Skip to main content

பேஹம் அக்தரின் நினைவில் - ஆஹா சாகித் அலி


1

ஒவ்வொரு செய்தித்தாளிலும் உனது மரணம் 

சட்டகமிட்ட கருப்பு-வெள்ளைப் புகைப்படங்களாக 

அஞ்சலிக் குறிப்புகளாக 
 
வெதுவெதுப்பான, நீலமான, சாதா வானம்
 
உற்பாதம் நடந்த சுவடே இல்லாமல்
 
வரிகளுக்கிடையியே கூட தேம்புதல்களுக்கு
 
இடம் இல்லை.

நான் உலகின் முடிவு குறித்து கதைக்க விரும்புகிறேன்.


2.

இன்னும் உனது விரல்கள் பசிகொண்ட 

பைரவியை அளக்கிறதா 

அல்லது மண்போர்த்திய போர்வையை வெறுமனே 

தொட்டுக்கொண்டிருக்கிறதா?

அந்த மரணம் தாங்கிய விதவை, கஜல் 

இருண்ட அறைகளில் உன்னிலிருந்து மீளமுடியாமல் 

அழுதுகொண்டிருக்கிறாள்

வானத்தை அவநம்பிக்கை கொண்டு சூழும் 

நிலவு நனைத்த வெண்ணிறத்தை 

அவள் துயர் உடையாக அணிந்திருக்கிறாள் 

காலிப், மிர், பெய்ஸ் ஆகியோரிடமிருந்து 

தசாப்தங்களாகப் பக்குவம் பெற்ற ஸ்வரத்தைக் கொண்டு 

பேரழிவுக்கு இறுதியாக பொலிவைக் கொடுத்துவிட்டாய்.

ஸ்வரமற்ற ஒரு ராகத்தைக் கண்டுபிடிக்கிறேன்.


3

உன்னை குளிர்ந்த சேற்றுக்குள் நாடுகடத்தும் 

மூடத்தனமும் வெள்ளைநிறமும் கொண்ட இந்தச் சவப்பேழை 

தனது அறியாமையால் என்னை வியப்பிலாழ்த்துகிறது.

காலிப் பெருமிதத்தை அணிந்துள்ளது அது 

நாடோடியின் எதிரொலியைத் தோலுரித்துக் கொண்டிருக்கிறது 

காலத்தின் நிழலைத் தோளில் போட்டுக்கொண்டு 

பூமியின் கௌவிப் பிடிக்கும் நகங்கள் வரை

நான் உன்னைத் தொடர்கிறேன்

எலும்பின் சுதந்திரத் தருணம் அதில் 

வரலாற்றின் கசந்த அகந்தை.


4

மரணத்தை குறுக்குவிசாரணை செய்யவே முடியாது யாரும் 

மரணம் நடந்த சூழ்நிலை சாட்சியங்களை எடுத்துக் கொண்டிருக்கிறேன் 

உங்கள் ஆவணங்கள், படங்கள், இசைநாடாக்கள் அத்துடன் 

ஒரு விட்டேத்தியான வாக்குமூலத்தையும்.

மரணத்துக்கு எதிராக உங்கள் தரப்பில் நான் வழக்காட விரும்புகிறேன் 

ஆனால் நசநசத்து குளிர்ந்திருக்கும் சமாதியில் 

மல்ஹாரி மழையை ஒட்டித் தைப்பதற்கு ஏங்கி 

தனது ஸ்வரங்களுக்குள் உன்னைப் போரத்துகிறது

நீயோ பூரணமாகத் தப்பித்துவிட்டாய்.


மழை பேசாது 


வாழ்வும் தான் 

மறுபடியும் ஒருமுறை, உள்ளே மூடிக்கொண்டுவிட்டது

துக்கத்தின் பருவத்தில் காற்று சந்திக்கும் இடத்தில் 

பூமியை மீண்டுமொரு முறை உறுதிசெய்தபடி

Comments