சிறுதடமும் இன்றி
காதுமடல்கள் இரண்டும் மழித்து
அகற்றப்பட்ட
அந்தப் பையனுக்கு
நண்பர்களென்று யாரும் இல்லை.
தன் வீடிருக்கும்
வீதியில் இறங்கி எப்போதாவது
நூல் கோர்த்த கார் பொம்மையை
இழுத்து விளையாடும்
நண்பகல்களில்
தெரு கூடுதல் நிசப்தத்தை
அடைந்துவிடுகிறது.
தோளில் புத்தகப்பையைச் சுமந்து
தலைகுனிந்தபடி
டியூசனுக்குப் போய்விட்டுத் திரும்புபவன்
கூர்ந்து பார்க்கும்
என்னைக் கண்களாலேயே தவிர்த்து
கடந்துவிடுகிறான்.
அவன் வசிக்கும்
அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டின்
பால்கனியிலிருந்து
விலை உயர்ந்த பொம்மைகள்
வெளியே வீசப்படுவது வழக்கம்.
தரையில் விழாமல்
பொம்மைகள்
பெரும்பாலும்
கேபிள் வயர்களில்
தலைகீழாகத் தொங்கும் காட்சிதான்
காதுகள் மழிக்கப்பட்ட அந்தச் சிறுவனின்
முகத்தைவிட எனக்கு அதிவினோதமானது.
(நன்றி: அகழ் இணைய இதழ்)
Comments