Skip to main content

அன்பே சாஹித் - ஆஹா சாகித் அலி


அன்பே சாஹித்,

எந்தக் கருத்தும், பெரும்பாலான ரஷ்யர்களுக்கு இருப்பதைப் போன்ற பிரிக்க முடியாத ரஷ்யா குறித்த கருத்தும் கூட, ஒரு முழு ஜனத்திரளுக்கு எதிரான போரை நியாயப்படுத்த முடியாது.

- எலினா போனர், செசன்யா குறித்து யெல்ட்ஸினுக்கு எழுதப்பட்ட கடிதத்திலிருந்து...

எந்த மனித உயிரோ ஒரு மனிதக் கூட்டமோ, ஒரு நகரத்துக்கு மரண தண்டனை தீர்ப்பை அளிக்கும் உரிமையை வைத்திருக்கவில்லை.

- சார்லஸ் சிமிக்

தொலைதூரத்து நாட்டொன்றிலிருந்து நான் உனக்கு எழுதுகிறேன். எங்கே நாம் வாழ்கிறோமோ அதிலிருந்தும் தொலைவில். நீயும் இருக்க முடியாத அந்த இடத்திலிருந்து. ஒவ்வொருவரும் அவனது முகவரியை தங்கள் சட்டைப் பையில் வைத்திருந்தால் தான் அவனது சடலமாவது வீட்டை வந்தடையும்.

நகரத்தில் வதந்திகள் எங்களை வந்தடைவதற்குள் வழிதப்பி விடுகின்றன. ஆனால் செய்தி இன்னமும் எல்லைப் பகுதி நகரங்களிலிருந்து எங்களை வந்தடைகின்றன. ஆண்கள் சில்லிடும் நீரில் வெறுங்காலுடன் நிற்கக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். பெண்களோ உள்ளே தனியாக இருக்கின்றனர். ராணுவ வீரர்கள் வானொலிகளையும் தொலைக்காட்சிகளையும் உடைத்து நொறுக்குகின்றனர். வெறும் கைகளால் அவர்கள் நமது வீடுகளை சுக்குநூறாக்குகின்றனர்.

ரிஸ்வான் கொல்லப்பட்டதை நீ கட்டாயம் கேள்விப்பட்டிருக்கக் கூடும். ரிஸ்வான் : சுவர்க்கத்தின் வாயிற்கதவுப் பாதுகாவலன். பதினெட்டு வயதே ஆனவன். நேற்று மறைவான காபி விடுதியில்(எல்லாரும் உன்னைப் பற்றி விசாரித்தார்கள்), ஒரு மருத்துவர் - விசாரணை மையத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு பதினாறு வயதுச் சிறுவனுக்கு மருத்துவம் செய்திருந்தார்- சொன்னார் : நான் ஜோதிடர்களிடம் கேட்க வேண்டும் : அந்தப் பையனின் கையில் உள்ள ஆயுள் ரேகை, அவனது கையில் உள்ள ரேகை வலைப் பின்னல் கத்தியால் வெட்டப்படுமென்பதைச் சொல்லியதா?

இன்ஷா அல்லாஹ், இந்தக் கடிதம், தெற்கே நாளைக்குச் செல்லும் எனது சகோதரனால் பெட்டியில் இடப்பட்டு உன்னை வந்து சேரும் என்று நினைக்கிறேன். இங்கே ஒருவரால் தபால் தலைகளைக் கூட வைத்திருக்க முடியவில்லை. இன்று நான் தபால் நிலையத்துக்குப் போனேன். ஆற்றைத் தாண்டி. நூற்றுக்கணக்கான கித்தான் பைகள், அத்தனையும் பட்டுவாடா செய்யப்படாத கடிதங்கள். சந்தர்ப்பவசமாக கீழே தரையில் பார்த்தபோது உனக்கு முகவரியிடப்பட்ட இந்தக் கடிதத்தைப் பார்க்க நேர்ந்தது. அதை உனக்கு இந்தக் கடிதத்துடன் சேர்த்துள்ளேன். நீ தேடிக் கொண்டிருக்கும் யாரோ ஒருவருடைய கடிதமாக அது இருக்கலாம்.

இங்கே விஷயங்கள் வழக்கம்போல போய்க்கொண்டிருக்கின்றன. நாங்கள் எப்போதும் உன்னைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். நீ சிக்கிரம் வந்துவிடுவாயா? வசந்தத்துக்குக் காத்திருப்பதைப் போல உனக்காகக் காத்திருக்கிறோம். நாங்கள் வாதுமை பூக்கள் பூப்பதற்காகக் காத்திருக்கிறோம். அத்துடன் இறைவன் விரும்பினால், நாம் எல்லாரும் நேசத்திலிருந்த அமைதியான நாட்களும், எங்கே நாம் போனாலும் நம் கையிலிருந்த மழையும்.    

Comments