Skip to main content

பொன்னொளி சூடிய நாட்கள்

மலையாளக் கவிஞர் பி. ராமன் தனது புதிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு சென்னை வருகிறார் என்று இசை சொன்ன போது பி. ராமனை 23 ஆண்டுகளுக்கு முன்னர் குற்றாலம் மெயின் பால்ஸ்க்குக் கீழே குளித்த ஈரம், சிரிக்கும் கண்களுடன் பார்த்தது ஞாபகத்துக்கு வரவில்லை. நிகழ்ச்சி அன்று காலை அவரைப் பார்த்தவுடன் நாம் பார்த்திருக்கிறோம் என்று சொன்னார். ஆமாம், ஆமாம் என்று உறுதிப்படுத்திக் கொண்டேன். கலாப்ரியா நடத்திய குற்றாலம் பட்டறைக்காகப் போயிருந்தபோது, ஜெயமோகன், பாவண்ணன் ஆகியோருடன் பி. ராமனை பார்த்தது. இப்போது எனக்கு 47 வயது; அவருக்கு 49. 

இசையின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகவே மனைவியும் கவிஞருமான சந்தியாவுடன் வந்திருந்த ராமன் எங்களுடன் சகஜமாகிவிட்டார். சகஜமாகியவுடன் செல்போனை எடுத்து எனது 'ஞாபக சீதா' கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளின் மொழிபெயர்ப்பை வாசிக்கத் தொடங்கினார். எனது கவிதையின் உள்ளடக்கம், வெளிப்பாட்டை மிகவும் நெருங்கும் மொழிபெயர்ப்புகள் அவை. அதே வேளையில் எனது கவிதையில் இல்லாத இசைத்தன்மை, பாடல் தன்மை அவர் வாசிக்கும் போது சேர்ந்துவிட்டிருந்ததை ரசித்ததோடு, எனது கவிதையில் இல்லாதது என்றும் குறிப்பிட்டேன். அந்த இசைத்தன்மையைச் சற்று நீக்கினால் எனது கவிதைகளின் சிறந்த மொழிபெயர்ப்புகள் அவை. இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகளையும் மலையாளத்தில் வாசித்தார் ராமன். 

இசையின் நிகழ்ச்சியில் தமிழ் நவீன கவிதைகளின் வரலாற்றை முன்வைத்து விரிவாகப் பேசி அதில் ஏற்பட்ட திருப்பமாக இசையின் கவிதைகளை முன்வைத்து ஒரு ஆய்வுரையென நிகழ்த்தினார். நாற்பது வயதுக்கு மேலேயே தமிழை சிரமப்பட்டுப் படிக்கத் தொடங்கிய பி. ராமனிடம் தமிழ் நவீன கவிதை குறித்த தீர்க்கமான பார்வை இருப்பது ஆச்சரியம். இசையின் கவிதைகளில் இடம்பெறும் குழந்தைகள், விளையாட்டுத்தன்மை குறித்து ராமன் சொன்ன அவதானங்கள் என்னைக் கவர்ந்தன. தமிழிலேயே இன்று அதிகம் பேசப்படாமல் இருக்கும் மலைச்சாமி குறித்துப் பேசி அவரது கவிதையை மனப்பாடமாகச் சொன்னார். எஸ். வைத்தீஸ்வரன், மு. சுயம்புலிங்கம், யவனிகா ஸ்ரீராம், லக்ஷ்மி மணிவண்ணன், பாலை நிலவன், கைலாஷ் சிவன் போன்ற கவிஞர்கள் அவரது கவனத்திலிருந்து விடுபட்டவர்கள் என்று அவரிடம் நான் பகிர்ந்துகொண்டேன். குட்டி ரேவதி, என் டி ராஜ்குமார், சுகிர்தராணி போன்றவர்கள் அங்கே பிரபலமாக இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். ஆற்றூர் ரவிவர்மா செய்த புதுநானூறு கவிதைத் தொகுப்பு தனக்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகச் சொன்னார். ஜெயமோகன் பரிந்துரைத்த பெயர்களும் உதவியதாகக் கூறினார். தமிழ் புனைகதையில் நடந்துள்ள சாதனைகளும், முக்கியமான படைப்புகளும் போதுமான அளவு அங்கே அறிமுகமாகவில்லை என்றார். மோகமுள் நாவலுக்கு நல்ல மொழிபெயர்ப்பு இருந்தும் அது அங்கே பேசப்படவில்லை என்று சந்தியா தெரிவித்தார். தென்றல், சபரிநாதன், வே. நி. சூர்யா ஆகியோரும் மலையாளத்துக்கு மொழிபெயர்க்கப்பட வேண்டியவர்கள் என்றும் பேசினோம். தமிழ் கவிதை வாசகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் கல்பற்றா நாராயணனை விட டி. பி. ராஜீவனின் கவிதைகள் தமிழ் வாசகர்களுக்கு அதிகமாக அறிமுகமாக வேண்டியவை என்று பி. ராமன் கருதுகிறார்.  

புனைகதையாளர்களாக சாரு நிவேதிதாவும் ஜெயமோகனும் பிரபலமாக இருக்கிறார்கள் என்பதை பி. ராமன் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்குப் பிறகு உரையாடல் களைகட்டி பி. ராமன், பொன் மதுத்திரவம் அளிக்கும் உற்சாகத்தின் படிகளில் ஏறி இன்னும் நிறைய கவிதை மொழிபெயர்ப்புகளை செல்போனைப் பார்த்தபடி வாசித்தார்.  பாடினார் என்றே சொல்வேன். சில நேரங்களில் சந்தியாவும் ராமனும் மலையாளக் கவிதைகளை மலையாளத்திலேயே பகிர்ந்துகொண்டனர். ஒரு கவிதையைக் கேட்டுவிட்டு, இது தமிழில் அருமையாக வந்திருக்கிறதென்று சொன்னார். இல்லை இசை, அவர் இப்போது படித்தது மலையாளத்தில் என்றேன். இசை அந்த உண்மையைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. குறுந்தொகையை பி. ராமன், மலையாளத்தில் வாசித்தபோது இசை அடைந்த அனுபூதியை ஒட்டிய அதே நிலையை நான் அடைந்தேன். தமிழில் அதே பாடலை நான் சற்று சிரமப்பட்டுப் படித்திருக்கிறேன். எனக்கு தமிழ் பழம் கவிதையை இசையைப் போல மேலதிக சரளமாகப் படிக்கத் தெரியாது. தமிழ் சங்கக் கவிதைகளை பி. ராமனின் மலையாள மொழிபெயர்ப்பில் அவர் வாசிப்பிலேயே படித்தால் எனக்கு சங்க கவிதைகள் முழுக்க விளங்கிவிடும் என்று தோன்றியது. சங்க கவிதைகளில் தமிழனுக்கும், மலையாளிக்குமான ஆதிப் பிணைப்பு இருக்கிறதென்று பி. ராமன் குறிப்பிட்டார்.

சந்தியா தான் எழுதிய வலிய அம்மா கவிதையைப் படித்தார். நம் சொந்தத்தில் அத்தனை நெருக்கமாக இல்லாத ஒரு முதியவள், வீடின்றி வெவ்வேறு உறவினர் வீடுகளுக்குச் சென்று தன் வாழ்க்கையைக் கழிக்கும் வலிய அம்மா தான் அவள். எனது தலைமுறை வரை அந்த வலிய அம்மாக்கள், நம் வீடுகளுக்கு நாம் விரும்பியும் விரும்பாமலும் வந்து சென்றிருக்கிறார்கள். அந்த வலிய அம்மா பற்றிய கவிதை அது. நாட்டுப்புறக் கதை சொல்லலின் லயத்தோடு இருந்த கவிதை அது. 

பி. ராமனை அன்று மாலை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தேன். பிரவுனி அவரிடம் நன்றாக அறிமுகமாகிக் கொண்டது. 

ஒரு காலத்தில் எனக்கு நெருக்கமான நண்பனாக இருந்தவனும், 'ஆம் நண்பர்களே அதுதான் நடந்தது' என்ற சிறந்த கவிதைத் தொகுதியைக் கொடுத்துவிட்டு, கவிதையையே திரும்பிப் பார்க்காமல் மொழிபெயர்ப்பு, சினிமா, ஜோதிடம் என்று வேறு திசைக்குச் சென்றவனுமான பி. ஆர். மகாதேவனின் கவிதைகள் செலுத்திய ஆரம்பத் தாக்கம் பற்றி இசை பகிர்ந்துகொண்டது மிகவும் வினோதமான அனுபவமாக இருந்தது. பி. ஆர். மகாதேவனின் முக்கியமான கவிதைகளை நானும் இசையும் சாம்ராஜும் நினைவிலிருந்து எடுத்தெடுத்துப் பகிர்ந்துகொண்டோம். 

எங்களுக்கு இடம் கொடுத்து தங்க வைத்த மகாத்மாவின் வீட்டில் இரண்டாவது நாள், அதிகாலை நாலரை மணிக்கே சிரிப்போடு தொடங்கியது.   

இளங்கோ கிருஷ்ணன், விஷால் ராஜா, சாம்ராஜ், சரோ, ரஃபீக், விஜய ராகவன், வரதன், கவின்மலர், கண்ணன், மிஷ்கின், முத்து, பாலாஜி, சரவண ராஜா, சாம்சங் என மனம் விரும்பும் நண்பர்களுடன் சிரிப்பும் வேடிக்கையுமாக பொன்னொளி தானாக முன்வந்து சூடிக்கொண்ட இரண்டு நாட்கள் அவை. தேங்க் யூ இசை.     

Comments

நிகழ்வு ஒளிப்பதிவு செய்யப்பட்டதா சார்?
அன்பு விஜயகுமார்,

ஒளிப்பதிவு செய்யப்படவில்லை.

ஷங்கர்