Skip to main content

பாசிசத்தை நோக்கி இந்தியா: மோடி செய்த மாற்றங்கள் - பிரேம் சங்கர் ஜா



(இந்தியாவை பாசிசத்தை நோக்கி மோடி படிப்படியாக மாற்றிய வரலாற்றை எண்ணற்ற கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் குடியுரிமை, ஜனநாயகப் பாதுகாவலர்கள் விவரமாகப் பதிவுசெய்துள்ளனர். அவர்களில் பலரும் , எந்தக் குற்றச்சாட்டும் சொல்லப்படாமல் ஆண்டுக்கணக்கில், பிணையில்லாமல் சிறைத்தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். பாசிசத்துக்கு இந்தியாவை மோடி எவ்வாறு அழைத்துச் சென்றார்? அந்தப் பயணத்தை பெருங்கோடுகளில் இந்தக் கட்டுரை தீட்டுகிறது.) 


1.

பன்முகத்தன்மை வாய்ந்த, பல்வேறு இனங்கள் வசிக்கும் ஜனநாயகமென்று முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெருமைப்பட்டு குறிப்பிட்ட அம்சங்களை, அவருக்குப் பின்னால் வந்த நரேந்திர மோடி, பிரதமர் பதவியேற்று சில வாரங்களில்,  அகற்றத் தொடங்கிய முதல் நடவடிக்கை இது. மத்திய அமைச்சகங்கள் இயங்கும் இடங்களின் நுழைவாயிலில் முதலில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியதுதான் அந்த முதல் நடவடிக்கை. அத்துடன் பத்திரிகை தகவல் பணியகம்((Press Information Bureau), சிறப்பு செய்தியாளர்கள், மூத்த பத்திரிகையாளர்களுக்கு வழங்கிய அடையாள அட்டைகள் வாபஸ் பெறப்பட்டன. பத்திரிகையாளர்கள் எந்த அமைச்சரகத்துக்குள்ளும் சுதந்திரமாக நுழைந்து அமைச்சர்கள் மற்றும் குடிமைப்பணி அதிகாரிகளுடன் சகஜமாகப் பேசுவதற்கான அடையாள அட்டைதான் அது. 

2.

ஜனநாயகம் முதிராமல் குழந்தைப் பருவத்திலிருந்த நிலையில் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் யோசனையால் உருவாக்கப்பட்ட பத்திரிகை தகவல் பணியக அடையாள அட்டை நடைமுறை இது. அரசுத் துறைகளுக்குள் எடுக்கப்படவுள்ள கொள்கை முடிவுகள் தொடர்பில் வெளிப்படையாக மூத்த பத்திரிகையார்கள் விவாதிப்பதற்கு அனுமதிப்பதற்கான சூழல் இருக்கவேண்டுமென்று நேரு விரும்பினார். அப்போது நாடாளுமன்றத்தில் காங்கிரஸுக்கு எதிர்ப்பு என்பதே துளியும் இல்லாத சூழல் இருந்தது. 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மோடி அரசோ, பதினைந்து நாட்களில் இந்த சுதந்திர ஏற்பாட்டை அழித்தது. இரண்டாவது ஆட்சிகாலத்தில், எந்த அரசு அதிகாரியை ஒரு பார்வையாளர் பார்க்க விரும்பினாலும், அந்த அதிகாரியே வரவேற்பறைக்கு வந்து கையெழுத்துப் போடவேண்டுமென்ற சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் அரசுக்கும் பொதுமக்களுக்குமான தொடர்பை ஒருவழிப் பாதையாக முற்றிலும் மோடி அரசு மாற்றியமைத்தது. 

3.

அதிகாரத்தை மையப்படுத்தும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக மோடி, அமைச்சரவையைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் நடத்தும் மாதாந்திர கூட்டங்களில் பாஜகவின் நியமனதாரர்களும் பங்கேற்கவேண்டுமென்று உத்தரவிட்டார். இதன்வழியாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்படும் பணிகளை கட்சி மேற்பார்வை செய்யும் நிலை வந்தது. அமைச்சர்கள் அரசு சார்ந்த முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை கட்சிக்கு மோடி கைமாற்றினார். 

4.

அச்சு, காட்சி ஊடகங்கள்தான் மோடியின் அடுத்த இலக்கு. வேண்டாத பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்களைத் தர மறுக்கும் நடவடிக்கைகள் தொடங்கின. அத்துடன் வேண்டாத ஊடகங்களின் உரிமையாளர்கள் மீது வரி ஏய்ப்பு, சட்டவிரோதப் பணமோசடி போன்ற குற்றங்களின்கீழ் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. இதற்கு சிறந்த உதாரணம் என்டிடிவி தொலைக்காட்சியின் நிறுவனர்கள் பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் தான் இந்த நடவடிக்கைகளின் முதல் இலக்கு. இந்தியாவின் முதல் வர்த்தகத் தொலைக்காட்சி சேனலைத் தொடங்கியவர்கள் அவர்கள். விளம்பரம் கொடுப்பவர்கள் எல்லாரும் என்டிடிவியைக் கைவிட்டனர். இத்தனைக்கும் அப்பால் என்டிடிவி தனது சுதந்திரமான செய்தி அளிக்கும் தன்மையை கடந்த 2022 வரை காப்பாற்றி வந்தது. ஆனால் என்டிடிவி திவால் நிலைமையைச் சந்தித்து, ஊழியர்கள் யாரும் தாக்குப்பிடிக்க இயலாமல் வெளியேறும் சூழ்நிலை வந்தது. குஜராத்தின் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்த காலத்திலிருந்தே அவரது நிதி ஆதாரங்களைக் கவனித்துக் கொண்டவர்களான அதானி குழுமத்தினர் என்டிடிவியை வாங்கினர். இப்படியாக என்டிடிவியும் மோடியின் பாசிஸ்ட் அரசாங்கத்தை ஆதரிக்கும் ஊடகமானது. 

5.

நீதித்துறை தான் மோடியின் மூன்றாவது இலக்கு. உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுக்குப் பின்னர் செல்வாக்கான பதவிகளில் அமரவைக்கும் நடவடிக்கைகள் தொடங்கியது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான பி. சதாசிவத்துக்கு கேரள ஆளுநர் பதவி அளிக்கப்பட்டது. ஓய்வுக்குப் பிறகு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், சரத் போப்டே மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோரும் பதவிகளைப் பெற்றனர். 

6.

11 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபிறகும் இதுவரை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் பிரதமர் மோடி நடத்தவில்லை. தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் ஒன்றைக்கூட இதுவரை நடத்தவில்லை. மாநில முதலமைச்சர்கள் ஒரு சபையாக, மத்திய மாநில அரசுக் கொள்கைகளை விவாதிக்கும் ஒரு தளமாக அது 1989 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்தது. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கிடையிலான கொள்கை உறவுகள் ஒருவழிப்பாதையாக்கப்பட்டன.

7. 

திட்டக் கமிஷனை நிதி ஆயோக் ஆக மாற்றியதுதான் இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு மீது மோடி தொடுத்த பயங்கரமான தாக்குதல் ஆகும். மேலோட்டமாகப் பார்த்தால் இதில் பெரிதாக எந்த மாற்றமும் தெரியாது. திட்டக் கமிஷனின் பணியாளர்கள்தான் இதற்கும் வேலைபார்க்கின்றனர். திட்டக் கமிஷனின் ஆதாரமான பணியை பிரதமர் மோடி நிதி ஆயோக் வழியாக பறித்துவிட்டார். 

ஒரு மாநிலத்தின் மக்கள்தொகை, தனிநபர் வருவாய், கடன் நிர்வாகத் திறன், பிராந்திய வளர்ச்சி ஆகியவற்றைக் கணக்கிட்டு ஒவ்வொரு மாநிலத்துக்கும் நிதிகளை ஒதுக்கும் பணியை திட்டக் கமிஷன் செய்துவந்தது. இதன்வழியாக பாரபட்சமில்லாமல் எல்லா மாநிலங்களும் வளர்ச்சிபெறும் சூழ்நிலை இருந்தது. இந்த நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தை தனக்கானதாக பிரதமர் மோடி எடுத்துக்கொண்டார். இதன்மூலம் அதிகமான நிதி ஒதுக்கீடுகள் பாஜக ஆளும் மாநிலங்களுக்குச் செல்லும் நிலை உள்ளது. 

(பிரேம் சங்கர் ஜா எழுதி, ஸ்பீக்கிங் டைகர் பதிப்பகம் வெளியிடவுள்ள ‘தி டிஸ்மேண்ட்லிங் ஆஃப் இந்தியாஸ் டெமாக்ரசி (The Dismantling of India’s Democracy: 1947 to 2025) நூலிலிருந்து, தி வயர் இணையத்தளம் வெளியிட்டிருக்கும் கட்டுரையின் தமிழாக்கம் இது.)  

நன்றி: தி வயர் இணையத்தளம்

Comments