Skip to main content

திக் நியட் ஹானின் காதல்



நம் காலத்தில் வாழும் வியட்நாமைச் சேர்ந்த பவுத்தத் துறவி திக் நியட் ஹான், தன் இளம்பருவத்தில் இளம் பிக்குணியுடன் ஏற்பட்ட காதலைப் பற்றி தனது உரையொன்றில் பகிர்ந்து கொண்ட அனுபவம் இது.

“ஒரு துறவியாக, காதலில் விழக்கூடாது. ஆனால், காதல் நமது உறுதிப்பாடுகளை உடைத்துவிடக் கூடியது.” என்று அந்த நிகழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறார். ’கல்டிவேட்டிங் தி மைண்ட் ஆப் லவ்’ என்ற நூலில் இதைப் பற்றி எழுதியுமிருக்கிறார். ஒரு மென்மையான காதல் கதை படிப்படியாக பவுத்த ஞானத்தைத் தெரிவிக்கும் செய்தியாக அவரது எழுத்தில் அது மாற்றம் பெறுகிறது.

பவுத்தத்தில் ஒரு துறவியின் காதல் தவறாகப் பார்க்கப்படும் சூழ்நிலையில், திக் நியட் ஹான் தனது அனுபவத்தை நேர்மையாகப் பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1950-களில் மக்கள் சேவையின் அடிப்படையில் பவுத்தத்தை உருவாக்க திக் நியட் ஹான் முயற்சி செய்தபோது அவர் அந்தப் பெயர் தெரியாத பிக்குணியைச் சந்தித்ததாகக் கூறுகிறார்.

“நான் அவளைப் பார்த்தபோது, அது முதல்முறை சந்திப்பாக நிச்சயமாக இல்லை. முதல்முறை சந்தித்திருந்தால் அத்தனை சுலபத்தில் அது நிகழ்ந்திருக்குமா? ஒரு பத்திரிகையில் நான் புத்தரின் சித்திரத்தைப் பார்த்திருந்திருக்காவிட்டால் எங்கள் சந்திப்பு சாத்தியமாகியிருக்காது. அவள் பிக்குணியாக இருந்திருக்காவிட்டால் நான் அவளைக் காதலிக்க முடிந்திருக்காது.”

“சக மனிதர்கள் மீதான பரிவு, நேசம், சமூகத்தில் பவுத்தக் கருத்துகளைப் பரப்புதல், அமைதி, சமாதான முயற்சிகளில் நான் கொண்டிருந்த ஈடுபாடு எவ்வளவோ அத்தனை ஈடுபாட்டை அவரும் கொண்டிருந்தார். அவரது கையைப் பற்றுவதோ அவரது நெற்றியில் முத்தமிடுவதையோ கூட அத்துமீறலாக உணர்ந்தேன். எனது வாழ்க்கையில் எதுவெல்லாம் முக்கியமென்று நினைத்தேனோ அதன் உருவகமாக இருந்தார். அந்த உருவத்தை நான் சிதறடிக்க விரும்பவில்லை.”

அந்தப் பிக்குணியுடன் வெகுநேரம் பேசிவிட்டு வந்தபின்னர், தூங்காமல் இருந்த இரவொன்றை அவர் நினைவுகூர்கிறார்.

“எனக்கு தூக்கமே வரவில்லை. அவருடன் அமர்ந்திருக்க வேண்டும்; அவரைப் பார்த்துக்கொண்டேயிருக்க வேண்டும். அவருடனான உரையாடலைத் தொடர்ந்துகொண்டேயிருக்கவ வேண்டுமென்று மனம் விழைந்தது. அந்த இரவின் பல தருணங்களில் எழுந்து சென்று அவரது அறைக்கதவைத் தட்டி என்னுடன் பேசுவதற்கு அழைக்க வேண்டுமென்ற ஆர்வமும் ஏற்பட்டது.”



திக் நியட் ஹான் தான் நேசித்தவரின் அறைக்கதவைத் தட்டவேயில்லை. அதற்குப் பதிலாக அந்த ஏக்கம் அவருக்கு ஒரு போதனைத் தருணமானது. அந்தப் பெண்ணின் மீதான தனது பந்த உணர்வுகள் இரண்டு பேரையும் எப்படிப் பாதிக்கும் என்பதை நினைத்துப் பார்த்தார். தம்மை அறியும் பயணத்தில் அவர்கள் மேற்கொண்ட உறுதிமொழிகள் ஞாபகத்துக்கு வந்தன. புத்தரின் மொழி வாயிலாக அந்தப் பிக்குணியின் மேல்கொண்ட நேசத்தை அனைத்து உயிர்கள் மீதானதாக மாற்றிக் கொண்டார்.

“நான் அவளை எல்லா இடத்திலும் காணத் தொடங்கினேன். காலத்தில், அவர் மீது கொண்ட எனது நேசம் மறையவில்லை, ஆனால் அது ஒரு நபர் மீதானதாக இல்லாமல் போனது.” என்கிறார்.

“நீங்கள் அமைதியாகப் புன்னகைக்கும்போது, மனம்நிறை கவனத்துடன் சுவாசிக்கும்போது, அதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். சுயம், ஒரு நபர், ஒரு உயிர் பற்றிய கருத்தோட்டமொன்றில் நீங்கள் சிக்கிக் கொண்டால், எனது உண்மையான காதலை உங்களால் புரிந்துகொள்ளவே முடியாது. அதுதான் ஆராதனை; அதுதான் நம்பிக்கை.” என்று சொல்கிறார் திக் நியட் ஹான்.

“அடுத்து என்ன நடந்தது என்று என்னிடம் கேட்கலாம். சுயம் என்பது சுயமற்ற வஸ்துக்களால் ஆனது என்பதை நீங்கள் மறந்தால் மட்டுமே அப்படிக் கேட்கமுடியும்”

சுயம் என்பதற்கு தனிப்பட்ட இருப்பு என்பது கிடையாது என்பதுதான் மகாயான பவுத்தத்தின் மையம். திக் நியட் ஹான் தன் தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பெற்ற ரசவாதத்தை நம்மிடமும் தொற்றவைக்கிறார்.

இன்னொருவர் மீதான பிரியம் என்பது உலகளாவிய நேசத்தின் ஒரு துண்டுதான் என்று சொல்லும் திக் நியட் ஹான், நாம் அனுபவிக்கும் எந்த நேசத்துக்கும் துவக்கமோ முடிவோ இல்லை என்றும் அது எப்போதும் மாற்றத்திலேயே இருந்துகொண்டிருக்கிறதென்றும் சொல்கிறார். இப்படியாகத் தனது அம்மாவின் மீது கொண்ட பிரியத்தையும் சொல்லி அந்த உரையை முடிக்கிறார்.

“எனது அம்மா இறந்து ஏழு வருடங்களுக்குப் பிறகு, நான் திடீரென்று நள்ளிரவில் விழித்துக் கொண்டேன். வெளியே சென்று பார்த்தபோது, நிலவு வானில் சுடர்ந்து பளபளத்தது. அதிகாலை இரண்டு, மூன்று மணிக்குக் கூட, நிலவு அத்தனை ஆழமாக, அமைதியாக, மிருதுவாக ஒரு தாய், தன் குழந்தையிடம் கொண்டிருக்கும் நேசத்தைப் போல ஒளியைப் பொழிந்து கொண்டிருந்தது. நான் அவளது அன்பில் திளைத்தேன். என் அம்மா இன்னும் உயிருடன் இருக்கிறார்; அவர் எப்போதும் இருப்பார் என்று உணர்ந்தேன்.”

திக் நியட் ஹான், தான் நேசித்தவளைப் பிரிந்த தருணத்தைச் சொல்கிறார். இந்த ஒரு இடத்தில்தான் அவள் வெளிப்படுகிறாள் நம்மிடம்.

“நாங்கள் பிரிந்த தருணத்தை நினைத்துப் பார்க்கிறேன். நாங்கள் அருகருகே அமர்ந்திருந்தோம். அவளும் நிராசையால் நிரம்பியவளாகத் தெரிந்தாள். எழுந்து நின்று, எனக்கு அருகே வந்து எனது தலையைக் கைகளில் ஏந்தி மிக இயற்கையாக நெருங்கி அணைத்துக் கொண்டாள். என்னை அணைத்துக் கொள்வதற்கு அனுமதித்தேன். உடல் ரீதியான தொடர்பு முதலும் முடிவுமாக அதுதான்.”

Comments

அருமை . யூமா வாசுகியின் மஞ்சள் வெயில் நினைவுக்கு வந்தது.
பிரிவின் வலியை முழுமையாக வெளிப்படுத்தும் வலிமையான சொற்கள்... ஆனால் கவித்துவ ஒத்தடத்துடன்...
அஞ்சலி செலுத்துவதில் கூட உங்களின் தனித்துவம் அத்தனை அழகானதாக இருக்கிறது. திக் நியட் ஹானை என்றும் எங்கள் நினைவிலிருக்கச் செய்துள்ளீர்.
//இன்னொருவர் மீதான பிரியம் என்பது உலகளாவிய நேசத்தின் ஒரு துண்டுதான் என்று சொல்லும் திக் நியட் ஹான், நாம் அனுபவிக்கும் எந்த நேசத்துக்கும் துவக்கமோ முடிவோ இல்லை என்றும் அது எப்போதும் மாற்றத்திலேயே இருந்துகொண்டிருக்கிறதென்றும் சொல்கிறார்//

மிக முக்கியமான ஒரு மனநிலையாக இருக்கிறது, சங்கர். பொதுவாக இதிலிருந்து வெறுப்பை நோக்கி மனித மனம் செல்லும் சூக்குமத் தேடல்தான் உண்மையான தேடலாக, புத்தரின் தீட்சையாக இருக்கிறது. அருமை.