Skip to main content

அறிவின் தோற்றம் பற்றிய விசாரணை


 

நவீன இந்திய சமூக உருவாக்கத்தில் பங்களிப்பு செய்த சீர்திருத்தவாதிகளில் ஒருவரும் துறவியும் கல்வியாளருமான நாராயண குரு, கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லும் விதமாக சம்வாத வடிவில் 15 பாடல்களாக எழுதிய நூல் ‘அறிவு’. மேற்கில் அறிவின் தோற்றம் குறித்து அறியும் ஆய்வுப்புலம் ‘அறிவுத்தோற்றப்பாட்டியல்’ (epistomology) என்ற பெயரில் உள்ளது. இந்தியாவில் வேதாந்த மரபின் ஒரு பகுதியாக அறிவு மற்றும் பிரக்ஞையின் தோற்றமும் அவற்றின் செயல்பாடுகளும் பிரச்சினைகளும் ஆராயப்பட்டுள்ளன.

இந்தப் பின்னணியில் 1887 முதல் 1897 வரையிலான காலகட்டத்தில் நாராயண குரு, நவீன மனிதர்களின் மனப்போக்குக்குப் பதில் அளிக்கும் விதமாக, வேதாந்தத்தின் அடிப்படையில் எழுதிய பிரக்ஞையின் அறிவியலாக இந்த நூல் முக்கியமானது. நாராயண குருவின் வழிவந்த துறவியும் கேரளத்தின்  முன்னணி அறிஞர்களில் ஒருவருமான நித்ய சைதன்ய யதி, நாராயண குருவின் 15 பாடல்களுக்கும் ஆங்கிலத்தில் எழுதியுள்ள தெளிவுரை ‘அறிவு - ஞானத்தின் ஆய்வியல் - நாராயண குரு’ என்ற நூலாகத் தமிழில் வெளிவந்திருப்பது முக்கியமான நிகழ்ச்சியாகும். திரும்பத் திரும்பப் படித்தும் விவாதித்தும் தெரிந்துகொள்ள வேண்டிய உள்ளடக்கத்தை நவீன உளவியல், இயற்பியல் அறிவுகள் கொண்டு சேர்த்திருக்கும் தெளிவுகளோடு தனக்கேயுரிய கவித்துவத்தோடு யதி தெளிவுரை எழுதியிருக்கும் நூல் இது.

மனோரீதியாகவும் புலன்களின் அடிப்படையிலும் தன்னைச் சுற்றியுள்ள உலகங்கள் அனைத்தையும் அறியும் பிரக்ஞை ஒன்று கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் மெய்ப்பொருளாக இருக்கிறது. நவீன நரம்பியலாளர்கள், அறிதிறன் வல்லுநர்கள், தத்துவவாதிகள் எல்லாரும் மனிதப் பிரக்ஞை செயல்படும் வழிகளின் ஊடாக மனித மனத்தின் சாத்தியங்கள், நுட்பங்கள், புதிர்களைத் தொடர்ந்து ஆராய்ந்துவருகின்றனர்.

வெண்மையும் சாம்பலுமாக மூன்று பவுண்டு எடைகொண்ட கொழகொழப்பான ஜெல்லி போன்றிருக்கும் சிறிய மனித மூளையில்தான் மனித வாழ்க்கையின் அத்தனை நாடகங்களும் வண்ணமயமாக நடக்கின்றன என்று விந்தையோடு குறிப்பிடுகிறார், புகழ்பெற்ற நரம்பியலாளர் விளையனூர் ராமச்சந்திரன். எல்லாவற்றையும் அறிய முயலும் அந்த உறுப்பு, எப்படி எல்லாவற்றையும் அறிய முயல்கிறது என்ற கேள்விகளோடு, புலனாய்வுக்குப் புறப்படுவதும் அந்த மூன்று பவுண்டு எடைகொண்ட உறுப்பைத் தாங்கியிருக்கும் மனிதர்கள்தான்.

அறிவின் விளிம்புக்கு வெளியே வேறு எதுவும் இல்லை, அறிவு ஒன்றே இருக்கிறது என்கிறார் நாராயண குரு. அதிலிருந்தே தொடங்கவும் செய்கிறார். ‘அறியப்படும் இது வேறல்ல/ அறிவாகும் அது தேடுகையில்/ அறிவு இதில் ஒன்றாயிருப்பதால்/ அறிவன்றி வேறெதுவுமில்லை எங்கும்’ என்கிறது முதல் பாடல். ‘யாருமில்லாத பிரதேசத்தில்/ என்ன நடந்து கொண்டிருக்கிறது?/ எல்லாம்’ என்ற நகுலனின் கவிதை ஞாபகத்துக்கு வருகிறது. நடப்பதையெல்லாம் அறிவது எது என்ற கேள்வி எழுகிறது. ஒரு பொருளை அங்கீகரிக்கும்போது அறிபவன், அறிபடுபொருள் என்கிற இரட்டை நிலையை அந்தப் பொருள் நம்மிடம் தோற்றுவிக்கிறது என்று தனது தெளிவுரையில் சொல்கிறார் யதி. உண்மையில் அங்கே நெறிப்படுத்தப்படும் உணர்வே உள்ளது என்கிறார்.

அதையே நாராயண குரு அறிவு என்று சொல்வதாகக் குறிப்பிடுகிறார் . அடுத்த பாடலின் வழியாக உலகத்தின் முடிவற்ற தன்மையைக் குறிப்பிட்டு, அறிவின் வரையறைக்கு அப்பாற்பட்டதை அறிவு எப்படி அறிகிறது என்ற கேள்வி கேட்கப்பட்டு பதிலும் சொல்லப்படுகிறது. இருப்பது என்பது உணர்தல் என்ற பிஷப் பெர்க்லியின் கோட்பாட்டைச் சொல்லி, அறிவைப் பெறும் மூன்று வழிகளை விளக்கி, அறிந்துகொள்ள அறிவு என்பது வேண்டும், தெரிந்துகொள்ள எதுவும் இல்லை என்று தெரியவும்கூட அறிவு வேண்டும் என்று முடிக்கிறார்.

‘அறிவின் அளவு இன்றி அறிவது எதை? அதுவும் அறிவே, அறிவில் எழும் கனவுகள் அறிவேயாகும் என்பதுபோல’ என்ற இந்தப் பாடல் கவித்துவமாகவும் உண்மையாகவும் துலங்குகிறது. காண்பதற்கும் பார்ப்பதற்கும் இடையிலான வேறுபாடு இந்த அத்தியாயத்தில் விளக்கப்படுகிறது. கண் திறந்திருக்கும்போது இயன்ற எல்லாவற்றையும் காணவே செய்கிறது. ஈடுபட்டுக் கவனிக்கும்போதுதான் பார்த்தல் நிகழ்கிறது; கேள்விகளும் தேடலும் தொடங்குகின்றன என்கிறார் யதி. வைக்கோல் போரில் ஊசி விழுந்துவிட்டால், வைக்கோலின் எண்ணற்ற வடிவங்கள் நம் கண்ணுக்கு முன்னால் இருந்தால்கூட, மிகச் சிறிய ஊசியின் வடிவத்தை நோக்கி நமது கண்கள் குவியும் உதாரணத்தைக் காண்பிக்கிறார். அளக்க முடியக்கூடிய ஒன்றை முன்னிறுத்தி அளக்க முடியாத ஒன்றை அனுபவம் கொள்வதை நோக்கி நகர்கிறோம் என்கிறார்.

அறிவுக்கே நிறைவான இருப்பு இங்கு உண்டு எனும்போது அறிவற்றதற்கு எங்கே இருப்பு என்ற கேள்வி அடுத்து கேட்கப்படுகிறது. மறதியாலேயே கட்டப்பட்டதுதான் நினைவு என்று கூறும் போர்ஹெஸின் கூற்றை இத்துடன் பொருத்திப் பார்க்க முடியும்.

தன்மைக்கும் முன்னிலைக்குமான உறவு, மனத்துக்கும் பொருளுக்குமான உறவு, பொருள் அல்லது பிரக்ஞையிலிருந்து வாழ்க்கையின் தோற்றப்பாடு போன்றவற்றை அதிகபட்சமான எளிமையுடனும் பொறுப்புடனும் சொல்லும் நூல் இது. மனம், பிரக்ஞை குறித்த ஆய்வு என்பது புதிய களம் என்பதால், கலைச்சொற்களைப் புதிதாக உருவாக்கி மொழிபெயர்க்கும் சவாலில் எம்.கோபாலகிருஷ்ணன் கிட்டத்தட்ட வெற்றி கொண்டிருக்கிறார். அதேநேரத்தில், இந்த மொழிபெயர்ப்பைத் தொடர்ந்து இன்னும் மேம்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது. நாராயண குருவின் பாடல்களை ஜெயமோகன் நவீன கவிதைகளாகவே மொழிபெயர்த்திருக்கிறார். 

மிக எளிமையான ஒரு கதையுடன் யதி இந்த நூலை முடிக்கிறார். ஜென் குரு ஹோதி சிறிய நாணயங்களை பிச்சையாகக் கேட்டு வாங்குவார். நாணயத்தை வாங்கியவுடன் அதைக் கொண்டு சாக்லேட்டுகள் வாங்கி தனது சாக்குப் பையில் சேகரித்துக் கொள்வார். சாக்குமூட்டை நிரம்பியவுடன் தெருக் குழந்தைகளிடம் அதைப் பகிர்வார். ஒரு நாள் ஹோதியிடம் ஒருவர் நிர்வாணா என்றால் என்ன? என்று கேடார். ஹோதி உடனடியாக தனது சாக்குமூட்டையை தெருவில் எறிந்தார். அதே நபர், நிர்வாணாவை எப்படி பயில்வது? என்று திரும்பக் கேட்டார். ஹோதி திரும்ப சாக்லேட் மூட்டையை எடுத்து தோளில் வைத்துக் கொண்டார். 

இப்படித்தான் மெய்யுணர்வும் இயல்பாக்கமும் சேர்ந்து பயணிக்கின்றன என்கிறார் யதி.  

Comments