Skip to main content

மதியத்தில் டெல்லிக்கு திரும்புவதை நான் கனவு காண்கிறேன் - ஆஹா சாகித் அலி



புராணாகிலாவில் நான் தனியாக 
தர்யாகஞ்சுக்குச் செல்லும் பேருந்துக்காகக் காத்திருக்கிறேன்
அது வந்துகொண்டிருப்பதை நான் பார்க்கிறேன் 
நானோ வெறுங்கையோடு நிற்கிறேன் 
"ஏறு, ஏறு" என்று யாரோ கத்துகிறார்கள் 
வருடக்கணக்கில் நான் இந்தச் சில்லறையை உனக்காகச் சேர்த்துவைத்திருக்கிறேன். பார்
ஒரு கை திறக்கிறது, முழுக்க வெள்ளி நாணயங்கள் 
ஏறு ஏறு" அந்தக் குரல் நிற்கவேயில்லை 
அங்கே எனக்குத் தெரிந்தவர் யாரும் இல்லை. ஒரு போலீஸ்காரன் 
கையில் விலங்குகளுடன் 
எனது பயணச்சீட்டைக் கேட்கிறான்.



நான் ஓடும் பேருந்திலிருந்து குதித்திறங்குகிறேன் 
எனது கேசத்திலிருந்து வியர்வை வழிகிறது 
நான் டால் மியூசியத்தை ஓடிக் கடக்கிறேன் 
டைம்ஸ் ஆப் இந்தியா கட்டிடத்தின் தலைப்புச் செய்திகளை 
கடக்கிறேன், பீகார் சிறையில் குருடாக்கப்பட்ட கைதிகள் 
நிலச்சுவான்தார்களால் தீக்கிரையாக்கப்பட்ட அரிஜன கிராமங்கள் 
ஓடி இரைக்கிறேன் 
நான் கோல்சா திரையரங்குக்கு வெளியே 
தர்யாகஞ்சில் நிற்கிறேன்.

சிகரெட்டைப் பற்றவைத்தபடியே சிரித்தபடி 
சுனில் அங்கே நிற்கிறான் 
பத்து வருடங்கள் இருக்கும். நீ மாறவேயில்லை. உனது குரல் தான் பேருந்தில் கேட்டது.” என்று நான் சொல்கிறேன் 
படம் ஆரம்பிக்கப் போகிறது, உனக்கு ஒரு டிக்கெட் வாங்கியிருக்கிறேன்.” 
என்றான்
நாங்கள் உள்ளே ஓடுகிறோம்
அனார்கலியைத் தூக்கிச் செல்கிறார்கள்
அவளது காது வளையங்கள் பளிங்குத் தரையில் கிடக்கின்றன 
எந்த நேரமும் அவள் உயிருடன் புதைக்கப்படலாம்
ஆனால் அது முடிவில் அல்லவா" என்று கேட்டு 
சுனிலிடம் திரும்புகிறேன். அவன் எங்கும் இல்லை 
இருக்கையைக் காட்டும் பணியாளர் 
என் தோளைப் பிடித்து 
எனது டிக்கெட் பத்தாண்டுகள் பழையதென்று சொல்கிறார்.



மீண்டும் நான் வெறுங்கையன் ஆகிவிட்டேன் 
நான் காத்திருக்கிறேன், தனியாக, புராணா கிலாவில் 
அடுத்தடுத்து காலிப் பேருந்துகள் நிற்காமல் செல்கின்றன 
திடீரென்று சுற்றிச்சூழ 
யாசகம் எடுக்கும் பெண்கள் குழந்தைகளுடன் 
எனக்காக அழுதபடி 
என்னிடம் காசு கேட்கின்றனர்

(புராணாகிலா, டெல்லியிலிருக்கும் பழைய கோட்டை)

Comments