Skip to main content

அநித்தியத்தின் மேடையில் இசை தூவும் அட்சதை க்ஷணங்கள்இசையின் 'உடைந்து எழும் நறுமணம்' கவிதைத் தொகுதியில் முதல் காயம் என்றொரு கவிதை இருக்கிறது. முதல் காயத்தில் போட்ட வெள்ளைக்கட்டைக் கொக்காகப் பார்க்கும் அந்தச் சிறுமி, ஆண்ட்ராய்ட், ஐபோன் தொலைபேசிக்குப் பழக்கமானவளாக இருக்க வேண்டுமென்று தோன்றியது. தனக்கு ஏற்பட்ட வலியை, காயத்தை ஒரு காட்சியாக, ஒரு படமாகப் பார்ப்பதற்கான முறைப்பாட்டையும் தகவமைப்பையும் இன்றைய தலைமுறையினர் பெற்றிருக்கிறார்கள். தனது காயத்தை அவள் ஒரு கொக்காகக் கற்பனை செய்யும்போது அவளுக்குக் கொடுக்கப்பட்ட வலியிலிருந்து அவள் நழுவி அதை வேடிக்கையாக மாற்றிவிடுகிறாள். எனது வலியை நான் காட்சியாகப் பார்க்கும்போது, எனது வலி ஒரு பாவனையாக, நகலாக உடனடியாக ஆகும்போது அங்கே லட்சியமும் நழுவத் தொடங்கிவிடுகிறது.  

லட்சியம், உன்னதம், தத்துவம், நம்பிக்கை, அறம் அவை சார்ந்த தீவிரங்களும் கற்பனைகளும் முடிந்துபோன சாலையாக அறிவிக்கப்பட்டே தொடங்கிய இந்த நூற்றாண்டுக்கும், பெருகிய ஊடகத் தொடர்பு தொழில்நுட்பங்களுக்கும் நிச்சயமாகச் சம்பந்தம் இருக்கிறதென்றே தோன்றுகிறது. தன்னை நூற்றுக்கணக்கில் பிரதிபலித்துக் கொண்டேயிருக்கும் வெளிச்சக் கண்ணாடி அறையில் லட்சியமும் தீவிரமும் கலைமூட்டமும்  செயல்படவே முடியாது. இருட்டில் துழாவித் துழாவி திக்குத் தெரியாத வேதனையிலும் பிரதிபலிப்பு இல்லாமல் குழப்பத்திலும் மடத்தனத்திலும் களங்கமின்மையிலும் தத்தளிப்பிலும் மட்டுமே வாழக்கூடிய உயிரி அது.          

ஒரு படைப்பு உருவாவதற்கும் அது நுகரப்படுவதற்குமான இடைவெளியும் காத்திருப்பும் குறைந்துகொண்டே வரும் காலத்தில் சேதாரத்துக்குள்ளான முதல் உயிர்கள் மடத்தனமும் களங்கமின்மையும் தான். முற்றாக இருட்டு பறிக்கப்பட்ட நிலையில் எல்லாமே அப்பட்டமாகத் தெரிந்த நிலையில் கழிவிரக்கமும் கேலியும் மட்டுமே இன்றைக்குத் தரிக்க முடிந்த உயிரிகளாக இருக்கின்றன. இப்படியான சூழ்நிலையில் பிரமாண்டமாகக் கருதப்படும் படைப்புகளும் எதிரொலிகளாக நிழல்களாக நகல்களாக மாறுகின்றன. தமிழ் நவீன கவிதைகளைக் கிண்டலடித்து சமகாலத்தில் எழுதப்படும் நவீன கவிதைகளைவிட வாசிப்பதற்கு சுவாரசியமான கவிதைகளை எழுதியவரும், அனானியுமாக கவிஞர் பேயோன் இங்கேதான் தோன்றுகிறார். 

ஊடகங்களுக்கும் நமது நடத்தைகள், விழுமியங்களின் மாறுதல்களுக்கும் பெரிய தொடர்பு இருக்கிறது. ஒரு புகைப்படத்தை மட்டும் தன் பிரதியாக வைத்திருக்கச் சொல்லிவிட்டு அவளோ அவனோ இனி தனது காதல் இணையை வீட்டிலோ ஊரிலோ விட்டுச் செல்லமுடியாது. ஒரு மூத்த காம்ரேட், புதிய காம்ரேடை நம்பிக்கையோடு ஒரு அறைக்குள் இருக்கச் சொல்லிவிட்டு பழைய லட்சியங்கள் பாதுகாப்பாக இருக்குமென்ற பத்திரத்துடன் வெளியே போகமுடியாது. முடிவற்ற காமமே, கலையாக கருத்தியல்களாக அரசியல்களாக வலம்வரும் சாலைகள் துளைக்கும் ஊடகமாக நாம் நமது உடலையே அனுமதித்த பிறகு, வீடு என்பது ஒரு உருப்போலிதான். பிரியாணி என்பது ஒரு உருப்போலி. இட்லி என்பது ஒரு உருப்போலி. 

இன்னொரு பிரதி கிடைக்காத சாத்திய வறுமையிலேயே, நகலாக்கம் பரவலாகாத காலத்திலேயே களங்கமின்மையை, நாம் சென்ற நூற்றாண்டு வரை தக்கவைத்திருந்தோம். எவ்வளவு வலியாக இருந்தாலும் இதுதான் இப்போதைய மெய்.    

இந்த அதிகாலையில் நான் தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகே உருவாகியிருக்கும் புதிய கோயிலின் ஒலிபெருக்கி வழியாகக் கேட்டுக் கொண்டிருக்கும் திருப்பாவையை நான் விரும்பினால், நண்பகலிலும் கூட எனது ஆண்ட்ராய்ட் வழியாகக் கேட்கலாம். நானே டிக்டாக் செயலி வழியாக ஆண்டாளின் பாடலைக் கேலிக்கூத்தாக ஆக்கி, அவளை உருமாற்றிவிடலாம். 

அவளது காத்திருப்பும் ஏக்கமும் விலக்க இயலாத ஒரு அதிகாலை இருட்டில் கவிதைகளாகின. 

நினைவு என்பது காலத்தின் பாற்பட்டது என்று போர்ஹே குறிப்பிடுகிறார். ஏக்கமும் காத்திருப்பும் லட்சியமும் பயணிக்க காலம் என்னும் பாலமோ, காலம் என்னும் ஏணியோ, எட்டுவதற்கும் அடைவதற்கும் தேவையாக இருக்கிறது. செயல் ஊக்கத்துக்கு எதிராக செயல் மரத்த நிலைக்கு நம்மைத் தள்ளிக் கொண்டிருக்கும் நகல்களும் பிரதிகளும் பெருகிக் கொண்டிருக்கும் சூழலில், நினைவு என்பது தொடர்ந்து அதி ஊடகச்சூழலால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் 

நீ உனது லட்சியம் அல்ல, ஒரு கணமே சிலிர்த்து உடனடியாக மடியும் நீ உனது வெறும் உடல், நீ உனது நம்பிக்கை அல்ல, ஒருகணமே சிலிர்த்து உடனடியாக மடியும் நீ வெறும் உடல், நீ உனது அறிவு அல்ல, ஒரு கணமே சிலிர்த்து உடனடியாக மடியும் நீ வெறும் உடல், நீ உனது அரசியல் அல்ல, நீ உனது படைப்பு அல்ல, நீ உனது அறம் அல்ல, நீ உனது விழுமியம் அல்ல, ஒருகணமே சிலிர்த்து உடனடியாக மடியும் நீ வெறும் உடல் என்று திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்தப்படுவதால் நமக்கு வரலாறு, சமூக நிகழ்வுகள், மனிதர்களாகச் சேர்ந்து நிகழ்த்திய நமது சாதனைகள் எல்லாம் வெறும் நுகர்வாக ஆனதில் அதையெல்லாம் நாம் மறந்துபோனதில் வியப்பில்லை. நாம் அந்தக் கணத்தைத் திரும்பத் திரும்ப அதிகபட்சமாக நீட்ட, நுகர, கண்டுபிடிக்க மரணம் வரை முயன்றுகொண்டேயிருக்கப் போகிறோம். வேறு எதுவுமே நினைவில் இருக்கப் போவதில்லை. 

சமீபத்தில் எல்லாத் தரப்பினராலும் கொண்டாடப்பட்ட ஜெய்பீம் சினிமா குறித்து பேசியவர்கள், தீவிர சினிமா விமர்சகர்கள், இடதுசாரிகள் உட்பட, ஜெய்பீம் திரைப்படத்தின் களத்தை ஒத்த, கோவிந்த் நிஹ்லானியின் 'ஆக்ரோஷ்' திரைப்படத்தை நான் பார்த்தவரை நினைவுகூரவேயில்லை. இது கலாசார மறதி. ஜெய்பீமில் பாதிக்கப்பட்டவர் ஏதோ ஒருவகையில் வெற்றிபெறுகிறார். ஆக்ரோஷிலோ இந்த அமைப்பில் அப்படிப் பாதிக்கப்பட்டவன் வெற்றியடையவே முடியாது என்ற காஃப்காவிய முடிவு வருகிறது. அதுகூட அந்தப் படம் மறக்கப்பட்டதற்குக் காரணமாக இருக்கலாம்.

சென்ற ஆண்டு பெருந்தொற்றின் இரண்டாம் அலையில் கூட்டம்கூட்டமாக சாதி, வர்க்க பேதமேயின்றி பிராண வாயுக்காகவும், இறுதிக்கடனுக்காகவும் மருத்துவமனைகளிலும்  சுடுகாட்டிலும் நோயாளிகளும் சடலங்களும் காத்திருந்த அவல நிகழ்ச்சிகளைக் கூட நமது ஞாபகத்தில் தங்கவிடாமல் ஊடகங்கள் இப்படித்தான் மறக்கடித்து விட்டன. 

தன்வயமான, தனிப்பட்ட, அந்தரங்கமான ஆசாபாசங்கள், காம குரோத உந்துதல்களைக் கொண்ட உயிர்வாழ்க்கையிலிருந்து ஒரு மேலான பொதுவாழ்க்கையை அறம், கலை போன்ற கற்களின் வழியாக பிரமாண்டமான கோபுரமாக எழுப்பக் கனவு கண்ட ஒரே உயிரான மனிதனின் பெருங்கதையாடலை 21-ம் நூற்றாண்டு தோல்வியடையச் செய்துவிட்டது. அந்த முடியாத கோபுரத்தின் இடிபாட்டில் பிறந்த குழந்தைதான் இசை. லட்சியம், உன்னதம், தத்துவம், நம்பிக்கை, அறம் அவை சார்ந்த தீவிரங்கள் எல்லாம் காலி மதுக்குப்பிகளாகவும் பிய்ந்த பிளாஸ்டிக் குவளைகளாகவும் நொதித்து நாறத் தொடங்கிய சைட் டிஷ்களாகவும் கிடக்கும் இடத்தில் பிறந்தவர் இசை. 90-கள் வரை செயல்பட்ட கருத்தியல், அரசியல் லட்சியங்களின் படிமமாக இசையின் முதல் கவிதைத் தொகுதியில் விவரிக்கப்படும் கதாபாத்திரமான குணசேகரன் இந்த உலகத்திலிருந்து நீங்கிய இடத்திலிருந்து இசை பிறக்கிறார். எதிர்ப்புகளும் போராட்டங்களும் உலகெங்கும் கழுத்தை நெரித்து ஒடுக்கப்பட்ட நிலையில், தமிழகத்துக்குப் புவியியல் ரீதியாக மிக அருகில் ஈழத்தில் சகோதரத் தமிழினத்தின் மேல் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை நிகழ்வு, எஞ்சியிருந்த கடைசி நம்பிக்கையின் குரல்வளையையையும் நெரித்துவிட்ட தடயங்களிலிருந்து இசை பாடத் தொடங்குகிறார். 

கழிவிரக்கமும், நினைவுகளிலிருந்து தப்பிப்பதற்கான தற்காலிக மறதிகளும் சேர்ந்து நம்பிக்கையும் லட்சியங்களும் உறுப்புகளைக் காவு வாங்கிய நிரந்தர ஊனமும் சேர்ந்து உலகத்தைச் சற்றே கோணலாகப் பார்க்கும் கேலியுணர்வை இசையின் கவிதைகளுக்கு நிரந்தரமாக அளித்துவிட்டது. 'குள்ளமாய் ஒரு காதல்' கவிதையில் அந்த உடல் குறைபாடுடையவன் இப்படித்தான் தோன்றுகிறான். அவன் தன் உடல் சமநிலையின்மையைக் கழுத்தை வெட்டி வெட்டி விமர்சனத்துடன் கண்டனத்துடன் எதிர்கொள்கிறான். அந்த ஊனத்தில் அவனது தோல்வியில் ஒட்டுமொத்த சமகாலத் தமிழனின் தோல்வியையும் ஏக்கங்களையும் கழிவிரக்கத்தையும் சேர்த்துக் கொண்டதுதான் இசையின் மாபெரும் வெற்றி என்று சொல்வேன். 

சென்ற நூற்றாண்டின் முதல் பாதியிலேயே தமிழனின் அத்தனை ஆசைகளையும் நிராசைகளையும் லட்சியங்களையும் தளம் மாற்றி அவனது எதார்த்தத்தை மாபெரும் சொப்பனமாக்கிய தமிழ் சினிமா, இசையின் கவிதைகளில் குறிப்பீடுகளாக வந்துகொண்டே இருக்கிறது. இசையின் 'லட்சுமி டாக்கீஸ்' தமிழன் இன்னும் படம் முடிந்து வெளியே வராத திரையரங்குதான். லட்சுமி டாக்கீஸில் தமிழர்களின் ரத்தத்தைக் குடித்த மூட்டைப் பூச்சிகளை மட்டும் இசை தனது கவிதையில் குறிப்பிடவில்லை. லட்சுமி டாக்கீஸில் கேட்கும் குரல்களைப் போலத்தான் இசையின் கவிதைகளில் தமிழ் தன்மை கேட்கிறது. லட்சுமி டாக்கீசிலிருந்தே பிரத்யேக குரல், சிரிப்புடன் நமது அரும் நினைவை மீட்டும் 'மேயாத மான்' கவிதையாக எழுகிறது. சொல் மகாலிங்கம் என்று சொல்லும் போது மாபெரும் எதிரொலி அந்தக் கவிதையில் ஏற்படுகிறது. மான் மட்டுமல்ல லிங்கங்களும் அங்கே பெருகுகிறார்கள். 

எத்தனை லிங்கங்கள் சேர்ந்து ஒரு மகாலிங்கம் ஆகிறது சொல். எத்தனை லிங்கங்களின் கனவுகள் சேர்ந்தது மகாலிங்கம் சொல். ஒரு லிங்கம் மகாலிங்கமாக இருக்கமுடியுமா? ஒரு மகாலிங்கம் தான் இந்த உலகத்தில் இருக்கிறதா? ஒரு மகாலிங்கத்தின் மூல ஆற்றல்தான், அத்தனை லிங்கங்களாகப் பெருகுகிறதா?  ஒரு லிங்கம்  சக லிங்கத்தை ஆராதிக்க முடியாமல் தான் அது மகாலிங்கத்தை ஆராதிக்கிறதா? லிங்கங்கள் தம்முடையதை மறப்பதற்காக மகாலிங்கத்தை ஆராதிக்கிறதா. சொல் மகாலிங்கம். சொல்.

2

தமிழ் பொது மனிதனின் குரல் தமிழ்க்கவியின் குரலாகவே நவீன கவிதையில் விக்ரமாதித்யன், மகுடேஸ்வரன் கவிதைகள் வழியாக நாம் கேட்டிருக்கிறோம். தமிழனின் அறிவு, தமிழனின் அரசியல், தமிழனின் கழிவிரக்கம், தமிழனின் ஆசாபாசங்கள், தமிழனின் வரையறைகள், தமிழனின் வெற்றி தோல்விகளின் உயரத்திலேயே தொனிக்கும் குரல் அது. அதற்கு அங்கதம் மற்றும் வக்கிர நவிற்சியைச் சேர்த்தவர் இசை. தமிழனின் Attention Span அளவுக்கே இசையின் கவிதைகளிலும் கவனமும் நிலைத்தலும் நிகழ்கிறது. 

இசையின் உள்ளடக்கத்துக்குப் பழைய மரபொன்றும் உண்டு. இசையிடம் நேர்ப்பேச்சில் அதைப் பகிர்ந்துமிருக்கிறேன். 

இறுகப்பிடித்தவன் சட்டி சுட்டதடா என்று புலம்பும் உள்ளடக்கம் தான் அது. இசையில் நிலையாமையின் துயரம் கேலியாக மாறுகிறது. நிலையாமையின் துயரம் மூலையில் குந்தியிருப்பதனை நோக்கிக் கண்களைக் குவித்துத் தப்பிக்கிறது. நிலையாக இருக்கும் என்ற நம்பிக்கைகள் எல்லாம் தோற்றுப் போகும்போது ப்ளம் கேக் என்னும் நற்பொருளில் ஆறுதல் அடைகிறது. லூஸ்ஹேர் கவிதை, நவீன பட்டினத்தாரின் கவிதைதான். பாத்திரத்தை இறுகப்பிடிக்கும் போதுதான் சுடும்போது வலிக்கவும் செய்யும். பாத்திரத்தை நம்பி இறுகப்பிடித்தால் தான் சுட்டதின் புகாரும் ஏமாற்றமும் கூடுதலாக இருக்கும். பட்டினத்தாரை எதிர்த்து ஓடி, பட்டினத்தார் இருக்கும் இடத்துக்கே இசை திரும்பத் திரும்ப வருகிறார். 

மரபு அத்தனை விடாப்பிடியாக உள்ளடக்கத்தில் இசையைப் பிடித்திருக்கிறது. பாஸ்வேர்டுகளை ஒழித்து வைப்பது பற்றிய கவிதையைப் படிக்கும்போதும் அந்த எதிரொலி அனுபவம் எனக்குக் கிடைத்தது. 

ஷண்முக சுப்பையாவின் கவிதை அது

வீட்டைச் சுற்றி

தோட்டம் போட்டேன்

தோட்டத்தைச் சுற்றி வேலி போட்டேன்

வேலியைச் சுற்றி

காவல் போட்டேன்

காவலைப் பற்றி 

கவலைப் பட்டேன். 

000

இசையின் பகடியும் நகைச்சுவையும் தமிழ் வாசக சமூகத்தில் அத்தனை கொண்டாட்டத்துக்கும் ஏற்புக்குரியதுமாக இருப்பது பற்றி நாம் சற்றே பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. விக்ரமாதித்யனின் கவிதை சிறு துணுக்கு வழியாக இதைப் பரிசீலிக்கலாம். 

ராஜாவுக்கு விதூஷகன்

விதூஷகனுக்கு.

 விதூஷகனுக்கு என்ற கேள்வியில் பெரும் மௌனம் இருக்கிறது. விதூஷகனைச் சுற்றி ஒரு பார்த்தும் பாராமை படர்ந்துவிடுகிறது. விதூஷகன் தனிமையாக இருக்கிறான். 

அரசியல், கருத்தியல், இலக்கியம் எல்லாவற்றையும் நுகர்வாகவும் பொழுதுபோக்காகவும் மாற்றிக்கொண்ட ஒரு சமூக வாழ்க்கையில் ஒரு குள்ளமான காதலைப் போல, குள்ளமாக இருக்கும் பகடியை, கேலியை, அங்கதத்தை சமூகம் தன்னை விமர்சிக்கவும், கிச்சுகிச்சு மூட்டவும் இசையை அனுமதித்து அங்கீகரிக்கிறதா? அப்படியான தேவை இருக்கிறதா? 

பெருந்தன்மையோ, பெருமையோ இல்லாத குள்ளர்களாலேயே சமூகம் இன்று பரிபாலிக்கப்படுகிறது. பிரதமர் அலுவலகத்திலிருந்து நவீன கலை, இலக்கியம் வரை ஆட்சி செலுத்துபவர்கள் இந்தச் சிறுமனம் படைத்த குள்ளர்கள்தான். பிளாக்மெயிலர்கள், ட்ரோலர்கள், மீம் படைப்பாளிகளின் மனநிலைகள் தீவிரமான கலைஞர்களுக்குள்ளுமிருந்து மேலெழுந்து வருகின்றன.   

கண்ணுக்குத் தெரியும் வரை அழிவை உருவாக்கப் போகும் வால் நட்சத்திரத்தை நாட்டின் அதிபர் முதல் ஊடகங்கள், பொதுமக்கள் வரை உணராமல் பொழுதுபோக்கிலும் வேடிக்கையிலும் இருக்கும் 'டோன்ட் லுக் அபான்' அமெரிக்கத் திரைப்படத்தில் வரும் சமூகத்தைப் போலத்தான் நாம் இருக்கிறோம். அழிவு வரும் வரை மேலே பார்க்காதே; மேலே பார்க்காதே.  

அப்படிப்பட்ட ராஜாவுக்கு அவனை ராஜாவாக வைத்திருக்கும் சமூகத்துக்கு அவனை விடக் குள்ளமான விதூஷகன் தேவையாக இருப்பது போல, நமக்கு, இன்றுள்ள அமைப்புக்கு தனது பிரதியுருவமாக வடிவேலுகளும் அவர் சார்ந்த மீம்களும் தேவையாக இருப்பது போல, இசையின் கவிதைகளும் அத்தேவையை வேறு புறத்திலிருந்து நிறைவேற்றுகிறதா? 

இந்த அபாயத்தையெல்லாம் இசை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

000    

நிலையாமையின் பெரும் ஒழுக்கில் அநித்யமான பொருள்களுக்கு, சந்தர்ப்பங்களுக்கு, சூழல்களுக்கு தனது கவிதைகள் வழியாக நித்தியத்தை வழங்கிய இசை, இப்போது வெளியிட்டுள்ள உடைந்து எழும் நறுமணம் கவிதைகள் வழியாக, இங்கேயே இந்தப் பூமியிலேயே  இன்மையைப் பரிசீலிக்கத் தொடங்கியிருக்கிறார். இருப்பின் இப்பாலிலிருந்து அப்பாலைப் பார்ப்பதற்கான முயற்சி அது. காண்பதற்கும் பார்ப்பதற்கும் உள்ள தொலைவைக் கண்டு அடைந்திருக்கிறார். அங்கே இன்மை மிகச் சிறுகணமாக இனிக்கத் தொடங்குகிறது. அங்கே குழப்பம் இல்லை. அந்தச் சிறுகணம் அத்தனை தெளிவாக இருக்கிறது. கண்டடைதல், தீர்தல், அடைதல் இருக்கிறது. ஆனால் அந்த இடம் ஊசிமுனை போன்றது; தரிக்க முடியாதது. ஓஷோவும் ஜே. கிருஷ்ணமூர்த்தியும் தேவதேவனும் சுட்டிக்காட்டிய ஊசிமுனைகள் அவை. அமெரிக்க போலிஸ் கைது செய்யும்போது ஓஷோவுக்கு அந்த ஊசிமுனைகள் உதவவேயில்லை.  

ரத்தக்கறை கவிதையில் மயில் தோன்றுகிறது. காமமும் குரோதமும் இருக்கும் குப்பைக்கூளத்திலிருந்து எழுந்து ஓடிப் பறந்து மறைகிறது மயில் நமது இப்போதைய கலை போலத்தான் தொனிக்கிறது.

சுகந்தன் 


அதன் நறுநெடியோ

என் மூக்கைத் துளைக்கிறது.

ஆனால்

அந்த சின்னஞ்சிறு நீலமலர்

பள்ளத்தாக்கின்

அதி ஆழத்தில் உள்ளது

எனில்

மணப்பது எதுதான்?

நான்தான். 


இந்தக் கவிதை படித்தவுடன் அபாரமான நறுமணத்தை அதன் உத்தேசத்துக்கேற்ப பரப்பவே செய்கிறது. ஆனால், இது நவீன கவிதையா? ஒரு ஜென் கவிதையின் நிழல் அல்லவா இது என்று உடனடியாகத் தோன்றுகிறது. இருபத்தோறாம் நூற்றாண்டு கொண்டுவந்துள்ள எட்டு நாற்கரச் சாலையை எதிர்கொள்ள பகடியைப் போல, இந்த க்ஷண நேர இனிமைகளை உறக்கத்தக்கு வலிந்து இட்டுச் செல்லும் கோடாலித் தைலங்களை நிறைய படைக்கத் தொடங்கிவிட்டோமா என்றும் தோன்றாமல் இல்லை. 

ஏனெனில் இதில் இசை மட்டுமல்ல குற்றவாளி. ஷங்கர்ராமசுப்ரமணியன், லக்ஷ்மி மணிவண்ணன், வே நி சூர்யா எல்லாரிடமும் வேறு வேறு ரீதியில் இந்தக் கோடாரித் தைலங்கள், திருநீற்றுப் பொட்டலங்கள் கவிதைகளாக இருக்கின்றன. 

கவிஞனாக நான் எனக்காகவும் என் சக கவிகளுக்காகவும் பிரார்த்தித்துக் கொள்வது இதுதான்.

என்னை மேலும் குழப்பத்துக்கு

பயங்கர அழகுகளுக்கு

சமன் குலைக்கும் காதல்களுக்கு

புதிர்களுக்கு

அந்தப் புதிர்களைத் தீண்டத் திராணியுள்ள மொழிக்கு

மனிதர்கள் திளைத்துத் திகைத்து நிற்கும் 

எட்டாயிரம் சாலைகளில் 

செலுத்திக் கொண்டு போ

உக்கிரமான அன்புக்கும் 

மகத்தான குரோதங்களுக்கும்

பிரமாண்டமான கொலைகளுக்கும்

போராட்டங்களுக்கும்

வகைதொகையில்லாத 

பிறப்பு இறப்பு

வாழ்க்கைகளுக்கும்

என்னை அழைத்துப் போ கவிதையே

000

13 ஆண்டுகள் என்பது மிகவும் குறுகிய காலம். ஆனால் இந்தக் குறுகிய காலத்தில் இசை தனது கவிதைகளில் 'இசை'த் தன்மையை நீக்கமற உருவாக்கியிருக்கிறார். தமிழ் நவீன கவிதைகளின் ஆந்தாலஜி ஒன்றை உருவாக்கினால் அதிகமான சிறந்த கவிதைகளைப் பங்களிப்பவராக இசை இருப்பார். 

உடைந்து எழும் நறுமணம் தொகுதியிலும் சிறந்த கவிதைகள் என்று சொல்லத்தக்க கவிதைகளாக விளையாட்டு, பூனையல்லாத பூனை, பாட்டின்பம், பயணம், அமுது, பழுதான ஒன்றிலிருந்து பறந்துவரும் மயில், ஊரடங்கு கவிதைகளைச் சொல்வேன். 

நான், எனது வாசிப்பில் இசையின் தன்மை குறைவாக இருக்கும் கவிதைகளுடனேயே அதிகம் சார்பைக் கொள்கிறேன். இசை, இசையற்ற தன்மையை நோக்கி நகரவேண்டிய திருப்பமாக இந்த தொகுப்பைக் கருதுகிறேன். 

போதும் இசை விளையாட்டு.

Comments