஷ்மி மணிவண்ணன் தான். ஆத்மாநாமுக்கு மனநல சிகிச்சை செய்த மருத்துவர் சாரதா மேனனை அப்போதுதான் சென்னையில் பார்த்துத் திரும்பியிருந்த தாக்கங்களையும் எங்களிடம் பகிர்ந்துகொண்டார். அந்த மாலையிலேயே என்றுதான் நினைக்கிறேன்;  கொண்டு சென்ற சூட்கேஸ் நிறைய புத்தகங்களை, அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்று நிரப்பி, எங்களை மீண்டும் கல்லூரி விடுதியில் கைனடிக் ஹோண்டா வண்டியில் விட்டுச் சென்றார். அந்நியன், விசாரணை, உதயசங்கர் எழுதிய மறதியின் புதைசேறு போன்ற சில புத்தகங்கள் அதில் இப்போதும் எனக்கு ஞாபகத்தில் இருப்பவை. 

கமல்ஹாசன் நடித்த 'மகாநதி' திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்தில் சக்கரவர்த்தி திரையரங்கில் படத்தின் இடைவேளையில் தான் லக்ஷ்மி மணிவண்ணனை, என். டி. ராஜ்குமார், ஜி. எஸ். தயாளனோடு பார்த்தோம். மகாநதியின் முதல்பாதியே என்னை உள்ளூர ஆட்டிக்கொண்டிருந்தது. அந்த நடனத்தை உணர்ந்த அவர் எங்களது பரவசத்திலிருந்து ஒதுங்கி இருந்தார். அதற்கு முன்னர் கலை இலக்கியப் பெருமன்றத்தின் பரிசளிப்பு விழாவில் சிறு அறிமுகம் மணிவண்ணனுடன் ஆகியிருந்தது. அன்று புதன்கிழமை. லக்ஷ்மி மணிவண்ணன், எங்களை வெள்ளிக்கிழமையன்று மாலை சுந்தர ராமசாமி வீட்டுக்கு வரச் சொன்னார். சுந்தர ராமசாமியின் கடைக்கு அன்று விடுமுறை என்றும் வாராவாரம் விருப்பமிருந்தால் வெள்ளிக்கிழமை மாலை அவரைச் சந்திக்கலாமென்றும் கூப்பிட்டார். இப்படித்தான் நாங்கள் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினோம். 

நாகர்கோயில் அரசு மருத்துவமனை எதிரே, கோட்டாருக்கு இறங்கும் ஏற்றத்தில் தான், தான் படித்து முடித்த ஜே. ஜே. சில குறிப்புகளை எனக்குப் படிக்கக் கொடுத்தார். கருப்பு வெள்ளை ஆதிமூலத்தின் ஓவியத்தில் க்ரியாவின் அழகிய பதிப்பைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டே கோட்டாறு பெரியம்மா வீட்டில் உள்ள குயவர் தெருவுக்கு மிதந்து சென்றேன்.

கபாலத்தில் ஓர் ஆணியைப் போல என்னில் இறங்கிய முதல் புத்தகம் ஜே. ஜே. சில குறிப்புகள் தான். நாம் உணர்வது சரியோ தவறோ அதை வெளிப்படுத்தலாம் என்ற அதீத தன்னம்பிக்கையை எனக்குக் கொடுத்த புத்தகம் அது. என்னில் உள்ள அகங்காரத்துக்கு மூர்க்கத்துக்கு வெளிப்படைத்தன்மைக்கு அங்கீகாரம் அளித்த புத்தகம் அது. நாம் உணரும் உண்மை என்பது சின்ன உண்மை என்பதையும் நாம் உணரும் எதார்த்தம் என்பது ஒரு பெரிய எதார்த்தத்தின் ஒரு துண்டு என்பதையும் அந்த வயதில் என்னால் அறிய இயலவில்லை. எனது சின்ன உண்மை, எனது சின்ன நேர்மை, எனது சின்ன தார்மிகத்தால் என்னைச் சுற்றியுள்ளவர்களை விடலைத்தனமாகத் தொந்தரவுபடுத்துவதை ஜே. ஜே. சில குறிப்புகள் அங்கீகரித்தது என்று இப்போது தோன்றுகிறது. நான் தான் ஜே. ஜே என்று சுந்தர ராமசாமியிடம் அசட்டுத்தனமாகப் போய்ச் சொன்னேன். அவர் சிரித்தார். அவர் ஜே. ஜே வேறு, எதார்த்தம் வேறு என்பதைப் புரிந்தவராக இருந்தார். எனக்கு என் மேல் ஜே. ஜே செலுத்திய அழுத்தத்திலிருந்து அதிர்ச்சியிலிருந்து விடுபடுவதற்கு பல ஆண்டுகளும் பல பின்னடைவுகளும் தேவையாக இருந்தன. அதற்குப் பிறகு தாமிரபரணி ஆற்றில் எத்தனையோ வெள்ளங்கள் வந்து சென்றுவிட்டன. 

ஜே. ஜே-யைவிட உண்மையானவன் என்றும் அதேவேளையில் பூமியோடும் சினேகம் கொள்ளும் அற்புதமான லட்சியக் கதாபாத்திரம் ஜெயகாந்தனின் ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் நாவலில் வரும் ஹென்றிதான் என்று தற்போது உணர்கிறேன். ஆனால், லக்ஷ்மி மணிவண்ணனும் சுந்தர ராமசாமியும் ஜே. ஜேயும் உருவாக்கிய படைப்பு உஷ்ணம் தான் எனது ஆதி எரிபொருள். அவர் தான் எனது கவிதையை தனது சிலேட் இதழில் கடைசி அட்டையில் முதலில் பிரசுரம் செய்தார். அப்படி என்னைப் பெற்றவர் அவர். மணிவண்ணன் தனது மனைவி மல்லிகா உட்பட எல்லாரையும் எழுதவைத்திருக்கிறார்.

பி.எஸ்சி கணிதம் முதலாண்டு படித்துக் கொண்டிருந்த எனக்கு, நான் படித்துவந்த சுயநிதிக் கல்லூரியில் பள்ளிக்கூடம் போலச் செய்யப்பட்டிருந்த கட்டுப்பாடுகளுக்கு உடன்பட முடியவில்லை. ஆசிரியர், முதல்வர் எல்லாரிடமும் முரண்பட ஜே. ஜே-வும் என்னைச் சேர்ந்து உலுக்க, மனம் பேயாட்டம் போட்ட நாட்கள் அவை. செமஸ்டர் தேர்வுக்கு முன்னர் வைக்கும் மாதத் தேர்வுகளில் குறித்த நேரத்துக்கு முன்னால் பேப்பரைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தால் அபராதம் என்று ஒரு புதிய விதியைக் கொண்டுவந்தார்கள். அதை எதிர்த்து நான் ஐம்பது மாணவர்களைத் திரட்டி பிள்ளையார்புரம் பேருந்து நிறுத்தம் அருகே தேர்வுக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டோம். கல்லூரி நிர்வாகம், ஸ்ட்ரைக்கை ஒருங்கிணைத்தவன் என்ற முறையில் என்னை வெளியேற்றியது. 

கல்லூரி விடுதியின் நிழலும் கல்லூரிக் கல்வி கொடுக்கும் பாதுகாப்புமாக இருந்த எனது கூரையும் தாங்கிப் பிடித்த நிலமும் ஒரே நேரத்தில் விழுந்து நழுவியது. இரண்டாவது செமஸ்டரிலேயே கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்ட நான், நாகர்கோயில் பெரியம்மா வீட்டில் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் அலைந்த நாட்களில் தான் வெயிலே அதிகம் இல்லாத நாகர்கோயிலை வெக்கையுடன் உணர்ந்தேன். லக்ஷ்மி மணிவண்ணனும் சுந்தர ராமசாமியின் வீடும் தான் அப்போதைய அடைக்கலமாக இருந்தது.

மார்ச் அல்லது ஏப்ரல் மாதமாக இருக்கலாம். சுந்தர ராமசாமி, தனது நண்பர்களுடன் சில நாட்கள் தங்கிப் பேசுவதற்காக பாம்பன்விளையில் கிறிஸ்துவ ஆசிரமம் ஒன்றில் மூன்று நாள் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டு அலைந்து திரிந்துகொண்டிருந்த எனக்கு அந்த மூன்று நாட்கள் முக்கியமானவை. படைப்பு, இலக்கியம், இலக்கிய ஆளுமைகளோடு ஒரு சிறுவனாக இருந்து வேடிக்கை பார்த்து, எனது அசட்டுத் தனங்களும் அதிகம் முகத்துக்கு நேராக உணர்த்தப்படாமல் மரியாதையோடு நடத்தப்பட்ட நாட்கள் அவை. 

சுரேஷ்குமார் இந்திரஜித், எஸ். என். நாகராசன், என். சிவராமன், மனுஷ்ய புத்திரன், லல்லி, எம் யுவன் என எல்லாரும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து உறங்கி சாப்பிட்டு பேசி மூன்று நாட்கள் வேகவேகமாக கடந்துவிட்டன. எல்லாரும் அவரவர் வீட்டுக்குப் பிரிந்தபோது எனக்குத் திரும்புவதற்கே முடியவில்லை. அழுகை முட்டிக் கொண்டு வருகிறது. சிறுவயதிலேயே தவறுதலான ஒரு வழிக்கு வந்துவிட்டவன் என்ற சங்கடத்தோடு பார்த்துக் கொண்டிருந்த சுரேஷ் குமார் இந்திரஜித்தின் பார்வை என்னை இன்னும் தொந்தரவூட்டுவது.

நாகர்கோயில் வந்திறங்கி, நீதிமன்றத்துக்கு எதிரே வேப்பமூடு செல்லும் வழியில் உள்ள உணவுவிடுதியில் மதிய உணவு சாப்பிட்டுப் பிரிய வேண்டும். லக்ஷ்மி மணிவண்ணன் நாகர்கோயிலிலேயே இருந்தாலும் மூன்று நாட்கள் அவருடன் இருந்ததைப் போல இருக்கமுடியாது. ஆனால், அன்று பிரிந்தே ஆகவேண்டும். அப்போதுதான் யாரோ இந்தியா டுடே இலக்கிய மலரைப் புத்தம்புதிதாக வாங்கி வந்தார்கள். அது இந்தியா டுடே வெளியிட்ட இரண்டாவது இலக்கிய மலர். அதில் கொஞ்சம் சிவப்போடிய பழுப்புத் தாளில் ஜானகிராமனின் நவீன ஓவியத்துடன் லக்ஷ்மி மணிவண்ணனின் கவிதை இருந்தது. ‘ஆடும் முகங்களின் நகரம்’ கவிதைதான் அது. இன்னும் அந்தப் பக்கம் எனக்கு ஞாபகத்தில் உள்ளது. 

லக்ஷ்மி மணிவண்ணன் அதற்கு முன்னரே கவிதைகளை எழுதத் தொடங்கியிருந்தாலும் அவரது ஆளுமை முழுமையாகத் துலங்கத் தொடங்கிய கவிதை என்று இதையே நான் கருதுகிறேன். இந்தக் கவிதை இன்னும் எனக்குப் புதிதாகவே இருக்கிறது. அந்தச் சமயத்தில் நவீன கவிதையின் வெளிப்பாடு, உள்ளடக்கம், த்வனி என எல்லாவற்றிலுமிருந்து மாறிய அந்த அம்சத்தினாலேயே அப்போது அந்தக் கவிதை கவனிக்கப்படவில்லை. திட்டவட்டமான உரைநடையிலிருந்த அதேவேளையில் மொழி லயத்தையும் தக்கவைத்துக் கொண்டிருந்த கவிதை அது. நவீன கவிதையின் சட்டை உரியத் தொடங்கிய தருணங்களில் ஒன்று அந்தக் கவிதை என்று இப்போது படிக்கும்போது தோன்றியது. 

லக்ஷ்மி மணிவண்ணனைப் பிரிந்தாலும் அந்தக் கவிதையைத் துணைக்குப் பிடித்துக் கொண்டு கோட்டாறு பெரியம்மா வீட்டுக்குத் தனியாகத் திரும்பினேன். அன்று மதியம் வீட்டில் யாருமில்லை. கதவைச் சாத்திக் கொண்டு அன்று அழுத அழுகை இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது. அதற்குப் பிறகு லக்ஷ்மி மணிவண்ணனோடு நான் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் இருக்கப்போகிறேன் என்று எனக்கு அப்போது தெரியாது. எதிரிக்கு எதிரி நண்பன் அல்ல என்பதை எனக்குச் சொல்லியவர். ஒருவனது ஆளுமை, எதிர் தரப்பை எத்தனை மரியாதையோடு நடத்துகிறான் என்பதிலேயே துலங்கக் கூடியது என்று சொல்வார். சுந்தர ராமசாமியைப் போலவே அடுத்தவர் பேசுவதை, அத்தனை கூர்மையாக ம் ம் ம் என்று ஊக்குவித்தபடி கவனிப்பார். எத்தனை எதிர்மறையான சூழலிலும் தனது மனப்பதிவை மந்தைப் போக்கிலிருந்து விலகி, அதனால் ஏற்படும் உடனடி நஷ்டங்கள், அபாயங்களைக் கணக்கில் கொள்ளாமல் அவரது கருத்துகளை எடுத்து வைக்க முடியும். நண்பன் என்பவன் சொறிந்துகொடுப்பவன் அல்ல, அவன் கண்ணாடி போலப் பிரதிபலிப்பதன் வழியாகவே பரஸ்பரம் ஆளுமைகளைச் சரிபார்த்துக் கொள்ளமுடியும் என்பதை என்னிடமும் தளவாயிடமும் ஊன்றியவர் அவர். பிறரது பாவனைகளை உற்றுப் பார்ப்பது போலவே தன் பாவனையையும் சேர்த்துப் பார்ப்பதையும் அதை மொழியாக்கும் வல்லமையும் அவருக்கு உண்டு. ஒரு விஷயத்தை, ஒரு பிரச்சினையை, ஒரு உள்ளடக்கத்தை, முற்போக்கு எனக் கருதி ஒரு தரப்பை அழுத்தி அழுத்திப் பேசுவதன் மூலமே கிடைக்கும் செல்வாக்கையும் லாபத்தையும் சுரண்டலுக்கு ஒப்பானது என்று கருதியவர். குழந்தைத் தொழிலாளர் பிரச்சினையைப் பற்றி தொடர்ந்து ஒரு அணுகுமுறையில் அப்போது எழுதப்பட்டு வந்த முற்போக்குக் கதைகள், குழந்தைத் தொழிலாளர்களைச் சுரண்டும் முதலாளிகளைப் போலவே, அந்தப் பிரச்சினையைச் சுரண்டுகின்றன என்று விமர்சனமாகவே எழுதியிருக்கிறார். தொண்டு நிறுவனங்கள் அப்போதுதான் தமிழகத்தில் வேர்பிடிக்கத் தொடங்கியிருந்தன. 

எத்தனையோவிதமான மதுக்கள், மது சார்ந்த பொழுதுகள், மது சார்ந்த இடங்கள், மது சார்ந்த மீறல்கள், சாகசங்கள், குற்றங்கள் என எத்தனை! அப்போது உணர்ந்த போதைநிலையின் படைப்பு உஷ்ணம் படிப்படியாக பின்னர் குறைந்தது.  மது இல்லாமலேயே இருக்கும் போதையும் பரிச்சயப்படத் தொடங்கியுள்ளது. 

லக்ஷ்மி மணிவண்ணன் மீது கொண்டிருந்த அந்தக் காதலின், அந்த வசீகரத்தின், நிச்சயமே இல்லாத எதிர்காலத்தோடு  இலக்கியமென்னும் புகைமூட்டமான கனவு ஒன்று மட்டுமே கொடுத்துக் கொண்டிருந்த உயிர்ப்பின், அது தந்துகொண்டிருந்த வாதையின் ஞாபகமாய் ‘ஆடும் முகங்களின் நகரம்’ கவிதை இன்றும் இருக்கிறது.

ஒன்றை அதன் உள்ளுக்குள்ளே அதன் சதையோடு எலும்புக்கூடுகளையும் பார்த்துவிடும் கூர்ந்த கண்கள் மணிவண்ணனுடையவை. வண்ணங்கள் தோன்றும் கணத்திலேயே அவரது காட்சியில் சாம்பல் தன்மையாகி விடுவதை உணரும் ஆளுமை அவர். ஒன்றுடன் ஈடுபடும்போதே அதன் வியர்த்தத்தையும் அருசியையும் உணர்ந்துவிடும் ஒன்றுதான் இந்தக் கவிதையை எழுதுகிறது. மூன்றாவது முறையாகச் சென்று திரும்பும் நகரம் குறித்து அவர் எழுதுகிறார். ஒரு குற்ற ஸ்தலத்தை உற்றுக் கவனிப்பது போல அவருக்கு இந்த நகரத்தின் மர்மங்கள் துலங்கத் தொடங்குகின்றன. ஒரு சிறுநகரத்தவனின், கிராமத்து மனிதனின் பொருந்தாத் தன்மை அதில் தென்படுகிறது. தொலைந்துபோவதற்கான சாத்தியமில்லை என்ற வருத்தம் இருக்கிறது. மின்சாரப் புகைவண்டிகளில் பிரயாணிக்கிறவர்களின் முகங்களைத் தவிர அச்சப்படும்படி ஏதுமில்லை என்ற விவரணையில் லக்ஷ்மி மணிவண்ணனைக் கவர்ந்த ‘அபாயம்’ நாவலின் முதல் ரயில் பயண வர்ணனை தென்படுகிறது. கைப்பிடியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டும் ஆடும் முகங்கள் என்பதுதான் பின்னர் ‘கைப்பிடியில் தொங்கும் இளவரசிகள்’ ஆகிறார்கள். அந்தி மாலை வேளையில் ரயில் பயணத்தில் விளையாடப்படாத மைதானம் தெரிகிறது. சுந்தர ராமசாமிக்கும் அவரது நண்பர்களுக்கும் எனக்கும் லக்ஷ்மி மணிவண்ணனுக்கும் ஆறுதலாக இருந்த எஸ்எல்பி பள்ளி மைதானத்தின் ஞாபகம் எழுகிறது.  

நகரத்திலிருந்து ஊர் திரும்பும்போது நகரம் அழகாக மாறும் சித்திரத்தோடு கவிதை முடிகிறது. 

லக்ஷ்மி மணிவண்ணன், நகரத்துக்கு வந்து வந்து அக்காலத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். திரும்பத் திரும்ப அவரை நகரம் ஊருக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. சென்னை அவருக்கு ஒப்பவில்லை. சென்னையிலும் தன் ஊரை, தன் குலசாமிகளைச் சுமந்து எழுதிய கவிதைகளும் சாமிகளும் சேர்ந்துதான் அவரைப் பத்திரமாக ஊருக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும். அம்மாவின் இழப்பை முழுக்க உணரக்கூட வாய்ப்பில்லாத சிறுவயதில் தாயை இழந்த லக்ஷ்மி மணிவண்ணனுக்கு ஊர் தான் அம்மாவாக பாதுகாவலாக இருக்கிறது போல. அவரது ஆளுமை ஒட்டுமொத்தத்தையும் அம்மாவின் இன்மையோடு சேர்ந்து என்னால் இப்போது பார்க்கவும் புரிந்துகொள்ளவும் முடிகிறது. அதற்கு ஒரு தொலைவு தேவைப்பட்டிருக்கிறது. 

நான் லக்ஷ்மி மணிவண்ணனுக்குப் பிறகுதான் நகரத்துக்கு வந்துசேர்ந்தேன். நான் ஊருக்குத் திரும்பவில்லை. எனக்குத் திரும்ப ஊரும் இல்லை. அவரது இப்போதைய கவிதைகளில் அவர் பார்த்த நகரத்தின் சுவடுகள் மறைந்துபோய்விட்டன.

‘ஆடும் முகங்களின் நகரம்’ எனக்குள்ளே இன்னமும் இருக்கிறது. மனம் ஆடும் கோலங்களை இப்படித்தான் நெருக்கமாகப் பின்தொடர ஆரம்பிக்கிறார் மணிவண்ணன். 


ஆடும் முகங்களின் நகரம்

மூன்றாவது முறையாக 

அந்த நகரத்துக்குப் போயிருந்தேன்

சவால்போல

கடும் வெயிலுக்கான குடையோடு

அலைந்து திரிந்ததில் 

மர்மங்கள் லேசாய் துவங்கின.

நகரத்துக்கு ஊடாக 

இரண்டோ மூன்றோ

புகைவண்டி வழிப்பாதைகள்

பிரிந்து செல்கின்றன.

குறுக்கு நெடுக்கமாய் திரியும் 

பேருந்துகள்

எங்கு செல்கின்றன

பழக்கங்களை எப்படி இவை

ஜனங்களுக்குக் கற்றுத் தந்திருக்கின்றன

என்பதும் புரிந்தது.

புகைவண்டி நிலையங்களில்

ஜனங்கள்

தட்டையான மரக்கிளையாய்

நிலையத்துக்கு வெளியேயும்

நேர் தலைகீழான ஒரு மரக்கிளையாய்

நிலையத்துக்கு உள்ளேயும் செல்கிறார்கள்

பின்னலான மரக்கிளைகளால் 

படர்ந்த வாயில்கள்


கழிப்பிட அறைகளுக்கு வெளியே

வரிசைகள்.

பலவிதமான உடைகளுக்குள் உள்ள

மனிதர்களும் வழி கேட்டால்

ஓரளவு சரியாய் சொல்லித் தருகிறார்கள்.

தொலைந்துபோய் விடுவதற்கான

சாத்தியங்களும் அதிகமில்லைதான்.

மின்சாரப் புகைவண்டிகளில்

பிரயாணிக்கிறவர்களின்

முகங்களைத் தவிர

கற்பனை செய்து கொண்ட அளவு

பயப்படும்படியாகவும்

ஏதுமில்லைதான்.

நின்று கொண்டும் உட்கார்ந்து கொண்டும்

கோணலாய் நின்று இருந்து கொண்டும்

சாய்ந்து கிடந்தும்

கைப்பிடியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டும்

ஆடும் முகங்கள்.

ஒருநாள் மாலை

ஆறுமணி வாக்கில்

மீட்டர்கேஜ் புகைவண்டியில்

போய்க் கொண்டிருந்தேன்

ஓரிடத்தில் விளையாடப்படாத 

மைதானம் தனியே கிடந்தது.


மஞ்சள்வெயில் படிந்த வீடுகளின்

பின்புறங்கள் முன்னால்

ஓடிக்கொண்டிருந்தன.

வீடுகளின் முன்பக்கம் தெரியும்

இடங்களில் 

நிலையங்கள் வந்தன.


புகைவண்டிக்குள் 

சில்லறை வியாபாரிகளின்

சத்தம் 

பல காதுகளில் விழாமல்

தனி உறுப்பாய் கிடந்தது

மஞ்சள் வெயில் படிந்த 

ஜனங்கள் ஒவ்வொருவராக 

வெளியே 

தெரிந்து 

மறைந்து தெரிந்தார்கள்.

புகைவண்டி நிலையங்களின்

வலப்புறமும் இடப்புறமும்

சிலயிடங்களில் வலப்புறம்

சிலயிடங்களில் இடப்புறம்

என்று லெவல் கிராஸிங்கிலிருந்து

ஒரே மாதிரியாக

திறந்து வெளியேறுகிறது

நகரம்.


கடைசி நாள்

ஊர் திரும்பும்போது

நகரத்தை விட்டு வெளியேறும்

சாலைகள் சுத்தமாய் கிடந்தன.

கவர்ச்சியான வளைவுகளோடு

இரண்டு வளைவுகளின் மத்திகளில்

தாவரக்கூட்டம்

ஆளரவமற்ற போதையில்

மஞ்சள்வெயில்

இடைவெளிகள் கொண்ட

கட்டிடங்கள்.

நகரத்தில் தனிமை

வழிந்து கிடக்கிறது

நகரத்தை விட்டு வெளியேறும்

சாலையோரங்களில். 




 

 

   

 

Comments

Saravana Raja said…
//நாம் உணரும் உண்மை என்பது சின்ன உண்மை என்பதையும் நாம் உணரும் எதார்த்தம் என்பது ஒரு பெரிய எதார்த்தத்தின் ஒரு துண்டு என்பதையும் அந்த வயதில் என்னால் அறிய இயலவில்லை// ❤️