Skip to main content

ஒரு அஞ்சல் அலுவலகமும் இல்லாத நாடு - மூன்றாம் பகுதி - ஆஹா சாகித் அலி


"தொலைந்தவற்றின் முழுமையான வரைபடமும் தீவைக்கப்படும். தொழுகைக்கு அழைப்பவர் இறந்ததிலிருந்து மினாரெட்டின் பாதுகாவலன் நான். நான் உயிர்பிரிவதற்குள் வா. சூரிய ஒளிக்கு நேரே உள்ள, சில சமயங்களில் வெள்ளை, பின்னர் கருப்பாக, ஒரு பைஸ்லி மலராகத் தான் இருக்க வேண்டும்.  அதன் புறத்திலோ பசைகொண்ட தூய்மை, ஈரமாக இலையுதிர் காலத்தின் கடைசி நாட்டை நோக்கி மலர்கிறது -  அதை விலைக்கு வாங்கு, நான் ஒரேயொரு முறை வெளியிட்டு விடுகிறேன், இரவில். நான் கொல்லப்படுவதற்குள், எனது குரல் ரத்து செய்யப்படுவதற்குள் வா.”

இந்த கருத்த மழையில், விசுவாசமாய் இரு, மாய இதயமே, இது உன்னுடைய வலி. அதை உணர். அதை நீ உணரவே வேண்டும். 

“எதுவும் மிஞ்சப் போவதில்லை. எல்லாமும் முடிந்துவிட்டது,”

அவனது குரலை நான் திரும்பக் கேட்கிறேன் : “இது வார்த்தைகளின் சன்னிதி. எனக்கெழுதிய கடிதங்களை நீ இங்கே கண்டடையலாம். அத்துடன் என்னுடைய கடிதங்களையும். சீக்கிரம் வா, வந்து இந்த காணாமலாக்கப்பட்ட கடித உறைகளைத் திற.”  நான் மினாரெட்டை அடைகிறேன் : நான் நெருப்பு வட்டத்துள் இருக்கிறேன். நான் இருட்டைக் கண்டடைந்துவிட்டேன். 

இது உன்னுடைய வலி. அதை நீ உணரவே வேண்டும். உணர், இதயமே, அவனது பைத்தியக்கார மறுப்புக்கு விசுவாசமாக இரு - களிமண் விளக்குகளின் திரிகளை அவன் நனைப்பதற்காகவும், ஒவ்வொரு இரவும் அவற்றை ஏற்றி, கோள்களில் கீறப்பட்டுள்ள செய்திகளை வாசிப்பதற்காக இந்தப் படிகளில் ஏறவும். அஞ்சல் தலைகளை ரத்து செய்வதற்கான முத்திரைகள் அவனது கைகள். இது ஒரு ஆவணக் காப்பகம். நான் அவனது குரலின் மிச்சங்களைக் கண்டறிந்து விட்டேன், எல்லையற்ற அவனது ஏக்கங்களின் வரைபடம் அது. 

Comments