Skip to main content

Posts

Showing posts from July, 2025

நான்ஸி யார்?

என் சமீபத்திய கவிதைகளில் இடம்பெறும் நான்ஸி யாரென்று கேட்டான் நண்பன். வேளச்சேரியின் புராதன பங்களா வீட்டில் தனியாக வசிக்கும் பூனை என்றேன். நான்ஸியைக் கடக்கும் நான்ஸி அழகின் உச்சாடனத்தைத் தாங்கியிருக்கும் பெயர்கள்… அவற்றுக்கு உடல் இல்லை வீடு இல்லை ஊர் இல்லை காணி இல்லை தெரு இல்லை சுற்றுச் சுவர்கள் இல்லை பூட்டு இல்லை சாவிகூட இல்லை வெறும் நிழல்கள் மட்டுமே என்றபடி நான்ஸி வசிப்பதாகச் சொல்லப்படும் வீட்டைத் தாண்டி இருளுக்குள் சென்று மறைந்தது நான்ஸி. 000 (நன்றி: அகழ் இணைய இதழ்)

அனேகத்தின் ருசி - சார்லஸ் சிமிக் கவிதைகள்

உடல் ஓயும் அதே தருணத்தில் மனமும் நிரோத நிலையில் ஓய்ந்துவிடுகிறது. அதனால்தான் அறிஞர் விட்கன்ஸ்டைன், சாவு என்பது வாழ்க்கையோடு தொடர்புடையதே அல்ல என்கிறார் போலும். உடல் உட்கொள்ளும் புரதம் தரும் சக்தியில் எரிவதுதான் மனம். அதனால், கண்ணுக்குத் தூலமாகத் தெரியும் உடல்தான் உபாதைகளுக்கும் தண்டனைகளுக்கும் வலி வறுமை செல்வநிலை இனம் நிறம் மதம் சாதி அதிகாரம் சார்ந்த பாகுபாடுகளுக்கும் உள்ளாகிறது. கண்ணுக்குத் தெரியாத மனம், அதைத் துயரம், சந்தோஷம், குரோதம், விரோதம் என்ற புறாக்கூண்டுகளில் அடுக்கித் தொகுத்துக்கொள்கிறது. உடலுக்கு நேரும் அனுபவங்களை விசாரித்துச் சலித்துத் தொகுத்துக்கொள்ளும் மனத்துக்கு உயர்நிலையை அளித்த ஒரு மரபின் தொடர்ச்சியாக இருந்த புதுக்கவிதையின் ஐம்பது ஆண்டுகாலப் பயணத்தில், உடல்தான் பிரதானம் என்று ஆதாரமாக ஏற்பட்ட பார்வை மாற்றத்தில்தான் அது, நவீன கவிதையாக உருமாறுகிறது. இது எனது ஊகம். முந்தைய நூற்றாண்டுகளில் தாயுமானவர், வள்ளலார், பாரதியார் முதலியோரில் தொடங்கிய போக்கு, புதுக்கவிதையில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சுப்ரமணியம், நகுலன், பசுவய்யா வரை நீண்டது. அத்வைதச் சிந்தனையோடு மோதிமோதி த்வைத உலகைச் சந...

மாம்பழங்கள்

மாம்பழங்களின் பருவம் சமீப ஆண்டுகளாக கோடை தாண்டியும் நீள்கிறது. மாம்பழங்களின் அளவு பப்பாளிப் பழங்களுக்குப் போட்டியாக பெருக்கத் தொடங்கிவிட்டது. மாம்பழங்களின் பருவம் நீளும் போது, அவை பப்பாளிப் பழங்கள் அளவுக்குப் பெருக்கும்போது சற்றே வடுபட்ட மாம்பழங்களை தாராளமாகப் பணிப்பெண்களுக்கு வீட்டுக்காரர்கள் கொடுப்பது நடக்கிறது. பைகளில் தங்கள் குழந்தைகளுக்காக வீட்டுப் பணிப்பெண்கள் அந்த மாம்பழங்களைச் சுமந்து செல்லும்போது மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிடுகிறது. (நன்றி: அகழ் இணைய இதழ்)

முதல் பால் பல்

பிச்சிப்பூ, நெட்டிலிங்க மரங்களின் வரிசையில் தோட்டத்தின் மூலையில் நின்றிருந்த ஒற்றை நாரத்தையின் கீழ் அமர்ந்து முதல் இரவின் கதையை அக்காக்களிடமிருந்து கேட்டிருந்த அனுபமா எனக்கு பரம ரகசியமாய் பரபரப்புடன் தெரியப்படுத்தியபோது எங்களுக்கு வயது வயது ஏழு. ஆணும் பெண்ணும் தொட்டு உடைகளைக் களைந்து நிர்வாணமாகும் காட்சியை அவள் படிப்படியாக விவரித்தபோது அடைந்த கிறுகிறுப்பில் சாயங்காலம் தைலத்தன்மையுடன் கருஞ்சிவப்பானது. ஆணும் பெண்ணும் பரஸ்பரம் அம்மணமாகித் தொடுவதற்கும் குழந்தைகள் பிறப்பதற்கும் உள்ள தொடர்பு அவள் சொல்லித்தான் கலங்கலாக எனக்கு விளங்கியது. பிள்ளையார் தும்பிக்கையால் நள்ளிரவுகளில் அம்மாக்களின் வயிற்றைத் தடவி குழந்தைகளை விட்டுச் செல்வதில்லையா என்று அனுபமாவிடம் கேட்டேன். அன்றைக்குத்தான் வெகுநாள்கள் விழாமல் இருந்த முதல் பால் பல்லும் விழுந்தது. (நன்றி: அகழ் இணைய இதழ்)

ஹேமா

அழைத்தாலும் அழைக்காதது போன்று அதலபாதாளத்து  நினைவிலிருந்தெழும் அசரீரியாய் பட்டுமிருதுடன் தொனிக்கும் அவள் பெயர் ஹேமா... சிவனின் மனைவி பார்வதியின் இன்னொரு நாமகரணம் ஹைமவதி என்கிறது புராணம். பொன், தூய்மை என்றும் பொருள்படும் பெயர் ஹேமா. மலையில் காட்டில் நதியில் அருவியில் காற்றாக ஒலிக்கிறது ஆதிப்பெயர்களில் ஒன்றான ஹேமா ஹேமா ஹேமா ஹேமா. (நன்றி: அகழ் இணைய இதழ்)

குயில் குப்பை குப்பி

ஒரு குப்பியை உடை ஒரு குயில் வெளியே வந்து பாடும் ஒரு விடுதலைப் பாடல். எந்தக் குப்பையில் எங்கே ஒழிந்து கிடக்குது ஐயா அந்தக் குப்பி? குயில் குப்பை குப்பி இது என்ன எழவுடா ? நன்றி: அகழ் இணைய இதழ்

பாசிசத்தை நோக்கி இந்தியா: மோடி செய்த மாற்றங்கள் - பிரேம் சங்கர் ஜா

(இந்தியாவை பாசிசத்தை நோக்கி மோடி படிப்படியாக மாற்றிய வரலாற்றை எண்ணற்ற கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் குடியுரிமை, ஜனநாயகப் பாதுகாவலர்கள் விவரமாகப் பதிவுசெய்துள்ளனர். அவர்களில் பலரும் , எந்தக் குற்றச்சாட்டும் சொல்லப்படாமல் ஆண்டுக்கணக்கில், பிணையில்லாமல் சிறைத்தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். பாசிசத்துக்கு இந்தியாவை மோடி எவ்வாறு அழைத்துச் சென்றார்? அந்தப் பயணத்தை பெருங்கோடுகளில் இந்தக் கட்டுரை தீட்டுகிறது.)  1. பன்முகத்தன்மை வாய்ந்த, பல்வேறு இனங்கள் வசிக்கும் ஜனநாயகமென்று முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெருமைப்பட்டு குறிப்பிட்ட அம்சங்களை, அவருக்குப் பின்னால் வந்த நரேந்திர மோடி, பிரதமர் பதவியேற்று சில வாரங்களில்,  அகற்றத் தொடங்கிய முதல் நடவடிக்கை இது. மத்திய அமைச்சகங்கள் இயங்கும் இடங்களின் நுழைவாயிலில் முதலில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியதுதான் அந்த முதல் நடவடிக்கை. அத்துடன் பத்திரிகை தகவல் பணியகம்((Press Information Bureau), சிறப்பு செய்தியாளர்கள், மூத்த பத்திரிகையாளர்களுக்கு வழங்கிய அடையாள அட்டைகள் வாபஸ் பெறப்பட்டன. பத்திரிகையாளர்கள் எந்த அமைச்சரகத்த...

தலைகீழாகத் தொங்கும் பொம்மைகள்

சிறுதடமும் இன்றி காதுமடல்கள் இரண்டும் மழித்து அகற்றப்பட்ட அந்தப் பையனுக்கு நண்பர்களென்று யாரும் இல்லை. தன் வீடிருக்கும் வீதியில் இறங்கி எப்போதாவது நூல் கோர்த்த கார் பொம்மையை இழுத்து விளையாடும் நண்பகல்களில் தெரு கூடுதல் நிசப்தத்தை அடைந்துவிடுகிறது. தோளில் புத்தகப்பையைச் சுமந்து தலைகுனிந்தபடி டியூசனுக்குப் போய்விட்டுத் திரும்புபவன் கூர்ந்து பார்க்கும் என்னைக் கண்களாலேயே தவிர்த்து கடந்துவிடுகிறான். அவன் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டின் பால்கனியிலிருந்து விலை உயர்ந்த பொம்மைகள் வெளியே வீசப்படுவது வழக்கம். தரையில் விழாமல் பொம்மைகள் பெரும்பாலும் கேபிள் வயர்களில் தலைகீழாகத் தொங்கும் காட்சிதான் காதுகள் மழிக்கப்பட்ட அந்தச் சிறுவனின் முகத்தைவிட எனக்கு அதிவினோதமானது. (நன்றி: அகழ் இணைய இதழ்)

களத்தூர் கண்ணம்மா

கமல்ஹாசன் நடித்திருக்கும் சினிமா என்று திருநெல்வேலி லட்சுமி தியேட்டருக்கு அழைத்துப் போனாள் அம்மா. பழைய படங்களாக அழைத்துச் செல்லப்பட்டு நிறைய ஏமாந்திருந்தாலும் கமல்ஹாசன் என்றதால் கொஞ்சம் நப்பாசையில் உடன் போனேன். கருப்பு – வெள்ளைப்படம் தொடங்கியது. அழகிய சிறுவன் ஒருவனைக் காண்பித்து இவன்தான் கமல்ஹாசன் என்றாள். அவன் வளர்ந்துவிடுவான் என்று எதிர்பார்த்தேன். அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே என்று எல்லாரையும் அழவைக்கும்படி அனாதை இல்லத்தில் சக குழந்தைகளுடன் அவன் பாடியபோது வளர்ந்து மோட்டார் சைக்கிளை உதைத்து முடுக்கி சண்டைபோடுவான் என்ற நம்பிக்கை தளரத் தொடங்கியது. ஒரு பங்களா வீட்டின் புறக்கடைத் தோப்பில் ஜெமினியும் சாவித்திரியும் பிழியப் பிழிய அழுதுபிரியும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. அம்மா ஏமாற்றிய துக்கத்தை இவனால் அப்போது தாளவே முடியவில்லை. கமல் வளர்வானா என்று கடைசிவரை அந்தப் பையன் கேட்கவுமில்லை. (தக் லைஃப் திரைப்படம் தந்த அனுபவத்துக்கு) (நன்றி: அகழ் இணைய இதழ்)

கவிஞர் மதார்

திருநெல்வேலி பெருமாள்புரம் உள்சாலைகளில் நடைபயிற்சி போகும் கவிஞர் மதார்  தினசரி எதிரே சந்தித்துவிடும்  வண்ணதாசனை அன்று சந்திக்கவில்லை. மாணிக்கவாசகர் தெருவின் முனையில் பஞ்சால் அலங்கரிக்கப்பட்ட மரக்குதிரை பொம்மை ஒன்று குப்பைத் தொட்டியில் வீசப்பட்டிருப்பதைப் பார்த்தார். செவ்வாய்கிழமை காலையிலேயே தன் கவிதைக்கான கருப்பொருள் என்று உவகையுற்று பட்டினத்தார் தெருவில் திரும்பினார். பட்டினத்தார் தெருவின் நடுப்பகுதியை கடக்கும்போது ஓரத்தில் நள்ளிரவில் குடித்து உடைக்கப்பட்டிருந்த மதுப்புட்டிகளின் நடுவே காலை நீட்டி இறந்துகிடந்த பூனையின் சடலமொன்றைப் பார்த்தார். பூனையின் சடலத்தை முதலில் பஞ்சு பொம்மை என்றே  நம்புவதற்கு விரும்பினார் கவிஞர் மதார். இறந்த பூனையின் சடலத்திலிருந்து கண்ணை எடுத்து வேகமாக பட்டினத்தார் தெருவைக் கடந்து வீடுபோய் சேர்ந்துவிட்டார் கவிஞர் மதார். இறந்த பூனைகளே தெருவில் வீசப்படாத ஊர் ஒன்றுக்கு கவிஞர் மதார் இடமாற்றம் கேட்டிருப்பதாக சமீபத்திய செய்தி. 

போகன்வில்லா

வெயிலில் சற்றே வண்ணம் வெளிறி காகிதப் பூ விழுந்துகொண்டிருந்தது. சாலையை நோக்கி விழுந்துகொண்டேயிருந்த காகிதப் பூ ரோஸ் வண்ணச் சிட்டாக விருட்டென்று அந்தரத்தில் உருமாறி என் தலையை உரசிக்கொண்டு பறந்து போனதை நான் சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள். (நன்றி: அகழ் இணைய இதழ்)