கமல்ஹாசன் நடித்திருக்கும் சினிமா
என்று
திருநெல்வேலி லட்சுமி தியேட்டருக்கு
அழைத்துப் போனாள்
அம்மா.
பழைய படங்களாக அழைத்துச் செல்லப்பட்டு
நிறைய ஏமாந்திருந்தாலும்
கமல்ஹாசன் என்றதால்
கொஞ்சம் நப்பாசையில்
உடன் போனேன்.
கருப்பு – வெள்ளைப்படம் தொடங்கியது.
அழகிய சிறுவன் ஒருவனைக் காண்பித்து
இவன்தான் கமல்ஹாசன் என்றாள்.
அவன் வளர்ந்துவிடுவான் என்று எதிர்பார்த்தேன்.
அம்மாவும் நீயே
அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும்
தெய்வமும் நீயே
என்று எல்லாரையும் அழவைக்கும்படி
அனாதை இல்லத்தில் சக குழந்தைகளுடன்
அவன் பாடியபோது
வளர்ந்து
மோட்டார் சைக்கிளை உதைத்து முடுக்கி
சண்டைபோடுவான் என்ற நம்பிக்கை
தளரத் தொடங்கியது.
ஒரு பங்களா வீட்டின்
புறக்கடைத் தோப்பில்
ஜெமினியும் சாவித்திரியும்
பிழியப் பிழிய
அழுதுபிரியும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது.
அம்மா ஏமாற்றிய
துக்கத்தை
இவனால்
அப்போது தாளவே முடியவில்லை.
கமல் வளர்வானா
என்று கடைசிவரை
அந்தப் பையன்
கேட்கவுமில்லை.
(தக் லைஃப் திரைப்படம் தந்த அனுபவத்துக்கு)
(நன்றி: அகழ் இணைய இதழ்)
Comments