Skip to main content

முதல் பால் பல்


பிச்சிப்பூ, நெட்டிலிங்க மரங்களின் வரிசையில்

தோட்டத்தின் மூலையில் நின்றிருந்த

ஒற்றை நாரத்தையின் கீழ் அமர்ந்து

முதல் இரவின் கதையை

அக்காக்களிடமிருந்து கேட்டிருந்த

அனுபமா

எனக்கு பரம ரகசியமாய்

பரபரப்புடன் தெரியப்படுத்தியபோது

எங்களுக்கு வயது வயது ஏழு.

ஆணும் பெண்ணும் தொட்டு

உடைகளைக் களைந்து

நிர்வாணமாகும் காட்சியை அவள் படிப்படியாக

விவரித்தபோது அடைந்த கிறுகிறுப்பில்

சாயங்காலம்

தைலத்தன்மையுடன் கருஞ்சிவப்பானது.

ஆணும் பெண்ணும்

பரஸ்பரம் அம்மணமாகித் தொடுவதற்கும்

குழந்தைகள் பிறப்பதற்கும் உள்ள தொடர்பு

அவள் சொல்லித்தான்

கலங்கலாக எனக்கு விளங்கியது.


பிள்ளையார் தும்பிக்கையால் நள்ளிரவுகளில்

அம்மாக்களின்

வயிற்றைத் தடவி

குழந்தைகளை விட்டுச் செல்வதில்லையா என்று

அனுபமாவிடம் கேட்டேன்.


அன்றைக்குத்தான்

வெகுநாள்கள் விழாமல் இருந்த

முதல் பால் பல்லும் விழுந்தது.


(நன்றி: அகழ் இணைய இதழ்)

Comments