திருநெல்வேலி பெருமாள்புரம் உள்சாலைகளில்
நடைபயிற்சி போகும்
கவிஞர் மதார்
தினசரி எதிரே சந்தித்துவிடும்
வண்ணதாசனை
அன்று சந்திக்கவில்லை.
மாணிக்கவாசகர் தெருவின் முனையில்
பஞ்சால் அலங்கரிக்கப்பட்ட
மரக்குதிரை பொம்மை ஒன்று
குப்பைத் தொட்டியில் வீசப்பட்டிருப்பதைப்
பார்த்தார்.
செவ்வாய்கிழமை காலையிலேயே
தன் கவிதைக்கான கருப்பொருள் என்று
உவகையுற்று
பட்டினத்தார் தெருவில் திரும்பினார்.
பட்டினத்தார் தெருவின் நடுப்பகுதியை
கடக்கும்போது
ஓரத்தில்
நள்ளிரவில் குடித்து உடைக்கப்பட்டிருந்த
மதுப்புட்டிகளின் நடுவே
காலை நீட்டி இறந்துகிடந்த
பூனையின் சடலமொன்றைப் பார்த்தார்.
பூனையின் சடலத்தை முதலில்
பஞ்சு பொம்மை என்றே
நம்புவதற்கு விரும்பினார்
கவிஞர் மதார்.
இறந்த பூனையின் சடலத்திலிருந்து
கண்ணை எடுத்து வேகமாக
பட்டினத்தார் தெருவைக் கடந்து
வீடுபோய் சேர்ந்துவிட்டார்
கவிஞர் மதார்.
இறந்த பூனைகளே தெருவில் வீசப்படாத
ஊர் ஒன்றுக்கு
கவிஞர் மதார் இடமாற்றம் கேட்டிருப்பதாக
சமீபத்திய செய்தி.
Comments