லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள் புதிய பருவம், புதிய வெளிப்பாட்டுக்குள் வெற்றிகரமாகப் புகுந்து புறப்பட்டுள்ளதை, அவரது புதிய தொகுதியான 'கடலொரு பக்கம் வீடொரு பக்கம்' துலக்கமாகத் தெரிவிக்கிறது. கிராமம், சிறு நகரம், பெருநகரத்திலிருந்து மீண்டும் சிறுநகரத்தைக் கடந்து கிராமத்தை அடைந்திருக்கின்றன அவரது கவிதைகள். தனது கவிதைகளில் முன்பிருந்த நகரத்தின் சாயல்களைச் சுற்றிலும் துடைந்தெறியும் சவாலை மொழியிலும் பார்வையிலும் ஏற்று வெற்றியும் கண்டுள்ளார். மாறாத ஒன்றின் மேல் கொண்ட பிரியமாக தனது கிராமத்தை, அம்மாவைப் பற்றியிருக்கும் குழந்தைபோல மணிவண்ணன் பற்றியிருப்பது தெரிகிறது.
காட்டில் அண்டை கூட்டிப்
பொங்கிக் கலைந்த இடத்தில்
தெய்வங்கள் வந்துகூடி கலைந்தது
போலும் தெரிகிறது
வீட்டின் பின்புறத்தில்
விறகடுப்பில்
பொங்கிக் கலைந்த பின்னர்
காடு வந்து
சற்று நேரம்
அமர்ந்து
ஓய்வெடுக்கிறது.
வீட்டின் புறக்கடையில் விறகடுப்பில் பொங்கிக் கலைந்த பின்னர் சற்று நேரம் அமர்ந்து ஓய்வெடுக்கும் காட்டைப் போன்ற ஒரு கிராமத்தில் லக்ஷ்மி மணிவண்ணனின் கண்கள் அமர்ந்திருக்கின்றன.
‘சங்கருக்கு கதவற்ற வீடு' தொகுதி முதல் 'கேட்பவரே' வரையில் லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகளின் தொனியை அறிக்கையிடல், வாக்குமூலம் என்று நான் வகுக்கிறேன். அறிக்கையிடுதலின் போதோ, வாக்குமூலத்தின் போதோ, பிரகடனத்தின் போதோ இன்னொருவர் அங்கே இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இன்னொருவர் இருந்தாலும் அது தனியாகவே, தனிமையாகவே நிகழ்கிறது. தனியொருவன் பார்ப்பது, தனியொருவன் அவதானிப்பது, தனியொருவன் கூர்தீட்டுவது, தனியொருவன் குழம்புவது, தனியொருவன் புலம்புவது என்பதாக அந்தக் கவிதைகளின் தொனி அமைந்திருந்தது.
கவிதை, அறுதியாக, திட்டவட்டமாக, முற்றிலும் உண்மையை அறிந்ததாகவும் அதை வெளிப்படுத்துவதாகவும் நமக்கு முன்னர் இருந்திருக்கிறது; நிலவும் உண்மையை வேறுவிதமான வழிகளில் அடையும் தடங்களில் சென்று புனைந்து காண்பிப்பதாகவும் நமக்கு இருக்கிறது. உலகு இயற்கை, மனித சுபாவங்களின் இயற்கை, உறவுகள், மனம், பிரமைகள் இயங்கும் இயற்கையை லக்ஷ்மி மணிவண்ணன் அறிந்த முடிவுகள் இத்தொகுப்பில் நமக்குக் கவிதைகளாகக் கிடைக்கின்றன. அப்படி அறிந்தவைகளைச் சொல்வதற்கு, அதை அருள்வாக்காகத் தொனிக்கும்படிச் செய்வதற்கு, ஓர் சமயத்தன்மையை ஏற்றுவதற்கு விக்ரமாதித்யனின் கவிமொழியை ஊடகமாக்குகிறார். இப்படித்தான் ‘கேட்பவரே' தொகுதியிலிருந்து, 'கடலொரு பக்கம் வீடொரு பக்கம்' தொகுதியில் ஓர் முன்னிலையை நோக்கி உரையாடுவதற்கு நகர்ந்திருக்கிறார் லக்ஷ்மி மணிவண்ணன். அந்த முன்னிலையிடம் சில கேள்விகளைக் கேட்பதாகவோ சில பதில்களைச் சொல்வது போலவோ தொனி உள்ளது. நிமித்தம், சகுனம் உரைப்பு, குறிசொல்வது, கோடாங்கி, அருள்வாக்கின் வெளிப்பாட்டைக் கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வெளிப்பாடு புனைவின் புகைமூட்டமில்லாமல் முற்றுணர்ந்த உண்மை, தெளிவு, திட்டவட்டம் என்பது போலத் தொனிக்கிறது. ஒன்றை அறிவதன் மூலம் அதை அடைந்துவிட முடியும் என்று நாம் பெரும்பாலும் நம்புகிறோம்.
அறிவதும் அடைவதும் இணைகோடுகளாகத் தூரத்தில் தொடுவது போல நம்மை ஏமாற்றிக் கொண்டே இருப்பதுதான் நிதர்சனமாக உள்ளது.
அறிந்ததின் அழகும் லக்ஷ்மி மணிவண்ணனின் ஏற்கெனவே எட்டப்பட்ட கவியின் பார்வையும் அவரின் உள்ளடக்கத்தில் சமீபத்தில் நிகழ்ந்திருக்கும் கனிவும் சேர்ந்து விகசிக்கும் போது நிகழ்ந்த அருமையான கவிதைகளும் இந்தத் தொகுப்பில் உண்டு. ‘மழையில் நனைந்த நிலையத்தின்', ‘நெடுஞ்சாலையின் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கமாக'
விக்ரமாதித்யனின் கவிமொழி தான் லக்ஷ்மி மணிவண்ணனின் ஊடகமே தவிர லக்ஷ்மி மணிவண்ணன் போய்ச் சேர்ந்துள்ள இடம் வேறு. ஆசை, நிராசை என்ற இரண்டு எல்லைகளில் உபாசனை அல்லது புலம்பலை வெளிப்படுத்தும் கவிதைகள் விக்ரமாதித்யனுடையவை. ‘தங்கத் தேருக்குத் தனி அலங்காரம் எதுக்கு' என்று சொல்லும்போது, ஒரு வாசகன் அதை உச்சிமுகர்ந்து உபாசிக்கலாம்; அல்லது புறக்கணிக்கலாம். ஆனால், அவன் அது சரியா, இல்லையா என்று எதிர்வினை செய்வதற்கான கனத்தை அவரது கவிதைகள் தருவதில்லை. லக்ஷ்மி மணிவண்ணன் சொல்லும் 'வாக்குகளை'ப் போல திடமானதும் இல்லை.
லக்ஷ்மி மணிவண்ணன் தனது அபிப்ராயங்கள், கட்டுரைகளில் சொல்லும் கருத்துகளை இந்தத் தொகுப்பில் கவிதைகளாக நீட்டிப் பார்த்துமுள்ளார். கவிதையில் அபிப்ராயத்துக்கு, கருத்துக்கு வந்து சேர்வதற்கான முகாந்திரத்தைச் சொல்வதற்கு அவசியமில்லையல்லவா. ஆனால், கருத்து கவிதையாக ஆகும்போது அது வினைக்கு எதிர்வினையையும் எதிர்வினைக்கு பதில்வினையையும் தோற்றுவித்துக் கொண்டேயிருக்கிறது.
'அர்ச்சிப்பதற்கு ஐந்து பூக்கள் போதும்' என்று சொல்லும்போது அதனால்தான், ஆறு பூக்களோ நான்கு பூக்களோ ஏன் போதாது என்று கேட்டு எதிர்வினை செய்யத் தோன்றுகிறது. அ-ர்ச்சிப்பதால் ஐந்தாகிவிட்டதா.
எல்லாத் துப்பாக்கிகளும்
பொம்மைத் துப்பாக்கிகளே
என்பதைப் படிக்கும்போது அப்படித்தானா என்று கேட்கத் தோன்றுகிறது. அப்படிச் சொல்லிவிட முடியுமா என்று கேட்கத் தொடங்குகிறது.
ஏற்கனவே தெரிந்தவைதாம்
எல்லாமே ஏற்கனவே தெரிந்தவைதாம்
அவற்றை அறிந்து கொள்ள
அனைத்தும் தேவை
இப்படி அறிந்து தெரியும் நம்பிக்கை, இப்படியான சூத்திரமாகிறது.
செய்வினை செய்வது
எப்படியென்றா கேட்கிறீர்கள்?
ஐந்துபடி அரிசியெடுத்து
முழக்காலில் போட்டு வைத்து
கொள்ளி நீர் எடுத்து
பாடை தயார் செய்யுங்கள்
பிணம்
தானாக விழும்.
லக்ஷ்மி மணிவண்ணனின் பெரும்பாலான கவிதைகள் வெளியிலிருந்து எதற்கோ எதிர்வினை செய்கின்றன- குற்றங்களுக்கு முகாந்திரம் இருப்பதைப் போல.
போராளி தயாராகத் தானிருக்கிறார்
கொலையாளியும் தயாராகத் தானிருக்கிறார்
பிரதான் மந்திரி தயாராகத் தானிருக்கிறார்
நீதிபதிகள்
தயார்தான்
காரணங்கள்தான்
தேவைப்படுகின்றன
எல்லோருக்கும்
மன நல மருத்துவரும் தயார் தான்
நோயாளியும் தயார் தான்
நான் எதற்கும் தயாராக இல்லை
கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்
காரணங்கள் கேட்பீரேல்
பின்னர் வருத்தம் கொள்ளாதீர்கள்
எழும்பிச் சென்று விடுவேன்.
விக்ரமாதித்யன் இந்தக் கவிதையை 'நான் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்' என்று முடிப்பார். கடைசி பத்தியை உரைக்குமளவுக்கு விக்ரமாதித்யன் கவிதை உலகில் தீர்க்கம் கிடையாது.
கடல் வெளியிலிருக்கிறதென்று
தோன்றுவது
வெறும் மாயை
என்று 'உள்ளும் புறமுமாக' கவிதை முடிகிறது.
கடல் வெளியிலும் தானே இருக்கிறது என்று ஓர் எதிர்வினை தொடங்கிவிடுகிறது. நான் இல்லாத போது ஒரு கடல் இல்லாமல் போகிறது; நான் இல்லாத போது ஒரு கடல் எமது குழந்தைகளுக்கு வெளியே இருக்கத்தானே செய்கிறது.
கடல் வெளியே இருக்கிறது; அலைகள் வெளியே இருக்கின்றன; வெளியேயும் உள்ளேயும் சிப்பிகள் வாய்திறந்து மூடிக்கொண்டிருக்கின்றன; வெளியே திமிங்கலங்கள் இருக்கின்றன; கடலும் கிழவனும் வெளியே இருக்கிறார்கள்.
ஒரு கவித்துவக் கருவியாக, மெய்மையை இன்னும் நெருக்கமாக அணுகுவதற்கான, நம் மனம் செயல்படும் விதங்களைத் துல்லியமாக விசாரிப்பதற்கான வழிமுறையாக அத்வைதத்தைப் பார்க்கும் வரை பிரச்சினை இல்லை.
அத்வைதம் சமூகத்துக்குள் இறங்கும் போது ஏற்பட்ட அபாயங்களும், அதனால் தொடரும் பாகுபாடுகளும் ஒடுக்குமுறைகளும் தான் நமது வரலாறு.
வெறும் மாயை என்னும் திட்டவட்டப் புள்ளியிலிருந்துதான் பிறிதை, பிற இயல்புகளை, பிறனை, பிறளை, பிற உயிர்களின் இருப்பையே அங்கீகரிக்காத நிலை தொடங்குகிறது.
நெடுஞ்சாலையின் இந்த பக்கத்திலிருந்து அந்தப் பக்கமாக
ஆயிரங்கால் அட்டைப் பூச்சி
கடந்து செல்கிறது
அதற்கு அது
யுக யாத்திரை
சீறிப் பாய்ந்து நெருங்கி
அகலும்
அதிவிரைவு டிப்பர் லாரிகள்
ஓம்னி பேருந்துகள்
சரக் என அணிப்பிள்ளைகளை
அடித்து நகரும்
மகிழ்வுந்துகள்
சுனாமி எச்சரிக்கை எதும் விடப்படாமலேயே
தனது யுகப்பயணத்தில் இருக்கிறது
அட்டைப் புழு
மலை சரிந்து விழுவது போலும்
தலைக்கருகில் கடக்கும்
நேஷனல் பெர்மிட் லாரியின்
டயரில் ஒரு கணம் துடித்து
அந்தப் பக்கமாக சென்று
கொண்டிருக்கிறது
எந்த புகாருமின்றி
கடைசியில் இருசக்கரவாகனத்தில் வந்தவன்
கணநேரத்தில்
அட்டைப் புழுவைக் கண்டு திகைத்து
வளைந்து நெளிந்து
பிரேக் போட்டு நிறுத்துகிறான்
இருவரும்
நேருக்கு நேராக
பார்த்துக் கொள்ளும்
அக்கணத்தில்
இருவருக்கும்
கூடுகிறது இறைக்கலவி
மீண்டும் அட்டைப் புழு
இந்தப் பக்கம் திரும்பி
யாத்திரையைத்
தொடங்குகிறது
இனிய
பனிக்காலைப் பொழுது.
லக்ஷ்மி மணிவண்ணன் வந்து சேர்ந்திருக்கும் கனிவிலிருந்து எழுதப்பட்ட அபூர்வ கவிதை இது. அட்டைப் புழு சிற்றடி எடுத்துவைத்து மரணப்புள்ளிகளைத் தாண்டி அறிந்த அந்தப் பக்கத்திலிருந்து அறியாத இந்தப் பக்கத்துக்குள் யாத்திரையை சாவதானமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
லக்ஷ்மி மணிவண்ணனின் கவிதைகளில் மாறாமல் இருக்கும் குணத்தையும் மாறிய குணத்தையும் சேர்த்துக் காட்டும் இன்னொரு கவிதை இது. அவர் ஆரம்ப கட்டத்தில் எழுதிய 'ஆடும் முகங்களின் நகரம்'- கவிதையில் இருந்த கூர்ந்த பார்வையையும் இந்தக் கவிதை தவறவிடவில்லை.
மழையில் நனைந்த நிலையத்தின்
கிளைகள் பிரியும் இருப்புப்பாதைகளை
நீங்கள் மேம்பாலத்தின் உயரத்தில் இருந்து காணவேண்டும் முதலில்
பாதைகள் புழுக்களாக நெளிகின்றன
அவை இந்த மழைத் துளிகளுக்காகவே
காத்திருந்தவை
பின்னர் மேம்பாலத்தில்
இறங்கி
பெருமரம் கடந்து
நிலையத்திற்குள் நுழைந்து
இருப்புப்பாதைகளை மீண்டும் காணவேண்டும்
மழை வந்து நிற்பதுவரையில்
வெறும் இருப்புப் பாதைகளாக இருந்தவை
இப்போது மூச்சு விடுகின்றன
இனி டீசல் வண்டியில் ஏறி
பெருமரத்தை அது சுழற்றிக் காட்டுவதைப்
பார்த்து விட்டு
இறங்கி விடுங்கள்
இதற்குப் பெயர்தான் ரயில் வண்டிப் பயணம்
என்று உங்கள் குழந்தைக்கு
காதோரம் சொல்லிக் கொடுங்கள்
அதன் ரயில் வண்டிப்பயணம்
வேறு விதமாக இருந்தது அதற்கு
உடனடியாக நினைவுக்கு வந்து விடும்
இதோடு பணி நிறைவடையவில்லை
நிலையத்திற்கு வெளியே ஒருவன்
எங்கே சென்று திரும்புகிறீர்கள் ?
எனக்கேட்க வாயிலில் நிற்கிறான்
"குழந்தையின் ஊருக்கு" என பதில் சொல்லிவிட்டு
பரிசோதகரிடம் டிக்கட்டை ஒப்படைத்து விடுங்கள்
இப்போது நீங்கள் கைவீசி நடக்கையில்
உங்கள் பின்னே புன்னகையுடன்
வந்து கொண்டிருப்பதுதான்
குழந்தையின் ஊர்
போய்ச் சேருங்கள்
திரும்பி விட வேணாம்.
ஆமாம். போய்க் கொண்டே இருக்கலாம். திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை.
Comments