கொடீலியா உடைந்த மதில் சுவரில் தூக்கில் தொங்கும்போது
லியர் ஓலமிடுகிறான் "நீங்கள் கல் மனிதர்கள்"
பேரரசியும் அரசகுடிப் பெண்களும் சூடும்
மல்லிகைப் பூக்கள் குவிந்திருந்த சாலையாக முன்பிருந்த
சாந்தினி சௌக்குக்குள் நுழைகிறேன்
வாசனைத் திரவியங்களை அவர்கள்
இஸ்பஹானிலிருந்து வரவழைத்தார்கள்
டாக்காவிலிருந்து துணிமணிகளும்
காபூலிலிருந்து தைலங்களும்
ஆக்ராவிலிருந்து கண்ணாடி வளையல்களும் வந்தன.
இங்கே
யாரும் அறியாமல் ஆகிவிட்ட பிரபுக்கள்
மறக்கப்பட்ட துறவிகளின்
சமாதிகளில் யாசகர்கள் தற்போது வசிக்கின்றனர்
தெருவோர வியாபாரிகள் சீப்புகள் முகம் பார்க்கும் கண்ணாடிகளை
சீக்கிய கோயிலுக்கு வெளியே விற்கின்றனர்.
தெருவுக்கு அப்பால்
ஒரு கொட்டகையில் இந்திப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
பிரிட்டிஷ் படைவீரர்களால்
கால்களில் சங்கிலி இடப்பட்டு
மகன்கள் தூக்கிலிடப்படுவதைப் பார்க்க
இந்தச் சாலைவழியாக அழைத்துச் செல்லப்படும்
கவிஞனும் பேரரசனுமான ஸஃபாரை
நினைத்துப் பார்க்கிறேன்.
நாடுகடத்தப்பட்ட நிலையில் அவன் எழுதினான்:
"துரதிர்ஷ்டம் பிடித்த ஸஃபார்
தனது வாழ்க்கையின் பாதியை நம்பிக்கையிலும்
அடுத்த பாதியைக் காத்திருப்பிலும் கழித்தான்.
டெல்லியின் ஆறடி நிலத்தைத் தன்னைப் புதைப்பதற்குக் கேட்டு
அவன் யாசித்துக் கொண்டிருக்கிறான்.”
அவன் பர்மாவுக்கு நாடுகடத்தப்பட்டான். ரங்கூனில் புதைக்கப்பட்டான்.
(ஸஃபார் - முகலாயப் பேரரசின் கடைசி மன்னன்)
Comments