உடல் ஓயும் அதே தருணத்தில் மனமும் நிரோத நிலையில் ஓய்ந்துவிடுகிறது. அதனால்தான் அறிஞர் விட்கன்ஸ்டைன், சாவு என்பது வாழ்க்கையோடு தொடர்புடையதே அல்ல என்கிறார் போலும்.
உடல் உட்கொள்ளும் புரதம் தரும் சக்தியில் எரிவதுதான் மனம். அதனால், கண்ணுக்குத் தூலமாகத் தெரியும் உடல்தான் உபாதைகளுக்கும் தண்டனைகளுக்கும் வலி வறுமை செல்வநிலை இனம் நிறம் மதம் சாதி அதிகாரம் சார்ந்த பாகுபாடுகளுக்கும் உள்ளாகிறது. கண்ணுக்குத் தெரியாத மனம், அதைத் துயரம், சந்தோஷம், குரோதம், விரோதம் என்ற புறாக்கூண்டுகளில் அடுக்கித் தொகுத்துக்கொள்கிறது. உடலுக்கு நேரும் அனுபவங்களை விசாரித்துச் சலித்துத் தொகுத்துக்கொள்ளும் மனத்துக்கு உயர்நிலையை அளித்த ஒரு மரபின் தொடர்ச்சியாக இருந்த புதுக்கவிதையின் ஐம்பது ஆண்டுகாலப் பயணத்தில், உடல்தான் பிரதானம் என்று ஆதாரமாக ஏற்பட்ட பார்வை மாற்றத்தில்தான் அது, நவீன கவிதையாக உருமாறுகிறது. இது எனது ஊகம். முந்தைய நூற்றாண்டுகளில் தாயுமானவர், வள்ளலார், பாரதியார் முதலியோரில் தொடங்கிய போக்கு, புதுக்கவிதையில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சுப்ரமணியம், நகுலன், பசுவய்யா வரை நீண்டது. அத்வைதச் சிந்தனையோடு மோதிமோதி த்வைத உலகைச் சந்தேகத்தோடு கொஞ்சூண்டு உறுதிசெய்தும் பெரும்பாலும் புகைமூட்டமாக்கியும் அணுகிய அக்கவிதை உரையாடல் மரபு, தொண்ணூறுகளின் ஆரம்பம் வரை தொடர்ந்தது. தொண்ணூறுகளின் கடைசியில் நவீன கவிஞர்கள் அம்மரபின் மீது கடைசி ஆணியை அடித்ததன் முக்கியத்துவத்தை, அதனால் விளைந்த திருப்புமுனையை இப்படியாகவே நான் அர்த்தப்படுத்திக்கொள்கிறேன்.ஜெயமோகன் புறனடையாளர் என்று வகுப்பது போல அத்வைத செல்வாக்கிலிருந்து தனியாக விலகி நின்று சாதித்த புறனடையாளர்கள் என்று ஞானக்கூத்தனையும், கலாப்ரியாவையும் வகுக்கவேண்டும் என்ற கவனத்தையும் இந்தக் கட்டுரையாளர் கொண்டிருக்கிறார். புதுக்கவிதையின் வரம்புகள் பற்றிய போதம் எழுபதுகளின் இறுதியில் ஆத்மாநாமிடம் தொடங்கி, அன்றாட வாழ்க்கையின் நிறங்கள், ஓசைகள், அரசியல் தெரியவும் கேட்கவும் தொடங்கிய கவிஞர்களென்று பிரம்மராஜன், சுகுமாரன்,சமயவேல், மலைச்சாமி ஆகியோரைச் சொல்லமுடியும். புதுக்கவிஞர்களையும் நவீன கவிஞர்களையும் இணைக்கும் பாலமாகத் திகழ்ந்த இவர்கள் எல்லாருமே committed poets என்று பிரம்மராஜன் வகைப்படுத்தும் அலகைச் சேர்ந்தவர்கள். புதுக்கவிதைகள் எழுதப்பட்ட காலத்தோடு உறுதியாக அடையாளம் காணப்பட்ட தேவதச்சன் போன்ற சில கவிஞர்கள் தொண்ணூறுகளுக்குப் பிறகு நவீன கவிஞர்களாக உடல்சிதை மாற்றமடைந்த அபூர்வங்களையும் நாம் பதிவுசெய்தல் அவசியம். தேவதச்சனிடம் அவருடைய ‘அத்துவான வெயில்’ கவிதைகளில் அந்தத் திருப்பம் நிகழ்கிறது.
தமிழ்க் கவிதையின் தொல்மரபை அடையாளப்படுத்தும் சங்கக் கவிதைகளில் அத்வைதச் சிந்தனையின் தாக்கம் இல்லை. காதலும் பிரிவும் ஆற்றாமையும் கூடலும் இன்பமும் அழலும் நிலமாக பொருள்களாக பொழுதுகளாக தாவரங்களாக பிராணிகளாக நீராக மணலாக பாறையாக வீடாக வெளியாக ஈரமாகவும் வறண்டும் பிசுபிசுப்பாகவுமே அர்த்தப்படுத்தப்பட்டுள்ளன.
நவீன கவிஞனோ, தன்னைச் சுற்றி உள்ள உலகத்தோடு உறவையும் இணைப்பையும் பரிவையும் நடுக்கங்களையும் விரிவாக்குகிறான். சின்னஞ்சிறு வஸ்துகளுக்கு உயிர்த்தன்மையை அளிக்கிறான். அவற்றுக்கு வெளிப்பாட்டு அழகை, துடிப்புகளை வழங்குகிறான். அவனுக்குப் பகல் வெளிச்சத்தில் ஏற்படும் சின்ன மாறுதல் முக்கியத்துவம் வாய்ந்தது. தீயவள் என்று பாப்லோ நெருடாவின் கவிதையில் சொல்லப்படுபவளின் சிறுநீர் பெய்யும் சத்தம் வாசகனையும் கவிதை சொல்லியையும் தாபத்துக்குள்ளாக்குவது; அறை மூலையில் திடீரென முளைத்துத் துள்ளிக்கொண்டிருக்கும் குட்டித் தவளை அவன் உலகத்தைப் புதிதாக்குவது; கண்ணுக்குத் தெரியாமல் சிறிதுநேரம் காணாமல்போகும் பொருள்கள் தொடர்ச்சியைத் துண்டிப்பது; நள்ளிரவுப் பூனைகளின் கேவல் அதிமுக்கியமான சமிக்ஞைகள். சிணுங்கல்கள், சிரிப்பொலிகள், களுக்கொலிகள் மட்டுமல்ல, தெரியாத யாரோ ஒருவரின் அழுகையும் கடக்கவே முடியாதது. ஃபிரான்சிஸ் ஃபோர்ட் கப்போலோவின் டிராகுலா படத்தில் டிராகுலா தனது காதலியின் சீக்கிரமே உலர இருக்கும் கண்ணீரை, வைரக்கற்களாக மாற்றிப் பரிசளிப்பதைப் போல — கவிஞனின் உலகில் எல்லாமே ஒளிமிக்கவையே. எதையுமே அங்கே, அல்பமெனப் புறக்கணித்துவிட முடியாதது. அதைத்தான் போலந்துக் கவிஞர் விஸ்லவா சிம்போர்ஸ்கா தன்னுடைய நோபல் பரிசு உரையில் இப்படியாகச் சொல்லிவிடுகிறார்: “கவிதை மொழியைப் பொறுத்தவரை ஒவ்வொரு சொல்லும் மதிப்புமிக்கது; அங்கே எதுவுமே வழக்கமானதோ சகஜமானதோ அல்ல. ஒரு கல், நம் தலைக்கு மேலுள்ள மேகம் எதுவாகவும் இருக்கலாம். ஒரு பகல், ஒரு இரவாக இருக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரே ஒரு இருப்புகூட மதிப்புமிக்கதே. இந்த உலகில் எவரொருவருடைய இருப்பும்.”
அநித்தியமானவை, சிறியவை, மகத்துவமில்லாதவை என நாம் நினைக்கும் எல்லாப் பொருள்களும் எல்லா உயிர்களும் எல்லாத் தாவரங்களும் நம்முடன் தவிர்க்கவியலா விதத்தில் தொடர்பு கொண்டிருப்பவை; ஒரு அம்சத்தில் நிலைகுலைந்தாலும் இன்னொரு அம்சத்தில் அழியாமல் இங்கேயே நிலைகொள்பவை என்பதை நினைவூட்டுபவன் கவிஞன். இந்த உலகத்துக்குள் நுழைந்துவிட்ட எதற்குமே இறப்பு இல்லை என்ற போதம் அது.
அந்தப் போதத்தை முழுமையாக உட்கொண்டிருப்பவை என்பதாலேயே, அந்த அம்சத்தின் மீதே பார்வையை முழுக்கப் பதித்தவை என்பதாலேயே சார்லஸ் சிமிக்கின் கவிதைகள் ஈர்க்கின்றன. காதலியின் அக்குளிலிருந்து காதலனுக்கு வரும் உண்ணி, அவனிடம் ஒட்டிக்கொண்டு ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிருக்கிறது. காதலி பிரிந்துவிட்டாள். இறந்துபோன ராணுவ வீரனின் கவசத் தொப்பியில் இருந்த பேன்கள் அதை அணியும் சிறுவன் சிமிக்கைக் கடித்துக்கொண்டிருக்கின்றன. பிரிந்தவர்கள், இறந்தவர்கள் அவர்களின் உடலை அண்டியிருந்த சிற்றுயிர்களால் சார்லஸ் சிமிக்கின் கவிதைகளில் அழியாமல் நீடிக்கிறார்கள்.
அதனால், பரம் எவ்வளவு ஈர்ப்பானதோ இகமும் ஈர்ப்பானதே என்பதை சார்லஸ் சிமிக் ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறார்.
‘இங்கே நாம் இருப்பதைப் பார்த்து நட்சத்திரங்கள் ஆச்சரியப்படலாம்’ என்று குட்டி ஆந்தையிடம் சார்லஸ் சிமிக்கால் பேச முடிவது இந்தப் போதம் வழியாகவே.
தூரத்து நட்சத்திரங்களின்
சோம்பல் ஒளி
கீழே
இங்கே பூமியிலோ
எக்காளமிடும் ஓடைத்தண்ணீர்
குண்டு தர்பூசணியை
குளிரவைத்துக்கொண்டிருக்கிறது.
இது சார்லஸ் சிமிக் உருவாக்கும் ஒரு துண்டுக் காட்சி. அங்கே நட்சத்திரங்களைக் கொஞ்சம் மங்கவைத்துவிட்டு, ஓடைத்தண்ணீரில் குளிர்ந்து சுடர்ந்துகொண்டிருக்கிறது தர்பூசணி. இந்தக் கவிதையின் பாற்பட்டு எனக்கு ஒரு கேள்வி: இங்கே குளிர்வது தர்பூசணி மட்டும்தானா?
சார்லஸ் சிமிக் உலகத்தின் ஒட்டுமொத்த அம்சத்தையும் விளக்கிவிடக்கூடிய கவிதை என்று ‘சுவர்க்கோழி’ கவிதையைச் சொல்வேன்.
கோடை முடிந்து
இருள் கவிழ்ந்துகொண்டிருந்தது.
உனது வாழ்க்கை
எத்தனை நிஜமோ
அத்தனை நிஜம்
எனது வாழ்க்கை
என்கிறது
புதரிலிருந்து
சுவர்க்கோழி.
இந்தக் கவிதையில் வரும் சுவர்க்கோழி மனிதனிடம் பணிவுடன் இந்தச் சொற்களைச் சொல்லவில்லை. ஒரு நிதர்சனத்தைக் கூறி மிரட்டுவதுபோல இருக்கிறது அதன் சொல்.
நீ இல்லாமல்போன பின்னாலும் நான் இருப்பேன் என்று உரைப்பதுபோல தொனிக்கின்றன சுவர்க்கோழியின் சொற்கள்.
"உனது வாழ்க்கை எத்தனை நிஜமோ அத்தனை நிஜம் எனது வாழ்க்கை" என்று புதரிலிருந்து சுவர்க்கோழி உரைக்கும்போது, பிற மனிதர்கள், பிற பாலினங்கள், பிற வாழ்க்கை முறைகள், பிற சமயத்தவர்கள், பிற பண்பாட்டினத்தவர்கள், பிற வர்க்கத்தினர் மீது வெறுப்பும் பாரபட்சமும் வன்முறையும் அழித்தொழிப்பு மூர்க்கமும் உலகம் முழுக்க கொடூரமாகப் பரவியிருக்கும் ஒரு காலகட்டத்தில் ‘உன் வாழ்க்கை எத்தனை நிஜமோ அத்தனை நிஜம் எனது வாழ்க்கை’ என்று வலி உணரும் எல்லா உயிர்களும் கூவி, நமக்கு உரைப்பதுபோல சுவர்க்கோழி சொல்கிறது. சுவர்க்கோழி வழியாக சார்லஸ் சிமிக் சொல்ல வருவதை நாம் கேட்டாக வேண்டும்.
ஏகத்தை அல்ல, அனேகத்தின் பன்மையை ரசித்துப் பாராட்டும் பெருந்தன்மையை நம்மிடம் தூண்டுபவர் சார்லஸ் சிமிக்.
Θ
தமிழ்க் கவிதைகளில் தத்துவ போதமுள்ள கவிதைகள் அன்றாடக் காட்சிகளின் களங்கமற்ற தன்மையைத் துறந்திருக்கும். அன்றாடக் காட்சிகள் நிறைந்த கவிதைகளில் தத்துவத்தின் செறிவு விடுபட்டிருக்கும். இந்த எதிர்நிலையை, இருமையை, இதனால் இரண்டு தரப்புகளிலும் நேரும் அனுபவ இழப்பை ஈடுசெய்யும் கவிதைகள் என்பதால் சார்லஸ் சிமிக், தமிழ் நவீன கவிதைகளுக்கு இன்று பொருத்தமுடையவர் ஆகிறார்.
தத்துவத்தின் தட்டு தாழாமலேயே, குழந்தையின் களங்கமற்ற பார்வையை மறுதட்டில் சமமாக, வாசகன் கண்டுணரக்கூடிய கவிதை உலகம், சார்லஸ் சிமிக்கினுடையது. யுத்தம், மரணம், பிரிவு ஏற்படுத்திய நிலையாமை உணர்வின் புழுதி படிந்திருந்தாலும், அன்றாடத்தின் மாயாஜாலச் சுழிப்புகளில் விந்தையைத் தக்கவைத்தபடிச் சிரிக்கும் சிறுவனின் கண்கள் சார்லஸ் சிமிக்கினுடையவை. குழந்தையின் களங்கமற்ற பார்வை, தத்துவ போதம் ஆகியவற்றோடு விபரீத விசித்திர உணர்ச்சியையும் உண்டாக்குவது சார்லஸ் சிமிக்கின் தனித்துவம். ஞானக்கூத்தனின் பிற்காலக் கவிதைகளில் உணர முடிந்த களங்கமற்ற காட்சியும் கதைத்தன்மையும் எனக்கு சார்லஸ் சிமிக்கை ஞாபகப்படுத்துகின்றன. இருவரும் சமகாலத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Θ
எளிமை, தர்பூசணியின் சதையைப் போன்ற வாழ்க்கையின் ஈரப்பற்றுடன், ஆழமான உணர்ச்சிகளையும் தொடும் கவிதைகளை எழுதிய சார்லஸ் சிமிக், யுகோஸ்லோவாவியாவில் பிறந்து சிறுவயதிலேயே அமெரிக்காவில் குடியேறியவர். நவீன வாழ்க்கையின் பௌதீக, ஆன்மிக வறுமையைத் தன் கவிதைகளில் துல்லியமாக வெளிப்படுத்திய கவிஞராக மதிக்கப்படும் சார்லஸ் சிமிக், சிறுவனாக இருந்தபோது பெல்கிரேட் நகரத்தில் கண்ட இரண்டாம் யுத்தத்தின் கொடூரக் காட்சிகள்தான் அவரது பார்வையையும் கவிதை உலகையும் வடிவமைத்திருக்கின்றன. அமெரிக்காவின் நியூ ஹாம்ப்சயர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தையும் படைப்பெழுத்தையும் பாடமாக 30 ஆண்டுகளுக்கும் மேல் போதித்த பேராசிரியர். சாதாரணத்துக்கும் அசாதாரணத்துக்கும் இடையே உள்ள எல்லைக்கோட்டை சார்லஸ் சிமிக்கின் சிறந்த கவிதைகள் அனாயாசமாக அழித்துவிடுகின்றன. அசேதனப் பொருள்களான கரண்டி, கத்தி ஆகியவற்றுக்கு மர்மத்தையும் ஆன்மாவையும் வழங்கிவிடும் கலை சார்லஸ் சிமிக்கினுடையது.
Θ
ஆங்கிலத்தில் அபுனைவுகளை அதிகமாகவும், சிறுகதைகள் நாவல்களைக் குறைவாகவும், கவிதைகளை இன்னும் சொற்பமாகவும் படிக்கும் அறிவுவளம் மட்டுமே கொண்ட எனக்கு சார்லஸ் சிமிக்கை அறிமுகப்படுத்தி வாசிப்பதற்குத் தூண்டியது, அகழ் இணையதளத்தில் வெளிவந்த அவரது நேர்காணலின் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்திருந்தவர் ஜனார்த்தனன் இளங்கோ. சார்லஸ் சிமிக் நேர்காணல் தொடர்பாகப் பேசி சிமிக் மீதான ஈடுபாட்டுக்குக் காரணமான விஷால் ராஜாவுக்கு என்னுடைய முதல் நன்றி. சார்லஸ் சிமிக்கின் ஒட்டுமொத்தக் கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை மின்னூல்களாக உடனடியாகத் தந்துதவியவர் நண்பரும் கவிஞருமான வே.நி.சூர்யா. சார்லஸ் சிமிக்கின் கவிதைகளில் முதலில் என்னை ஈர்த்தது ‘இறைச்சிக் கடை’. அதன் தாக்கத்தில் ‘இகவடை பரவடை’ குறுங்காவியத்தில் ஒரு துண்டுக்கவிதையை எழுதினேன்.
என்னுடைய கவிதைகளின் பார்வையோடும் உலகத்தோடும் சில இணைப்புகளையும் தூண்டுதல் சாத்தியங்களையும் கொண்டது சார்லஸ் சிமிக்கின் உலகம். அதுவே அவரை மொழிபெயர்க்கத் தூண்டியதற்குக் காரணம்.
சார்லஸ் சிமிக்கின் கவிதைகளை மொழிபெயர்த்த நாள்களில் வினோதமும் மகிழ்ச்சியும் உத்வேகமும் கலந்த உணர்வை அனுபவித்தேன். தமிழ்க் கவிதைகளுக்கு வெளியே எனது கவிதைப் பார்வையை முழுமையான அளவில் செப்பனிட்டவர்கள் என்ற வகையில், ழாக் ப்ரெவெர், பாப்லோ நெருடா, சார்லஸ் புக்கோவ்ஸ்கிக்கு அடுத்த நிலையில் சார்லஸ் சிமிக்கைச் சொல்வேன். நண்பர் மருதன் பசுபதி வழியாக அறிமுகமான மருத்துவரும் நண்பருமான ராஜா, ஒவ்வொரு கவிதையையும் திரும்பத்திரும்ப வாசித்து, இந்தக் கவிதைகளின் மொழிபெயர்ப்பில் விபரீதமாக நேர்ந்த பிழைகளை உடனடியாகச் சுட்டிக்காட்டி என்னை வழிப்படுத்தினார். புதிதுபுதிதாக எனக்கு இப்படி அருமையான நபர்கள் தொடர்ந்து அறிமுகமாகி நீடிக்கவும் செய்வது என் நற்பேறு.
சார்லஸ் சிமிக்கின் படைப்புகளுக்கு ஆதாரமாக இருந்த குழந்தைப் பருவம் தொடர்பாக அவர் எழுதிய அனுபவக் கட்டுரைகளில் இரண்டை இந்த நூலின் பின்னிணைப்பாகச் சேர்த்திருக்கிறேன். அந்த அனுபவக் கட்டுரைகள் மேலதிகமாக அவரது கவிதைகளை ரசிக்க உதவும்.கவிதைகளைப் பற்றிய அவரது சிந்தனைத் தெறிப்புகள் சிலவற்றையும் மொழிபெயர்த்திருக்கிறேன்.
சார்லஸ் சிமிக்கின் கவிதைகளை மொழிபெயர்த்துத் தமிழில் வெளியிடுவதற்கு முறையாக அனுமதி வாங்கி, ஓவியங்களோடு நூலைக் கொண்டுவர ஆசைப்பட்டு, அழகிய முறையில் பதிப்பித்திருக்கும் எதிர் வெளியீடு அனுஷ் அவர்களுக்கு என்னுடைய அன்பு, நன்றி.
சார்லஸ் சிமிக் வாழ்க்கைக் குறிப்பு (1938-2023)
யுகோஸ்லோவியாவில் பிறந்து சிறுவயதிலேயே இரண்டாம் உலக யுத்தத்தின் கொடூரங்களை நேரில் கண்டவர். பெற்றோருடன் அமேரிக்காவில் குடியேரிறியவர். நவீன வாழ்க்கையின் பௌதீக, ஆன்மிக வறுமையைத் தன் கவிதைகளில் துல்லியமாக வெளிப்படுத்திய கவிஞராக மதிக்கப்படுபவர். சிறுவனாக இருந்தபோது பெல்கிரேட் நகரத்தில் இவர் கண்ட இரண்டாம் உலக யுத்தத்தின் கொடூரக் காட்சிகள் அவரது கவிதை உலகத்தையும் பார்வையையும் வடிவமைத்திருக்கின்றன. அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஸயர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தையும் படைப்பெழுத்தையும் பாடமாக 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் போதித்த பேராசிரியர். சாதாரணத்துக்கும் அசாதாரணத்துக்குமிடையே உள்ள எல்லைக்கோட்டை சார்லஸ் சிமிக்கின் சிறந்த கவிதைகள் அனாசயமாக அழித்துவிடுகின்றன.
ஷங்கர்ராமசுப்ரமணியன்
shankarashankara@gmail.com
14.04.2025
வேளச்சேரி
Comments